Tuesday, June 14, 2011

மண்டோதரியின் மறதி இராவணனுக்கு இறுதி ஆனது.

                      ரு காலத்தில் கோசல நாடு இரு பிரிவாக இருந்தது. ஒரு பிரிவை ஆண்டவன் பானுமந்தன். அவன் மகள்தான் கோசலை.

பருவம் அடைந்த கோசலைக்கு மணமகனைத் தேடிக் கொண்டிருந்தான் பானுமந்தன். அப்போது நாரதர் அவனிடம் வந்தார்.

""அயோத்தி மன்னன் தசரதன் பத்து திசைகளிலும் தேர் செலுத்த வல்லவன். சம்பரன் என்ற அசுரனைக் கொன்றவன். அறிவு என்னும் கடலை ஆய்ந்து கடந்தவன். அவனைத் தவிர கோசலைக்கு வேறு நல்ல வரன் இல்லை'' என்றார் நாரதர்.

பானுமந்தனும் தசரதனுக்குப் பெண் தர இசைந்தான். திருமணத்துக்கு நாளும் குறித்தாகி விட்டது.

இந்த நிலையில் நாரதர் இலங்கையரசன் இராவணனிடம் சென்று கோசலையின் திருமணச் செய்தியைக் கூறினார்.

""கோசலைக்குப் பிறக்கப் போகும் மகனால் தான் உனக்கு மரணம்'' என்றும் கூறி விடை பெற்றுச் சென்றார்.

"கோசலை பிள்ளை பெற்றால்தானே நமக்கு மரணம்? இந்தத் திருமணமே நடக்காமல் செய்துவிடுகிறேன்' என்று இராவணன் சூளுரைத்தான். திருமணத்தை நிறுத்த என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஆழ்ந்தான்.

பானுமந்தனிடம் வந்த நாரதர், ""இராவண னால் திருமணத்துக்கு இடையூறு நேரலாம். ஆதலால் கடல் நடுவே ஒரு நகரம் உண்டாக்கி அங்கே மணம் முடிப்பது நலம்'' என்று யோசனை கூறினார். அதன்படி கடல் நடுவே நகரம் உருவாக்கப்பட்டது. இதை அறியாத இராவணன், கோசலையைக் கொண்டு வர கோசலம் சென்றான். அங்கே கோசலையைக் காணாமல் ஏமாற்றத்தோடு திரும்பி வரும்போது, கடல் நடுவே புதிதாக ஒரு நகரம் உருவாகி யிருப்பதைப் பார்த்து விட்டான்.

உடனே வருணனை அழைத்த இராவணன், ""இந்த நகரத்தை இப்போதே அழித்துவிடு!'' என்று உத்தரவிட்டு, அங்கே திருமணத்துக்காகக் காத்திருந்த கோசலையைத் தூக்கிக் கொண்டு இலங்கையை அடைந்தான்.

அங்கே தன் கையில் இருந்த சந்திரஹாசம் என்ற வாளால் கோசலையை வெட்ட முனைந்தான்.

இதைக் கண்ட மண்டோதரி இடையில் புகுந்து, அக்கொடுஞ்செயலைத் தடுத்தாள். ""பெண் கொலை பெரும் பாவம்'' என்று எடுத் துக் கூறி இராவணனின் கொலைவெறியைத் தணித்தாள்.

வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த இராவணன், கோசலையை ஒரு பெட்டியில் வைத்து வருணனிடம் தந்து, ""பாதுகாப்பாக வை'' என்று உத்தரவிட்டான். வருணன் அந்தப் பெட்டியை ஒரு தீவில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.

இதனிடையே கோசலையின் திருமணத் துக்காக உருவாக்கப்பட்ட கடல் நகரம் அழிந்து போனது. அங்கே இருந்த தசரதன் தப்பி கோசலை காவல் வைக்கப் பட்ட தீவை அடைந்தான். அவன் தீவை அடைந்த நாள், அவர்களின் திருமணத்துக்குக் குறிக்கப்பட்ட நாளாக அமைந்தது.

பெட்டியைத் திறந்து கோசலையைக் கண்ட தசரதன், மணமாலை சூட்டித் திருமணம் செய்து கொண்டான்.

