Wednesday, September 5, 2012

ஆடி விழாக்களில் ஆன்மீக தத்துவங்கள்...!

நமது சித்தர்களும் தபஸ்விகளும் அவர்கள் தவ பலத்தால் பல அரிய செய்திகளைக் கூறிய நமக்கு முன் வாழ்ந்த பெரியோர்கள் அவற்றின் மகத்துவங்களை உரிய காலத்தில் பயன்படுத்தக் காலத்தில் உபதேசித்தனர். அவற்றுள் நாம் மறக்க முடியாதது மாதங்களைக் கூறிட்டு அவர்களை மகிழ்ந்து கொண்டாட வைத்தது. மாதங்களில் கண்ணன், நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறான். மாதங்களில் தான் ஆடியாக இருப்பதாக அன்னை ஆதிபரா சக்தி கூறியிருப்பதாக ஆதி புராணம் சொல்கிறது. ஆடியில் அம்மன் மகிழ்ந்தாடி வர, கன்னியரும், சுமங்கலிகளும் கண்டு, வணங்கி அருள் பெறத் தயாராகிட ஆடியில் அம்மன் வழிபாடு செய்வது ஏன் என்று முன்பே அறிந்து கொண்டால் முறையோடு கொண்டாடலாமே! ஆடியில் அம்மன் வழிபாடு எதற்காக? செங்கதிரோனாகிய கதிரவனது பாதை தென்பாகத்திற்குத் திரும்புகிற காலமே ஆடி, தெற்கு என்பது எம தர்மராஜனுக்கு உரிய திசை. அந்த எமனைக் கட்டுப்படுத்துகிற சக்தி அம்பிகைக்கு மட்டும் தான் உண்டு என்று சொல்கிறது தேவியின் புராணம். ஆகவே தான், மார்க்கண்டேயனைக் காப்பதற்காகத் தர்ம தேவனைத் தன் இடக்காலால் (அம்பிகை உள்ள பாகம்) உதைத்தார் ஈசன். மேலும் உலக உயிர்களின் சுகவாழ்விற்குக் காரணமாக உள்ளவர் ஆரோக்கியகாரகன் என்னும் கதிரவனே! அவன் எமனுக்குரிய திசையில் பயணம் செய்யும் காலத்தில் அம்பிகை தானே உலக மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆடியில் வீசும் காற்றும் விளாசுகிற மழையும் அதிகமாக வரக் காணலாம். கால் என்கிற காற்றைக் கட்டுப்படுத்துகிறவன் சக்தியில் ஒரு ரூபம் காளி. பெய்யும் மழைக்கு உரிய சக்தியே மாரியம்மன். மழைக் காற்றில் கிருமிகள் மற்றும் துர்சக்திகளை விரட்டுபவன் துர்கா. பருவகால மாறுபாடுகளால் மக்களிடையே பரவும் கொடிய நோய்களைக் கட்டுப்படுத்துகிற ஆற்றல், ஆற்றுப்படுத்து திறன் வேப்பிலைக்கும், எலுமிச்சங்கனிக்கும் உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கேழ்வரகும் அரிசியும் புரதச்சத்துள்ள கூழாக அம்மனுக்குப் படைக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைத்தரும் உணவாகப் பக்தர்களுக்குத் கொடுக்கப்படுகிறது. மாரியைத் தரும் மாறி கொப்புளங்களை ஏற்படுத்துபவன். அதனால் தான் நோய் எதிர்க்கும் வேப்பிலையால் சேலை அணிந்து நேர்த்திக் கடனைச் செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. ஆடியில் அம்மன் பூஜை ஜோதிடக் கருத்து:- நவநாயகர்கள் என்று சொல்லப்படுகிற கோள்களின் தலைவரான கதிரவன், ஈஸ்வரனுடைய அம்சமாகத் திகழ்கிறார். சந்திரன் அம்பிகையின் அம்சமாக விளங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிறந்த உடன் சந்திர ராசியான கடகத்திற்குச் சூரியன் வந்து சேருகிறார். சூரியன் அப்போது நச்திரனது குளிர்த்தன்மை, சூரியனையும் ஆட்கொண்டு விடுவதால் அவரது வெப்பம் தணிந்து விடுகிறது. இதன் காரணமாக சூரியனை விடச் சந்திரனுக்கே அதிக ஆதிக்க நிலை வந்து விடுகிறது. குறிப்பாகத் சிவனது ஆற்றலை விடச் சக்தியின் ஆற்றலே ஆடியில் அதிகப்படியாக உள்ளது. ஆடியில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுவதாக ஜோதிட, வானியல் ஐதீகம். இதன் காரணமாகவே