Tuesday, October 6, 2015

சந்திரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நிலவோடு பெண்ணை ஒப்பிட்டு பாடுவது கவிஞர்களுக்கு வழக்கமானதுதான்! ஆனால், அது வெறும் வர்ணனை அளவில்மட்டும் அல்லாமல், இயற்கையாகவே சந்திரனின் தாக்கங்கள் மனிதர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றன. குறிப்பாக பெண்கள் சந்திர சுழற்சியோடு இயைந்தே உள்ளனர். எப்படி…? தொடர்ந்து படித்து அறியுங்கள்! சத்குரு: நமது வாழ்க்கை என்பது காலமும் சக்தியும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. இதில் காலம் அல்லது நேரம் என்பது யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் காலத்தை அளப்பதற்கு நாமே சில வழிமுறைகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறோம். பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம். பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம். அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு, சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றி சந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தே இருக்கிறது. மேலும் சூரியன் மற்றும் சந்திரனைப் பொறுத்து, அந்தந்தக் காலகட்டத்தில் பூமி இருக்கும் இடம், நம் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் இரண்டு அடிப்படை அம்சங்களான ‘நேரம்‘ மற்றும் ‘சக்தி’ பெரும்பாலும் சூரியனாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பூமிக்கு முக்கியமாக சூரியனிலிருந்துதான் சக்தி கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் உடல் என்பதும் அந்த பூமியின் ஒரு சிறு துகள்தான். எனவே உங்களுக்கும் முக்கியமாக சூரியனிலிருந்துதான் சக்தி கிடைக்கிறது. எனவே எவ்வளவு தூரம் உங்களால் சூரியனின் சக்தியை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதைப் பொறுத்து உங்கள் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே சூரியனைச் சுற்றிவரும் பூமியின் நகர்வு, நேரத்தைத் தீர்மானிப்பதற்கான அளவுகோலாக மட்டும் அல்லாமல், நாம் எவ்வளவு சக்தியுடன் இருக்கிறோம் என்பதையும் தீர்மானிக்கிறது. ஆகவே வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் இரண்டு அடிப்படை அம்சங்களான ‘நேரம்‘ மற்றும் ‘சக்தி’ பெரும்பாலும் சூரியனாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த உலகில் இருக்கும் அனைத்தின் மீதும் சூரியனுக்கு இருக்கும் ஆதிக்கம் மிகப் பெரியது. சந்திரனால் சூரியனைப் போல் சக்தியை வெளியிட முடியாது என்றாலும் அது பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் அதுவும் நம்முடைய உடல், மன அமைப்புகளின் மேல் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு இயந்திரத்தை சுழல வைத்துத்தான் நாம் மின்சக்தி தயாரிக்கிறோம். அதேபோல சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது, அந்த சுழற்சியால் அங்கு சக்தி உருவாகிறது. எனவே சந்திரனுடைய ஆதிக்கம் பூமியின் மேல் காந்த ஈர்ப்பு சக்தியாக இருக்கிறது. எனவேதான் நமக்கு நடக்கும் வெளிப்புற வாழ்வை புரிந்து கொள்ள சூரியனையும் உள்புற வாழ்வை புரிந்து கொள்ள சந்திரனையும் பார்க்கிறோம். யோக வழிமுறை, ஒரு குறிப்பிட்ட எல்லைவரை, இவ்விரண்டையும் சார்ந்துதான் இருக்கிறது. அந்த எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டால், இவற்றின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுதலை ஆகிவிடுவீர்கள். எனவே யோகாவின் நோக்கமே சுழற்சியுடன் இருக்கும் பூமி மற்றும் சந்திரன் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதுதான். இந்த இரண்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு விட்டால் பிறகு சூரியன் என்பது உங்களுக்கு வெறும் ஒளி ஆதாரமாக மட்டுமே இருக்கும். அதுதான் யோகாவின் இலட்சியம். ஆனால் இன்றைக்கு நீங்கள் இருக்கும் நிலையில் சூரியனின் ஆதிக்கம் உங்கள் மேல் மிக அதிகமாக இருக்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில், சந்திரன், கடலில் பேரலைகளை ஏற்படுத்தி மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குவது உங்களுக்குத் தெரியும். அதாவது கடல் நீர் முழுதும் அந்த இரு நாட்களில் அல்லது அதைச் சுற்றியுள்ள நாட்களில் மேலெழும்புகின்றன. தண்ணீர் மட்டுமல்ல, அனைத்துமே மேலெழும்புகின்றன. ஆனால் நீரில் அது கண்கூடாகத் தெரிகிறது. உங்கள் உடலில் கூட எழுபது சதவிகிதத்திற்கும் மேல் நீராக இருப்பதால், அந்த இரு நாட்களில் உங்கள் உடலில் இருக்கும் நீரும் வேகமாக மேலெழும்பலாம். குறிப்பாக உங்கள் மூளையில் எழுபத்தி எட்டு சதவிகிதம் நீராக இருக்கிறது. எனவே சந்திரனின் தாக்கம் மூளையின் மேல் அதிகமாக இருக்கும். மனோரீதியாக பலவீனமான மனிதர்கள் அன்றைய தினத்தில் மேலும் சமநிலை தவறுகிறார்கள் என்பதை நாம் கவனித்திருக்கிறோம். அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில், மனிதனின் மேல் சந்திரனின் தாக்கம் இருக்கும்போது, மனிதன் எந்த தன்மையில் இருக்கிறானோ அந்த தன்மை மேலும் சிறிது அதிகமாகிறது. மேம்பட்ட தன்மையில் இருந்தால் மேலும் மேம்பாடு அடைகிறது. பாதிப்புத் தன்மையில் இருந்தால், அந்தப் பாதிப்பு இன்னமும் அதிகமாகிறது. ஆனால் பாதிக்கப்படுவதை மட்டும் மனிதன் நன்றாக உணர்கிறான். தன்மை மேம்படும்போது அது நமக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இது மனிதனின் குணம். உங்கள் உடலில் ஏதாவது நன்றாக நடந்தால் அது உங்கள் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் உடல் ஏதாவது காயப்பட்டால் அது உடனே உங்கள் கவனத்திற்குள் வருகிறது. சந்திரனின் சுழற்சிகளும், பெண் உடலில் இருக்கும் உயிரியல் சார்ந்த சுழற்சிகளும் நூறு சதவிகிதம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சந்திரனின் சுழற்சிகளும், பெண் உடலில் இருக்கும் உயிரியல் சார்ந்த சுழற்சிகளும் நூறு சதவிகிதம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. எனவே நமது பிறப்பின் அடிப்படையே கூட சந்திரனின் சுழற்சிக்குத் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே நமது உடல், மனக் கட்டமைப்பின் மீது சந்திரனுக்குள்ள ஆதிக்கம் மறுக்க முடியாதது. எனவே உள்தன்மை பற்றி அக்கறை கொண்டிருக்கும் அத்தனை கலாச்சாரங்களும், இயல்பாகவே சந்திர நாள்காட்டி, மற்றும் சந்திரசூரிய நாள்காட்டியை பயன்படுத்தினார்கள். பஞ்சாங்கம் என்றழைக்கப்படும் இந்தியாவின் பாரம்பரிய நாள்காட்டியை இன்று மிகச் சிலர்தான் பின்பற்றுகிறார்கள். இது ஒரு சந்திரசூரிய நாள்காட்டியாகும். சந்திரசூரிய நாள்காட்டி என்பது சந்திரனின் தாக்கம் உள்ள நாள்காட்டி என்றாலும் 100 சதவீதம் சந்திர நாள்காட்டி கிடையாது. இந்தியப் பஞ்சாங்கங்கள் சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் இயக்கங்களையும் கவனத்தில் கொள்கிறது. சந்திரன், சூரியன் இரண்டின் இயக்கத்தையும் இவர்கள் சேர்த்துப் பார்த்ததற்குக் காரணம், உள்நிலை மற்றும் வெளிநிலை வளர்ச்சி இரண்டின் மீதும் இவர்களுக்கு ஈடுபாடு இருந்ததுதான். இதுதான் ஒரு நாள்காட்டியை உருவாக்குவதற்கான மிக புத்திசாலித்தனமான வழி. துரதிருஷ்டவசமாக இன்றைய நாட்களில் இது போன்று ஒரு நாள்காட்டி இருப்பதுகூடத் தெரியாமல் மக்கள் இருக்கிறார்கள். சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்து செல்லும் காலத்தில் பகலும் இரவும் சமமான ஒரு நாள் வருகிறது. அந்த நாளுக்கும் அடுத்த சில நாட்கள் கழித்து, தமிழ் வருடம் துவங்குவதாக நமது பஞ்சாங்கத்தில் கணித்திருக்கிறார்கள். அதாவது இந்திய நாள்காட்டியின்படி தமிழ்ப் புத்தாண்டு ஆங்கில ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது. அது புத்துணர்ச்சி மலரும் காலம். அப்போது எல்லா உயிர்களும் புத்துணர்ச்சியுடன் தீவிரத் தன்மையுடன் இருக்கின்றன. ஒளிச்சேர்க்கை அதிகமாக இருப்பதால் தாவரங்களின் வளர்ச்சியும் உச்சத்தில் இருக்கிறது. மரங்கள் இல்லாமல் செய்து விட்டதால் கோடை வருகிறது என்றாலே பயப்படுகிறோம். ஆக, இது மனிதன் செய்த தவறு. மற்றபடி மனிதர்க்கும், இந்த மாதம், அந்த வருடத்திலயே வளர்ச்சிக்கு உகந்த மாதம். இருநூறு வருடங்களுக்கும் மேலாக அந்நிய படையெடுப்பின் கீழ் இருந்ததால், நம்முடைய நாள்காட்டியை இழந்துவிட்டோம். மக்கள் விசேஷங்கள் மற்றும் திருமணங்களுக்கு நாள் குறிப்பதற்கு மட்டுமே அந்த நாள்காட்டியை பயன்படுத்துகிறார்கள். ஆங்கில நாள்காட்டி என்பது எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் ஒரு வருடத்தை வெறுமனே பனிரெண்டு மாதங்களாகப் பிரித்து வைத்திருக்கிறது. ஆங்கில நாள்காட்டியைப் பின்பற்றுபவர்களுக்கு, என்று அமாவாசை வருகிறது, என்று பௌர்ணமி வருகிறது என்பதெல்லாம் தெரியாது. பௌர்ணமி என்பது ஆச்சர்யமான அழகான விஷயம். உங்களால் ஒரு பௌர்ணமியைக் கூட கவனிக்காமல் இருக்க முடிந்தால், என்ன மாதிரி வாழ்க்கை இது? கண் இருந்தும் பார்க்கத் தெரியாதவர்கள்தான் இதைத் தவறவிடுவார்கள். ஒருவேளை அவர்கள் மூளையில் எழுபத்திஎட்டு சதவிகித நீருக்கு பதிலாக கான்க்ரீட் கலவை இருக்கிறதோ, என்னமோ? நமது பஞ்சாங்கத்தின்படி, ஒரு தினத்தின் திதியைச் சொன்னாலே நீங்கள் சந்திரனின் அன்றைய நிலையைத் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்வது நமது உள்நிலை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அந்த அறிவுணர்ச்சியுடன் இந்திய நாள்காட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேல் சூரியன் அல்லது சந்திரனின் தாக்கம் இல்லாதபடி செய்துகொள்ள வழிகள் இருக்கின்றன. அது வேறு விஷயம். ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் இன்றைக்கு அவற்றின் ஆதிக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய தினம் சிறிது சந்திரன் தொடர்புள்ள நாள் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்போது, நீங்கள் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க முடியும். ஆனால் இப்போது உங்களுக்கு அதைப் பற்றித் தெரியாமல், தவறானபடி விஷயங்களைத் திட்டமிட்டு, வாழ்க்கையில் அனைத்து விதமான தேவையற்ற சூழ்நிலைகளிலும் சிக்கிக் கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் பிறப்பு, வாழ்க்கை, மரணம் இவற்றின் மேல் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் இரண்டு மிக முக்கியமான கோள்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேயில்லை. அலுவலகம் போன்ற அன்றாடப் பணிகளுக்கு ஆங்கில நாள்காட்டியே இருந்துவிட்டுப் போகட்டும். அதேநேரத்தில், சந்திரனின் நிலையைப் பார்க்கவாவது, நம்முடைய பழைய நாள்காட்டியையும் பார்க்க சிறிது கற்றுக் கொள்ளுங்கள். சந்திரன் நிலையைத் தெரிந்து கொள்வது, உங்களை நீங்கள் இன்னும் அதிகமாகப் புரிந்து கொண்டு உங்களை இன்னும் சிறப்பாகக் கையாள்வதற்கும், உங்கள் உள்நிலைப் பயணத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உள்நிலையில் பயணம் செய்ய விருப்பமில்லாமல் ஒரே இடத்தில் நங்கூரமிட்டதைப் போல இருக்க முடிவு செய்துவிட்டால், பிறகு நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. எனவே இந்த நாள்காட்டியின் வழியாக வெளிப்பட்டிருக்கும் நம் முன்னோர்களின் அற்புத அபார அறிவை நாமும் உணர்ந்து உபயோகிப்போம்

ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராக்ஷம்?

தொட்டால் தீட்டு, நுழைந்தால் பாவம் என்று நாம் உருவாக்கி வைத்திருக்கும் சம்பிரதாயங்களும், நம் புரிதல்களும் தலைமுறை தலைமுறையாய் சிலவற்றை நம்மை நம்ப வைக்கத்தான் செய்கின்றன. இவற்றை சொன்னபடியே பின்பற்றவது உசிதமா? புரிந்தவரிடம் கேட்டோம்… கேள்வி பல ஆன்மீகத் தலைவர்கள் பெண்கள் ருத்ராக்ஷம் அணிவதை தடை செய்கிறார்கள். ஆனால் இங்கு ஈஷாவில் பெண்களும் ருத்ராக்ஷம் அணிகிறார்களே? பதில் சத்குரு: இங்கு யாரும் அவர்கள் ருத்ராக்ஷம் அணிவதை கட்டுப்படுத்துவதில்லை. இங்கு எந்த தலைவர்களும் இல்லை. (சிரிக்கிறார்) நம்முடைய வாழ்க்கையில் பிழைப்பு மட்டுமே முக்கியமான அம்சமாக இருந்தால், பிறகு அந்த சூழ்நிலையை இயல்பாகவே ஒரு ஆண்தான் கட்டுப்படுத்துவான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெளிப்புறச் சூழ்நிலைகளும், சமூக சூழ்நிலைகளும் சரியான முறையில் இல்லாமல், எப்போதும் உயிர் ஆபத்தும், பூசல்களும் இருந்து கொண்டே இருந்தால், அங்கு ஆணினுடைய ஆதிக்கம்தான் இருக்கும். ஏனென்றால் இதுபோன்ற சூழ்நிலைகளை அவனால் சிறப்பாகக் கையாள முடியும். ஆனால் சமூகங்கள் வளர்ச்சியடைந்த பிறகு, பிழைப்பு, உயிர்வாழ்தல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாதபோது, வாழ்வின் மென்மையான அம்சங்களின் பக்கம் நம் கவனம் திரும்பும். அப்போது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது. ருத்ராக்ஷம் அணிவதை ஆன்மீகத் தலைவர்கள் தடை செய்வதாகச் சொன்னீர்கள். நீங்கள் ஆன்மீகத் தலைவர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, மதத்தலைவர்கள் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஆன்மீகப் பாதையில் இருக்கும் யாரும் இதைத் தடுப்பதில்லை. சில மதவாதக் குழுக்களில் இதை தடைசெய்கிறார்கள். மனிதர்களில் ஆண் வர்க்கம் முழு ஆதிக்கம் செலுத்தி, பெண்கள் அடிமைத்தளையில் மூழ்கி இருந்தபோது, சில வகையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்களது வசதிக்காகத்தான் சட்டங்கள் உருவாக்கப்படும், இல்லையா? துரதிருஷ்டவசமாக, இதுதான் மனித இனத்தின் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது. உலகத்தில் மிகச் சிலர்தான் அனைவரின் நல்வாழ்வையும், மற்ற அனைத்து உயிரினங்களின் நலனையும் பற்றி யோசித்திருக்கிறார்கள். ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராகக் கருதி, தங்களைச் சுற்றியிருக்கும் அனைவரது தேவைகளுக்கும் ஏற்ப சட்டதிட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, பெரும்பாலான மனிதர்கள் எப்போதும் தங்களுடைய வசதிக்காகத்தான் சட்டங்களை இயற்றியிருக்கிறார்களே தவிர, பிறருக்காக அல்ல. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அப்படியென்ன பெரிய பிரச்சனை? அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக்கூட மறந்துவிட்டது ஒரு பெரிய பிரச்சனை. இன்னொரு பிரச்சனை, அவர்களுடைய புத்திசாலித்தனத்தை அவர்களது ஹார்மோன்கள் மூடி மறைத்து விட்டது. அவர்களால் ஓர் உயிரை உயிராக மட்டும் பார்க்க முடிவதில்லை. ஆண்கள் எப்போதும் பெண்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அளவுக்கு ஹார்மோன்களால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் பெண்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், வாழ்க்கையில் அவள் அவர்களை எதுவுமே செய்ய விடுவதில்லை. ‘எப்போது பார்த்தாலும் என் தலைக்குள்ளேயே இருக்கிறாள். அவள் என்னை எதுவும் செய்ய விடமாட்டாள்’ என்ற நிலை வந்துவிட்டது. அதனால் அவள் ஒரு மாயப் பிசாசு என்பது போன்ற ஒரு முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர். ஒருவருடைய புத்திசாலித்தனம், அவருடைய ஹார்மோன்களாலேயே மூடி மறைக்கப்பட்டுவிட்டது என்பதை அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆகவே அவள் தூய்மையற்றவள் என்று சொல்லத் துவங்கிவிட்டார்கள். பெண்ணின் தூய்மையின்மைக்கும், ருத்ராக்ஷம் அணியக்கூடாது என்பதற்கும் அவர்கள் சொல்லும் முக்கிய காரணம், பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி இருப்பதுதான். உங்கள் தாய் உங்களை கருவில் சுமந்து கொண்டிருந்தபோது, அவருக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை. அப்படி என்றால் அதுதான் உங்களை உருவாக்கியுள்ளது. அதனால்தான் உங்கள் உடலும் உருவாகியுள்ளது. நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள். ஆகவே அவரும் அவரது மாதவிலக்குச் சுழற்சிகளும் அசுத்தமானவையாக இருந்தால், அதிலிருந்து உருவாகியுள்ள நாம் அனைவரும், இந்த மொத்த மனித இனமுமே அசுத்தமானது என்றுதான் சொல்லவேண்டும் (சிரிக்கிறார்). அப்படிப் பார்த்தால், அசுத்தமானவராக இருக்கும் அனைவருமே தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள கண்டிப்பாக ருத்ராக்ஷம் அணியத்தான் வேண்டும்! இல்லையா?

