Sunday, June 12, 2011

பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றுவிதமான ஆசைகளால் உலகம் கெட்டுப் போகிறது

சிறியவர்கள் என்பதால் சீரிய கருத்துகளை உதாசீனப்படுத்திய மூத்தவர்கள்!
அதர்மம் என்பதால் அண்ணன்களை விலக்கிய தம்பியர்!


பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றுவிதமான ஆசைகளால் உலகம் கெட்டுப் போகிறது என்கிறது தர்ம சாஸ்திரங்கள். இந்த மூன்றும் இன்று மட்டுமல்ல; எல்லா யுகங்களிலும் வாழ்ந்தவர்களை அழித்திருக்கிறது; அழித்துக் கொண்டிருக்கிறது.

ஈஸ்வர பக்தி மிகுந்திருந்தாலும் பெண்ணாசையால் இராவணன் அழிந்தான். குருட்டு திருதராஷ்டிரன், தன் மகன் பெரிய சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்ற மண்ணாசையால், தன் தம்பி பாண்டுவின் மகன்களோடு சூதாட வைத்து கௌரவ வம்சமே அழிந்து போகக் காரணமானான். பொன்னாசையால் இன்று பல பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி மாண்டு போக, பொன்னாசைக் குடும்பங்கள் தாங்களாகவே அழிந்து போகிறார்கள். இவற்றை மனித குலம் தடுக்க முடியாதா என்று கேட்கலாம். நிச்சயமாக முடியவில்லைதான். பல ரிஷிகளும் ஞானியரும் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், முன்வினைப் பயனால் இவை தொடர்ந்து கொண்டே போகின்றன. சரி; இப்படிப்பட்ட ஞானியர் சொல்லியும் கேளாக் காதினரான இவர்களுக்குச் சொந்த பந்தங்களாவது நல்லது சொல்லலாம் அல்லவா? சொன்னாலும் கேட்காதவர்கள்தான் இராவணனும் துரியோதனாதியர்களும்.

இராவணனுடைய சபை கூடுகிறது. விவேகமற்ற அமைச்சர்களும் சேனாதிபதிகளும் செய்த துர்போதனைகளைத்தான் இராவணன் ஏற்றுக் கொண்டானே தவிர, தன் தம்பி விபீஷணன் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. கூடப் பிறந்தவன்தான்; இராவணனின் உப்பைத் தின்றவன்தான்; ஆனால் நெறி பிறழாத விபீஷணனுடைய வார்த்தைகளில் உள்ள தர்மத்தை இராவணன் புரிந்து கொள்ளவில்லை. காரணம் பெண்ணாசை அவன் கண்களையும் புத்தியையும் மறைத்தது.

""அருமை அண்ணனே! உன்னால் வளர்க்கப் பட்டவன் நான். சீதா பிராட்டியைக் கடத்தி வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை நீ உணரவில்லை. உன்னுடைய இசையாலும் பக்தியாலும் சிவனையே கவர்ந்தவன் நீ. இந்திரனும் பிரம்மனும் உன்னை வணங்கக் கூடிய அளவிற்கு வல்லமை படைத்தவன் நீ. தேவாதி தேவர்களாலும் புகழப்படுபவன் நீ. உனக்கு யாராலும் மரணம் இல்லை என்கிற வரத்தைப் பெற்றிருக்கிறாய். அரக்கர்களாலும் தேவர்களாலும் சூரிய- சந்திரர்களாலும் பிரம்மா, இந்திரன் போன்றவர்களாலும் அந்த சர்வேஸ்வரனாலும் திருமாலினாலும் கூட உனக்கு மரணம் வராது என்கிற வரத்தை வாங்கிய நீ, சாதாரண மனிதர்களால் மரணம் வரக்கூடாது என்கிற வரத்தை வாங்க மறந்து விட்டாய். மானிடப் பிறவி வெறும் அற்பமான பிறவி; அவர்களால் என்னைக் கொல்ல முடியுமா என்று அவர்களைக் கேவலமாக நினைத்து விட்டதுதான் காரணம். போருக்கு அழைப்பவன் சாதாரண மனிதன்தானே என்று நினைத்து விட்டாய். உன்னைவிடக் கொடியவன் ஒருவன் கிருத யுகத்தில் இருந்தான். ஹிரண்ய கசிபு என்பது அவன் பெயர். உன்னைவிட வலிமையும் கெட்டிக்காரத்தனமும் புத்தியும் உள்ளவன் அவன். அவன் தனக்கு மனிதர்களாலும்கூட மரணம் வரக்கூடாது என்று வரம் பெற்றான். ஆனாலும் நடந்தது என்ன? அந்த திருமாலே நரசிங்கமாக வந்து அவனை வதம் செய்தார். அதைப்போல ராமன் என்கிற மனிதன் ஏன் நம் குலத்தையே நாசம் செய்ய வந்திருக்கக் கூடாது? இதை நீ சிந்தித்துப் பார்க்க வேண்டும்'' என்றெல்லாம் தம்பி விபீஷணன் சொல்லியும் இராவணன் செவிமடுக்கவில்லை.