இச்செய்தியை நாரதர் மூலம் அறிந்த இராவணன் கோபம் கொண்டு, கோசலையைக் கொன்று விடுமாறு தன் வீரர்களுக்கு உத்தர விட்டான். இம்முறையும் மண்டோதரி இதமொழி கூறி இராவணனின் செயலைத் தடுத்தாள்.

தசரதனும் கோசலையும் அயோத்தியை அடைந்து வாழ்ந்து வந்தனர்.

மண்டோதரி, இராவணனுடைய முக்கோடி வாழ்நாளில் இன்னும் எவ்வளவு காலம் உள்ளது எனக் கணித்துப் பார்த்தாள். ஐம்பதி னாயிரத்து நாற்பது ஆண்டுகள் மீதி உள்ளன என்று அறிந்து கொண்டாள்.

கோசலைக்கு குழந்தை பிறந்தால்தானே தன் கணவன் இறக்க நேரும்? ஆதலால் இன்னும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு கோசலை பிள்ளை பெறலாகாது என்று சாபம் தந்தாள் மண்டோதரி.

தன் கணவனைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் நாற்பது ஆண்டுகளை மறந்து விட்டாள்.

அவள் மறந்த நாற்பது ஆண்டுகளில்தான் கோசலை மகனைப் பெற்றாள். அந்த மகனால் இராவணன் அழிந்தான்.

இராவணன் மறைவுக்குப் பிறகுதான், தான் நாற்பது ஆண்டுகள் மறந்து சாபமிட்டது மண்டோதரியின் நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்து என்ன செய்வது? தன் தவறுக்காக வருந்தி இராவணனுடன் அவளும் உயிர் துறந் தாள். மண்டோதரியின் மறதி இராவணனுக்கு இறுதி ஆனது.

துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் தருமன் முதலிய ஐவருக்கும் வில்லாசிரியர் துரோணர்.

அவருக்கு ஒரே மகன். அவன் பெயர் அசுவத் தாமன். அவன் தாய் வயிற்றில் பிறக்காமல் இறையருளால் தானே தோன்றியவன். ஆதலால் அவனுக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை.

பசும்பால் வாங்குவதற்கும் வசதி இல்லை. அதனால் தன் குருகுல நண்பனான பாஞ்சால மன்னன் துருபதனிடம் சென்று, ஒரு பாற்பசு தரும்படி கேட்டார் துரோணர்.

பாஞ்சாலன் பாற்பசு தராமல் துரோணரை அவமதித்து அனுப்பினான்.

துரோணர் பால் கிடைக்காமல் அவதிப் படுகின்றார் என்று கேள்விப்பட்ட ஒரு வள்ளல் இரு பாலாடுகளை வழங்கினார்.

அந்த ஆடுகளைக் கண்ட கள்வன் ஒருவன் அவற்றைத் திருடிச் செல்ல தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுபோல அரக்கன் ஒருவனும் துரோணரைத் தனக்கு ஆகாரம் ஆக்கிக்கொள்ள காலம் கருதி காத்திருந்தான்.

ஒரு நாள் கள்வன் ஆடுகளைத் திருடுவதற்காக துரோணரின் ஆசிரமத்தின் அருகே பதுங்கி இருந்தான். அந்நேரம் அரக்கனும் துரோணரைப் பிடித்து உண்பதற்காக அங்கே வந்தான்.

அரக்கனும் திருடனும் சந்தித்துக் கொண்டனர். ஆடு திருட வந்ததாக திருடன் சொன்னான். முனிவரைப் புசிக்க வந்ததாக அரக்கன் கூறினான்.

இருவரில் யார் முதலில் தம் தொழிலை முடிப்பது என்பதில் விவாதம் ஏற்பட்டது. அரக்கன், ""நான்தான் முதலில் முனிவரைத் தின்பேன்'' என்றான். திருடனோ, ""நான்தான் முதலில் ஆடுகளைத் திருடுவேன்'' என்றான். விவாதம் வலுத்தது.

துரோணர் நிலைமையை உணர்ந்து கொண்டார். தன் தவவலிமையால் அரக்கனைச் சாம்பலாக்கி விட்டார். திருடனைக் கல்லாக்கி விட்டார்.

குருசேக்ஷத்திரக் களத்தை அடுத்த காட்டில், இன்றும் அந்தக் கல் இருப்பதாய் பேசிக் கொள்கிறார்கள்

No comments:

Post a Comment