Sunday, June 12, 2011

ஆறுமுகன் அவதாரம்

வைகாசி விசாகப் பெருவிழா முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும்.

ஆறுமுகன் அவதாரம்

“அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது.

அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது.

சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என்று அருணகிரியார் பாடுவார்.

No comments:

Post a Comment