Wednesday, September 5, 2012

வரலட்சுமி பூஜை

வரலட்சுமி பூஜை செய்வதற்கு உட்கார்ந்த பின்பு நடுவில் எழுந்திருக்கக் கூடாது. பூசையை செய்வதற்கு முன்பு, வெற்றி பாக்கு, பழங்கள், தேங்காய் முதலியவற்றையெல்லாம் தண்ணீரில் நன்றாக அலம்பி வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியில் சிறிது நெய், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முனை முறிந்து விடாத முழுமையான அரிசியைத் தான் அட்சதையாக பயன்படுத்த வேண்டும். வரலட்சுமி அம்மனை, கிழக்கு முகமாகப் பார்க்கும்படி வைக்க வேண்டும். பூஜை செய்பவர் வலப்பக்கம் உட்கார்ந்து பூஜை செய்ய வேண்டும். இந்தப் பூஜை செய்பவர் நோன்புக் கயிற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த நோன்பு கயிற்றில் ஒன்பது முடிச்சுகளை இட்டு, நடுவில் சில பூவினை தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும், சிலர் பச்சை மஞ்சள் கிழங்கை வட்டமாகத் துண்டித்து அதன் நடுவில் நூலை கோத்து வைத்துக்கொள்வர். அதற்கு பிறகு தூய்மையான பருத்திப் பஞ்சினால் மாலை இரண்டும் ஆடை இரண்டும் செய்து கொள்ள வேண்டும். பூஜையின் போது பயன்படுத்த இவை இரண்டும் தேவைப்படும் ஆகையால் பருத்திப் பஞ்சைத் தூசி, தும்பு இல்லாமல், கொட்டையை நீக்கி சிறிது பஞ்சை விட்டு நடுவில் திரித்து, மாலையைப் போல் கையாலேயே செய்து கொள்ள வேண்டும். நடுவில் விடும் பஞ்சின் எண்ணிக்கை பதினொன்றாக இருக்க வேண்டும், பஞ்சை வட்டமாகக் கையால் அழுத்தி வஸ்திரம் செய்ய வேண்டும். ஒரு மாலையிலும், ஆடையிலும் குங்குமம் தடவ வேண்டும். மற்றவற்றில் மஞ்சள் பொடியைத் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் இரு திரிகளைத் தோய்த்து எடுத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும். வரலட்சுமிப் பண்டிகையன்று, தேவியின் நிவேதனத்துக்கு சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, இட்லி முதலியவற்றை முக்கியமாகச் செய்ய வேண்டும். கருட பஞ்சமிக்கு செய்ததைப் போலவே செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜை தினத்தன்று, மற்ற நியம அனுஷ்டானங்களையெல்லாம் செய்து விட்டு, வாயிற் படியின் அருகில் சிறு மாக்கோலம் இட்டுச் செம்மண் பூச வேண்டும். அங்கு வரலட்சுமி அம்மனை (பூஜைக் கலசத்தை) வைத்து, பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும். அடுத்து, அம்மனையும் துதித்து, மண்டபத்துக்குள் பாட்டுப்பாடி அழைத்துவர வேண்டும். தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநில மக்கள் இந்த பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடுவர். புதிதாகத் திருமணமான தம்பதியர், தமது முதலாண்டு வரலட்சுமி விரதத்தைத் தலை நோன்பாகக் கொண்டாடுவர். அப்போது அவர்கள் வீட்டில் பூஜைக்கு லட்டு, மைசூர்ப்பாகு, திரட்டுப் பால் என்று பல தின்பண்டங்களைச் செய்வர். வீட்டில் உள்ள சுமங்கலிப் பெண்கள் தாம் வரலட்சுமி பூஜையைக் செய்வர். அம்மனை மண்டபத்திற்குள் அழைத்து வந்து வைத்த பிறகு தான் பூஜையை சுமங்கலிகளே செய்வர். வரலட்சுமி பூஜையைச் செய்து முடித்த பிறகு, நோன்புக் கயிற்றை வலக்கையில் மற்றொரு சுமங்கலியைக் கொண்டோ, தாமாகவோ தம் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து அம்மனைத் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஒரு தட்டில் ஆரத்தி கரைத்து வைத்து, அதில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். (ஆரத்தி என்பது, சிறிது சுண்ணாம்பு, மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியன தண்ணீரில் கரைக்கப்பட்ட கலவை யாகும்) பூஜை முடிந்த பிறகு புரோகிதருக்குப் பாயசம், தாம்பூலம், பழம், தேங்காய் மூடி, தட்சணை, பலகாரங்கள் முதலியனவற்றைக் கொடுத்து அனுப்புவது வழக்கம். பூஜை செய்தவர் அன்று இரவு உண்ணக் கூடாது. நண்பகலில் தான் நல்ல மங்கலகரமான இனிய விருந்து உண்டாயிற்றே இரவில் ஏதாவது பலகாரம் உண்டால் போதும். பூஜையன்று மாலையில் அம்மனுக்கு புதியதாக ஆரத்தி கரைத்து வைக்க வேண்டும். தீபம் ஏற்றியவுடன் சில சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம், பூ, இனிப்புகளை வழங்க வேண்டும். மறுநாள் காலையில் புனர்பூசை செய்ய வேண்டும். புனர்பூசைக்குரிய மந்திரங்கள் புத்தகத்திலேயே இருக்கும். காலையில் பழங்களை வைத்து நிவேதனம் செய்து கொள்ளலாம். புனர்பூசை தினத்தன்று மாலையில் சூரியன் மறைந்தபுடன் விளக்கு ஏற்றி வைத்து, ஆரத்தி எடுத்து, நைவேத்தியம் செய்ய வேண்டும். அதற்கு கொண்டைக் கடலை அல்லது கடலைப்பருப்புச் சுண்டல் செய்வது வழக்கம். சுண்டலை அம்மனுக்கு நைவேத்தியம் செய்து, ஆரத்தி தீபத்தை அம்மனுக்கு சுற்றி, கற்பூரம் ஏற்ற வேண்டும். பின்பு அம்மன் கலசத்தைத் தொட்டுச் சிறிது நகர்த்தி வைத்து விட வேண்டும். அடுத்து சுமங்கலிப் பெண்கள் பலரும், ஒருவராக அம்மனைப் பற்றி தமக்குத் தெரிந்த பக்திப் பாடல்களையும் வடமொழி துதிப்பாடல்களையும் சுலோகங்களையும் பாடுவர். இறுதியாக, வந்தவர்களுக்குத் தாம்பூலம் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு அந்த அம்மன் கலசத்தை எடுத்து, அரிசி வைத்திருக்கும் தகர டப்பாவிலோ குதிரிலோ வைக்க வேண்டும். வரலட்சுமி அம்மன் இருக்குமிடத்தில் எதுவும் எப்போதும் நிறைவாகவே இருக்கும் என்பது ஒரு தெய்வ நம்பிக்கை. அது நாளடைவில் ஐதீகமாயிற்று கலசத்தின் மீது வைத்திருந்த தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்துப் பாயசம் செய்வர், அதிலுள்ள அரிசியையும் சமையலுக்குப் பயன்படுத்துவர்.

No comments:

Post a Comment