சக்திதேவியின் சன்னிதிகளில் ஆடித்தபசு, ஆடிப்பூரம் வளையலணி விழா ஆகியவை கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதம் ஆட்டிப் படைக்குமா? மக்களின் சொல் வழக்கில் தவறாகக் கூறப்பட்ட செய்தி இது. ஜோதிட ரீதியில் கூறினால், மனித வாழ்வில் சுற்றி வரும் கிரஹங்களில் குருபகவானே நிதி, பணம் புழக்கங்களுக்கு அதிபன். அவர் ஒரு ராசியில் ஓராண்டு காலம் சஞ்சாரம் செய்வார். ஆடி மாதம் வந்த உடன் வக்ர கதி அடைந்து விடுவார். குரு வக்கிரமானால் பணத் தட்டுப்பாடு வரத்தானே செய்யும். ஆகவே தான் பணப்புழக்கம் குறைவு எனப் பழக்கச் சொல் வந்தது. ஆனால் அம்மனுக்கு விழா எடுக்கும் இக்காலத்தில் பொருட்செலவு செய்து கொண்டு தானே இருக்கிறோம்? இம்மாதத்தில் ஆலய விழாக்களைக் காண்பதற்காக விருந்தினர்கள் விருந்தாடிகளாக எல்லோரது இல்லங்களுக்கும் வருவர். இம்மாதத்தில் திருமணம் மற்றும் சுபகாரியங்களை இதன் காரணமாகவே விலக்கி வைத்தனர். `ஆடிப்பட்டம் தேடிவிதை, ஆடித்தேரை தேடித்தரிசி' என்ற சொல்வழக்குகள் இருக்கும் போது ஆடி மாதத்தில் ஊருக்கு அதிக காலம் சென்று விடாமல் வயல் வேலைகளைப் பயிர் செய்யும் பொருட்டு தங்க வேண்டும் எனவும், ஆடித் தேர்பவனியை கண்டு தரிசிப்பவர்க்குப் பிறவித்துன்பம் நீங்கும் என சாஸ்திரம் சொல்வதாலும் ஆடியில் பொருட்செலவு சுபச் செலவாகவே ஆகிறது என்பதை அறிவோம். கூழ்படைப்பதன் நோக்கம் என்ன? இந்த ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடுவதைக் காணலாம். கூழ் வார்த்தால் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடைபெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் சார்த்தவீர்யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண்டிருந்த போது அவனது மகன்கள் இருவர் முனிவரைக் கொன்று விட்டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பகவானை அழைத்து மழையை வர்ஷிக்கும்படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணுகாவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள். வயிற்றுப்பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்ட போது அவர்கள், மகரிஷி மனைவியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகனைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப்பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி. அச்சமயம் சிவபெருமான் அவள் முன்தோன்றி, சக்தியின் அம்சமாக இந்தப் புவியில் அவதரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுத்துக. உனக்கு ஏற்பட்ட அம்மைக் கொப்புளங்கள் உன் பக்தர்களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண்கண்ட மருந்து. பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது... நீ மாரிதேவியாக அருள் சுரந்து அவர்களுக்கு வந்த நோய்களை நீக்குவாயாக என்றார். எனவே தான் மாரித்தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்கள். வேப்பமர பூஜை என்னும் நிம்பவிருட்ச வழிபாடு: நிம்பூ என்பதற்கு வேம்பு எலுமிச்சம்பழம் ஆகியவற்றைக் குறிக்கும் பொருள் உண்டு. இதை மாரியின் வடமொழித்துதியில் நிம்ப விருட்ச ஸ்திதாயை நம் என்று மந்திரம் வருகிறது. மாரியன்னைக்கு உரிய பச்சிலை