ருத்ராக்ஷத்தை கழுத்தில்தான் அணிய வேண்டுமா?

ருத்ராக்ஷத்தை அணியலாமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, அதை கையிலும் காலிலும் அணிவது தற்போதைய ஃபேஷன் ஆகி வருகிறது. இப்படி சரியான இடத்தில் ருத்ராக்ஷத்தை அணியாவிட்டால் என்னாகும்? சத்குருவின் பதில் இங்கே… கேள்வி நான் என்னுடைய கணுக்காலில் ருத்ராக்ஷம் அணிந்திருக்கிறேன், என் முழு உடலுமே புனிதமானது என நான் நினைக்கிறேன். நான் செய்தது சரிதானே? சத்குரு: ஓ, உங்கள் உடல் முழுவதுமே புனிதம்தானா? மிகவும் சந்தோஷம். ஆனால் நாளையிலிருந்து ஏன் நீங்கள் காது வழியாகவோ, மூக்கு வழியாகவோ அல்லது கண் வழியாகவோ சாப்பிட முயற்சிக்கக் கூடாது? முயற்சி செய்து பாருங்களேன். இந்த உடலானது ஒரு குறிப்பிட்ட வழியில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உடல் புனிதமும் அல்ல, அசிங்கமும் அல்ல. ஒரு அற்புதமான இயந்திரம், அவ்வளவுதான். எப்படி இயக்கினால் அது அற்புதமாக இயங்குமோ, எப்படி இயக்கினால் அது முழுபலனைக் கொடுக்குமோ, அப்படிதான் அதை இயக்க வேண்டும். எனவே ருத்ராக்ஷத்தை தவறான இடத்தில் அணிந்தால், அது உங்களை தவறான வழியில் இட்டுச் செல்லலாம். அது உங்கள் கட்டமைப்பையே தவறாக மாற்றியமைத்து விடலாம். எனவேதான் எந்த மாதிரி மனிதர் எந்த மாதிரி இடங்களில் ருத்ராக்ஷத்தை அணியலாம் என்பதற்கு முழு விஞ்ஞானத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ருத்ராக்ஷம் அணிய சிறந்த இடம் கழுத்துதான். கேள்வி சிலவகை கற்களை அணிந்து கொண்டால் ஆன்மீகத்தில் சீக்கிரம் முன்னேறலாம் என்கிறார்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சத்குரு: ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிர்வு உண்டு. அதுபோல பல வகையான கற்களுக்கும் பல வகையான அதிர்வுகள் உண்டு. இப்படி ஒவ்வொன்றையும் ஆன்மீகத்திற்காக பயன்படுத்த நினைத்தால் கடைசியில் கை, கால், கழுத்து என்று எல்லா இடத்திலும் எதையெதையோ சுமந்து கொண்டிருப்பீர்கள். ஒருமுறை ஒரு பிரபல மனிதரைச் சந்தித்தேன். இந்திய அளவில் அவர் மிகவும் பிரபலமானவர். ஆன்மீகத்தில் இருக்கும் தன்னுடைய ஆர்வத்தை அவர் என்னிடம் வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் அவரைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம்தான் அதிகமானது. ஏனென்றால் அவர் வெளியே ஒரு கோட், உள்ளே ஒரு கோட், அதற்குள்ளே ஒரு கோட் என்று இறுக்கத்தில் இருந்தார். அவர் தன் துணிகளை எல்லாம் தாண்டி கைவிட்டு எதை எதையோ வெளியில் எடுத்தார். அவை எல்லாமே பல வகையான ருத்ராக்ஷ மாலைகள், ஸ்படிக மாலைகள், கல் பதித்த நகைகள். அவரைப் பொறுத்தவரை அதுதான் ஆன்மீகம். நான் ஒரு மாலை கூட அணியாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. “நீங்கள் ஒரு சிவ பக்தரா?” என்பதைப் போல என்னிடம் பேசினார். நான் சொல்ல வருவதெல்லாம், இந்தக் கற்களை உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதீர்கள். ஏதோ சிறிது உதவியாக அதைப் பயன்படுத்தலாம். மற்றபடி அவை பற்றியே நினைத்து, அவற்றைத் தேடி சேகரித்துக் கொண்டேயிருப்பது ஆன்மீகம் ஆகாது.

 

கட்டை விரலில் மோதிரம் அணியலாமா?

நான் என் கட்டை விரலில் மோதிரம் அணிந்து இருந்தேன். என் உதவியாளர் ஒருவர், ‘கட்டை விரலில் அணியக் கூடாது அது தவறான சக்திகளை நம்மை நோக்கி ஈர்க்கும்’ என்று சொன்னார். இதைப் பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல முடியுமா? சத்குரு: பெரும்பாலான சமயங்களில் நான் தவிர்க்க நினைக்கும் ஒரு தலைப்பில் என்னைப் பேசச் சொல்கிறீர்கள். உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி நான் பொதுவாக பேச விரும்புவதில்லை. அப்படி நான் பேசினாலும் உங்களிடம் இருக்கும் சாய்ஸ் தான் என்ன? ஒன்று நீங்கள் என்னை நம்பலாம் அல்லது நம்பாமல் போகலாம். அந்த நம்பிக்கை உங்களை உண்மைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லுமா என்ன? தன் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி பேசுவதில் மக்கள் சுகம் மட்டுமே காண்கிறார்கள். இதன் விளைவுகள்… மோதிர விரலின் அடி முதல் நுனி வரை பிரபஞ்சமே இருக்கிறது. சரி, இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த மனித உடலமைப்பு ஒரு குறிப்பிட்ட இயங்கும் செயல்தன்மை கொண்டது. நீங்கள் அதனுடன் மிகுதியாக அடையாளப்பட்டு போனதால் உங்களால் இவ்வுடலை இந்த கண்ணோட்டத்தில் பார்க்க இயலாமல் போகலாம். ஆனால், நீங்கள் அறுவை சிகிச்சைக்கு போனால் உங்கள் உடலை ஒரு எந்திரத்தைப் போலவே அணுகுவார்கள். உங்களை அங்கே கிடத்தி, துணிகளை நீக்கி, சுத்தப்படுத்தி, செய்வதைச் செய்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். உங்களை ஒரு மெஷினைப் போலவே அணுகுவார்கள். இந்த உடல் ஒரு அமைப்புமுறை (mechanism) என்பதால் இது பலவித சாத்தியங்களுடன் இங்கு வந்துள்ளது. யோகாவிலும் இந்த உடலை தெய்வீகத்திற்கான ஏணிப்படியாகத்தான் பார்க்கிறோம். தற்சமயம், இதனை நீங்கள் மிக மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்துகிறீர்கள். ஆகாய விமானத்தை, கார் போல் பயன்படுத்துகிறீர்கள். சிறகொடிக்கப்பட்ட விமானத்தை பஸ் என்று சொல்லி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இது விமானம் என்று தெரிந்த மனிதரால் அழாமல் இருக்க முடியுமா? நானும் அதுபோன்ற ஒரு நிலையிலேயே இருக்கிறேன். நீங்கள் செய்யும் யோகா, நீங்கள் வாழும் விதத்தை பார்த்தால் அழுகைதான் வருகிறது. “இந்த வாழ்க்கையை எப்படியெல்லாம் அற்புதமாய் வாழலாம், இப்படி இருக்கிறார்களே” என்றே எண்ணத் தோன்றுகிறது. நான் இந்த மோதிர கதைக்குள் சென்றால் இது அம்புலிமாமா கதை போல் தோன்றும். வேறு யாரோ எனக்கு இதுபோன்ற கதையைச் சொன்னால் நான் நம்ப மாட்டேன். இதுபோல் பல பரிமாணங்களைச் சேர்ந்த பல உண்மைகள் உள்ளன. நாம் இங்கு அமர்ந்திருக்கும் போதே இங்கு பல பரிமாணங்களைச் சேர்ந்த பல உண்மைகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன. இது பல தளங்களைக் கொண்ட ஒரு உலகம். ஒன்றுக்குள் ஒன்று பிணைந்திருக்கிறது. ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கிறது. இன்று நவீன அறிவியலும் இதனை உணரத் துவங்கிவிட்டது. தந்திரம் என்பதும் ஒருவித தொழில்நுட்பம். சில வருடங்களுக்கு முன் எதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்று நாம் நினைத்தோமோ அவை யாவும் இன்று உண்மையாகி விடவில்லையா? அதுபோலவே, தந்திரமும் வேறொரு பரிமாணத்தைச் சேர்ந்ததொரு தொழில்நுட்பம். ஆனால், இது பொருள்நிலையிலான பரிமாணத்தைச் சேர்ந்தது. நீங்கள் அறிந்திருக்கும் நிலையிலான பொருள்நிலை சார்ந்த பரிமாணம் அல்ல, இருந்தும் இது பொருள் நிலையிலான பரிமாணம்தான். கட்டை விரலில் மோதிரம் அணிந்தால்… நீங்கள் சரியானவற்றை செய்யாத வரையிலும் உங்களுக்கும் சரியானவைகள் நிகழாது. சரி, கட்டைவிரலில் மோதிரம் அணிவதால் எனக்கு என்னாகும் என்றீர்களே… அதனை அணிவதால், உங்களால் கையாள இயலாத, குறிப்பிட்ட விதமான சக்திகளை உங்களை நோக்கி நீங்கள் ஈர்க்கும்படி நேரும். உங்களை அது உலுக்கிப் போடலாம். நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது, கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அது குறிப்பிட்ட விதமான சில சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும் அதனால் உங்கள் வாழ்க்கையே உலுக்கப்படலாம். குறிப்பாக, நீங்கள் கட்டைவிரலில் மோதிரம் அணிந்திருந்தால், நீங்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அதனாலேயே மோதிர விரலில் மட்டுமே மோதிரம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் மோதிர விரலில்தான் அணிய வேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்களே அது தற்செயலாக நடந்தது என்று நினைக்கிறீர்களா? இல்லை, இது தற்செயலாக நடந்தேறிய நிகழ்ச்சி அல்ல. மோதிர விரலின் அடி முதல் நுனி வரை பிரபஞ்சமே இருக்கிறது. உங்கள் கம்ப்யூட்டருக்கான மௌஸை போன்றது இவ்விரல். சில குறிப்பிட்ட விஷயங்களை இந்த விரலில் செய்வதனால், ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முடியும். இந்த உடலைக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். உங்கள் உடலில் மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை உடல்களின் மீதும் ஆளுமை செலுத்தலாம். உங்கள் மோதிர விரல் மூலம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். மோதிர விரலைப் பற்றி யோகத்தில் முழுமையான அறிவியலே இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்கு மோதிர விரல் ஒரு சாவி போல் செயல்படுகிறது. இதனால் மோதிர விரலை செப்பனிடுவது மிக மிக அவசியமாகிறது. இதன்மூலம் உடலிற்கு ஒருவித ஸ்திரத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், இன்று மோதிரம் ஒரு இடத்தில் அணியப்படுவதில்லை. எங்கெல்லாம் ஓட்டையிட முடியுமா அங்கெல்லாம் ஓட்டையிட்டு வளையம் மாட்டிக் கொள்கிறார்கள். இதுபோன்ற செய்கைக்கு ஒருவிதமான தாக்கம் இருக்கத்தான் செய்யும். இவற்றை செய்து கொண்டு ஒரு மனிதர் ஓரளவிற்கு சுகமாய் வாழ முடியும், உங்கள் வண்டியை உங்களால் இயக்க முடியும் ஆனால் இப்படி இயக்குவதனால், அதற்கு இரண்டு மடங்கு எரிபொருள் தேவைப்படும். வாழ்வின் செயல்முறையில் உங்களை நீங்களே முழுமையாக ஆற்றல் இழக்கச் செய்து கொள்வீர்கள். சந்தோஷமாக, பிரயத்தனப்படாமல் செய்ய வேண்டியவற்றை தவறான விஷயங்களைச் செய்து வலுவிழப்பீர்கள். எல்லோருமே வாழ்கிறார்கள், ஆனால் எல்லோருமே சுகமாக காரியங்களைச் செய்வதில்லையே? ஏனெனில், உலகில் சரியான விஷயங்கள் உங்களுக்கு நிகழவில்லை. நீங்கள் சரியானவற்றை செய்யாத வரையிலும் உங்களுக்கும் சரியானவைகள் நிகழாது. உங்கள் மூளையில் நீங்கள் ஆன்டெனாவைப் பொருத்திக் கொண்டால், கேட்கும் ஒவ்வொரு ரேடியோ அலைவரிசைகளையும் கேட்டுத்தானே ஆகவேண்டும். இவை அனைத்தையும் பொருத்துப் போக வேண்டிய சூழ்நிலை நேரும் அல்லவா? உங்களுக்கு இதையெல்லாம் கேட்பதற்கு விருப்பமில்லாவிட்டால், ஆன்டெனாவை கழட்டுவது தானே நல்லது? கட்டைவிரல் மோதிரமும் அப்படித்தான். உலோகத்திற்கு ஒருவித உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உள்ளது. அதற்கென்று சில குணங்கள் உள்ளன. அவற்றால் நம் மீது தாக்கம் ஏற்படுத்த முடியும். அதனாலேயே அவற்றை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நாம் பயன்படுத்துகிறோம். கட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் பால் ஈர்க்கும். அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும் ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது.

ருத்ராட்சம் – பில்லி சூனியத்திலிருந்து காக்குமா?

ருத்ராட்சம் பற்றிய பல அரிய தகவல்கள் இருந்தாலும், அது பில்லி சூனியத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பது அறியப்படாத ஒன்று. இதை ருத்ராட்சம் எப்படி செய்கிறது என்பதையும் ருத்ராட்சத்தை அணியும் முறையையும் எடுத்துரைக்கிறது இக்கட்டுரை… கேள்வி ருத்ராட்ச மாலையை ஆசீர்வதித்திருக்கிறீர்களே, அதுவும் தீட்சை வழங்குவதுதானா? சத்குரு: சக்திமயமான ஒரு சூழ்நிலையை அடிப்படை நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவந்தால் அதற்கு பிரதிஷ்டை என்று பெயர். நாம் பிராணப் பிரதிஷ்டை என்று தியானலிங்கம் பற்றி சொல்கிறபோது அது முற்றிலும் வேறு பரிமாணத்தைச் சார்ந்தது. ருத்ரட்சத்தை அதற்கு உரிய முறையில் நாம் தயார் செய்கிறோம். அதை வெறுமனே பிறருக்கு வழங்குவதில்லை. குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தியானலிங்க வளாகத்திற்குள் ருத்ராட்சங்கள் வைக்கப்பட்டு பிறகே தரப்படுகின்றன. மற்ற இடங்களில் வாங்குகிற ருத்ராட்சங்களில் இந்தத் தன்மை இருக்காது. அவற்றை நான் ஆசீர்வதித்துத் தருவது என்பது இன்னும் வேறு நிலையைச் சேர்ந்தது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக ஏதோ ஒன்று செய்கிறது. கேள்வி தீய அதிர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கவசமாக ருத்ராட்சம் பயன்படுமா? சத்குரு: ருத்ராட்சம் உங்களுக்குள் இருக்கிற சக்திகளை ஒருநிலைப்படுத்துகிறது. எனவே வெளியில் இருக்கிற தீயசக்திகள் உங்களை பாதிக்காது. சிலர் மீது சில தீயவினைகளை பில்லி, சூனியம் போன்றவற்றை சிலர் ஒரு குறிப்பிட்ட மனிதரை நோக்கி பில்லி, சூனியம் ஏவப்படுகிறது. அதை அவர் ஏற்காத நிலையில் இருக்கிறார் என்றால், அவருக்கு பக்கத்தில் இருக்கிற உங்களை அது பாதிக்கும். ஏவுவார்கள். அதில் எவ்வளவு தூரம் பாதிப்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் அது ஒரு அறிவியலாகவே வளர்ந்தது. நான்கு வேதங்களில், அதர்வண வேதம் சக்திநிலையை ஒருவருடைய நன்மைக்கோ, தீமைக்கோ பயன்படுத்துவதைப் பற்றிதான் இருக்கிறது. எப்படி தீமை செய்வது? எப்படி அவர்களைக் காயப்படுத்துவது? எப்படி நோய் வழங்குவது? எப்படி ஒரு மனிதனை மரணமடைய வைப்பது? என்று கூட இருக்கிறது. இவற்றை பொதுவாக பில்லி, சூனியம் என்று சொல்வார்கள். அது ஒரு தனித்தன்மை. சில துறைகளில் சில நிபுணத்துவம் தேவைப்படுகிறது. அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அது ஒரு அறிவியல். அது நிச்சயம் பயன்படுகிறது. அது ஒரு குறிப்பிட்ட விதமாக நிகழ்கிற காரணத்தால் உள்நிலையில் நிறைய வேலைகள் அதற்கு செய்ய வேண்டியிருக்கிறது. யாருக்காவது, எந்த தீமையாவது செய்ய வேண்டும் என்று கருதுவார்கள். ஒருவிதமான பேராசை அல்லது வெறுப்பு அல்லது கோபம் காரணமாக அதனைச் செய்வார்கள். அவர்கள் ஆத்மசாதனைகளில் உறுதிப்படமாட்டார்கள். எனவே அந்தக் கலை அவர்களுக்கு முழுமையாக கைவருவதில்லை. கொஞ்சம் தெரியும். மற்றது எல்லாம் உளவியல் சார்ந்தது. உதாரணத்திற்கு யாரோ உங்களை எதிர்த்து பில்லி, சூனியம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். எந்த பில்லி, சூனியமும் செய்யாமல், உங்கள் வீட்டு வாசலில் ஒரு மண்டை ஓடு வைத்துவிட்டு, கொஞ்சம் இரத்தத்தையும் தெளித்துவிட்டுப் போய்விட்டால், உங்களுக்கு தீமை நடக்கத் தொடங்கிவிட்டதாகவே தோன்றும். இதில் தொண்ணூறு சதவிதம் மனம் சார்ந்த அச்சம். ஆனால் அதேநேரம் இன்னும் சிலபேர் இருக்கிறார்கள். எவ்வளவோ தொலைவில் இருந்து, எதாவது செய்து முற்றிலும் அழிக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பலரும் என்னிடம் உதவிக்கு வருகிறார்கள். நான் இவர்களுக்கென்று பலவற்றை செய்கிறேன். சில சமயங்களில் பில்லி, சூனியம் உங்கள் மீது ஏவப்படவேண்டுமென்று அவசியமில்லை. இந்த ஒரு குறிப்பிட்ட மனிதரை நோக்கி பில்லி, சூனியம் ஏவப்படுகிறது. அதை அவர் ஏற்காத நிலையில் இருக்கிறார் என்றால், அவருக்கு பக்கத்தில் இருக்கிற உங்களை அது பாதிக்கும். இது பல இடங்களில் நடக்கிறது. இரண்டு பேர் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார்கள் என்றால், மூன்றாவது மனிதர் ஒருவர் காயப்படுவது போலத்தான் இது. பலநேரங்களில் அந்த தீயசக்திகள் உங்களை நோக்கியே ஏவப்படுகிறது. சில சமயம் வேறெங்கோ போகவேண்டியது உங்களைப் பிடித்துவிடும். நீங்கள் ருத்ராட்சம் அணிவீர்களேயானால், உங்கள் சக்திநிலையிலிருந்து நீங்களே ஒரு கவசத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். கேள்வி ருத்ராட்சத்தை எல்லாநேரமும் அணியலாமா? சில பேர் அதைத் தங்கள் மணிக்கட்டைச் சுற்றிக் கட்டியிருக்கிறார்களே, அதனால் பயனுண்டா? சத்குரு: ருத்ராட்சத்தை எல்லா நேரமும் அணியலாம். அவற்றை கழுத்தில் தான் அணிய வேண்டும். மணிக்கட்டைச் சுற்றி கட்டக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கிற மனிதர்தான், மணிக்கட்டைச் சுற்றி அணியலாம். மணிக்கட்டைச் சுற்றிக் கட்டினால் உங்கள் வாழ்வை மிகவும் கடினமாக, உறுதியான முறையில் நடத்தவேண்டும். பொதுவாக அது சாத்தியமில்லை. குடும்பச் சூழ்நிலையில் இருப்பவர்கள் கழுத்தைச் சுற்றித்தான் அணியவேண்டும். அவர்கள் மணிக்கட்டைச் சுற்றி அணிவது நல்லதில்லை. இங்கே கூட சில இளம்பெண்கள் தங்கள் கட்டை விரல்களில் மோதிரம் அணிந்திருக்கிறார்கள். அதை அப்படி அணியக்கூடாது. அதன்மூலம் உங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உங்களை நோக்கி நீங்கள் ஈர்ப்பீர்கள். மோதிரவிரலுக்கு மோதிரங்கள் அணியலாம். இந்த நான்கு விரல்களைப் பொறுத்தவரையில் தவறில்லை. ஆனால் இந்த கட்டைவிரலில் எந்த உலோகத்தையும் அணியவே கூடாது. அதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத சக்திகள், உங்களோடு தொடர்பு கொள்ள நேரும். குறிப்பாக, கட்டை விரலில் தங்கம், செம்பு போன்றவற்றை அணிவீர்களேயானால், மாந்திரீகப் பயிற்சி ஏவப்பட சில சக்திகளை நீங்கள் ஈர்ப்பீர்கள். வேறொருவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற இத்தகைய சக்திகளுக்கு அடிமையாவது உங்களுக்கு நல்லதில்லை.

