Wednesday, September 26, 2012

வருடங்களின் கச்சிதமான கணிப்பு தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும் கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை. இவற்றை கச்சிதமாக எடுத்துக்காட்ட கற்பம், மன்வந்தரம், யுகம் போன்ற மேலதிக விபரங்களும் கையாளப்படுகின்றன. தற்போது நடப்பது சுவேத வராக கற்பம் வைவஸ்வத மன்வந்தரத்தில் 28வது சதுர் யுகம். இந்த சதுர் யுகத்தில் கிருத யுக வருடங்கள் 17, 28, 000, திரேதா யுக வருடங்கள் 12, 96, 000, துவாபர யுக வருடங்கள் 8, 64, 000 கழிந்து 4, 32, 000 வருடங்களைக்கொண்ட கலியுகம் ஆரம்பமாகி 5019 ஆண்டுகளே கழிந்துள்ளன. இப்போது நடக்கும் கலி யுகம் கி.மு. 3102ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி இரவு ஆரம்பமாகியது. இந்தக் கால அளவை "சுவேத வராஹ கல்பே- வைவஸ்வத மன்வந்தரே - கலியுகே" என்று சைவ சமயக்கிரியைகளிலும் பூசைகளிலும் சங்கல்பம் செய்யும்போது கூறும் மந்திரத்தில் வரும். சங்கல்பம் என்பது இன்ன காலத்தில், இன்ன இடத்தில், இன்னாராகிய யான், இன்ன காரியத்தைச் செய்ய நிச்சயிக்கிறேன் என்று கூறி நிச்சயிப்பதாகும். ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில் பிரவேசிப்பது புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலமே பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல் நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம் முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதை வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் ( Astronomical Year) என்று சொல்லுவார்கள். நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ளோம். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்த அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை. இது திராவிடர்களிடையே உள்ள வழமையே அன்றி வட இந்தியாவில் இந்த வழமையைப் பார்க்கமுடியாது. பின்னர் இதைப்போய் ஆரியர்களின் கால அளவை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? இது யாருடைய கால அளவையாக இருந்தாலும் வானியல் விஞ்ஞான ரீதியாக அச்சொட்டாக இருக்கின்றது. நீங்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது?

No comments:

Post a Comment