Wednesday, September 5, 2012

வாழ்வில் நலம் தரும் சுந்தர காண்டம்

சூரியன், இந்திரன், தன் தந்தையான வாயு, பிரம்மன் முதலிய எல்லா தெய்வங்களையும் அனுமன் போற்றி மிக்க வேகத்தில் வான் வழியேத் தாவிப் பாய்ந்தான். இடையே இரு இடையூறுகள் தோன்றின. சுரசை என்பவள் தேவர்களது ஏவலால் அனுமனது திறனை சோதிக்க வேண்டி நடுவே வந்து வழி மறித்தாள். அவளை அனுமன் தந்திரத்தால் வென்றான். நிழலைப்பற்றி இழுக்கும் சிம்மிகை என்னும் அரக்கி அனுமனை விழுங்கிவிட வாயைப் பிளந்துகொண்டு தடுத்தாள். அனுமன் அவள் வாயினுள் புகுந்து பேருருவம் எடுத்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறினான். இரண்டு செயல்களையும் கண்டு தேவர்கள் மகிழ்ந்து அனுமன் திறனை மெச்சி வாழ்த்தினர். அவ்வாறு நூறு யோசனை தூரம் கொண்ட கடலைத்தாண்டி அனுமன் இலங்கையின் கரையில் குதித்தான். அங்கே தங்கத் தாலான நகரமாய் விளங்கிய இலங்கையைக் கண்டு வியந்தான். அதனுள் செல்ல இருட்டு வரட்டும் என்று காத்திருந்தான். இரவுப் பொழுது வந்ததும் சந்திரன் நிலவொளியை வீசத் தொடங்கினான். அந்த நேரத்தில் இலங்கைக் கோட்டை வாயிலின் வழியே உள்ளே அனுமன் நுழைய முற்பட்டான். அப்போது வாயிலைக் காத்து நின்ற இலங்கினி என்பவள் அவனைத் தடுத்துப் போரிட வந்தாள். உடனே அவளை இடது கையால் அடித்து வீழ்த்தி உள்ளே புகுந்தான். தன் வடிவத்தை மாற்றி ஒரு பூனை உருவத்தோடு நகரெங்கும் புகுந்து சீதையைத் தேடினான். அமைச்சர், சேனைத் தலைவர் போன்றவர் வாழும் இடங்களிலெல்லாம் புகுந்து தேடி ராவணன் தூங்கும் மாளிகையை வந்தடைந்தான். மிக அழகான ஒரு மண்டபத்தின் நடுவே அமைந்திருந்த புஷ்பக விமானத்தில் அழகே உருவாய், வீரமே வடிவாய் ராவணன் பல அழகிய மங்கையர் நடுவே தூங்கிக்கொண்டிருந்தான். அவனருகே தூங்கிக் கொண்டிருந்தாள் பட்டத்தரசியாள் மண்டோதரி என்ற அவன் மனைவி. அவளைக் கண்டு சீதை என்று அனுமன் நினைத்தான். பின்பு பல காரணங்களால் அவள் சீதையல்ல என்று தீர்மானித்துத் தேறி அங்கிருந்து வெளி யேறிப் பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டான். இன்னும் தேடாத இடமாக அசோக மரங்கள் நிறைந்த ஒரு சோலை மாத்திரம் இருப்பதைக் கண்டு அதனை நாடிச் சென்றான். மரங்கள் மீது தாவித் தாவித் தேடிக்கொண்டே வரும்போது ஒரு மரத்தின் அடியில் ஒரு பெண்ணைச் சுற்றி பல அரக்கியர் இருப்ப தைக்கண்டான். துயரமே வடிவாக அவள் இருக்கும் நிலையையும், அழகின் உருவாய் ஒளி வீசுவதையும் கண்டு அவளே சீதை என்பதை அனுமன் உறுதிப்படுத்தினான். எப்படி அவளை நெருங்கிப் பேசுவது என்பது பற்றிச் சிந்திக்கும்போது அங்குத் திடீரென்று ஓர் ஆரவாரம் தோன்றியது. திடீரென்று ராவணன் தூக்கத்தில் இருந்து எழுந்து சீதையைக் காண வருவதாகக் தெரிந்தது. அதனாலேயே