ருத்ராட்சம் – சில அறியப்படா தகவல்கள்…

ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயருள்ள மரத்தின் விதை. இவ்விதை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இங்கு வெவ்வேறு வகையான ருத்ராக்ஷ மணிகளும் அவைகளின் பயன்களையும், பஞ்சமுகி ஏகமுகி போன்றவற்றை பற்றியும் சத்குருவின் பகிர்வு… சத்குரு: இமாலய பகுதியை சேர்ந்த ஒருசில உயர்ந்த மலைப் பகுதிகளில் வளரும் குறிப்பிட்ட மரங்களின் விதைதான் ருத்ராட்சம். துரதிர்ஷ்டவசமாக இந்த மரங்களை இரயில்வே தண்டவாளங்களில் முன்பு பயன்படுத்தி வந்தார்கள். இதனாலேயே இந்தியாவில் இப்பொழுது வெகுசில மரங்களே மீதம் உள்ளது. இன்று இவை பெரும்பாலும் நேபாள், பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை தென் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களில் காணப்பட்டலும், சிறந்த தரம் உள்ளவை உயர்ந்த இமாலய பகுதியில் உள்ளவையே. ஏனெனில் அங்குள்ள நிலம், சூழ்நிலை போன்றவை அதன் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கிறது. இந்த விதைகளுக்கு என்று தனிப்பட்ட அதிர்வு உள்ளது. சாமான்யமாக அளவு பெரிதாக உள்ள விதைகளில் அவ்வளவு அதிர்வு இருக்காது. விதை எவ்வளவு சிறியதோ அந்த அளவுக்கு அதிர்வும் கூடுதலாக இருக்கும். ருத்ராட்ச மாலைகள் சாமான்யமாக இம்மணிகளை மாலையாக கோர்ப்பது வழக்கம். நமது மரபில் 108 + 1 என்ற கணக்கில் மணிகள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த தனியாக உள்ள ஒரு மணியை “பிந்து” என்கின்றனர். ஒவ்வொரு மாலையிலும் ஒரு பிந்து இருப்பது அவசியம். இல்லையேல் அதன் சக்தி ஒருவித சுழற்சியில் சிக்கிக்கொள்ளும். இதனால் அதை அணிபவர் சிறிது பலவீனமாக இருப்பவரானால் தலை சுற்றல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏகமுகி அணிந்தால் பன்னிரண்டு நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்று மக்கள் சொல்கிறார்கள். ருத்ராட்ச மணிகளை கோர்க்கும் பொழுது பட்டுநூலோ அல்லது பஞ்சுநூல் கொண்டோ கோர்ப்பது சிறந்தது. நூலில் கோர்த்த மாலை என்றால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை நூலை மாற்றுவது நல்லது, இல்லையென்றால் நூல் ஒரு நாள் அறுந்து உங்கள் 108 மணிகளும் ஒவ்வொரு பக்கம் உருள வாய்ப்பு உண்டு. செம்பு, வெள்ளி, தங்க கம்பியிலும் இம்மணிகளை கோர்க்கலாம், ஆனால் பெரும்பாலும் நீங்கள் அதை நகை கடைக்கு கொண்டு செல்வீர்கள். கடைக்காரர் தங்க கம்பியோ அல்லது வேறெதுவோ கொண்டு இறுகக் கட்டி முடிக்கும் போது ருத்ராட்சம் உள்ளே விரிசல் விடலாம். நான் எவ்வளவோ முறை நகைகாரரிடம் சொல்லச்சொல்லியும், அவர்கள் என்னிடம் செய்து கொண்டு வரும்போது பெரும்பாலும் 30 – 40 விழுக்காடு உடைந்து இருக்கும். தளர்ந்த முறையில் கோர்ப்பது சிறந்ததும், முக்கியமும் ஆகும். அழுத்தத்தால் உண்டான விரிசல் உள்ள மாலை நல்லதல்ல. இந்த மாலையை எந்நேரமும் அணியலாம். குளிக்கும் பொழுது கூட நீங்கள் இதை அணியலாம். நீங்கள் பச்சை தண்ணீரில் குளிப்பவராகவும், இரசாயன சோப்பு பயன் படுத்தாதவராகவும் இருந்தால், தண்ணீர் இதன் மேல் பட்டு உங்கள் உடல் மீது வழிவது மிக்க சிறந்தது. ஆனால் நீங்கள் இரசாயன சோப்பும், சுடு தண்ணீரும் பயன்படுத்துபவரானால், அது விரிசல் விட்டு சுலபமாக உடைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி சமயங்களில் இதை அணியாமல் இருப்பது நல்லது. ருத்ராட்சத்தின் பயன்கள் அதிகமாக பிரயாணம் செய்பவர்கள், பல்வேறு வகைப்பட்ட இடங்களில் சாப்பிட்டு, தூங்குபவர்களுக்கு, ருத்ராட்சம் அவர்களுடைய சக்தியின் கூடாக மாறி ஒரு நல்ல உறுதுணையாக இருக்கும். சில நேரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் – புது இடமாக இருந்தாலும் சில இடங்களில் உடனே தூக்கம் வரும், ஆனால் வேறு சில இடங்களில், உடம்பு அசதியாக இருந்தாலும் கூட தூக்கம் வராது. பொதுவாக உங்களைச் சுற்றியுள்ள சக்திநிலை உங்கள் சக்திநிலைக்கு சாதகமாக இல்லையென்றால், அந்த இடம் உங்களை நிலைகொள்ள விடாது. சாதுக்களும், சந்நியாசிகளும் ஒவ்வொரு இடமாக சுற்றிகொண்டு இருப்பதால், பல இடங்களும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. அவர்கள் ஒரே இடத்தில் இரண்டு முறை தங்கியிருந்து தூங்கக் கூடாது என்று ஒரு விதிமுறை உண்டு. இன்று மறுபடியும் மக்கள் வேலை காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், வெளியில் சாப்பிட்டு, தூங்கவும் வேண்யிருப்பதால் ருத்ராட்சம் அணிவது மிகவும் பயனளிக்கும். இதில் மற்றொரு விஷயம் அடங்கியுள்ளது. காட்டில் வசிக்கும் சாதுக்கள், சந்நியாசிகள், அறியாத ஏதோ ஒரு குளமோ அல்லது குட்டையிலோ நீர் அருந்தக் கூடாது. இயற்கையிலேயே அந்த நீர் விஷ வாயு கொண்டதாகவோ, தூய்மை அல்லாமலோ இருக்கக்கூடும். அந்நீரை குடித்தால் அவர்கள் முடம் ஆகவோ அல்லது உயிர் போகக் கூட வாய்ப்பு ஏற்படும். அந்த சமயங்களில் ருத்ராட்ச மாலையை நீருக்கு மேலாக தொங்க பிடித்தால், நீர் நல்லதாகவும், குடிக்க தகுதியானதாகவும் இருந்தால் – மாலை கடிகார முள் செல்லும் திசையில் (பிரதக்ஷணமாக) சுற்றும். விஷமுள்ளதாக இருந்தால் மாலை எதிர் திசையில்(அப்பிரதக்ஷணமாக) சுற்றும். உணவின் தரத்தையும் இவ்வாறு பரிசோதித்துப் பார்க்கலாம். எந்தவொரு நல்ல பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேலேயும் பிடித்து பார்த்தால் அது கடிகார முள் செல்லும் திசையில் சுற்றும். ஒரு கெட்ட பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேல் பிடித்தால் அது எதிர் திசையில் சுழலும். தீய சக்திக்கு எதிரான கவசம்! இது தீய சக்திக்கு எதிராக கவசமாக செயல்படவல்லது. ஒருவருக்கு கேடு செய்ய கூடிய தீய சக்திகளை சிலர் உபயோகப்படுத்துகிறார்கள். அது ஒரு விதமான விஞ்ஞானம். வேதங்களில் ஒன்றான அதர்வண வேதம் என்பதில், சக்தி நிலையை ஒருவருக்கு சாதகமாகவும், இன்னொருவருக்கு பாதகமாகவும் எப்படி உபயோகப்படுத்தலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் ஒருவர் இதில் தேர்ச்சி பெற்றுள்ளாரோ, அவர் இதைப் பயன்படுத்தி எல்லையில்லா துன்பம் உண்டாக்க முடியும். மரணம் கூட சம்பவிக்க முடியும். நமது மரபில் மக்கள் ருத்ராட்சத்தை கையாள்வது என்பதை வாழ்வில் ஒரு புனிதமான பணியாக நினைத்தார்கள். ஒரு ருத்ராட்சம் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும். நமக்கு யாரும் தீவினை செய்ய மாட்டார்கள் என்று நாம் எண்ணலாம். ஆனால் உங்களை நோக்கியே அது குறி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, உங்கள் அருகில் அமர்ந்துள்ளவருக்கு குறி வைத்ததாக எண்ணிக்கொள்வோம், நீங்கள் அருகில் இருப்பதாலேயே அது உங்களை பாதிக்கும். உதாரணமாக தெருவில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் உங்களை குறி வைக்கவில்லை ஆனாலும் உங்கள் மேல் குண்டு பாய வாய்ப்பு உள்ளது அல்லவா? அது போலவே சில விஷயங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. அது உங்களுக்கு குறி வைக்கவில்லை என்றாலும், நீங்கள் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருப்பதாலேயே பாதிக்கலாம். இதை நினைத்து மிகப்பெரிய பயம் கொள்ள தேவையில்லை அனால் இம்மாலை அவற்றிலிருந்து ஒருவித பாதுகாப்பு கொடுக்கும். ஏகமுகியும், பஞ்சமுகியும் ருத்திராட்ச மணிகளில் ஒன்றிலிருந்து இருபத்தொன்று முகங்கள் வரை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளதால், கடையிலிருந்து எதோ ஒன்றை வாங்கி அணிவது சரியல்ல. தப்பான ஒன்றை அணிவதால் வாழ்கையில் தொல்லைகள் வரலாம். ஏகமுகி மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் அதை அணிவதில் பலருக்கு விருப்பம். நீங்கள் நிறைய முகங்கள் கொண்டவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு இவ்வளவு முகங்கள் இருக்கையில், ஏகமுகி அணிந்தால் கஷ்டத்தை விலைக்கு வாங்குவது போல ஆகிவிடும். ஏகமுகி அணிந்தால் பன்னிரண்டு நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்று மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் குடும்பத்தை விட்டு விலகுவீர்களா இல்லையா என்பது ஒரு பக்கம், ஆனால் நீங்கள் தனியாக இருக்க விருப்பப்படுபவராக இதன் சக்தி நிலை உங்களை மாற்றிவிடும். மற்றவர்களுடன் ஒன்றி வாழ முடியாமல் போகும். வேறு விதமான சிறப்பு மணிகள் அணிய வேண்டுமானால், கடைகளிலிருந்து வாங்கி அணிவதைக் காட்டிலும், இதைப்பற்றி அறிந்தவரிடம் இருந்து பெற்றுக்கொள்வது சிறந்தது. பஞ்சமுகி எல்லோருக்கும் பொருந்தும், நல்லதும் கூட – ஆண், பெண், குழந்தைகள் உட்பட. பொதுவான நன்மை, உடல் நலம், விடுதலை ஆகியவை கிடைக்கும். இரத்தக்கொதிப்பை சீராக்கும், நரம்புகளை அமைதிப்படுத்தும், நரம்பு மண்டலத்தில் ஒரு வித அமைதியையும், சுறுசுறுப்பையும் அளிக்கும். 12 வயதுக்குள்ளாக இருக்கும் சிறுவர்கள் ஆறுமுக மணியை அணியலாம். அது அவர்களை அமைதியாக்கி, ஒருமுகப்படுத்தும் தன்மையை கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பெரியோர்களின் சமநிலையான கவனிப்பை ஈர்ப்பார்கள். கௌரிஷங்கர் கௌரிஷங்கர் என்பது உங்கள் ஈடா பிங்களா நாடிகளை ஒருவித சமநிலையை அடையசெய்கிறது. பொதுவாக இது வாழ்வில் செழிப்பு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. செழிப்பு என்பது பணம் மட்டும் அல்ல, பல வேறு விதங்களில் செழிப்பு அடையலாம். உங்களிடம் சொந்தமாக ஒன்றும் இல்லை என்றால் கூட வாழ்வில் செழிப்பாக இருக்கலாம். நீங்கள் ஒரு சமநிலை கொண்ட மனிதராக இருந்தாலோ, புத்திசாலித்தனமாக செயல்பட்டாலோ, செழிப்பு உண்டாகும். உங்கள் சக்திநிலை சீராக இருக்கும்போது இப்படி நடக்கும். கௌரிஷங்கர் உங்கள் ஈடா பிங்களா நாடியை சமன்படுத்தி சீராக்க செய்யும். உங்களுக்கு உங்கள் வாழ்கையை தூய்மையாக்க வேண்டுமானால் ருத்ராட்சம் ஒரு நல்ல கருவியாகவும் உதவியாகவும் இருக்கும். யாரோ ஒருவர் ஆன்மிக பாதையில் நடக்க வேண்டும் என்றால், தன்னை உயர்த்திக்கொள்ள, எந்த ஒரு சிறு கருவியாக இருந்தாலும், உபயோகபடுத்த வேண்டும் என்று நினைப்பார். இது ஒரு நல்ல கருவி. ஒரு குரு என்பவர் சாமான்யமாக வெவ்வேறு தரப்பான மனிதருக்கு வெவ்வேறு விதமாக ருத்ராட்சத்தை சக்தியூட்டி கொடுப்பார். ஒரு பிரம்மச்சாரியாகவோ அல்லது சந்நியாசியாகவோ ஆக வேண்டும் என்றால் முற்றிலும் வேறு விதமாக சக்தியூட்டப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக சக்தியூட்டியதை அணியக்கூடாது. நமது மரபில் மக்கள் ருத்ராட்சத்தை கையாள்வது என்பதை வாழ்வில் ஒரு புனிதமான பணியாக நினைத்தார்கள். வழி வழியாக வந்த தலைமுறைகள் இதே செய்தன. இதை ஒரு தொழிலாக செய்தாலும், அடிப்படியாக ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக நினைத்தார்கள். தேவைகள் அதிகரிக்க இது ஒரு வணிகமாக மாறியது. இன்று இந்தியாவில் பத்ராக்ஷா என்ற ஒரு விஷ விதை உள்ளது. இது அதிகமாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் வளர்கிறது. இரண்டும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். கையில் எடுத்துப்பார்த்து, நுண்ணிய உணர்வுகள் இருப்பவராக இருந்தால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதை உடலில் அணியக்கூடாது. ஆனால் அவை உண்மையான மணிகள் போல இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால் நம்பிக்கையான இடங்களில் இருந்து மாலைகளைப் பெறுவது அவசியம்

 

மரணத்திற்கு பிறகு உடலின் சக்கரங்கள் என்னாகும்?