"கற்றுறு மாட்சியென கண்ணின்றாயினும்

உற்றுறு பொருட்டெரிந்து ணர்தலாயினும்

சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்

முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்'

என்கிறான் கம்பன்.

""என்னுடைய தாய்க்கு நிகரானவன் நீ. நான் பேசுவது கல்வியறிவில்லாத ஒருவன் பேசுவதுபோல நீ நினைக்கலாம். உயர்ந்த பொருட்களை உணர்ந்தோருக்கு வெறுப்பைத் தருவதுபோல் இருப்பினும், இந்த அவையின் மந்திரா லோசனையின் முடிவின்படி சீதையைத் திருப்பி அனுப்புவதில்லை என்ற முடிவை மீறி, மாறுபட்ட என் கருத்தைப் பொறுமை யுடன் கேட்டு, பின்னர் என்மீது தவறு இருந்தால் என்னை வெறுத்துக் கோபம் கொள்வாயாக!'' என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு நல்லவை சொல்லியும் விபீஷணனைத் துரோகி என்று திட்டி, ""எதிரியான ராமனோடு- வெறும் அற்ப மானிடனோடு சேர்வாயாக'' என்று அவனை சபையோர்முன் அவமானப்படுத்தவே, விபீஷணன் ராமனோடு சேர்ந்து கொண்டான்.

பின்னர், தர்மம் உபதேசித்த விபீஷணனின் சொற் கேளாது இராவணன் மடிந்தான். இதனால் தர்மமான சொல்லை எவ்வளவு சிறியவர் சொன்னாலும் கேட்காவிட்டால் அழிவு நிச்சயம் என்பதை இராமாயணம் உணர்த்துகிறது. ஆனால் இன்றைய அரசியல் உலகில், நல்வழி நடக்க முயல்பவரை விபீஷணன் என்று குற்றம் சாட்டுவது நமது அறியாமையேயாகும்.

பெண்ணாசையால் அழிந்த இராவணனைப் போல், மண்ணாசையால் திருதராஷ்டிரனின் கௌரவ குலமும் அழிந்ததற்குக் காரணம் தம்பியின் பேச்சினைக் கேட்காத செயலேயாகும்.

பாண்டவர்களின் நாட்டைப் பிடுங்கிக் கொண்டு, வனவாசமும் முடிந்தபின் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்காமல் போருக்கழைத்த துரியோதனனின் தவறான முடிவை எதிர்க்கத் துணிவில்லாமல், அதே சமயத்தில் ஒருவேளை தன் மகன் ஜெயித்து விட்டால் மிகப் பெரிய நிலப்பரப்பை ஆளலாமே என்கிற திருதராஷ்டிரனின் நோக்கமே அவன் குலம் அழியக் காரணமாயிருந்தது. இராவணனுக்கு நல்லவை கூறிய விபீஷணன்போல், திருதராஷ்டிரனுக் கும் நல்லவை கூற ஒரு தம்பி இருந்தான். அவனே விதுரன்.