அந்த ஆரவாரம் எழுந்தது. அது கண்ட அனுமன் ஒடுங்கி மரத்தின் பின் மறைந்து கொண்டு நடப்பதைக் கவனித்தான். ராவணன் சீதையிடம் தன் வீரத்தைப்பற்றிச் சொல்லி, ராமனை மறந்து தன்னோடு வாழும்படி பலவாறு வேண்டிக் கொண்டான். ராமன் வந்து அவளை மீட்டுச்செல்வது முடியாத செயல் என்று உறுதியாகச் சொன்னான். அதுகேட்ட சீதை கண்ணீர் பெருக அவனை நோக்கி, "பிறர் மனைவியை அடைய ஆசைப்படுவதால் அழிவே நேரும். அதனை எடுத்துச்சொல்ல உனக்கு நல்ல அறிஞர் இல்லையா? நீ தீய நெறியில் செல்வதால் தீங்கு உன்னைச் சேர்ந்த எல்லோரையும் சூழ்ந்து கொள்ளுமே! உன் இனத்தவர் அழிந்த செய்தியே ராமனது வீரத்தையும், பெருமையையும், எடுத்துக் காட்டுமே! இனியேனும் நல்லறிவு பெறுவாயாக! என்னை ராமனிடம் கொண்டு விட்டு அவனைச் சரண டைந்தால் இன்னமும் நீ உய்ய வழி உண்டு'' என்று கூறினாள்.அதுகேட்ட ராவணன் மேற்கொண்டு "இன்னும் இரண்டு மாதங்களுக்குள் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கொல்லப் படுவாய்'' என்று சொல்லிவிட்டுப் கோபத்தோடு திரும்பிப் போய் விட்டான். அந்நிலையில் சீதையை சூழ்ந்திருந்த அரக்கியர்கள் மிரட்டியும், பய முறுத்தியும் அவளை ராவணன் சொல்படி நடக்கும்படி தூண்டினர். இதனால் மனம் வெதும்பிய சீதை செய்வதறியாமல் கண்ணீர் விட்டு அழுதாள். சிறிது நேரத்திற்குப் பின் அரக்கியர் தூங்கத் தொடங்கினார்கள். அப்போது சீதை இனி உயிர்வாழ்ந்து பயனில்லை, ராமன் வர மாட்டான். தற்கொலை செய்து கொண்டு உயிரைப் போக்கிக் கொள்வதே மேல், என்று கருதினாள். அதற்காகத் தன் கூந்தலால் கழுத்தைச் சுற்றி இறுக்கிக்கொள்ள முயன்றார். அப்போது அவள் உடலில் நல்ல நிமித்தங்கள் தோன்றின. இடது கண்ணும், தோளும் துடித்தன. அது கண்ட சீதை திகைத்து நின்றாள். "இடப்புறம் துடிப்பது நல்லதல்லவா'' இங்கே தனக்கு அறிகுறி என்ன நன்மை தர இயலும் என்று சிந்தித்தாள். இந்நிலையில் மேலே மறைந்திருந்த அனுமன் ராமன் புகழை மெல்லக் கூறத் தொடங்கினான். அந்த ஒலி சீதையின் காதில் அமுதம் பெய்தது போல் இருந்தது. எங்கிருந்து அந்தக் குரல் வருகின்றதென்று அறிய நாலாபுறமும் சீதை பார்வையைச் செலுத்தினாள். சீதையைப் பிரிந்த பின் ராமன் அவளைத் தேடித் தவிப்பதையும், சுக்ரீவனோடு நட்புச் செய்து கொண்டிருப்பதையும், சீதையைத் தேடி நான்கு திசைகளிலும் வானர வீரர்கள் சென்றிருப்பதையும், அவர்களுள் ஒருவனாகிய தான் இங்கே வந்து மரத்தில் அமர்ந்திருப்பதையும் கதையாக மெதுவாக அனுமன் சொன்னான். அந்தச் செய்தியைக் கேட்ட சீதை மகிழ்ச்சியும், வியப்பும் பொங்க மெல்ல மேலே நிமிர்ந்து பார்த்தாள். "சிம்சுபை'' என்ற மரத்தினூடே ஒரு வானரம் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அதைப்பார்த்து பயம்கொண்டு ராமன் பெயரைச் சொன்னார், தெய்வங்களே