நாம் இறந்த பிறகு நம் உடல் மண்ணிற்கும், உயிர் விண்ணிற்கும் போய்விடும் என்பது நாம் கேள்விப்பட்டவைதான். அப்படியிருந்தால், நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த ஏழு சக்கரங்கள் என்னாகும்? உடலோடு சேர்ந்து அவையும் மறைந்துவிடுமா? இதைப்பற்றி சத்குருவிடம் கேட்டபோது… சத்குரு: சக்கரங்கள் எங்கே போகும்? சக்கரங்கள் என்பது உங்கள் உடலில் ஸ்தூலமாக இருக்கிற சக்கரங்கள் அல்ல; அவை சில சக்தி மையங்கள். நீங்கள் சுழல்காற்றைப் பார்த்திருப்பீர்கள். அது இருக்கும்போது உள்ளபடியே இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் அது மறையும்போது எங்கே போகிறதென்றே தெரிவதில்லை. இந்த தர்க்க மனம் எப்போதுமே, ஒன்று இருந்தால் அது எங்கேயோ போகவேண்டும் என்று நினைக்கிறது. ஒன்று போய்விட்டால் ஒன்று திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறது. அந்த நிகழ்வு இயற்கையில் தானாகவே நிகழ்கிறது. ஒரு சமுத்திரத்தில் வருகிற மிகப்பெரிய அலை அடுத்தவினாடி எங்கே போகிறதென்று தெரியவில்லை. திரும்பிப் போய்விடுகிறது. அதன் பிறகு அங்கே எதுவும் இல்லை. சக்கரங்களும் அப்படித்தான். இந்த முழு பிரபஞ்சமே சக்திநிலைதான் என்கிறபோது சுழல் காற்றுபோல் சில மையங்களும் இருக்கின்றன. சில நேரம் அங்கு இருக்கிறது. பிறகு காணாமல் போகிறது. அது எதோ ஒரு இடத்திற்கு போவதில்லை. வருவது, போவது எல்லாம் உங்கள் கற்பனை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த தர்க்க மனம் எப்போதுமே, ஒன்று இருந்தால் அது எங்கேயோ போகவேண்டும் என்று நினைக்கிறது. ஒன்று போய்விட்டால் ஒன்று திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறது. இது அப்படியல்ல. ஒரு ஜென் கதை ஒரு ஜென் குரு மரணப்படுக்கையில் இருந்தார். ஜென் மார்க்கத்தைப் பொறுத்தவரை மரணம் மிகமிக முக்கியமானது. முழு விழிப்புணர்வோடு அவர்கள் இறக்கவேண்டும். இப்போது அவருக்கு விடைகொடுக்க இன்னொரு ஜென் குரு வந்தார். அவர் பெயர் சாங் சூ. அது கடைசி வினாடி. எனவே சாங் சூ கேட்டார். “என் உதவி உங்களுக்குத் தேவையா, அதைக் கடந்து செல்ல வேண்டுமா?” எனக் கேட்டார். இறந்து கொண்டிருக்கிற ஜென் கேட்டார், “உங்களால் என்ன செய்ய முடியும்? இது வந்திருக்கிறது. போகிறது. இது தானாக வருகிறது, தானாகப் போகிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்.” அதற்கு சாங் சூ சொன்னார், “அதுதான் உங்கள் சிக்கல். வருகிறது, போகிறது என்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. வராமல் இருப்பதற்கும், போகாமல் இருப்பதற்கும் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். அந்த குரு புரிந்து கொண்டார், புன்னகைத்தார், உடனே மரணமடைந்தார். உண்மைதான், உண்மையிலேயே வருவது, போவது என்பதே இல்லை. அது ஒரு மாயை, ஒரு பெரிய வேடிக்கை. அரங்கேறிக் கொண்டேயிருக்கிற வேடிக்கை. இருப்பது போல் இருக்கும். ஆனால் இல்லை. எனவே வருவதற்கும், போவதற்கும் நீங்கள் அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதனால் இப்போது இங்கே எதையும் பற்றிக் கொள்ளாமல் இருக்க முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? வருவதற்கும், போவதற்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தால் இங்கே இருப்பது மிக முக்கியமாகிவிடும். இதுதான் இயல்பு. எனவே பற்றுதல் தோன்றிவிடும். எனவே நீங்கள், “எது எங்கே போகிறது, என்ன நடக்கிறது” – இந்த அபத்தங்களை எல்லாம் விட்டுவிடுங்கள். போவதற்கு என்று எந்த இடமும் இல்லை. அப்படியே கரைந்து போய்விட வேண்டும். செய்வதற்கென்று எதுவும் இல்லை. வெறுமனே இருங்கள் போதும். கேள்வி செய்வதற்கு எதுவுமே இல்லையென்றால் இந்த ஆன்மீகப் பயிற்சிகள் எதற்கு? இதில் ஏன் எங்களைத் தீவிரமாக ஈடுபடுத்துகிறீர்கள்? சத்குரு: ஓ! செய்வதற்கு எதுவும் இல்லையென்றால் ஏன் இரவு, பகல் எங்களை இப்படி தொந்தரவு செய்கிறீர்கள் என்கிறீர்களா? செய்வதற்கு எதுவும் இல்லை என்பதல்ல பொருள். உங்கள் இயல்பு செயல்தான். ஏனென்றால் இங்கு எப்போதுமே செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் நீங்கள் இல்லை. எப்போதுமே செய்வதற்கு ஏதாவது இருக்கிறது. எதையாவது செய்தாக வேண்டும் என்கிறபோது எதையோ செய்வதற்கு இதையாவது செய்யுங்கள் என்பதுதான் பயிற்சிகளின் நோக்கம். எப்படியும் எதையாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். நீங்கள் எங்கே போனாலும் சரி, இமாலயத்துக்குப் போனாலும் சரி, சென்னைக்குப் போனாலும் சரி, இல்லை ஈஷாவில் இருந்தாலும் சரி எதையாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். உடலளவில் செய்யாவிட்டாலும் மனதளவிலாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். எனவே உங்கள் வளர்ச்சிக்கு வழி செய்கிற செயலை உங்களுக்குத் தரலாம் என்று முடிவு செய்தோம். அதனால்தான் இவ்வளவு செயல்களும் பயிற்சிகளும். இல்லையென்றால் இந்த செயல்களுக்கென்று எந்த அர்த்தமும் இல்லை. எந்த செயல் உண்மைக்கு மிக அருகில் உங்களை எடுத்துச் செல்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. பிற செயல்கள் உங்களை வேறு எங்காவது எடுத்துச் செல்லலாம். குறைந்தது இந்த செயலாவது உண்மைக்கு சற்று நெருக்கமாகக் கொண்டுவரும். இதுதான் யோகாவின் முழு நோக்கமே.

முற்பிறவியைப் பற்றி தெரிந்துகொள்ள முடியுமா?

முன்பிறவிகள் பற்றி அறிந்து கொள்வதில் பயன் உள்ளதா? விழிப்புணர்வுடன் அதைத் தெரிந்து கொள்ள வழிகள் உள்ளதா? சத்குரு: நீங்கள் உண்மையில் முற்பிறவி சம்பவங்களை அறிய ஆசைப்பட்டால், உச்சநிலை விழிப்புணர்வுக்கு உங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும். அப்போது அது உங்கள் நினைவலைகளை திறக்க வைக்கும். ஆனால் அதில் என்ன பயன் இருக்கிறது? இந்தப் பிறவியில் நடந்த சம்பவங்களின் நினைவுகளையே உங்களால் சமாளிக்க முடியவில்லை. 10 வருடங்கள் முன்பு நடந்த ஒரு செயலுக்கு இப்போது வருத்தப்படுகிறீர்கள். நீங்கள் இந்த நிலையில் இருக்கும்போது 10 பிறவிகள் முன் நடந்தது, தற்போது உங்கள் நினைவிற்கு வந்தால் அது உங்களைப் பைத்தியத்தில் தள்ளிவிடும், இல்லையா? எனவே அதற்கு முயற்சிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் முன் பிறவி என்றழைப்பதெல்லாம் மனதின் ஆழ்மன அடுக்குகளாக உள்ளது. விழிப்புணர்வின் உச்ச நிலைகளுக்கு நீங்கள் உங்களை எடுத்து வந்தால், உள்ளிருந்து ஆட்சி செய்யும் இந்த மனதின் அடுக்குகளை உடைக்க முடியும், கரைக்க முடியும். ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரரின் நாய்தான் முந்தைய பிறவியில் உங்கள் கணவராக இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் நாயின் மீது கல்லெறிய ஆரம்பிப்பீர்கள். ஈஷாவில் நடக்கும் சம்யமா பயிற்சியென்பது 8 நாள் நடக்கக்கூடிய தீவிர தியான நிகழ்ச்சியாகும். சம்யமாவில் என்ன நடக்கிறது என்பதை நான் கூறினால் ஒன்று பயம் வரும் அல்லது நம்பிக்கையின்மை வரும். உதாரணமாக நீங்கள் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருப்பீர்கள், அப்போது நீங்கள் முழு விழிப்புநிலையில் இருக்கும்போதே, உங்கள் உடல் பாம்பு போல் ஊர்ந்து செல்ல ஆரம்பிப்பதைக் காண்பீர்கள். அந்த செயல் நடப்பது உங்கள் விழிப்பில் இருக்கிறது, அதை நிறுத்தவும் விரும்புகிறீர்கள், ஆனால் உடலானது பாம்பு போல் ஊர்ந்து கொண்டிருக்கும். தியானத்திலிருந்து வெளிவந்து விட்டால் மிகவும் சாதாரண நிலைக்கு வந்துவிடுவீர்கள். தியானத்தில் உட்கார்ந்தால் உடல் மீண்டும் ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கும். சிலருடைய உடல், பறவை தத்தித்தத்தி நடப்பது போலவும், சிலருடைய உடல் நாயைப் போலவோ புலியைப் போலவோ அல்லது ஏதோ ஒரு விலங்கைப் போலவோ சுற்றிவரும். உடல் இப்படி பல வடிவங்கள் எடுக்கின்றது. ஏன் இப்படி நடக்கிறதென்றால் ஆழமான அடுக்குகளில் பல பரிமாணங்கள் உள்ளன. அவை உங்கள் ஆளுமையில் இருக்காது, ஆனால் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் அவற்றின் தாக்கம் இருக்கும். எனவே சம்யமா போன்ற பயிற்சிகளில் நீங்கள் உச்சநிலை விழிப்புணர்வுகளில் இருக்கும்போது ஆழ்மன அடுக்குகளை விழிப்புணர்வுக்குக் கொண்டு வருகிறீர்கள். அது சக்தி நிலையிலும் உணர்வு நிலையிலும் நடக்கிறது, நினைவு நிலையில் அல்ல. அப்படிச் செய்வதன் மூலம் உங்களுக்குள் பெரிய அளவில் விடுதலையாகிறீர்கள். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது முற்பிறவி பதிவுகளோடு பணிபுரிவது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் முற்பிறவிச் சம்பவங்களை தற்போது நினைவிற்குள் கொண்டுவருவது எந்தப் பயனையும் தராது. அது உங்கள் வாழ்வில் மேலும் சிக்கலைத்தான் கொண்டுவரும். ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரரின் நாய்தான் முந்தைய பிறவியில் உங்கள் கணவராக இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் நாயின் மீது கல்லெறிய ஆரம்பிப்பீர்கள். நீங்கள் அந்த நாயை முத்தமிடுவீர்களா அல்லது அதன்மேல் கல்லெறிவீர்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இரண்டுமே ஆபத்தானதுதான். ஏனெனில் அந்த நாய்க்கு தற்போது எதுவும் நினைவில் இருக்காது. கல்லெறிந்தால் பக்கத்து வீட்டுக்காரரிடம் பிரச்சினைக்கு ஆளாவீர்கள். முத்தம் கொடுத்தாலோ நாயிடம் பிரச்சினைக்கு ஆளாவீர்கள். இரண்டுமே உங்களுக்கு பாதுகாப்பானதல்ல. அது உங்களுக்கு தேவையுமல்ல. ஆனால் நினைவுபடுத்திக் கொள்ளும் செயல்களில் இறங்காமல் அதை உங்கள் அனுபவத்தில் மட்டும் வைத்துக் கொண்டீர்களானால், அது உங்களை விடுதலைக்கு இட்டுச் செல்லும். சம்யமா நிகழ்ச்சியில் பல வகை உண்டு. நாம் நடத்துவது கர்ம சம்யமா. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிட்ட தீவிர விழிப்புணர்வில் இருக்கும்போது அவருடைய விழிப்புணர்வற்ற மனதில் அடுக்குகளாகப் பதிந்திருக்கும் நினைவுகள் மேலெழும்பி கரைந்துவிடுகின்றன. அப்படிச் செய்வதற்கென்று உங்களுக்கு குறிப்புகளோ வழிகாட்டுதல்களோ ஏதும் கொடுக்கப்படுவதில்லை. நீங்கள் அதிக விழிப்புணர்வில் வெறுமனே இருக்கும்போதே திடீரென உங்கள் உடல் அந்தச் செயல் முறையில் இருப்பதைக் காண்பீர்கள். மனதில் நடக்கும் விஷயங்கள் எப்போதுமே நம்பத் தகுந்ததல்ல. அது உங்களை ஆயிரம் வழிகளில் ஏமாற்றும். உடலளவில் எது நடக்கிறதோ அது உண்மை, இல்லையா? உங்கள் உடல் எப்போதாவது உங்களிடம் பொய் பேசியிருக்கிறதா? ஆனால் உங்கள் மனம் உங்களிடம் ஆயிரக்கணக்கான பொய் பேசியிருக்கிறது, இல்லையா? எனவேதான் இந்த விஷயங்கள் உடலளவில், சக்திநிலை அளவில் நடக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம், மனதளவில் அல்ல. ஏனெனில் மனம் எப்போதும் உங்களை சொல்ல முடியாத பிரம்மையில் ஆழ்த்தக் கூடியது. இது போன்ற விஷயங்கள் முறையற்ற வழிகளில் கையாளப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட தம்பதியினர் அந்த ஆண்டில் அனைவரையும் விட அதிகமாக சம்பாதித்திருந்தனர். எனவே நீங்கள் யூகித்துக் கொள்ளலாம், அவர்கள் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் என்று. அந்த அம்மையார் முற்பிறவி போன்ற விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு, ஒரு உளவியல் நிபுணரிடம் சிக்கிக் கொண்டார். அவர் தொலைபேசியில் ஆலோசனை சொல்வதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 90 டாலர் வாங்குபவர். நேரில் ஆலோசனை சொல்வதற்கு இன்னமும் அதிகமாக வாங்குவார். அந்த உளவியல் நிபுணர் சொல்வதை இந்த அம்மையார் உறுதியாக நம்புவார். அந்த நிபுணர் இந்த அம்மையாரிடம் `உங்கள் முற்பிறவியில் டாம் குரூய்ஸ் உங்கள் கணவராகவும், ரிச்சர்டு கெரே உங்கள் தந்தையாகவும் இருந்தனர், எனவே நீங்கள் அவர்கள் கண்ணில் படும்படி பார்த்துக்கொண்டால் அவர்களும் உங்களை காலப்போக்கில் அடையாளம் காணலாம்` என்று சொல்லியிருக்கிறார். எனவே இந்த அம்மையாரும் ஹாலிவுட் விஷயங்களில் தீவிரமாகி, பெவர்லி ஹில்சில் சில வீடுகளும், அக்கம்பக்கத்தில் சில வீடுகளும் வாங்கி அந்தப்பக்கமே சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். டாம் க்ரூய்ஸின் கண்களில் படுவதற்காக பார்ட்டிகள் ஏற்பாடு செய்வதும், வீடுகள் வாங்குவதுமாக அந்த அம்மையார் இருந்ததைக் கண்டு அந்த அம்மையாரின் கணவர் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டார். பிறகு இந்த விஷயம் என் கவனத்திற்கு வந்தது. அந்த அம்மையாரும் எப்படியோ என்னிடம் வந்து சேர்ந்தார். முந்தைய பிறவியில் டாம் க்ரூய்ஸ் தனது கணவராக இருந்திருக்கிறார் என்பதில் அந்த அம்மையார் 100% உறுதியாக இருந்தார். எனவே நான் கூறினேன், `ஆமாம், அப்படித்தான், ஆனால் முந்தைய பிறவியில் எனக்கும் டாம் குரூய்ஸைத் தெரியும். அவர் முந்தைய பிறவியில் சகிக்க முடியாத அளவிற்கு அருவருப்பான தோற்றத்துடன் இருந்தார், உங்களுக்கு நினைவிருக்கிறதா?` என்று. அந்த அம்மையார் ஸ்தம்பித்துப் போய்விட்டார். முன்பிறவி விஷயங்கள் இப்படித்தான் மக்களை பைத்தியத்தில் தள்ளுகிறது.

அந்த 3 நாட்களும்’ ஆன்மீகமும்

ஆட்டோ ரிக்ஷா துவங்கி விமானம் வரை, கண்டக்டர் முதல் காவல்துறை அதிகாரி வரையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் சாதிக்கும் இந்தக் காலத்தில், ‘அந்த 3 நாட்களுக்கு’ அவளை வீட்டிலிருந்து விலக்கி வைப்பது பழமையான சிந்தனையாகவே கருதப்படுகிறது. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார்… சத்குரு: ஆரியக் கலாச்சாரங்களில் ஓரு பெண்ணிற்கு அவளுடைய மாதவிலக்கு காலங்களில் தனியிடம் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் இது திராவிடக் கலாச்சாரத்திலும் வழக்கில் வந்தது. அவளுடைய உடல், மன நலனுக்காகவும் அவள் பெற்றெடுக்கும் குழந்தை நல்ல திறன்களுடன் பிறப்பதற்காகவும், அக்காலத்தில், அவளுக்கு பல பாதுகாப்புகள் உருவாக்கப்பட்டன. மாதவிலக்கு நாட்களில் அவளுடைய முழு உடல் அமைப்புமே குறிப்பிட்ட ஒரு மாற்றத்திற்கு உட்படுவதாலும், அந்நாட்களில் ஒரு பெண் உடலளவில் சற்று பலவீனமாக இருப்பதாலும் அவளுக்கு எந்த வேலையும் தரப்பட்டதில்லை. அவளோடு யாரும் தொடர்பு கொண்டதும் இல்லை. பாதுகாப்பான சூழ்நிலையில் தனியாக இருக்குமாறு செய்யப்பட்டாள். அவள் ஏதோ கடவுள் பெயரை உச்சரித்துக் கொண்டு இருப்பாள். மேலும் குறிப்பிட்ட சில இடங்களுக்குப் போகவும் அனுமதிக்கப்பட்டதில்லை. வெறுமனே கை கால்களோடு பிறந்து, உண்டு, உறங்கி பொதி மாடு போல் இறந்துபோவதை அவர்கள் விரும்பவில்லை. அனைத்து சாத்தியங்களுடன் பிறந்திருந்தால் மட்டுமே இயல்பான குழந்தையாக மதித்தனர். அந்த சில நாட்களுக்கு, அவள் தினமும் 3 முறை குளிப்பாள். ஏனெனில், ஒரு பெண்ணிற்கு மாதவிலக்கு நடைபெறுகின்றபோது, அந்த தன்மை அவளுடைய தலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தில் (ஆராவில்) வெளிப்படுகிறது. அந்த ஆரா குளிப்பதற்கு முன் இருப்பதைப் போல் குளித்த பின் இருப்பதில்லை. முன்பெல்லாம் இரவு 12 மணியாக இருந்தாலும், மாதவிலக்கு தொடங்கிவிட்டால் அவள் குளிக்க வேண்டும். மேலும் உடலில் சில பகுதிகளில் திருநீறு பூசிக் கொள்வார்கள். இவையெல்லாம் அப்பெண் தீயசக்திகளின் பிடிக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக செய்யப்படும் முயற்சிகளே. இது மிக மிக அற்புதமான ஒரு அமைப்பு. ஒரு பெண்ணிற்கு மாதவிலக்கு ஏற்படுவதே அவள் குழந்தைப் பெற தயாராய் இருக்கிறாள் அல்லது தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அவள் கருப்பையில் தேங்கிப் போன பழையவைகளை வெளித்தள்ளிவிட்டு புதிய வாய்ப்பை உடல் மறுபடியும் உருவாக்குகிறது. இந்தப் புதிய வாய்ப்பை, உயர்ந்த பரிமாணம் உடைய ஓர் உயிரை உருவாக்கும் நோக்குடன் பயன்படுத்திக் கொள்ள பெண்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். குறிப்பாக பிராமணக் குடும்பங்களிலும் அரச குடும்பங்களிலும் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ஒரு பெண் கருத்தரித்திருக்கும் போதோ அல்லது பாலூட்டும் போதோ மாதவிலக்கு ஏற்படுவதில்லை. இந்த காலம் முடிவடைந்தவுடன் மறுபடியும் அவள் கருத்தரிக்க தயாராகையில் அதிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு தன் கணவருடன் தொடர்பில்லாமல் செய்யப்பட்டாள். இந்த சில மாதங்கள் அவளுக்கு தேவையான சாதனா (பயிற்சி) கொடுக்கப்பட்டது. இதனால் முதல் 2 மாதங்களை விட 3வது மாதத்தில் உருவாகும் கருமுட்டை அதிக தரம் வாய்ந்ததாக இருக்கும். அதிலிருந்து பிறக்கும் குழந்தை ஓரளவாவது உறுதியானதாக இருக்கும். இவ்வாறாக, ஒரு குழந்தை உண்டாவதை விஞ்ஞானப்பூர்வமாக அணுகினர். அந்தக் காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே ஊரிலுள்ள ஒரு பெரியவர் வந்து, அந்தக் குழந்தைக்கு ஆன்மீகப் பரிமாணங்கள் சாத்தியமாக இருக்கிறதா என்று சோதனையிடுவார். அந்தக் குழந்தை அந்தப் பரிமாணங்களை பயன்படுத்திக் கொள்கிறதா என்பது வேறு. ஆனால் அனைத்துப் பரிமாணங்களும் அந்தக் குழந்தைக்கு திறந்த நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில், வெறுமனே கை கால்களோடு பிறந்து, உண்டு, உறங்கி பொதி மாடு போல் இறந்துபோவதை அவர்கள் விரும்பவில்லை. அனைத்து சாத்தியங்களுடன் பிறந்திருந்தால் மட்டுமே இயல்பான குழந்தையாக மதித்தனர். அன்றைய காலத்தில், முழு வீச்சில் செயல்படக் கூடிய மனித குலத்தை உருவாக்கும் விழிப்புணர்வு மக்களிடையே இருந்தது. அதனால்தான் ஒரு குழந்தை எல்லாவிதத்திலும் தகுதியாக பிறப்பதற்கு வசதியாக பெண்களை தேவையான முறையில் பராமரித்தன

உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா?