எனப்படும் வேம்பில் பச்சை, வெண்ணை, வெளிர் மஞ்சள் மலை வேம்பு என்ற நான்கு வகைகள் உண்டு. இவற்றில் பச்சை வேம்புக்கு உரிய சக்தி மகத்தானது. நிம்ப விருட்சம் எனப்படும் வேப்ப மரத்தை பூஜிக்கப் பாம்பும் விலகும் என்பது பழமொழி. மூன்று கிளை உள்ள வேப்ப மரத்தை ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று சுத்தம் செய்து அடிப்பாகப் பட்டைகளைச் செதுக்கி விட்டு மஞ்சள் குங்குமம் வைத்து படையல்களிட்டு மாரியம்மனாக வழிபட்டு ஆரத்தி செய்வது வழக்கம். திருவிளக்கு பூஜை: கன்னியர்கள் சுமங்கலிப் பெண்கள் குதூகலமாக மூன்று தினங்கள் கொண்டாடுகிற ஆடித்திருவிழாவில் முக்கியமான அம்சம் இந்த திருவிளக்கு பூஜையே. திருக்கயிலாயத்தில் பார்வதி பிரமன் திருமணம் நடைபெற்றபோது தேவர்கள் மூவர்கள் நேரில் வந்து வாழ்த்தியது போல ஆடியில் செய்யும் தீப பூஜையை அவர்கள் வந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் கீழே பிரம்மபாகம், நடுவே விஷ்ணு பாகம் மேலே ருத்ரபாகம் உடைய குத்துவிளக்கில் சுடர் எரியச்செய்து அம்பிகையை ஆராதனை செய்து அதில் உயிர்த்தெழுச் செய்து மனமுருகி வேண்டுதல் செய்ய வேண்டும். இந்த திருவிளக்கு பூஜையில் குறைந்தது 16, 32, 54, 108 பெண்கள் குத்து விளக்குகளை கொண்டு வந்து வாழை இலையில் அரிசி போட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து ஆவாகனம் செய்து, குங்குமம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடல் வேண்டும். தேவியை இச்சாசக்தி, ஞானசக்தி, சூரியாசக்தி சொரூபிணியாக வழிபடுவதால் நம்வாழ்க்கை ஒளி பொருந்தியதாக ஆண்டு முழுவதும் இருக்கும் என்பதே இவ்வழிபாட்டின் ஐதீகம். காப்பிடல் அலங்காரம் செய்தல்: மூன்று நாட்கள் ஆடித்திருவிழா தொடங்கி நடத்துவதில் முதல்நாள் வெள்ளிக்கிழமை அன்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்வதன் பொருள் சந்தனம் உஷ்ணத்தை இழுத்துச் சமப்படுத்துவதால் தேவிக்கு மனசு நிர்மலமாக இருந்து சிரிக்கிறாள். மறுநாள் சனிக்கிழமை நவநாயகர்கள் வழிபாட்டை அந்த அம்பிகை முன்பு செய்து ஒன்பது கிரகங்களும் நன்மையே செய்திட வேண்டுகிறோம். மறுதினம் 3-ம் நாள் காலை அம்மனை மங்கள ரூபத்தில் தரிசிக்க அபிஷேக ஆராதனைகளை பதினாறு வகைகளில் செயது மஞ்சள் காப்பிடல் செய்கிறோம். இதனால் சக்தியை குளிர்விப்பதாக ஐதீகம் சொல்வார். அன்றைய தினம் காலையில் அம்மனைக் கலசத்தில் வர்ணித்துப் பகல் 12 மணிக்கு கூழ்வார்த்தலை நடத்தி விட்டு திருக்குட ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்வார்கள். லட்சுமி நடத்தி விட்டு திருக்குட ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்வார்கள். லட்சுமிகரமான கலசத்தில் திருமகளாய் உங்கள் இல்லங்களுக்கு வருகை புரிவதாக சாஸ்திர விதி. மதியம் தேவி சன்னதியில் பொங்கிலிடலும் மாவிளக்கும் வைக்கலாம். மாலையில் அம்மனுக்கு மலர் அலங்கார சேவை செய்து பல்வேறு தீப ஆராதனைகள் செய்து வீதி உலாக் காட்சியை நடத்துவர். அம்மன் எல்லாருடைய இல்லங்களுக்கும் படையலிட்ட உணவை உண்டு மகிழ்ந்திட வருவதாக சொல்வழக்கு உண்டு. ஆடியில் மகிழ்ந்தாடி வரும் அம்மனை வரவேற்க ஊர்மக்கள் ஒன்றுகூடி ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், உடுக்கு சிலம்பம், புலியாட்டம், கம்பி சுற்றுதல் மற்றும் கிராமப்புற கலைகளை அம்மன் முன் ஆடிக்காட்டி மகிழ்வித்தபின் ஆலயத்திற்கு சந்தோஷம் பொங்க அனுப்பி வைக்கப்படுகிறாள். விடையாற்றி விழா: ஆடித்திருவிழா என்றால் பக்தர்களின் கூட்டம் எல்லாவகை அம்மன் கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. 