இந்த வானரம் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டாள். அப்போது அனுமன் மரத்திலிருந்து மெல்ல இறங்கி வந்து சீதையை வணங்கி ராமனைப் பற்றிய மேலும் சில செய்திகளைச் சொல்லி, தான் ராமனால் அனுப்பப்பட்ட தூதுவனே என்பதை உறுதிப்படுத்தினான். அதுகேட்ட சீதை மகிழ்ச்சி நிரம்பி நிற்கும்போது, ராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியைக் கொடுத்துச் சீதையை வியப்பில் ஆழ்த்தித் துயரத்திலிருந்து விடுவித்தான். அவளது கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது. ராமனது கணையாழியைக் கண்ட சீதை ராமனையே நேரில் கண்டதாக எண்ணி மகிழ்ந்தாள். அனுமனைப் பலவாறு புகழ்ந்து போற்றினாள். பின்பு தன் துயர நிலையைப் பலவாறு அனுமனிடம் எடுத்துச் சொன்னாள். ராமனையும் அவன் சொற்களையும் அவமதித்ததாலேயே தனக்கு இந்தத் துன்பங்கள் நேரிட்டன என்று சொல்லி வருந்தினாள். அனுமன் பல ஆறுதல்கள் சொல்லிச் சீதையைத் தேற்றினான். பின்னர் அனுமன் ராமனுக்குக் காட்ட அடையாளம் ஏதாவது தந்து தன்னை அனுப்பும்படி வேண்டினான். உடனே சீதை தன் ஆடையின் ஒரு மூலையில் முடித்து வைத்திருந்த தலையுச்சியில் சூடும் ஆபரணமான சூடாமணியை எடுத்து அனுமன் கையில் கொடுத்து "என்னை ராமனோடு சேர்த்து வைத்து என் துயரைத்துடைக்கும் பொறுப்பினை உன்னிடமே ஒப்புவிக்கிறேன், உன்னை நம்பி இனி உயிர் வாழ்வேன். உன் பணி வெல்க'' என்று வாழ்த்தினாள். வந்த காரியம் வெற்றியாக முடிந்தது பற்றி அனுமன் மகிழ்ந்தான். போகும் முன் இலங்கையில் உள்ள அரக்கர் வலிமையைத் தான் அறியவும், தன் வலிமையை அவர்கள் உணரவும் வேண்டும் என்று அனுமன் எண்ணினான். அதற்கு என்ன வழி உள்ளது என்று சிந்தித்தான். அசோகவனத்தை அழித்தால் தன் எண்ணம் நிறைவேறும் என்று தீர்மானித்து அன்னை சீதை அமர்ந்திருந்த மரத்தை மாத்திரம் விட்டு, விட்டு மற்றவற்றை முறித்துத் தள்ளினான். இந்த ஓசை கேட்ட அரக்கிகள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தனர், அனுமனைக் கண்டு அஞ்சி ஓடி ராவணனிடம் முறையிட்டனர். இதனைக்கேட்ட ராவணன் அனுமனைப் பிடித்துவர ஜம்புமாலி என்பவனை ஏவினான். பின்னர் ஐந்து சேனைத் தலைவர்களையும், அவர்களுக்கு பின் தன் அருமை மகனான அட்சயகுமாரனையும் அனுப்பினான். எல்லோரையும் அனுமன் அழித்து வெற்றி வீரனாக நின்று, தான் ராம தூதுவன் என்றும், சுக்ரீவனால் அனுப்பப்பட்டு வந்தவன் என்று கூறித் தோரணவாசலில் அமர்ந்து மேலும் பகைவர் வருகையை எதிர்நோக்கி இருந்தான். கடைசியாக ராவணன், தன் வீரப்புதல்வனாகிய இந்திரஜித் என்பவனை அனுப்பினான். இந்திரஜித் வந்து அனுமனோடு போரிட்டான். அனுமன் எளிதில் கொல்ல முடியாத வலிமை படைத்தவன் என்று உணர்ந்தான். உடனே பிரம்மாஸ்திரத்தை