கேள்வி ‘இதுவே என் கடைசிப் பிறவியாக இருக்கவேண்டும் ஆண்டவா!’ என்ற வேண்டுதல்களை நாம் கேட்டிருப்போம். உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா? இதற்கும் ‘கர்மா’விற்கும் என்ன சம்பந்தம்? சத்குரு: இது பெரும்பாலும் இந்தியர்களின் பிரச்சனை தான். அனுபவத்தில் உணராவிட்டாலும், அவர்கள் பேச்சுவழக்கில் ‘பிறவிகள்’ சர்வசாதாரணமாக வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, அதை அவர்கள் அனுபவத்திலும் கொணர முயன்று கொண்டிருக்கிறோம்… ஏனெனில், அவர்கள் மனதளவிலேனும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள். பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம். இப்போது நீங்கள் நியுயார்க் நகரில் இருக்கிறீர்கள். மீண்டும் ஒருமுறை பிறந்தால், மறுபடியும் இங்கேயே பிறந்து, இதே தெருக்களில் நடக்க விரும்புவீர்களா? அல்லது அதைத் தாண்டி என்ன உள்ளது என்று அறிய விரும்புவீர்களா? முழுமையான வாழ்வை வாழ்ந்திருந்தால், நீங்கள் எல்லாவற்றையுமே பார்த்திருப்பீர்கள். மீண்டும் பார்ப்பதற்கு ஏதுமிருக்காது. முந்தைய அனுபவங்களுக்கும், இதற்கும் சிற்சிறு வேறுபாடுகள் இருக்கும் தான், ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று உங்களுக்குத் தெரிந்து விடும். அதனால், ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி தான் உங்களுக்கு எழும். எளிமையாகச் சொல்வதனால், இப்போது நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். ஆனால் ஒரு நாள் இறந்துவிடுவீர்கள். ஆக, அடிப்படையில் உங்கள் உடல் என்பது, நீங்கள் சேகரித்த ஒன்று. இப்போது நீங்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தாலும், அமெரிக்க நாட்டில் உற்பத்தியான உணவை சில வருடங்களாக நீங்கள் உண்டிருந்தாலும், உங்கள் முக அமைப்பு, தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படவில்லை. இவ்வளவு ஏன், இன்னும் 50 ஆண்டுகளுக்கு நான் அமெரிக்க நாட்டு உணவினை உண்டாலும், நான் இந்தியனாகவே தோற்றமளிப்பேன். அதில் வித்தியாசம் இருக்காது. ஏன்? ஏனெனில், இது மரபணு சம்பந்தப்பட்டது. இங்கிருக்கும் பொருட்களை எடுத்து ஒரு கட்டிடத்தைக் கட்டினால், அது ஒரு வகையில் தோற்றமளிக்கும். ஆனால் இங்கிருக்கும் பொருட்களை எடுத்து உடல்கள் உருவாக்க முயன்றால், உணவு உட்கொண்டவரைப் பொருத்து, தோற்றம் இந்தியனாகவோ, ஆஃபிரிக்கனாகவோ, அல்லது வேறு எவராகவோ தோன்றும். அமெரிக்க மண்ணில் விளையும் உணவினை உண்டால், உட்கொள்பவர்கள் மெதுவாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் போல் தோற்றம் கொள்ளவேண்டும். ஆனால் இங்கு நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும், கலப்புத் திருமணம் செய்யவில்லை என்றால், உங்கள் வம்சத்தின் தோற்றம் எவ்விதத்திலும் மாறுபடாது. அடிப்படையில் அது உங்கள் தாய்நாட்டின் முக அமைப்பு, தோற்றமாகவே இருக்கும். இதை தர்க்க ரீதியாக அணுகிப் பார்ப்போம். ஒரே உணவை வெவ்வேறு மனித உடல்கள் உட்கொண்டாலும், அவர்கள் தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படுவதில்லை. உணவு ஒன்று தான், ஆனால் தோற்றம் முன்பு எப்படி இருந்ததோ அதே வகையில் இருக்கிறது. ஏன்? காரணம், அவ்வுடல்களில் இருக்கும் ஞாபகக் கட்டமைப்பு. உணவும், மற்ற பிற ஆகாரங்களும் நியுயார்க் நகரில் இருந்து கிடைக்கப் பெறலாம். ஆனால் உங்கள் தோல், மூக்கு, கண், உடல் என எல்லாம் உங்கள் தாய்நாட்டை ஒத்து இருக்கிறது. நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களுக்குள் சில தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. அது தான் உங்கள் தோற்றம், சிந்தனை, நீங்கள் நடக்கும் விதம் என எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது. அதற்காக, உடல் சம்பந்தப்பட்ட தகவல் மட்டும் தான் உங்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிவிட வேண்டாம். மகப்பேறு மருத்துவமனையில் சென்று, பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளைப் பாருங்கள். ஒவ்வொன்றின் குணாதிசயமும் வித்தியாசப்படும். உங்களுக்குள் சேர்த்து வைக்கப்படும் தகவல் வெறும் உடற் சம்பந்தப்பட்டது அல்ல. அது அதையும் தாண்டி நீள்கிறது. பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம். ஆனால் அமெரிக்க மண்ணை எடுத்து உங்கள் உடலை உருவாக்கினாலும், அதை வார்க்கும் தகவல் வேறெங்கோ (தாய்நாடு அமெரிக்காவாக இல்லாவிட்டால்) இருந்து நீங்கள் பெற்றது. அந்தத் தகவலின் பதிப்புத் திறன், நீங்கள் உட்கொள்ளும் உணவிற்கு இருப்பதை விட அதிகமாக இருப்பதால், அது தன்னைப் பதித்து உங்கள் உடலில் வெளிப்படுகிறது என்ற அளவிற்கு தெளிவாக இருக்கிறதா? ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். இந்த உடல் என்பது நீங்கள் உண்ட உணவின் சேர்க்கை. இந்த உணவு அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது, ஒரு வகையில் நீங்கள் டென்னஸியின் மண்ணை உட்கொண்டிருக்கிறீர்கள். இப்பகுதியில் தான், முன்பு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ‘செரூக்கி’ (Cherokee) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் தோற்றம் ஓர்வகையில் அமைந்தது. ஆப்பிரிக்க மாகாணத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் வேறு ஒருவகையில் தோற்றம் கொண்டார்கள். இதுபோல், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்பவர்களின் தோற்றம் ஒருவருக்கொருவர் மிக வித்தியாசமாய் இருக்கும். இது… உலகின் பல்வேறு இடங்களுக்கும் மிக எளிதாக பயணம் மேற்கொண்டு, கலப்புத் திருமணங்கள் நடப்பதற்கு முன்பு இருந்த நிலை. நிலம், நீர், காற்று, அப்பகுதியின் தட்பவெப்பம், வானிலை ஆகியவை மனிதனின் தோற்றத்தை எந்த அளவிற்கு, எப்படி எல்லாம் மாற்றியது, மாற்றவல்லது என்பது மானுடவியலில் தெளிவாய் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்போது நான் இந்தியாவில் இருந்து டென்னஸிக்குக் குடிபெயர்ந்தாலும், எவ்வளவு தான் இம்மண்ணில் விளைந்த உணவை உண்டாலும், இப்பகுதியின் பழங்குடியினரை என் தோற்றம் பிரதிபலிக்காது. நான் சுமந்து கொண்டிருக்கும் தகவலின் வீரியம், நான் உட்கொள்ளும் உணவின் ஞாபகத்தைவிட வலியது. இப்படி நாம் உண்ணும் உணவையும் தன் வழியில் மாற்றியமைக்கும் இந்த ஞாபகங்கள் இந்த வாழ்க்கையில் நாம் சேர்த்ததல்ல. நம் பிறப்பிற்கும் முன்பே இவை இருந்தன. இதைத்தான் கர்மா என்றழைக்கிறோம். இது மிகமிக அதிகமான தகவல் கிடங்கு. இப்போது நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்தத் தகவல்கள் உங்கள் உடல் சார்ந்தது மட்டுமல்ல. இதற்கு மற்ற பரிமாணங்களும் உண்டு. உடலைப் பொருத்தவரை, இது மிக வெளிப்படையாகத் தென்படுகிறது. உங்கள் தோல், உங்கள் மூக்கு என இன்னும் பலவற்றில் இது வெளிப்படுகிறது. மற்ற நிலைகளில் இதன் தாக்கம் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவற்றிலும் இது செயல்படுகிறது. இப்போது தான் பிறந்த குழந்தையாக இருந்தாலும், ஒரு குழந்தையும் இன்னொரு குழந்தையும் வெவ்வேறு தகவல்களை சுமப்பதால், அவற்றின் குணாதிசயங்களும் வித்தியாசப்படுகின்றன. ஒன்றிற்கு மேல் பெற்ற தாய்மார்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன் பிள்ளைகள் ஒரே மரபணுக்களை சுமந்தாலும், அவர்கள் முற்றிலும் வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று. ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். மரபணு மூலம் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தகவல்களைத் தாண்டி, வேறு விதமான தகவல்களையும் அவர்கள் சுமக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. மரபணுத் தகவல்கள் உடலாக வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் சுமக்கும் மற்றொரு தகவல் கிடங்கு, இதைவிட மிகப் பெரிது. அதை உணர வேண்டுமென்றாலே, கூர்மையான கவனம் வேண்டும். அதற்கும் மேலாக, அது என்ன, அது எப்படி சேகரிக்கப் பட்டுள்ளது, அதை வைத்து என்னென்ன செய்யலாம் என்பதெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றாலோ, அது முற்றிலும் வேறு விதமான விஷயம். ஆன்மீக செயல்முறைகள் இத்தகவலைப் பற்றி அறிந்திட வழிசெய்கின்றன. இத்தகவற் கிடங்கு இத்தனை வலியது என்றால், அதை கவனிப்பது நல்லதல்லவா! இது எத்தனை வலியது என்றால், நீங்கள் வாழும் சூழ்நிலையை அது ஆள வல்லது. உங்கள் நோக்கம் எதுவாகினும் அதை அமிழ்த்திவிட்டு, தனக்குத் தேவையானதை செய்துகொள்ளக் கூடியது. இப்போது இங்கே உட்கார்ந்து, நீங்கள் தியானம் செய்ய விழைகிறீர்கள். ஆனால் அதுவோ, தனக்குத் தேவையானதை நிகழ்த்திக் கொள்கிறது. உண்மை தானே? இத்தகவல்களின் வீரியத்தைக் குறைக்க நீங்கள் வழி செய்யாவிட்டால், இத்தகவல்களை விலக்கி வைக்க நீங்கள் முயற்சி எடுக்காவிட்டால், உங்களில் மாற்றம் செய்துகொள்வதும், வளர்வதும், மலர்வதும் வெறும் வார்த்தைகள் தான். அது நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை, காரணம் அத்தகவல்கள் இந்த எண்ணத்தை அமிழ்த்தி, வீழ்த்திவிடும். அத்தகவல்களில் இருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாவிட்டால், நீங்கள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்குமாறு, அது உங்களைக் கட்டுப்படுத்தும். இத்தகவற் கிடங்கில் இருந்து உங்களை மெதுமெதுவாக விலக்கிக் கொள்வதற்கு, ஒரு ஏதுவான உடலை, மனதை, உணர்வு மண்டலத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறை தான் யோக விஞ்ஞானம்!

ஒருவருக்காக இன்னொருவர் பிரார்த்தனை செய்தால், முதலாமவரின் குறைகளை கடவுள் களைந்து விடுவாரா?

கேள்வி : ஒருவருக்காக இன்னொருவர் பிரார்த்தனை செய்தால், முதலாமவரின் குறைகளை கடவுள் களைந்து விடுவாரா?
பதில் : ஹிந்து மதம், இறைவனை மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கிறது. ஹிந்து மதத்தில், கடவுளை நாம் அன்னியப்படுத்தி, எங்கோ வைத்து விடவில்லை. கடவுள் நமது சினேகிதன் மாதிரி. கடவுள் சினேகிதனா என்று கேட்டால், ஆமாம்!
மற்ற பல மதங்களைப் போல ஹிந்து மதம், கடவுளை எட்ட முடியாதவராக நினைக்கவில்லை. நண்பனாக, உறவினனாக; குருவாக, சீடனாக; தந்தையாக, மகனாக; சினேகிதனாக, காதலனாக; எஜமானனாக, வேலையாளாகப் பார்க்கப்படுகிறான் இறைவன்.
ஏனென்றால் உண்மையான பக்தனுக்கு அந்த உரிமை இருக்கிறது. பக்தி அவ்வளவு வலிமை உடையது.
இதனால்தான் கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்து பார்க்கிறோம்; தாலாட்டி தூங்க வைக்கிறோம்; பாட்டு பாடி மேளம் கொட்டி, துயில் எழுப்புகிறோம்; நீராட்டுகிறோம்; புத்தாடை அணிவிக்கிறோம்.கடவுளுக்கும், பக்தியுள்ள மனிதனுக்கும் இவ்வளவு நெருக்கம் இருப்பதால், அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு, இன்னொருவருக்காக வேண்டுகிறோம். இதை உண்மையான பக்தன் செய்கிறபோது அதற்கு பலன் கிடைக்கிறது.
நீங்கள் என் சினேகிதர். உங்களிடம், ஒருவருக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். அவர் என்னிடமும் கூறி, உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார். நான் உங்களிடம் அவருடைய காரியத்தை விளக்கி, அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு; அதனால் நான் சொல்கிற கோரிக்கையை நீங்கள் ஏற்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதர். உங்களுக்கு இருக்கிற கருணை, இறைவனுக்கு இருக்காதா?
ஆதி சங்கரர் வரலாற்றில் வருகிற ஒரு அருமையான நிகழ்ச்சி இதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. சங்கரர் அப்போது சிறு பையன். பிரம்மச்சாரி. பிட்சைக்காக ஒரு வீட்டிற்குப் போகிறார். அந்த வீடோ, ஒரு பரம தரித்திரனுடைய வீடு. அந்த மனிதனும் வெளியே போயிருக்கிறான். வீட்டில் அவனுடைய மனைவி மட்டும் இருக்கிறாள்.
சங்கரர் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று குரல் எழுப்ப, அந்த அம்மாள் செய்வதறியாமல் திகைக்கிறாள். ஏனென்றால், பிட்சை போடுவதற்கு வீட்டில் எதுவுமே இல்லை. வாயிலில் வந்து நிற்கிற பிரம்மச்சாரியோ, பெரும் தேஜஸ் உடையவராகக் காட்சியளிக்கிறான். வெறும் கையுடன், அந்தச் சிறுவனை திருப்பி அனுப்ப அந்தப் பெண்மணியின் மனம் இடம் கொடுக்கவில்லை. தவிக்கிறாள்.
உங்களைப் போன்றவர்களுக்கு தகுந்த உபசாரம் செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்’ என்று சங்கரரிடம் கூறிவிட்டு, அந்தப் பெண்மணி, வீட்டில் ஏதாவது இருக்காதா என்று தேடினாள். ஒரு பானையில், வாடிப் போன ஒரு நெல்லிக்கனி இருந்தது. அன்றைய பொழுதுக்கு அவர்கள் வீட்டில் அதுதான் உணவு; அவ்வளவு ஏழ்மை. கையில் கிடைத்த அந்த நெல்லிக்கனியை மிகவும் தயக்கத்துடனும், இவ்வளவு அற்பமான பொருளை பிட்சையிடுகிறோமே என்ற குற்ற உணர்வுடனும், அந்தப் பெண்மணி, சங்கரருக்கு பிட்சையாகத் தந்தாள்..
சங்கரர் நிலைமையைப் புரிந்து கொண்டார்; அந்தப் பெண்மணியின் நல்ல மனதையும் அவர் தெளிவாகவே தெரிந்து கொண்டார். அவளுக்காக அவர் மனம் இளகியது.
அந்தக் குடும்பத்தினரின் வறுமையை நீக்குமாறு, அவர் மனமுருகி, மஹாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டார்.
அப்போது அவர் துதித்த ஸ்லோகங்கள், ‘கனகதாரா ஸ்தோத்ரம்’ என்ற பெயரைப் பெற்றன. அவர் துதியைக் கேட்டு மகிழ்ந்த மஹாலக்ஷ்மி, அவர் முன் தோன்ற, சங்கரர் விழுந்து வணங்கி நிற்க, தேவி பேசினாள்:
‘குழந்தாய்! இவர்கள் முற்பிறவியில் எந்த நன்மையையும் செய்யவில்லை. அப்படியிருக்க, அவர்களிடம் நான் கருணை காட்ட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது எவ்வாறு?’சங்கரர் சொன்னார்: ‘தாயே! இப்போது இந்த நெல்லிக்கனி, இந்தப் பெண்மணியால் எனக்கு பிட்சையாக அளிக்கப்பட்டது. என் மீது கருணை வைத்து இந்த தானத்திற்கு நீ பலன் அளிக்கக் கூடாதா?’– இவ்வாறு சங்கரர் வற்புறுத்தி வேண்டிக் கொண்ட பிறகு, மனமிரங்கிய மஹாலக்ஷ்மி, தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழியச் செய்து, அந்த வீட்டையே நிரப்பி விட்டாள். அந்தக் குடும்பத்தின் வறுமை நீங்கியது.இப்படி, சங்கரர் வேண்டிக் கொண்டபோது, ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்துக்கு தெய்வம் கருணை காட்டவில்லையா?
அதே போலத்தான், ""உண்மையான பக்தி உணர்வுடன்"" நமக்காக ஒருவர் வேண்டிக் கொண்டால், நமக்கு நன்மை கிட்டும்.

