Wednesday, September 5, 2012

சுந்தர காண்டம் படிப்பது எப்படி?

நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும். சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள். 24,000 சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன. வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம். 68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது. பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும் அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேக அத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும். ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும்.

No comments:

Post a Comment