ஏவிக் கட்டினான். பிரம்மாஸ்திரத்தையும் அனுமனால் அறுத்தெறிய முடியும். ஆனால் ராவணனைக் கண்டு பேசுவதற்கு அந்த அஸ்த்திரத்திற்குக் கட்டுப்பட்டவனைப்போல் நடிப்பதே நல்லது என்று கருதி அனுமன் செயலற்றவனைப்போல் நின்றான். உடனே அரக்கர்கள் பாய்ந்து வந்து அனுமனைப்பற்றி இழுத்துச் சென்று ராவணன் முன் நிறுத்தினர். ராவணன் அனுமனோடு தான் நேரில் பேசுவது இழிவு என்று எண்ணி ஆசனம் அளிக்காமலேயே "இந்த வானரன் யாரென் பதைக் கேட்டறிக'' என்று மந்திரி பிரகத்தன் என்பவனை ஏவினான். அனுமன் உடனே ராவணனை பார்த்துப் பின் வருமாறு சொன்னான். ராவண! தேவர்களும் போற்றும்படி பெருமையான வாழ்வு படைத்திருக்கிறாய். ஆனால், பிறர் மனைவியை அபகரித்தலா கிய தீய இழிந்த செயலைப் புரிந்து அந்த பெருவாழ்வை எல்லாம் இழக்கும் நிலையில் உள்ளாய்! நான் ராம தூதன், சுக்ரீவனைச் சேர்ந்தவன்! ராமனும், சுக்ரீவனும் நண்பர்கள். வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு முடி சூட்டினான் ராமன். சீதையைத் தேடப் பல்லாயிரக்கணக்கான வானர வீரர்கள் நான்கு திசைகளிலும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவனே நான். ஜனத்தானத்தில் இருந்த உன் சகோதரர்களையும், வாலியையும் அழித்த ராமனுக்கு உன்னைக்கொல்வது அரிதான செயலன்று. ஆதலின் எண்ணிப்பார்! சீதையை ராமனிடம் கொண்டுவிட்டு அவனிடம் சரண் அடைந்துவிடு அவன் அருள்வான். இந்த இன்ப வாழ்வை இழக்காமல் இனிதே வாழ்க என்றான். இந்தச் சொற்கள் ராவணன் காதுகளில் நெருப்புக் குழம்பை ஊற்றியதுபோல் பாய்ந்தன. உடனே சினம் பொங்கி, "இந்த வானரத்தை வாளால் வெட்டி எறிக'' என்று கூறிச் சீறினான். அப்போது அங்கிருந்த விபீடணன் "அண்ணா தூதுவர் தம்மை அனுப்பிய தலைவர் கூறியவற்றையே எடுத்துச் சொல்பவர். எனவே அவரைக் கொல்வது ஆகாது. சினம் தணிக'' என்று அறிவுரை கூறி அனுமனைக் கொல்வதைத் தடுத்தான். ராவணனும் அதை ஏற்றுக்கொண்டான். "வானரங்களுக்கு வாலே முக்கிய உறுப்பு. எனவே அதனை தீ வைத்து கொளுத்துக'' என்றான். உடனே அரக்கர்கள் பஞ்சு, துணி முதலியவற்றை அனுமன் வாலில் சுற்றிக்கட்டி எண்ணையை ஊற்றி நெருப்பிட்டனர். பறைகொட்டித் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர். இதனைக்கண்ட அரக்கியர்கள் ஓடி, சென்று அன்னை சீதையிடம் தெரிவித்தனர். உடனே அன்னை சீதை அக்னி தேவனிடம் அனுமன் வாலில் தன் வெப்பத்தைக் காட்டாதிருக்கும்படி வேண்டிக் கொண்டாள். அதனால் அனுமன் வாலில் சூடே தெரிய வில்லை. திடீரென்று அனுமன் தன்னைச் சூழ்ந்து வந்த அரக்கர்களை எல்லாம் அடித்து விரட்டினான். நெருப்போடு பாய்ந்து வீதிகளில் உள்ள வீடுகளையெல்லாம் தீயிட்டான். தீ வைக்கப்பட்ட இட மெல்லாம் பற்றி எரியத் தொடங்கியது. மாளிகைகள் மீது தாவிச் சென்று இலங்கை