மூன்று குரங்குகள்

மூன்று குரங்குகள்

மூன்று குரங்குகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண், காது, வாய் பொத்தி அமர்ந்திருக்கும் அந்த மூன்று குரங்குகள்தான். ஆனால் சத்குரு சொல்லும் குட்டிக் கதையில் வரும் இந்த மூன்றோ மிகவும் புத்திசாலி குரங்குகள். அதை அறிய கதையைத் தொடர்ந்து படியுங்கள்… சத்குரு: மூன்று குரங்குகள் ஒருமுறை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் கண்காட்சி நடைபெற்றது. அதில் அனைத்து விதமான கம்ப்யூட்டர்கள், அதன் சாதனங்கள், மென்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒர் இடத்தில், மூன்று குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு கம்ப்யூட்டர் நிபுணர் குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காரணம் புரியாமல், “இந்தக் குரங்கு எத்தனை ரூபாய்?” என்று முதல் குரங்கைக் காட்டிக் கேட்டார். அதற்கு விற்பனையாளர், “25000 டாலர்கள்” என்றார். “என்னது?! ஒரு குரங்கு 25000 டாலர்களா? அப்படி இது என்ன செய்யும்?” என்றார் பார்க்க வந்தவர். “இது எந்தவிதமான கம்ப்யூட்டரையும் இயக்கும். இதற்குப் பல கம்ப்யூட்டர் மொழிகள் தெரியும். எந்த கம்பெனியின் ரகசியங்களை வேண்டுமானாலும் இது கண்டுபிடித்துவிடும். இது ‘கம்ப்யூட்டர் நிபுணர்’ குரங்கு. அதனால்தான் இதன் விலை 25000 டாலர்கள்,” என்றார் ஓனர். நிபுணர் இரண்டாவது குரங்கைக் காட்டி, “இது என்ன விலை?” என்று கேட்க, “ஓ, இது 50,000 டாலர்கள்,” என்றார். “இது என்ன செய்யும்?” “இது மிகச் சிறந்த மென்பொருள் நிபுணர்! இதை வாங்கினால், பிறகு இந்தியாவிலிருந்து மென்பொருள் நிபுணரை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இருக்காது!” என்றார். இதைக் கேட்ட கம்ப்யூட்டர் நிபுணருக்கு தலை சுற்றிவிட்டது. “சரி அந்த மூன்றாவது குரங்கு என்ன விலை?” என்று கேட்டார். அது “1,00,000 டாலர்கள்.” “இது என்ன செய்யும்?” என்றவருக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. “அது எனக்கே சரியாக தெரியவில்லை. ஒரு மனிதர் என்ன தொழில் செய்யலாம் என்று ஆலோசனை கூறும் ‘கன்சல்டன்ட்’ என்று தன்னை அழைத்துக் கொள்கிறது!” என்றார்.




எனது ஆயுட்காலத்தை நான் தெரிந்து கொள்ளமுடியுமா?

மனம் என்றால் கேள்விதான். அதுவும் நிறைய படித்திருந்தோம் என்றால் கேள்விக்கு குறையே இல்லை. அப்படி சத்குருவிடம் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு பதில் இங்கே… கேள்வி எனது ஆயுட்காலத்தை நான் தெரிந்து கொள்ளமுடியுமா? சத்குரு: உங்கள் ஆயுள், காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை, பிராரப்த கர்மாவை கொண்டு கணக்கிடப்படுகிறது. உங்கள் மொத்தக் கர்மவினையில் இந்தப் பிறவியில் நீங்கள் கழிப்பதற்காக அளிக்கப்படும் ஒரு பகுதிதான் பிராரப்தா. பிராரப்தாவைக் கழிப்பதற்கு நீங்கள் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் கையில் இருக்கிறது. அந்த பிராரப்தத்தை நீங்கள் 25 வருடங்களிலும் கழிக்கலாம், அல்லது ஒரே நாளிலும் கழிக்கலாம். பிராரப்தத்தைக் கழிப்பதற்கு முன்னாலேயே, ஏதாவது விபத்து போன்ற காரணங்களால் ஒருவர் இறந்துவிட நேர்ந்தால், பிராரப்த கர்மா முழுமையாக கழியாத காரணத்தால், அவர் பேயாகவோ, பிசாசாகவோ திரிகிறார். அதனால், உங்கள் ஆயுள் உங்கள் கையில்! கேள்வி ஆன்மீகம் பற்றி நிறைய பேசுகிறீர்கள், எங்களுக்கு புரியும்படி வாழும் உதாரணம் ஒன்றைச் சொல்ல முடியுமா? சத்குரு: எனக்கு தெரிந்த ஈஷா தியான அன்பர் ஒருவர் என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். நடுநிசியில் அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது “உங்கள் இரு குழந்தைகளும் விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டனர்.” காலை ஐந்தரை மணிக்குத்தான் எங்களால் அவர் இல்லத்திற்கு போய் சேர முடிந்தது. அதுவரை என் கைகளைப் பற்றிக் கொண்டு, எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தார் அவர். அன்று மாலை, அவர் ஏற்பாடு செய்திருந்த சத்சங்கம் அவரது இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. அனைவருக்கும் அழைப்பு சென்று சேர்ந்தாகிவிட்டது, ஐநூற்றிற்கும் மேற்பட்டோர் அதில் கலந்துகொள்வதாய் இருந்தது. 8 மணிக்கு சத்சங்கம், மாலை 6.30 மணிக்கு இறுதிச் சடங்கினை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். சத்சங்கம் வேண்டாம், வேறு இடத்தில் வைத்துக் கொள்வோம் என்று பிறரிடம் சொல்லி இருந்தேன். அதுகுறித்து கேள்விப்பட்ட இந்த நபர், “இல்லை, சத்சங்கம் வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடாது, எங்கள் வீட்டிலேயே நடக்கட்டும்,” என்று கூறி அவரும் சத்சங்கத்தில் அமைதியாக வந்து அமர்ந்து கொண்டார். சத்சங்கமும் நடந்தது, வந்தவர்கள் யாருக்கும் அன்று அந்த இல்லத்தில் அரங்கேறிய துக்கம் தெரியாது. அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன், அவர் மலர் போல் அமர்ந்திருந்தார். முந்தைய நாள் நள்ளிரவில் அவருடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர், இங்கு அந்தத் தாய் அழகிய புன்னகையுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருக்கிறார். இது ஆன்மீகம் அல்லவா? உங்களுக்கு ஆன்மீகம் வைக்கும் பரிட்சைதானே இது? அவருக்கு அவரது குழந்தைகள் மேல் அத்தனை பற்று இருந்தது. தன் குழந்தைகளை நல்ல நிலைக்கு உயர்த்துவதற்கு எத்தனையோ தியாகங்களைச் செய்தவர் அவர். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த அந்தப் பிள்ளைகள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தனர். பெரும் செல்வமுடையவர்கள், பெரிய வீடு, ஏராளமான பொருள் என எல்லா வசதியும் அவர்களிடம் உண்டு. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அவர் வைத்துள்ள ஆடை ஆபரணங்களையும் அவரிடம் உள்ள வைரங்களையுமே பார்ப்பார்கள். யார் அவரது இந்தப் பரிமாணத்தை பார்ப்பது? ஆன்மீகம் அவருக்கு வழங்கிய சொத்தல்லவா இது?

 

: நமக்கு ஏற்ற உணவு எது?

ன்று உலக சுகாதார தினம். உலகெங்கும் “உணவுப் பாதுகாப்பு” என்ற கோஷத்தை முன்வைத்து இந்த நாளைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். ஆரோக்கியமாக இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை… சத்குரு: மனிதன் மேல் நிலைக்குச் செல்ல முற்படும்போது, அவன் உணர்வுக்கு பெரிய உறுதுணையாக இருக்கிற கருவி உடல், உடலைப் பேணிப் பாதுகாத்தல் என்பது, ஆன்ம வளர்ச்சிக்கான அடிப்படைகளில் ஒன்று. ஆரோக்கியம் என்பது இலட்சியமா? மேலை நாடுகளைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது ஏதோ அடைய வேண்டிய விஷயம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கியம் நமக்குள்ளிருந்து இயல்பாக, எழுவது. அமெரிக்கர்கள் சிலர் தங்கள் ஊட்டச் சத்துக்கும், உற்சாகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மாத்திரைகளை நம்பி வாழ்க்கை நடத்துவதை நாம் பார்க்கிறோம். முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது. காலை, மதியம், இரவு உணவுகளில் வைட்டமின் மாத்திரைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால், அதையே சரி என்று இந்தியர்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க நாட்டில் வசிக்கிற, ஏராளமான இந்தியர்கள் நன்கு பணிபுரிகிறார்கள். வெற்றிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் மாத்திரைகளை நம்பி வாழ்பவர்கள் இல்லை. எனவே, மூன்று விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, மனித உடலமைப்புக்கு ஏற்ற உணவு எது? இரண்டாவது பிராண சக்தியை எடுக்கிற உணவு எது? பிராண சக்தியை தரவோ, பெறவோ செய்யாத சராசரி உணவு எது? மூன்றாவது, சமைத்த உணவு நல்லதா? பச்சைக் காய்கறிகள் நல்லதா? இவையெல்லாம் இன்றும் கூட விவாதத்திற்கு உரியவையாகவே விளங்குகின்றன. பொதுவாக, யோகம், தியானம் போன்ற துறைகளில் போகிறவர்கள் “நாங்களெல்லாம் பச்சைக்காய்கறிகள் தான் சாப்பிடுகிறோம்” என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் பெருமை அடைவதும் உண்டு. ஆனால், முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது. பச்சைக் காய்கறிகள், தானியங்கள் போன்றவை உங்கள் உடலுக்கு வேண்டிய சக்திகளை முழுமையாகத் தருபவை. அவற்றை உங்கள் உணவில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாளொன்றுக்கு 1000 கிராம் உணவு உட்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 700 கிராம் சமைத்த உணவு, 300 கிராம் காய்கறிகள், மற்ற தானியங்களை பச்சையாக உட்கொள்ளுதல் என்றிருந்தால் அதிலே பயன் இருக்கும். பலபேர் வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு அதற்கு மேல் பழங்கள், காய்கறிகள் என்று சாப்பிடுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் இருக்காது. உணவை உட்கொள்கிற அளவைக் குறைப்பது பொதுவாகவே நல்லது. 100% சமைத்த உணவு சாப்பிடுகிற நீங்கள் அதை 70% குறைத்து 30% பச்சைக் காய்கறிகள் சாப்பிடாமல் இருந்தால் கூட, அந்த 30% உணவு குறைகிறபோது, உங்கள் உடல் நலம் முன்னேற்றம் அடைவதைக் காண்பீர்கள். முடிந்தால் இரவு உணவு மட்டும் 100% பச்சைக்காய்கறிகளாக, தானியங்களாக சாப்பிடுவது நல்லது. அதில் பழங்கள் சாப்பிடுவதே ஒரு தனிக்கலை. அசைவ உணவு முழுக்க செரிக்க ஏறக்குறைய 72 மணி நேரங்கள் ஆகும். சிலபேர் உணவு சாப்பிட்டதும் பழங்கள் சாப்பிடுகிறார்கள். பழங்கள் விரைவில் செரித்துவிடும். சமைத்த உணவு செரிப்பதற்கு தாமதமாகும். எனவே செரிமான முறையில் ஒரு சிறு குழப்பம் ஏற்படும். அத்துடன் இந்தப் பழத்தை சாப்பிட்ட பயனையும் நீங்கள் இழக்கிறீர்கள். சமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றிற்கு என்ன சிறப்பு என்றால், அவை ஒருதுளி கூட வீணாகாமல் அவற்றின் முழு சக்தியை உங்களுக்குத் தருகின்றன. அவற்றை பிற உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடுகிறபோது, அதன் ஊட்டத்தை உங்களால் பெறமுடிவதில்லை. அப்படியானால் எப்படி பழங்களை சாப்பிட வேண்டும்? காலை உணவு அருந்திவிட்டு வருகிறீர்கள். முற்பகல் 11.00, 11.30 மணியளவில் லேசாக பசி எடுக்கிறது என்றால் அப்போது தேநீர் அருத்துவதை விட, காப்பி அருந்துவதைவிட, பழங்கள் சாப்பிடலாம். அந்தப் பழங்கள் நன்கு செரித்து மீண்டும் பசியெடுக்கிற நேரம் உங்கள் மதிய உணவுக்கான நேரமாக இருக்கும். இதுதான் பழங்களை சாப்பிடுகிற முறை. முழுக்க முழுக்க இயற்கை உணவுக்கு மாறி விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் உட்கொள்கிற உணவில் எது உங்களுக்கு பிராண சக்தியைத் தரும், எது உங்கள் பிராண சக்தியை எடுத்துவிடும் என்பதையெல்லாம் உரியமுறையில் தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த விழிப்புணர்வோடு உண்பது நல்லது. மனித உடல், அசைவ உணவுக்கு ஏற்ற அமைப்பில் இல்லை. நீங்கள் உட்கொள்கிற அசைவ உணவு முழுக்க செரிக்க ஏறக்குறைய 72 மணி நேரங்கள் ஆகும். ஒரு துண்டு இறைச்சியை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு போனால், ஒரு நாளைக்குள் அது எவ்வளவு அழுகி விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியானால் உங்கள் உடலின் உட்பகுதியில் இருக்கிற உஷ்ண நிலையில் செரிமானமாகாத இறைச்சி உணவு 72 மணிநேரம் இருந்தால், அது எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். அரிசி உணவு நல்லதா? பலர் அரிசி உணவு சாப்பிடுகிறார்கள். இதில் பச்சரிசி நல்லதா? புழுங்கல் அரிசி நல்லதா? என்றெல்லாம் சந்தேகங்கள் வரும். அரிசியைப் புழுங்க வைப்பது, வேக வைப்பது என்பது ஒரு பாதுகாப்பு முறை. அவ்வளவுதான். புழுங்கலரிசியை நான்கு வருடங்களுக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும். பழைய காலங்களில் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் புழுங்கல் அரிசிகளை வைத்திருந்தார்கள். மற்றபடி இதில் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் உட்கொள்கிற உணவின் அளவைப் பொறுத்துதான், அரிசி உணவிலிருந்து நன்மையோ, தீமையோ பெற முடியும். நன்மை தரும் கீரைகள் ஆரோக்கியமான மனிதருக்கு 3 லிருந்து 4 மணி நேர உறக்கமே போதிய ஓய்வைத் தந்துவிடும். கீரைவகைகள் நார்ச்சத்து கொண்டவை, அவற்றை அளவோடுதான் உட்கொள்ள முடியும். ஏனெனில் அவற்றில் இருக்கிற பச்சையம், அவ்வளவு விரைவாக செரிக்கக் கூடியது அல்ல. சமைக்கப்படாத நிலையில் பச்சையம், அவ்வளவு சீக்கிரம் செரிக்காது. கீரைவகைகளைப் பக்குவப்படுத்தித்தான் உண்ண வேண்டும். நீங்கள் பார்த்திருக்க முடியும். நாய்கள், பூனைகள் போன்றவையெல்லாம் சில நாட்களில் சில புல் வகைகளை சாப்பிட்டு விட்டு, சிறிதுநேரம் கழித்து அவற்றை வாயில் எடுக்கும். இது தங்களுக்குள் இருக்கிற சளி, கொழுப்பு போன்றவற்றை வெறியேற்ற அந்த பிராணிகளுக்கு இயற்கை கற்றுத் தந்திருக்கிற முறை. பாலும், தயிரும்… எதைச் சாப்பிடுகிறீர்கள் என்றாலும் அது உங்களுக்கு ஏற்றதா? என்கிற விழிப்புணர்வு முதலில் தேவை. பால், தயிர் போன்றவைப் பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அது மிகவும் ஆரோக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பசுவை “கோமாதா” என்று அழைக்கிறோம். பசுவை ஏன் மாதா என்று அழைக்கிறோம் என்றால் ஒரு குழந்தையை பெற்றுவிட்டு தாய் இறந்து விட்டாலும் கூட, அந்தக் குழந்தைக்கு பால் தருகிற தாயாக பசு இருக்கிறது. ஆனால் 2 அல்லது 2 1/2 வயது, வரையில் தான் பால் மற்றும் பால் சார்ந்த உணவு வகைகள் நமக்கு செரிக்கும். அதற்குப் பிறகு அவற்றை செரிப்பதற்கேற்ற ஆற்றலை உங்கள் உடல் இழந்து விடுகிறது. தொடர்ந்து பால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள், தயிர் அதிகமாக சாப்பிடுபவர்கள் ஒருவித மந்தமான நிலையில் இருப்பார்கள். எனவே இவற்றையெல்லாம் அனுபவப்பூர்வமாகப் பார்த்து, எந்த உணவு வகைகள் உங்களை விழிப்புணர்வோடு வைத்திருக்கின்றன. எந்த உணவு வகைகள் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன என்பதை நீங்களே தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அமெரிக்க நாடுகளுக்கு நீங்கள் போனால், “மூன்றாவது கோப்பையை மறந்து விடாதீர்கள்” என்ற விளம்பரத்தை நீங்கள் பார்ப்பீர்கள். என்ன சொல்லுகிறார்கள், “எப்படியும் 2 கோப்பை பால் சாப்பிட்டு விடுவீர்கள். ஆனால் 3-வது கோப்பை பால் சாப்பிட வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்” என்பது அந்த விளம்பரத்தின் பொருள். எனவே, பால் சாப்பிடுவது உங்களை சுறுசுறுப்பாக வைததிருக்கிறதா அல்லது மந்தமாக வைத்திருக்கிறதா என்பதை நீங்கள் கண்டுணர வேண்டும். வயிற்றுப் போக்குக்கு பால் ஒரு நல்ல மருந்து என்று சொல்லுவார்கள். மருந்துதான். அந்த மருந்தே உணவாகிவிடாது. உறக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் உணவு பொதுவாக, நீங்கள் உட்கொள்ளும் இயற்கை உணவின் அளவு கூடக்கூட நீங்கள் உறங்குகிற நேரத்தின் அளவும் குறைந்து கொண்டே வரும். அதிக உறக்கம் என்பது நீங்கள் போதிய சக்தியில்லாமல் இருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம். சிலபேர் 8 மணி நேரம் 10 மணி நேரம் உறங்குகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு ஓய்வு தேவை என்பது பொருளல்ல. அவ்வளவு தூரம் சக்தியிழந்து இருக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். சிறிய செயல் செய்தாலும் உடனே தூக்கம் வருகிறதென்றால், போதிய சக்தி நிலை உடலில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான மனிதருக்கு 3 லிருந்து 4 மணி நேர உறக்கமே போதிய ஓய்வைத் தந்துவிடும். இயற்கை உணவுக்கு மாறுகிறபோதும், தியானம் புரிகிறபோதும் இயல்பாகவே உறங்கும் நேரம் குறைந்துவிடும். மனித உடலை அதற்குரிய நிலையில் வைத்திராமல், பொருளியலுக்கோ, ஆன்மீகத்திற்கோ மேற்கொள்கிற எந்த முயற்சியிலும் வெற்றி பெற இயலாது. உணவும் உணர்வும்! உணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். சரியான விகிதத்தில் இயற்கை உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுகிற உணவு, உங்களுக்கு சக்தியை தருவதாக, செயல்களில் ஈடுபட உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருவதாக இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு விழிப்புணர்வை பெறுவதற்கான அணுகுமுறைதான். நான் சொல்வது உணவுமுறை பற்றிய போதனை அல்ல. உணர்வு பற்றிய விழிப்புணர்வை நீங்கள் பெறுகிற வழி.

