Thursday, September 27, 2012

ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணருபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள். நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவிலகளில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும். நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும் சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும். நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம். ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும் அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர். ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் நடுவிலுள்ள ஐந்தாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது. ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள். பெரிய புதிர் உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன். நமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள். ( இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!) வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment