Tuesday, June 14, 2011

இறந்தவர் உடலை தானம் செய்வது சாஸ்திர விரோதமா?

இறந்தவர் உடலை தானம் செய்வது சாஸ்திர விரோதமா?


நான் சிறுவயது முதல் காயத்ரி ஜபம் மற்றும் பூஜைகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். வாழ்க்கையில் பல போராட்டங்களின் போதும் என்னுடைய கடமைகளைத் தவறவிட்டதில்லை. ஓரளவு பொருளாதார வசதியும் மற்றவர்களுக்கு உதவக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. ஏற்கெ னவே எனக்கு நவாக்ஷரி மற்றும் கணபதி மந்திரம் உபதேசம் ஆகி, தொடர்ந்து ஜபம் செய்து வருகிறேன். மோட்சம் பெறுவதற்கு வேறு மந்திர உபதேசம் தேவையா? கண் தானம் செய்வதும் உடல் தானம் செய்வதும் தர்ம சாஸ்திரத் திற்கு விரோதமா? இறந்தபின் உடலை தானம் செய்வதாக இருந்தால் மருத்துவக் கல்லூரிக்குக்கூட செய்ய லாம் என்கிறார் என் நண்பர். அப்படி நான் உடல் தானத்தை மருத் துவக் கல்லூரிக்குச் செய்தால் சாஸ்திரப்படி செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்ய இயலாதா? அப்படியென்றால் முறைப் படி ஜீவன் அடைய வேண்டிய மோட்சத்தை அடைய முடியுமா? தொடர்ந்து கேள்வி- பதில் பகுதியைப் படித்து வருகிறேன். தாங்கள் தரும் விளக்கத்தை முடிவானதாக எடுத்துக் கொள்கிறேன்.

-
நீங்கள் ஏற்கெனவே உபதேசம் பெற்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வாருங்கள். புதிய மந்திரங்கள் அவசியமில்லை. விரும்பினால் பஞ்சதசீ மந்திரத்தை ஸ்ரீவித்யா உபாசகர் மூலம் பெற்று ஜபம் செய்யுங்கள். ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமமும், தேவி மஹாத் மியமும் தொடர்ந்து படியுங்கள். வேதமாதா காயத்ரியை தொடர்ந்து நீங்கள் ஜபித்து வருவதால், உங்கள் உடல்நலத்திற்குக் குறைவிருக்காது.

கண் தானம் செய்வது எந்தவிதத்திலும் சாஸ்திர விரோதம் அல்ல. வேடனாகப் பிறந்து அலைந்து திரிந்த திண்ணன் தன் கண்ணை ஈசனுக்கு அளித்ததால், சிவ பெருமான் "என் அப்பனே' என்று அழைத்து கண்ணப்ப நாயனாராக மாற்றினார். ஆக கண்தானம் செய்வது சாதாரண மனிதர்களை மகான்களாக்கும் செயல். கண் தானம் செய்வதால் நிச்சயம் ஒருவர் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவது சத்தியம். இதனால் எந்த சாஸ்திர விரோதமும் ஏற்படாது. கண் இருப்பதாலோ, கண் இல்லாததாலோ இறந்தபின் மோட்சம் என்பது இல்லை.

உடல் தானத்தை தாராளமாகச் செய்யலாம். அதை விஞ்ஞான ரீதியாக இருவகையாகச் சொல்லலாம். ஒன்று, மூளை செயல்பாடு இழந்த நிலையில் ஒருவரது உடல் உறுப்புகளை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது; மற்றொன்று இறந்த உடலை மருத் துவ ஆராய்ச்சிக்குக் கொடுப்பது. முதல் நிலை என்பது லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும். இரண்டாவது நிலை அனைவருக்குமே ஏற்படக் கூடியது. இரண்டு நிலைகளுமே சாஸ்திர விரோதம் அல்ல.

சிபிச் சக்கரவர்த்தி தன் சதையை அறுத்துக் கொடுக்கவில்லையா? ததீசி முனிவர் அதர்மம் அழிய தன் முதுகெலும்பையே இந்திரனுக்கு வஜ்ராயுதமாகக் கொடுக்கவில்லையா? ஆக, நினைவிழந்த நிலையிலும் இறந்த நிலையிலும் உடலை தானமாகக் கொடுப்பது உயர்ந்த நிலைதான். அதற்கு ஈடு இணையாக வேறு தானங்கள் இல்லை என்றே சொல்லலாம். வாழும்பொழுது இந்த உலகிலுள்ள அனைத் தையும் அனுபவிக்கிறோம். இயற்கையை முழுமையாக அனுபவித்துவிட்டு மறையும் பொழுது எதற்கும் பயனில்லாமல் போவதைவிட எதற்காகவாவது உபயோகமாகப் போவது உயர்ந்த நிலை.

சாஸ்திரப்படி உடல் இல்லாமல் எப்படி கர்மா செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். மூளை செயல் இழந்தவர்களின் தேவையான உறுப்பு களை எடுத்துக் கொண்டு உடலைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அப்படி அல்லாது உடல் முழுவதையும் மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுத்தால், காணாமல் போனவர் களுக்கும் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் களுக்கும் நெருப்பில் விழுந்தவர்களுக்கும் உடல் காணாமல் மரணம் அடைந்தவர்களுக்கும் சொல்லப்பட்ட சாஸ்திரப்படி கிரியைகளைச் செய்யலாம்.

No comments:

Post a Comment