Read more at : நமக்கு ஏற்ற உணவு எது? 

ஏன் சைவ உணவு உண்ண வேண்டும்?

சைவ உணவினால் என்ன பயன்? அதை ஒருவரின் வாழ்வில் எளிதாக செயல்முறைப் படுத்துவது எப்படி? சத்குரு: தான் எதையெல்லாம் உண்ணலாம், எதையெல்லாம் உண்ணக் கூடாது என்பதை ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு உயிரினமும் நன்றாகவே அறியும். நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடலிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியமே தவிர, அந்த உணவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நியாயதர்மம் என்ன சொல்கிறது என்பதெல்லாம் அல்ல. ‘உணவு’ என்பது உடலைப் பற்றியது. அதைப் பற்றி உங்கள் மருத்துவரோ, உணவியல் வல்லுனரோ என்ன சொல்கிறார் என்பது முக்கியமில்லை… எப்படியும் அவர்கள் அவ்வப்போது தங்கள் அபிப்பிராயங்களை மாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் ‘உணவு’ என்று வரும்போது, எந்த வகையான உணவு உங்கள் உடலை சுறுசுறுப்பாக, உற்சாகமாக வைக்கிறது என்பதை அதனிடமே கேளுங்கள். வெவ்வேறு உணவு வகைகளை உட்கொண்டு, அதை உண்ட பின் உடலளவில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்கள் உடல் நன்றாக, சுறுசுறுப்பாக, உற்சாகமாக உணர்கிறது என்றால், அது ஆனந்தமாக இருக்கிறது என்று அர்த்தம். இதுவே உங்கள் உடல் மந்தமாகி, அதற்கு புத்துணர்ச்சி ஊட்ட, காஃபியோ, டீயோ, சிகரெட்டோ தேவைப்படுகிறது என்றால் உங்கள் உடல் சந்தோஷமாக இல்லை என்றுதானே அர்த்தம்? உங்கள் உடலைக் கேளுங்கள் உங்கள் உடலை கவனித்தாலே, எந்த வகையான உணவு அதற்கு வேண்டுமென்று அது தெளிவாய் உணர்த்திவிடும். ஆனால் இப்போது உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நீங்கள் நடக்கிறீர்கள். அதுவோ சற்றும் சளைக்காமல் பொய் சொல்லிக் கொண்டே போகிறது. உண்மைதானே? இதற்கு முன் அது உங்களிடம் பொய் சொல்லியதில்லை? இன்று ‘இது தான் சரி’ என்கிறது. நாளையே ‘அதுவல்ல… இதுதான் சரி. அதைப் போய் உண்மை என்று நினைத்தாயே… முட்டாள்!’ என்று உங்களையே வெட்கப்பட வைக்கிறது. அதனால் மனம் சொல்வதைக் கேட்காமல், உங்கள் உடல் என்ன சொல்கிறது என்று கவனிக்கப் பழகுங்கள். தான் எதையெல்லாம் உண்ணலாம், எதையெல்லாம் உண்ணக் கூடாது என்பதை ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு உயிரினமும் நன்றாகவே அறியும். ஆனால் இப்பூமியிலேயே அறிவுக்கூர்மை நிறைந்த படைப்பாகக் கருதப்படும் மனித இனத்திற்கு மட்டும், அவர்கள் எவ்வகை உணவை உண்ண வேண்டுமென்று தெரியவில்லை. எப்படி இருப்பது என்பதை விடுங்கள், என்ன உண்பது என்பதும் கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. உடல் என்ன கூறுகிறது என்பதைக் கேட்பதற்கு ஒரு கவனம் வேண்டும். அது இருந்தால், எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கே புரியும். எது சிறந்தது? – சைவமா? அசைவமா? நீங்கள் உயிர் வாழ, பிற உயிர்கள் தங்களை மாய்த்துக்கொண்டு உங்களுக்கு உணவாகிறது. உணவின் தரம் என்று பார்த்தால், அசைவ உணவை விட சைவ உணவு பல மடங்கு சிறந்தது. இதை ‘சரி – தவறு’ என்ற கண்ணோட்டத்தில் நாம் பார்க்கவில்லை. நம் உடலமைப்பிற்கு எது பொருந்தும் என்று பார்த்து, நம் உடலை சவுகர்யமாக வைக்கக் கூடிய உணவுவகைகளை உண்ண நினைக்கிறோம்… அவ்வளவுதான்! எந்த ஒரு செயலைச் சரியாக செய்ய வேண்டும் என்றாலும் – அது தொழிலோ, படிப்போ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதற்கு நம் உடல் எவ்வித சோர்வுமின்றி நன்னிலையில் இயங்குவது அத்தியாவசியம். அதனால் எவ்வகையான உணவு உடலை வருத்தாமல், எளிதாக செரிமானம் ஆகி ஊட்டச் சத்து அளிக்கிறதோ, அவ்வகையான உணவை நாம் உண்ண வேண்டும். இதை நீங்கள் சிறிது பரிசோதனை செய்து பாருங்கள்… உயிரோட்டமுள்ள சைவ உணவு சாப்பிடும்போது உங்கள் உடல் செயல்படும் விதம் எப்படி மாறிப்போகிறது என்று! நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் உணவில் எந்த அளவிற்கு உயிரோட்டமுள்ள உணவை சேர்த்துக் கொள்ளமுடிகிறதோ அந்த அளவிற்கு சேர்த்துக் கொள்வதுதான். இது ஏனெனில், உயிரோட்டமான நிலையில் இருக்கும் உயிரணுக்கள், நாம் உயிர் வாழ்வதற்கு பக்கபலமாக அமையும். உயிரோட்டம் நிறைந்த உயிரணுக்களை உண்ணும்போது, உடலின் ‘ஆரோக்கியம்’ என்பது நீங்கள் முன்பெப்போதும் உணர்ந்ததை விட மிக வித்தியாசமாக இருக்கும். நாம் உணவை சமைக்கும்போது, அதில் இருக்கும் உயிரோட்டத்தை நாம் அழித்துவிடுகிறோம். ‘அழிக்கப்பட்ட’ நிலையில் இருக்கும் உணவு அதே அளவிற்கு சக்தியை நம் உடலிற்கு வழங்காது. ஆனால் உயிரோட்டம் நிறைந்த உணவினை உண்ணும்போது, அது நம்முள் முற்றிலும் வேறு நிலையிலான உயிரோட்டத்தை உண்டுசெய்யும். முளைவிட்ட தானியங்கள், பழங்கள், சமைக்காத பச்சைக் காய்கறிகள் போன்ற உயிரோட்டம் நிறைந்த உணவுவகைகளை சாப்பிட்டால், அதாவது, உங்கள் உணவின் 30-40% இது போன்றதாக நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் உயிர்சக்திக்கு பக்கபலமாய் அமையும். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உண்ணும் உணவுதான் உங்கள் உயிர்சக்தி. உங்கள் உயிரை வளர்த்துக்கொள்ள, மற்ற உயிர் வகைகளை நீங்கள் உணவாக உண்கிறீர்கள். அதாவது, நீங்கள் உயிர் வாழ, பிற உயிர்கள் தங்களை மாய்த்துக்கொண்டு உங்களுக்கு உணவாகிறது. அதனால் தங்கள் உயிரை விட்டு, நீங்கள் உயிர்வாழ வழிசெய்யும் அந்த உயிர் வகைகளுக்கு பெருக்கெடுக்கும் நன்றிவுணர்வோடு அதை நீங்கள் உண்டால், அது முற்றிலும் வேறு விதமாக உங்கள் உடலில் செயல்படும்.

 ஏன் சைவ உணவு உண்ண வேண்டும்? 

மாமிசம் சாப்பிடுவது குற்றமா?

அசைவம் தவறா? சைவம் சரியா? இப்படியே ஆளாளுக்கு வாதிட்டு எதைச் சாப்பிடுவது என்று மாறுபட்ட கருத்துக்களோடு இருக்கையில், இதில் சத்குருவின் கருத்தென்ன? வழக்கம் போல் மாறுபட்ட சிந்தனைத் துளிகளை வழங்கியுள்ளார். அறிந்து கொள்ள மேலே படியுங்கள்… சத்குரு: உணவு மேசையில் அமர்ந்திருக்கிறீர்கள்! பலவிதமான பதார்த்தங்கள் நிரம்பி இருக்கின்றன. நீங்கள் உணவருந்தத் தயார். இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது? ஆனந்தமாக இருந்தால், மனசுக்குள் திரைப்பட பாடலொன்று ஓடும். நட்போ, உறவோ அருகில் இருந்தால், அரட்டைக் கச்சேரி ஆரம்பிக்கும். அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தால் எதிலும் மனசு லயிக்காது. ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ, அப்போது உங்களை எரிச்சலும், கோபமும் எடுத்துச் சுவைத்துக் கொண்டு இருக்கும் சரிதானே! இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. நீங்கள் படிக்கப் போவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதரின் கதை… மஹாவீரர், ஒரு சத்ரியர். மாமிசம் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சாப்பிடும்போது, ‘இதுவும் உயிர்தானே, நாம் ஏன் இதைக் கொன்று சாப்பிட வேண்டும்? இது சரியல்லவே’ என்று ஒரு திடீர் சிந்தனை. அப்போதிருந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு முழுவதுமாக தாவர உணவுக்கு மாறினார். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னொரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தபோது, அவர் எந்த மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தாரோ, அந்த மரம் அவர் பார்த்த எந்த விலங்கையும்விட, எந்தத் தாவரத்தையும்விட மிகவும் உயிரோட்டமாக இருப்பதை உணர்ந்தார். நான் இன்னும் தவறு செய்கிறேனே. இந்த மரத்திலிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிடுகிறேன். இதைச் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று நினைத்தார். அப்புறமென்ன, காய்கறிகளையும் பழங்களையும் உண்ண மறுத்தார். பழம் தானாகக் கீழே விழும் வரை காத்திருந்து, அதன் பிறகே அந்தப் பழத்தை எடுத்துச் சாப்பிட்டார். பழம் விழவில்லையென்றால் அவர் சாப்பிட மாட்டார். காய்கறிகள் உயிர்ப்போடு இருக்கும்போது அவற்றைச் சாப்பிடமாட்டார். அவை அழுக ஆரம்பித்த பிறகே சாப்பிடுவார். இப்படியே சில காலம் கடந்தது. ஒரு நாள் அழுகிய காய் ஒன்றை விழிப்புணர்வுடன் சுவைத்துக் கொண்டு இருந்தார் மகாவீரர். அப்போது அந்த அழுகிய காய்கறி மிகவும் உயிர்ப்புடன் இருப்பதைச் சட்டென உணர்ந்தார். அவ்வளவுதான்… இதுவும் இனி வேண்டாம் என எல்லாம் துறந்து பட்டினியாய் இருக்க ஆரம்பித்தார். 12 வருடங்களில் 11 வருடங்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தார். அதாவது 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடுவார். மீண்டும் 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே அந்த ஒருவேளை உணவையும் சாப்பிடுவார். இப்படி 12 வருடங்களில் 11 வருட காலம் அவர் சாப்பிடவே இல்லை. மகாவீரரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பிறகு ஒருநாள், ‘தனக்குள்ளும் உயிர் இருக்கிறதே, மற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த உயிரை மிகவும் துன்பப்படுத்துகிறோமே! என்று உணர்ந்தார். அதன் பிறகே வழக்கம்போல உணவருந்த ஆரம்பித்தார். இப்போது கேள்வி வருகிறது… எதை நாம் உண்ணலாம். எதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் உயிர் வாழ, எதையாவது கொன்றுதான் சாப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையின் தன்மை அப்படித்தான் இருக்கிறது. தாவரங்களின் தன்மையைவிட விலங்கின் தன்மை மனிதனுக்கு நெருக்கமாய் இருப்பதால்தான், விலங்குகளைத் துன்புறுத்துவதை ‘அஹிம்சை’ என்றும் கருதுகிறோம். ஏனெனில் விலங்குகள் நம்மைப் போல் வாழ்கின்றன. நீங்கள் என் கையை அறுத்தால் ரத்தம் வருகிறது. ஒரு கோழிக்குஞ்சை அறுத்தாலும் ரத்தம் வருகிறது. அதனால்தான் நாம் விலங்கின் தன்மைக்கு நெருக்கமாய் இருப்பதாகக் கருதிக்கொள்கிறோம். உணர்ச்சியின் அடிப்படையில் நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் விலங்கு, தாவரம் இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நீங்கள் ஒரு விலங்கைத் துன்புறுத்தினாலும் தாவரத்தைத் துன்புறுத்தினாலும் அந்த இரண்டு உயிர்களுக்கும் வலியும் பாதிப்பும் ஒரே விதமாகத்தான் இருக்கும். இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன. இப்போது செய்ய முடிவது ஒன்றுதான். சாப்பிடுவதையாவது நன்றியுணர்வுடன் சாப்பிடலாம். உணவின் ஒவ்வொரு கவளத்தையும் நன்றியுணர்வுடன் சாப்பிட வேண்டும். ஆம், நன்றியுணர்வுடன் சாப்பிட்டு பாருங்கள். என்ன சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆனந்தமாக இருக்கும். உடலுக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். சிறப்பான உடல் நலத்துடன் இருப்பீர்கள். இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும். பல உயிர்கள் நமக்காக இறக்கின்றன. சிறிதாவது நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டாமா? நமக்காக உயிர்விடும் உயிரினங்களுக்காக சிறிதாவது உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்தானே, நன்றியுணர்வுடன் சாப்பிடுங்கள், நம்மால் செய்ய முடிந்தது அதுதான் – நன்றி