முழுவதும் பற்றியெறியச் செய்தான். தன் வாலில் மாத்திரம் தீ சூடு இல்லாமலிருப்பதை உணர்ந்தான். அது சீதை ராமன் ஆகியோர்களின் பெருமை என்று தீர்மானித்தான். நெருப்பினால் துன்பற்ற அரக்கர்கள் எல்லோரும் அழுது புலம்பினர். "மும்மூர்த்திகளின் சினமே இப்படி நெருப்பாக பற்றி எரிகிறது'' என்று தமக்குள் பேசிக்கொண்டனர். இலங்கை முழுவதையும் எரித்த அனுமன் கடற்கரையை அடைந்து தன் வாலில் இருந்த நெருப்பைக் கடல் நீரால் தோய்த்து அணைத் தான். பின்பு திரும்பி, எரியும் இலங்கையைக் கண்டான். அன்னை சீதை இருக்கும் இடம் என்னவாயிற்றோ? என்று பதறி அசோகவனத்திற்குப் பாய்ந்து வந்தான். அன்னை சீதை எவ்விதத் தீங்குமின்றி அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். அன்னையின் அருகே சென்று மறுபடியும் விடை பெற்றுக் கொண்டு, மீண்டும் பாய்ந்து கடலைத் தாண்டி ஜாம்பவான், அங்கதன் முதலியவர்கள் இருக்கும் மகேந்திர மலையின் சாரலை வந்தடைந்தான். எல்லோரும் மகிழ்ந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அன்னை சீதை இலங்கையில் இருப்பதையும், தான் அவளைக் கண்டு பேசிய செய்திகளையும் சொல்லி எல்லோரையும் களிப்பில் ஆழ்த்தினான் அனுமன். அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரத் தோடு கிட்கிந்தையை நோக்கிப் புறப்பட்டு அதன் எல்லையை அடைந்தனர். அங்கிருந்த மதுவனம் என்ற இடத்தில் புகுந்து தம் விருப்பம்போல் மதுவைப் பருகி மகிழ்ந்து ஆடினர். அந்த வனத்தின் காவலாளனான ததிமுகன் என்பவன் ஓடிப்போய் வானரர்களின் செயலைச் சுக்ரீவனிடம் தெரிவித்தான். அதுகேட்ட சுக்ரீவன் அவர்கள் அன்னை சீதையைக் கண்டு வந்தனர். அதனாலேயே இப்படிச் செய்கின்றனர் என்று உணர்ந்து ராமனிடம் தெரிவித்தான்! இதற்குள் அனுமன் முதலியோர் அங்கு வந்து சேர்ந்தனர். அனுமன் ராமனிடம் தான் அன்னை சீதையைக் கண்ட வரலாற்றையும், அவள் கூறிய செய்திகளையும் அவளது நிலையையும் எடுத்துச்சொல்லி அன்னை கொடுத்த சூடாமணியையும் கொடுத்தான். ஒரு மாத காலத்திற்குள் தன்னை மீட்டுச் செல்லும்படி சீதை கூறியதையும் அனுமன் தெரிவித்தான். சூடாமணியைப் பெற்ற ராமன் அதனைக் கண்ணீரால் நனைத்தான். "இந்தச் சூடாமணி தான் சீதையைக் கைப்பிடித்த காலத்தில் திருமணப்பரிசாக அளிக்கப்பட்டது. எனவே அது என் தந்தை, மாமனார் முதலியவர்களை நினை வூட்டுகிறது'' என்று சொல்லி பெருமூச்சு விட்டான். நல்ல செய்தி கொண்டு வந்த அனுமனைப் பலவாறு வாழ்த்தினான். அவன் சாதித்த செயலைப் போற்றிப் புகழ்ந்தான். அதற்கேற்ற பரிசு கொடுக்க முடியாத தன் நிலையை எண்ணி வருந்தினான். உடனே அனுமனை மார்போடு தழுவி வாழ்த்தினான். இப்படி தன் அன்பின் மிகுதியையும் நன்றியறிதலையும் காட்டிப்புகழ்ந்து ராமன் ஆறுதல் அடைந்தான்.

No comments:

Post a Comment