மகாபாரதப் போருக்கு முன்னால் மூன்று பெரும் கருத்துகள் அந்தக் காவியத்தில் உருவாயிற்று. மகாபாரதப் போருக்கு முன்னால் சஞ்சலம் அடைந்த திருதராஷ்டிரன் தன் தம்பியான விதுரன் மூலம் நல்லனவற்றைக் கேட்க ஆரம்பித்தான். அது விதுர நீதி என்னும் நூலாயிற்று. போர் ஆரம்பிக்கும் போது மனம் சஞ்சலமடைந்த அர்ஜுனனுக்கு தர்மம் வெல்ல பகவான் கீதையை உபதேசிக்க, அது பகவத் கீதையாயிற்று. போர் முடிந்து பாண்டவர்கள் வென்ற பின்னும், "இனி வரும் காலத்தில் தர்மம் நிலைக்காது' என்று கண்ணன் கூற, அதிர்ச்சியடைந்த தருமபுத்திரன், "தர்மம் தழைக்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்க, பகவான் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பீஷ்மாச்சாரியார் விஷ்ணு சஹஸ்ர நாமம் சொன்னார். ஆக தர்மம் தழைக்க விதுரனும் கிருஷ்ணனும் பீஷ்மரும் பல்வேறு கோணங்களில் நின்று சாட்சியளித்தனர். ஆனால் கேட்காமல் அழிந்தான் துரியோதனன்.

மகாபாரதப் போருக்கு முதல் நாள் தூக்கம் வராமல் தவித்தான் திருதராஷ்டிரன். போரின் முடிவு என்ன ஆகுமோ என்று பயம் வரவே, அரசை வெறுத்து ஒதுங்கிப் போன தன் தம்பியாகிய விதுரனை அழைத்து, ""எனக்கு மனம் சரியில்லை. அதனால் தூக்கம் வராமல் தவிக்கிறேன்'' என்று திருதராஷ்டிரன் சொல்ல, ""பலசாலிக்குப் பயப்படுபவர்கள், வாழும் வகை அறியாத வர்கள், சொத்தை இழந்தவர்கள், காமவயப் பட்ட கொடூரர்கள், திருடர்கள்தான் இரவில் தூங்க மாட்டார்கள். நீங்கள் நல்லவர்தான். ஆனால் வெறிபிடித்த மகன்களான துரியோதனனாலும் தீமை மிக்க துச்சாதனனா லும் மோசமான மைத்துனன் சகுனி, பத்தினியாக இருந்தாலும் இன்னொரு பெண்ணுக்கு (பாஞ்சாலிக்கு) இழைக்கப்படும் கொடுமையின் உக்கிரத்தைச் செவிமடுக்காத உன் மனைவி, பெரியோர்களாக இருந்தாலும் பீஷ்மர், கிருபர், துரோணாச்சாரியார் போன்ற பயந்த சுபாவம் உடையவர்களின் பேச்சும் சரியில்லாததால்தான் உனக்குத் தூக்கம் வரவில்லை. இனி உன் வாழ்நாளில் நிம்மதியாகத் தூங்கவே முடியாது. போரின் முடிவு தர்மத்தின் பக்கம்தான் இருக்கும். பரமாத்மா தூது வந்தபோதுகூட அவரை அவமதித்த அரசுக்கு எப்படி வெற்றி கிடைக் கும்? என்னை உன் மகன் "வேசி மகனே' என்று திட்டியபோதுகூட உனக்கு நான் தம்பியாயிற்றே என்று ஞாபகம் வரவில்லை'' என்றெல்லாம் இரவு முழுவதும் மன்னருக்கு நல்லனவற்றைக் கூறி, கெடுதல்களைத் தடுக்கத் தவறிவிட்டதாக இடித்தும் கூறி விதுரரும் வெளியேறிவிட்டார். பிறகு மகாபாரத யுத்தம் தர்மத்தின் பக்கமே சென்றதை நாம் அறிவோம்.

எனவே தர்மம் ஜெயிக்க வேண்டும் என்றால் நல்லவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். இல்லையேல் அழிவுதான். விபீஷணனும் விதுரனும் இதைத்தான் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்!

No comments:

Post a Comment