பதட்டம் வேண்டாம் சகோதரனே ! -குட்டிக்கதை
சீதையைக் கடத்தி வந்த ராவணனுக்கு, அவனது தம்பி விபீஷணன் புத்திமதி சொன்னான். அடுத்தவன் மனைவியை, அவனுக்குத் தெரியாமல், மறைவாக தூக்கி வந்தது தவறு என்று எடுத்துச் சொல்கிறான். ராவணன் ஒப்புக்கொள்ளவில்லை. தம்பியை தூக்கி எறிந்து பேசினான். "அப்படியானால், நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன்' என சொல்லிவிட்டு, ஒரே ஒரு கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ராமனைக் காண கிளம்பிவிட்டான் விபீஷணன். அவனுடன் நான்கு ராட்சதர்களும் வந்தனர்.
இவர்களைத் தூரத்தில் இருந்து
கவனித்தான் வானர அரசன் சுக்ரீவன். அவன், இலங்கையிலுள்ள
ராட்சஷர்களால் தங்களுக்கு துன்பம் நேருமென்ற அச்சத்தில் இருந்தான். எனவே ராமனிடம்,""பார்த்தாயா ராமா! நம்மை அழிக்க ராவணன் அவனது தம்பி விபீஷணனை ஏவியுள்ளான். அவன் நான்கு ராட்சதர்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறான். உடல் முழுக்க ஆயுதம் தரித்திருக்கிறான். அவன் நம்மைத் துன்பப்படுத்தவே வருகிறான்,'' என்றான்.
ராமன் அவனிடம், ""ஒரே ஒரு ஆயுதத்துடன் தானே அவன் வருகிறான். நீ இப்படி சொல்கிறாயே,'' என்றான்.
உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? பயத்தில், ஒரு ஆயுதம் பல ஆயுதமாக சுக்ரீவனுக்கு கண்களுக்கு தெரிந்ததாம். ராமனாகிய பரம்பொருள் அருகில் இருந்தும் கூட, பயத்தினால் தன் பலத்தை அவனால் உணர முடியவில்லையாம்.பயம் வந்தால் பதட்டம் வந்துவிடும். பதட்டப்படுபவரால் எதையும் செய்ய முடியாது.
No comments:
Post a Comment