எவ்வகையான உணவு வகைகளை உண்பது நல்லது? அது ஏன் அசைவ உணவு எப்போதும் சர்ச்சைக்கு உரியதாகிறது? மாமிசம் உண்பது குற்றமா, என்ன? உயிர்களை கொன்று உண்பது பாவம் என்றால், சைவ உணவான தாவரங்களும் கூட உயிர்தானே? அதை மட்டும் கொல்லலாமா? இப்படி நீள்கிறது கேள்விப் பட்டியல். இதற்கு சத்குருவின் பதில் இங்கே… சத்குரு: உணவுமுறையில் இப்படி பல கோட்பாடுகள் வைத்ததற்குக் காரணம், உயிர்வதை, வன்முறை கூடாது என்பதால் மட்டுமல்ல. வாழ்க்கையை உற்றுப் பார்த்தால், இங்கு உயிர்வாழ்வதும், ஏன் சுவாசிப்பதும் கூட வன்முறை தான். ஆனால் நீங்கள் தேவையான அளவிற்கு மட்டும் வன்முறை செய்கிறீர்களா, அல்லது எல்லை தாண்டிப் போகிறீர்களா என்பதுதான் கேள்வியே. எது வன்முறை? ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. நீங்கள் காரட் வெட்டுகிறீர்களோ, ஆப்பிள் வெட்டுகிறீர்களோ அல்லது கோழி, ஆடு வெட்டுகிறீர்களோ அது எதுவாக இருந்தாலும், அது வன்முறைதான். ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. விலைமதிப்பற்றது. “இது ஓரு ஆட்டின் உயிர்தானே…” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆட்டிற்கு அப்படியல்ல. அது எத்தனை கர்வத்தோடு நடக்கிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்தவரை இவ்வுலகிலேயே அதுதான் மிக முக்கியமான உயிர். உங்கள் நினைப்பும் அதுதானே?! மாமிசம் சாப்பிடுவது குற்றமா..? இவ்வுலகில் வாழும் ஒவ்வோர் உயிரும் வெவ்வேறு அளவிலான பரிணாம வளர்ச்சி நிலையில் இருக்கிறது. வெவ்வேறு அளவிலான உணர்வுத்திறன் பெற்றுள்ளது. விஞ்ஞான ரீதியாக பார்த்தால், நாம் உண்ணும் உணவு, பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கும் நிலையிலிருந்து வெகு தொலைவில் இருப்பது நல்லது. ஏனென்றால், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அது பதித்து வைத்துக்கொள்ளும் ஞாபக அளவைப் பொறுத்து, அதன் ஞாபகக் கட்டமைப்பு அமைந்திருக்கும். பரிணாம வளர்ச்சி நிகழ நிகழ, மிக நுண்ணிய விஷயங்களையும் பதித்து வைத்துக் கொள்ளும் வகையில், ஞாபகக் கட்டமைப்பு மேன்மேலும் நுட்பமானது. இந்த பரிணாம வளர்ச்சியின் உச்சநிலையில் மனிதன் இருப்பதால், அவனின் ஞாபகசக்தி மிகமிக நுட்பமாக இருக்கிறது. அவனது ஞாபகக் கட்டமைப்பும் மிக நேர்த்தியாக, மேம்பட்ட நிலையில் உள்ளது. எந்த ஜீவராசிக்கு ஞாபகக் கட்டமைப்பு மிக எளிய நிலையில் இருக்கிறதோ, அதை உணவாக உண்டால், அதை நாம் எளிதாக ஜீரணிக்கலாம். அதாவது, அந்த உணவின் ஞாபகங்களை எளிதாக மாற்றி, அதை நம் உடலோடு எளிதாக இணைத்திடலாம். இரண்டு உயிரணுக்களுடன் தொடங்கிய உங்கள் உடல், இத்தனை மடங்கு வளர்ந்தும் தன் தனித்தன்மையை இழக்காததற்குக் காரணம், அந்த அணுக்களின் ஞாபகத்திறன். அதைக் கொண்டு தான், அது தன்னைப் போன்றே அச்சுகளை உருவாக்குகிறது. பரிணாம வளர்ச்சியில், கீழ்நிலையில் உள்ள தாவரங்களை உட்கொண்டால், அதை கிட்டத்தட்ட 100% ஜீரணம் செய்திடலாம். அதன் ஞாபகங்களை முழுமையாக நீக்கிவிட்டு, உங்கள் ஞாபகத்தை அதன் மீது பதித்திடலாம். ஆனால், உங்களை ஒத்த ஜீவராசிகளை நீங்கள் உண்ணும்போது, அவற்றின் ஆழமான, சிக்கலான ஞாபகங்களை உங்களால் முழுவதுமாய் அழிக்க முடியாது. இப்படிப்பட்ட உணவினை நீங்கள் தொடர்ந்து உண்ணும் போது, உங்கள் ஞாபகத்தை அதன் மீது முழுமையாய் பதிக்கமுடியாமல் போவதால், நாள் ஆகஆக, உங்கள் தனித்தன்மையை நீங்கள் இழக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 25000 ஆண்டுகளாக உங்கள் மரபணுக்கள் மூலம் நீங்கள் சுமந்து வந்திருக்கும் கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் தொலைந்து விடும். உண்டாகும் உருச்சிதைவு! இதைத்தான் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மஹாவீரர் சொன்னார். விலங்குகளை உண்டால், நீங்கள் அவை போலவே ஆகிவிடுவீர்கள் என்று. அதற்காக இன்று நீங்கள் ஆட்டை சாப்பிட்டால், நாளையே ஆடு போல் தோற்றம் கொள்வீர்கள் என்று பொருளல்ல. இதுபோன்ற உணவுகளை உண்டால், சிறிது சிறிதாக ஞாபக ‘உருச்சிதைவு’ உண்டாகும். உங்கள் ஞாபகத்தை தன்மீது முழுமையாய் ஏற்காத, தன் ஞாபகங்களை இன்னும் பிடித்து வைத்துக்கொள்ளும் உணவுகளை (விலங்குகளை) உண்பதால், உங்கள் உடலின் ‘ஞாபகப் பதிவு’களில் குழப்பங்கள் உண்டாகிறது. இந்த ஞாபகக் குழப்பத்தோடு நீங்கள் பிள்ளைகள் பெற்றால், அவர்கள் சற்றே தடுமாற்றத்துடன் தான் இருப்பர். அசைவத்தில் என்ன தான் சாப்பிடுவது? உண்பதற்கு தாவரங்கள் தான் சிறந்தது. ஆனால், கட்டாயம் அசைவம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பரிணாம வளர்ச்சியில் தாவரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை உண்ணலாம். அதாவது மீன்களை உண்ணலாம். காரணம், கடல்வாழ் உயிரினங்கள் தான் விலங்கினத்தில் முதல்முதல் தோன்றியவை. ‘நகரும் உயிரினத்தின்’ பரிணாம வளர்ச்சியில், மனிதனைவிட வெகு தொலைவில் இருப்பவை அவை. உயிரின் ஞாபகத்தன்மை பாலூட்டி வகை விலங்குகள் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக அருகே இருப்பதால், அவற்றை நாம் உண்பதில்லை. ஓர் ஆட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம் வரும் என்றால், அதைவிட மேம்பட்ட உயிரினமான மனிதனை உண்டால், இன்னும் அதிகமாக ஆரோக்கியம் வரவேண்டும் அல்லவா? மனிதனை உண்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? பிரச்சினை, அவர் உங்களைப் போன்றே இருக்கிறார் என்பதால்தான். மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளும் எண்ணங்களும் கொண்ட விலங்குகளை உண்பது ஏறக்குறைய நரமாமிசம் உண்பது போல. இதை வேண்டாம் என்று சொன்னது, மதம் சார்ந்த கருத்தோ, நல்லொழுக்க சான்றோ அல்ல. இது நம் வாழ்வின் அஸ்திவாரத்தை தடுமாறச் செய்யும் விஞ்ஞானப் பூர்வமான பிரச்சனை. தொடர்ந்து மாமிசமோ, நுட்பமாக ஞாபகப் பதிவை வைத்துக் கொள்ளும் உணவு வகைகளையோ உண்டு வந்தால், ‘மனிதனின்’ தனித்தன்மைகளையே நீங்கள் இழக்க நேரிடும்.

: மாமிசம் சாப்பிடுவது குற்றமா..? 

இறந்தவர்கள் நற்கதி அடைய – காலபைரவ ஷாந்தி

 மஹாளய அமாவசை அன்று லிங்கபைரவியில் இறந்தவர்கள் நற்கதி அடைய சிறப்பு காலபைரவ ஷாந்தி நடைபெறுகிறது. அது பற்றிய சில தகவல்கள் இங்கே…  மஹாளய அமாவாசையானது மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பொதுவாகவே அமாவாசை நாட்கள் பூமியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் தாக்கம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், தசரா பண்டிகையின் துவக்கமாக அமையும் இந்த மஹாளய அமாவாசை நாள், பித்ரு கடன் செய்வதற்கு உகந்த நாளாக உள்ளது. சத்குருவால் வழங்கப்பட்டுள்ள காலபைரவ சாந்தி எனும் இந்த செயல்முறையானது, உடல் விட்டு நீங்கிய உயிர்களுக்கு நற்கதி வழங்குவதாய் அமைந்துள்ளது. நாம் பேசும் மொழி, அமரும் முறை, உடுத்தும் உடைகள், நமது வசிப்பிடம் என அனைத்துமே நம் முன்னோர் நமக்கு உருவாக்கி வைத்துவிட்டுச் சென்றதுதான். நெருப்பின் பயனை அறிந்தது; சக்கரம் கண்டுபிடித்தது; ஆடைகளை உருவாக்கியது என நம் முன்னோர்களின் பங்களிப்பு இல்லாமல் நாம் இன்று அனுபவிக்கும் எந்த ஒன்றும் வந்துவிடவில்லை. எனவே அவர்களுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கும் வகையில் இந்த மஹாளய அமாவாசை நாளை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த மாதத்தில் தான் நமது இந்திய விவாசாய நிலங்களில் பயிர்கள் செழித்து கதிர் விடத் துவங்கும். எனவே அந்த தானியங்களை ‘பிண்டம்’ இட்டு, வெறும் சடங்காக இல்லாமல், உணர்வுப் பூர்வமாக நமது மூதாதையர்களுக்கு நன்றியுணர்வுடன் அர்ப்பணிக்கிறோம். பித்ருக் கடன் தீர்க்கும் காலபைரவ ஷாந்தி இந்த வருடம் மஹாளய அமாவாசையான அக்டோபர் 12ஆம் தேதியன்று லிங்கபைரவியில் வருடாந்திர காலபைரவ சாந்தி செயல்முறை வெகு சிறப்பாக நிகழவிருக்கிறது!! மஹாளய அமாவாசையன்று மாலை 6 மணியிலிருந்து நடுநிசி 12 மணி வரை சிறப்பு அர்ப்பணிப்பாக லிங்கபைரவிக்கு அக்னி அர்ப்பணம் நடைபெறவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பித்ருக்களுக்கும் (நம் மூதாதையர்) மற்றும் இறந்த குடும்ப உறவுகளுக்கும் காலபைரவ ஷாந்தி நடைபெறவிருக்கிறது. இறந்தவர்கள் நற்கதி அடைய சத்குருவின் வழிகாட்டுதலில் தேவியின் அருள் பெற்று, இறந்தவர்கள் நற்கதி அடைய வேண்டி செய்யப் படக்கூடிய செயல்முறைகளே காலபைரவ கர்மா மற்றும் ஷாந்தி. இந்த தனித்துவம்வாய்ந்த அமாவாசை இரவில், நம் முன்னோர்களுக்காகவும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்காகவும் நிகழ்த்தப்படும் இந்த செயல்முறையானது, குடும்ப நலனையும் வழங்குகிறது. இந்த ஆன்மீக செயல்முறையானது ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அமாவாசையன்று மண்ணுலகம் விட்டு மறைந்த குடும்ப உறவுகள் மற்றும் அன்பிற்குரியவர்களின் நினைவாக நிகழ்த்தப்படுகிறது. பாரத கலாச்சாரத்தில், இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கானது இறந்த உயிர்களுக்கு நலம்பயக்கும் வகையில் மிகநுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் வயது, மரணமடைந்த விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த சடங்கு செயல்முறைகள், இறந்த உயிரினை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மென்மையாக பரிமாற்றம் செய்வது மட்டுமல்லாமல், அந்த உயிருக்கு ஆன்மீக பரிணாமத்தையும் வழங்குவதாய் அமைகிறது. துரதிர்ஷ்ட வசமாக, கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்த உன்னத செயல்முறையானது சமூகத்தில் சீர்கெட்டுவிட்டதோடு, அதன் தன்மையையும் இழந்துவிட்டது. சத்குருவால் வழங்கப்பட்டுள்ள காலபைரவ சாந்தி எனும் இந்த செயல்முறையானது, உடல் விட்டு நீங்கிய உயிர்களுக்கு நற்கதி வழங்குவதாய் அமைந்துள்ளது. ஈஷாவில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலபைரவர் முன்னிலையில், சத்குருவிடமிருந்து முறைப்படி கர்மா செய்யும் வழிமுறையை அறிந்துணர்ந்த பிரம்மச்சாரிகளால் காலபைரவ கர்மா மற்றும் ஷாந்தி ஆகியவை நடத்தப்படுவதால் மிகவும் சக்தி வாய்ந்த செயல்முறையாக இது உள்ளது. தங்களது குடும்ப உறவுகளை இழந்து மீளாத் துயரத்தில் வருபவர்கள், கால பைரவ கர்மா முடித்துவிட்டுச் செல்லும்போது இறந்த உயிருக்கு தாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்த நிம்மதியுடன் செல்கிறார்கள். தங்கள் பித்ருக்களுக்கு காலபைரவ ஷாந்தி செய்பவர்கள், தங்கள் நன்றியை உணர்வை வெளிப்படுத்திய திருப்தியில் செல்கிறார்கள். குறிப்பு: காலபைரவ கர்மா, இறந்த குறிப்பிட்ட தினங்களுக்குள் செய்வது. காலபைரவ சாந்தி, இறந்த உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் செய்வது. காலபைரவ சாந்தியை ஒவ்வொரு வருடமும் செய்யலாம், அல்லது முன்பே பதிவு செய்து 10 வருடங்களுக்கு (ஒவ்வொரு வருடமும் மஹாளய அமாவாசை அன்று) தொடர்ச்சியாக செய்து கொள்ளலாம். காலபைரவ சாந்தி செய்வதற்கு இறந்தவரின் ஒரு புகைப்படமும், பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்த தேதியும் தேவைப்படுகிறது. செயல்முறையின்போது நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்களின் முன்னோர்கள் அல்லது இறந்த உறவினர்களின் புகைப்படங்களை ஸ்கேன் செய்து அத்துடன் பிறப்பு மற்றும் இறப்பு தேதியையும் குறிப்பிட்டு இ-மெயிலில் அனுப்பலாம். பிறந்த தேதி சரியாக தெரியவில்லை என்றால், பிறந்த வருடத்தையாவது குறிப்பிட வேண்டும். இறந்த வருடமும் தெரியாதபட்சத்தில், இறந்தவர்களின் பெற்றோர் பெயர்கள் (தாய் மற்றும் தந்தை இருவரின் பெயரும்) குறிப்பிட்டால் போதுமானது.

மறுபிறவி எடுத்தவருக்கு காலபைரவ சாந்தி செய்யலாமா?

ஈஷாவில், நாம் இறந்தவருக்கு கால பைரவ சாந்தி செய்கிறோம். ஆனால் அவர் தற்போது மீண்டும் எங்காவது பிறந்திருந்தால் நாம் அவருக்கு இப்போது சாந்தி செய்வது தவறானதாக இருக்காதா? இந்த சந்தேகம் உங்களுக்கு இருந்தால் தொடர்ந்து படித்து தெளியுங்கள்! கேள்வி சத்குரு, சில நாட்களுக்கு முன்பு எங்கள் முன்னோர்களுக்கு இங்கு ஆசிரமத்தில் காலபைரவ சாந்தி செய்தோம். இப்போது அவர்கள் ஏற்கனவே வேறு எங்காவது மீண்டும் பிறந்திருந்தால் இப்போது சாந்தி செய்ததில் தவறு ஏதுமில்லையா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன். சத்குரு: நேரம் என்பது ஒரு உயிர் வெவ்வேறு நிலையில் இருக்கும்போது வெவ்வேறு விதமான அனுபவமாக அமைகிறது. ஒரு நிலையில் ஒரு நிமிடம் என்பது 100 ஆண்டுகளாக இருக்கிறது. இன்னொரு நிலையில் 100 ஆண்டுகள் என்பது 1 நிமிடமாக இருக்கிறது. ஏதோ சில உயிர்கள் மட்டும்தான், 40 நாளிலேயே இன்னொரு உடலைப் பெற்று விடுவார்கள். ஆனால் அது மிகவும் குறைவு. ஒரு முறை ஒரு புத்திசாலி பகீரதப் பிரயத்தனம் செய்து காலபைரவரை சந்தித்தார். அப்போது கால பைரவரிடம், “எங்களுக்கு 100 கோடி ரூபாயாக இருப்பது உங்களுக்கு ஒரு பைசா மாதிரி, எங்களுக்கு 1 கோடி வருடமாக இருப்பது உங்களுக்கு ஒரு வினாடி மாதிரி என்றெல்லாம் சொல்கிறார்களே?” என்று கேட்டார்.. அதற்கு காலபைரவர் சொன்னார், “ஆமாம், உனக்கு எது 100 கோடி ரூபாயாக இருக்கிறதோ, அது எனக்கு 1 பைசா மாதிரிதான்”. உடனே அந்த புத்திசாலி, “ஐயா, அப்படின்னா, எனக்கு ஒரு பைசா கொடுங்களேன்!”. உடனே அதற்கு காலபைரவர் பதில் சொன்னார், “சரி, ஒரு வினாடி காத்திரு!” (அனைவரும் சிரிக்கிறார்கள்) நேரம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி கிடையாது. உயிர் உடலுடன் ஒட்டியிருக்கும்போது நேரத்தின் அனுபவம் ஒரு மாதிரி இருக்கின்றது. உடலுடன் இல்லாதபோது நேரத்தின் அனுபவம் இன்னொரு மாதிரி இருக்கின்றது. இப்போது இந்த கூட்டத்தில் நெருக்கடியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். கால்கள் மரத்துப் போய் விட்டது. உடம்பு மிகவும் பாதிப்பில் இருக்கிறது. இப்போது ஒவ்வொரு நிமிடம் போவதும் உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் உடலே இல்லாமல் போய்விட்டது என்றால் அப்போது அந்த உயிருக்கு நேரம் இப்போது தெரிவது போல தெரியாது. நமக்கு 1 வருடமாக இருக்கலாம். ஆனால் அந்த உயிருடைய அனுபவத்தில் அது ஒரு வினாடி மாதிரி இருக்கிறது. ஏனென்றால் அந்த உயிருக்கு இப்போது உடல் இல்லை. உடல் இருப்பதால்தான் நமக்கு வலியும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடம் போவதும் நன்றாகத் தெரிகிறது. நேரமாகிக் கொண்டிருப்பதை உங்கள் கால் எடுத்துச் சொல்கிறது. முதுகு சொல்கிறது. உங்கள் வயிறும் சொல்கிறது. ஆனால் நமக்கு நேரம் புரிந்த மாதிரி உடல் அற்றவர்க்கு அது புரியவில்லை. அதனால் உடல் இழந்தவுடன் அந்த உயிருக்கு விரைவில் இன்னொரு கருவறைக்குள் நுழைய முடியவில்லை. ஏதோ சில உயிர்கள் மட்டும்தான், 40 நாளிலேயே இன்னொரு உடலைப் பெற்று விடுவார்கள். ஆனால் அது மிகவும் குறைவு. எனவே மிகப் பெரும்பாலான உயிர்கள் இன்னொரு உடல் பெற மிகுந்த காலம் பிடிக்கும். அதனால் அந்த உயிர்களுக்கு நீங்கள் சாந்தி செய்வதே மேல். இப்போது காலபைரவ சாந்தியை (தியானலிங்கம் அருகில் உள்ள லிங்கபைரவியில் இறந்தவர்களுக்காக செய்யப்படும் சடங்கின் பெயர் காலபைரவ சாந்தி) நீங்கள் உயிரோடு பார்த்த மனிதர்க்கு மட்டும் செய்தால் போதும். நீங்கள் பார்த்திராத உங்கள் முன்னோர்களுக்கு செய்யத் தேவையில்லை. அவர்களுக்கு வேறு மாதிரி செய்ய வேண்டும். ஆனால் நாம் இன்னமும் அதை இங்கு ஆரம்பிக்கவில்லை. நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்தவர்களுக்கு மட்டும் போதும் என்று ஏன் சொல்கிறோம் என்றால் பொதுவாகவே அந்த உயிர்கள் இங்கேதான் இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் இன்னொரு உடல் தேடியிருக்க மாட்டார்கள். அவர்களில் 99 சதவிகிதம் மீண்டும் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பிறப்பது மிக மிக அரிது. அந்தக் கணக்கில்தான் நாம் காலபைரவ சாந்தி செய்து வருகிறோம். நீங்கள் உயிர் என்று அழைப்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சக்தி. அந்த சக்தி பல வடிவங்களை எடுக்க முடியும். ஒரு உயிர் நன்றாக வாழ்ந்திருந்தால் அந்த சக்தி மிகவும் மென்மையான வடிவமாக இருக்கும். அந்த உயிர் நன்றாக வாழ்ந்திருக்கவில்லை என்றால் அந்த சக்தி கொந்தளிப்பு நிறைந்ததாக, அமைதியற்றதாக இருக்கும். எனவே அந்த உயிர் உடலற்று இருந்தாலும் சரி அல்லது இப்போது உடலுடன் இருந்தாலும் சரி, அந்த உயிருக்கு அமைதியைத் தர காலபைரவ சாந்தி செய்யலாம். அநேகமாக அந்த உயிர் அதற்குள் உடலைப் பெற்றிருக்காது. ஒருவேளை உடல் பெற்றிருந்தாலும் சாந்தி நல்ல பயனையே தரும். உடலற்ற உயிருக்கு பயனளிப்பது போல் இருக்காது என்றாலும் பயன் தரும்.