3, 5, 7 தினங்களுக்கு தங்கள் விருப்பம் போல நிகழ்ச்சிகளை வைக்கின்றனர். எப்படி நடந்தாலும் விழா நடத்திய ஞாயிற்றுக்கிழமைக்கு மறுதினம் திங்களன்று மாலையில் அம்மனை ஆற்றுப்படுத்துதல் வேண்டும். அதாவது வேட்டைக்கு சென்று வந்த தேவிக்கு திகட்டாத உணவாகத் தயிரன்னம், உளுந்துவடை, பழங்கள், இளநீர் வைத்து மஞ்சள் காப்பு மற்றும் மலர் அலங்காரங்களை களைந்துவிட்டு இளநீர், பால், தயிர் விட்டு திருமஞ்சன நீராட்டல் செய்தல் வேண்டும. பிறகு போற்றி வழிபாடு செய்து தீப ஆராதனை நடத்தியபின் அம்மனின் இரண்டுபக்க உதடுகளையும் ஈரத்துணியால் துடைத்து விடுதல் வேண்டும். இதற்கு `உதிரலாய் துடைத்தல்' என்று பெயர். இந்த நிகழ்ச்சி நடந்தபின் விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள், பக்தர்கள் உழைப்பில் முன்நின்றவர்களுக்கு அம்பிகை நலமும் வளமும் தர வேண்டி தேங்காய் திருஷ்டி கழித்தலும், பூசணிக்காய் உடைத்தலும் செய்வார்கள். இந்த மகிழ்ச்சியான நாட்களில் முற்காலத்தில் இருந்தே செய்யப்பட்ட சாஸ்திர சம்பிரதாயங்களை செய்யாமல் இடைச்செருகலாக பயனற்ற பதார்த்தங்களை படையலில் சேர்க்கிறார்கள். ஆடித்திருவிழாவின் தத்துவங்களும், அம்பிகை வழிபாடும் மிக நேர்த்தியாக நடைபெறவும், ஊரையும், உங்களையும் காக்குகின்ற பராசக்தியின் ஆடிவிழா அமைதியோடு நடைபெற நம்மால் முடிந்தவற்றை செய்யலாம். சக்திதேவிக்கு செய்யப்படும் அம்மன் விழாக்கள் தவிர இன்னும் சில விழாக்கள் விமரிசையாகத் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு: ஈஸ்வரனாகிய சங்கரநாராயணரை மணமுடிக்க விரும்பி அக்கினி ஜீவாலை மேல் தவசு இருந்தாள் தேவி கோமதி. இந்த நாளை குறித்துவரும் தினத்தில் பெண்கள் அம்மனை வழிபட்டால் அடுத்த ஆண்டுக்குள் கண் நிறைந்த கணவனை அடையலாம் என்பது சாஸ்திரம். ஆடிப்பூரம்:- இந்நாளில்தான் அம்பிகைக்கு வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றது என்பர். பச்சைப் பயிரை எடுத்து முளைப்பாறி இட்டு இந்நாளில் வெல்லத்துடன் சேர்த்து அம்மனுக்கு படையலிட்டு பெண்களுக்கு கொடுத்து தனக்கும் பிள்ளைப்பேறு வேண்டும் என்று வேண்டுவர். அம்மனுக்கு இட்ட வளையல்களை தாங்களும் அணிந்து மகிழ்வர். ஆடி பதினெட்டு:- .காவிரி அம்பிகை கர்ப்பிணிப் பெண்ணாக இருப்பதாக எண்ணி அவளுக்கு பல்வேறு வகை சாதங்களை படைத்து ஆற்றில் விட்டு மீதத்தை பிரசாதமாக உண்ணுவது ஆடி 18-ம் பெருக்கு நாளில்தான் காதோலை கருகுமணி, பழஙங்கள், மங்கலப் பொருட்களை ஆற்றில் விடுவார். அவ்வையார் விரதம்:- ஆடிமாத செவ்வாய்க்கிழமை அன்று இந்த விரதத்தை கடைப்பிடித்து உப்பில்லாத கொழுக்கட்டை, பச்சரிசியை வெல்லத்துடன் கலந்து மோதகம் செய்து படைப்பர். கணவன் ஆயுள் நிலை பெறவும் குடும்ப மகிழ்ச்சி வேண்டியும் இதனை பெண்கள் கடைப்பிடிப்பர். ஆனந்தம் பெருக்கும் ஆடித்திருவிழா கொண்டாடத் தயாராகி விட்டீர்களா...!

No comments:

Post a Comment