சனி பகவானும் யமனும் சகோதரர்கள். எனினும் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள்.
மனதளவில் யமனுக்கும் சனிக்கும் ஒத்துப் போகாவிட்டாலும், தீபாவளி அன்று மட்டும் அவர்கள் தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வது வழக்கம்.
சனி பகவானுக்குப் பிடித்தமானது கருப்பு எள். தீபாவளிப் பண்டிகை தினத்தில் காலையில் கோள்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும்போது, சனிக்கோள் தனக்குப் பிடித்தமான எள்ளுக்குப் புத்துயிர் ஊட்டுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால், அன்று அதிகாலையில் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பூஜித்து மக்கள் தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளிப்பதால், சனி பகவான் அவர்களை வாழ்த்துவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. மேலும், அன்று நல்லெண்ணெயில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை. எனவே, தீபாவளித் திருநாள் சனி பகவானுக்கு மகிழ்ச்சியூட்டும் நாள் என்பர். மேலும், தீபாவளிக்குப் பலகாரங்கள் செய்யும்போது, முறுக்கு தயாரிக்க மாவு பிசையும்போது அதில் கருப்பு எள் சேர்ப்பார்கள். அதேபோல எள் தட்டை என்னும் பலகாரத்திலும் எள் சேர்க்கப்படுவதால் சனி பகவான் மகிழ்ச்சி அடைகிறார்.
இதுபோல யமனுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்ச்சி தீபாவளித் திருநாளில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை ஒருநாள் மட்டும் கொண்டாடுவர். ஆனால் குஜராத் திலும் மகாராஷ்டிர மாநிலத்தி லும் நேபாள நாட்டிலும் தீபாவளிப் பண்டிகையை ஐந்து நாட்கள் கொண்டாடுவர். அதில் ஒருநாள் "யமதுவிதியை' ஆகும்.
தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் துவிதியை நாளே "யமதுவிதியை'. இதனை "பால்பிஜி' என்றும்; "பையாதுஜ்' என்றும் சொல்வர்.
தீபாவளிப் பண்டிகையின் முதல் நாளான திரயோதசி அன்று மகாலட்சுமி தங்கள் இல்லங்களுக்கு வருவதாக நம்புகிறார்கள். அன்று தங்கள் இல்லத்தில் தீப அலங்காரங் கள் செய்து மகாலட்சுமி பூஜை செய்வார்கள்.
இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று (தீபாவளியன்று) அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, வீட்டின் வெளிப்புறங் களில் வரிசையாக விளக்குகள் ஏற்றி, தங்கள் குல வழக்கப்படி பூஜை செய்வார்கள். சில குடும்பங்களில் விரதம் கடைப்பிடித்து நோன்புத் திருநாளாகவும் கொண்டாடுவர். மூன்றாம் நாள் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, வணிகர்கள் புதுக்கணக்கு எழுதுவார்கள். சில இடங்களில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையும் நடைபெறும்.
நான்காம் நாள் புதுவருடம் பிறந்ததாகக் கொண்டாடுவர். மேலும், கோகுலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றிய நாளாகவும் கொண்டாடுவர்.
ஐந்தாம் நாள்தான் யம துவிதியை. இது சகோதர- சகோதரிகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்று உடன்பிறந்த வர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்து பெறுவதுடன், பரிசுகளும் கொடுப்பார்கள்; பெறுவார்கள். இந்த ஐந்தாம் நாள் விழா தான் யமனுக்குப் பிடித்தமான விழா ஆகும். இது குறித்து புராணம் கூறும் தகவல்...
யமன், ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். யமனின் சகோதரியான எமி, தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது. அப்போது, யமன், "இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு யமவாதனை கிடையாது' என்று வரம் கொடுத்தாராம்.
இந்தப் புராணக்கதையின் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவார்கள். சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக இது திகழ்கிறது.
மேலும் மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.
பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற் குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம். இந்த நாள் திரயோதசி. இதனை தன திரயோதசி என்றும் சொல்வர். இந்நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம். இந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர் கள் மட்டுமல்ல; யமனும் மகிழ்வானாம்.
யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment