Tuesday, June 14, 2011

சிவனே சிவனே என்று கூறி வாழ்த்தி வணங்குங்கள்

                     காய ஸ்தலமாகிய சிதம்பரத்தில் ஈசன் ஆனந்தத் தாண்டவம் புரிகிறார். சித் (அறிவு), அம்பரம் (வெட்டவெளி) என்ற இரு சொற்களின் கூட்டே சிதம்பரம் என்பதாகும். எனவே இந்த தலம் ஞானா காசம், சிற்றம்பலம், தில்லைவனம் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என்பவை சிவத்தின் ஐந்து வகையான தொழில்களாகும்.

பஞ்ச கிருத்யம் என்ற ஐந்தொழில்களையும் உணர்த்தும் வகையில் அமைந்தவை ஈசனின் திருநடனங்களாகும்.

உலகம் தோன்றிய காலம் முதல் நடைபெறும் தாண்டவத்தை நடராஜர் பொன்னம்பலத்தில் ஆடிக் காட்டி வருகிறார். இக்கோவிலில் சிற்றம்பலம், பொன்னம் பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என ஐந்து சபைகள் உள்ளன.

நடராஜப் பெருமான் திருநடனம் புரியும் இடம் சிற்றம்பலம் எனப்படும். இத்திரு நடனத்தை, சிவகாமசுந்தரி கண்டு மகிழ்வது, ஆன்மாக்களின் பிறவிப் பிணியைப் போக்குவதற்கே என்பர். பொன்னம்பலம் என்ற கனக சபையில் ஸ்படிக லிங்கத்துக்குத் தினமும் ஆறுகால பூஜையும், ரத்தின சபாபதிக்கு இரண்டாங் காலத்தில் அபிஷேகமும் நடைபெறுகிறது.

பேரம்பலம் என்பதை தேவசபை எனக் கூறுவர். இச்சபையில் பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். இதற்குப் பொன்வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்கன்.

நிருத்த சபை என்பது எம் பெருமான் ஊர்த்துவத் தாண்டவம் புரிந்த இடமாகும். ராஜசபை என்பது ஆயிரங்கால் மண்டபமாகும். ஆனி, மார்கழி மாத விசேஷத் திருவிழாக்களின்போது, பத்தாம் நாள் பரமேஸ்வரனும் அம்பிகையும் முன்னும் பின்னுமாக மாறி மாறி நடனம் செய்து கொண்டு, சிற்சபைக்கு எழுந்தருளும் காட்சியே அனுக்கிரக தரிசனமாகும். இது இச்சபையின் முன்புதான் நடைபெறுகிறது. சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை எழுத இம் மண்டபமே தக்க இடமாக அமைந்ததாகக் கூறுவர்.

பதஞ்சலியும் வியாக்கிர பாதரும் தில்லையில் ஈசனை வழிபட்டு வந்தனர். பின்னர் தில்லைவனத் தின் மேற்கில் நாகசேரி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்திருக்கின்றனர். இன்று அனந்தேசுரம் என்று வழங்கப் படுகிறது.

திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சித்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும்; அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப் புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.

தில்லையில் இறைவனுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகின்றது. திருவாதிரையை சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்பர். இந்த நட்சத் திரத்தின் அதிதேவதை ருத்திரனாகும். அதனால் இதற்குச் சிறப்பு ஓங்குகிறது.

சிவபிரானை ஆதிரை முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் சிறப்புப் பெயர்களால் போற்றுவர்.

சிவபிரான் நடராஜ மூர்த்தியாகத் தில்லை ஸ்தலத்தில் அருள் நடனம் புரிவதால், சிதம்பரத் தில் முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் தொடங்கப்பட்டு, அதைச் சார்ந்த பெருவிழாவும் கொண்டாடப்பட்டது. இதையே திருவாதிரைத் திருநாளின் மூலகாரணமாகக் கூறலாம். இக் களி நடனத்தைக் கண்டுகளிக்கவே, அன்று களி தயாரிக்கப்பட்டு மக்கள் உண்டு களித்தனர். நடராஜரின் திருவீதி உலாவில் திருச்சாந்தும் அளிக்கப்பட்டது. ஆக, மார்கழித் திங்கள் மதிநிறை நன்னாள் ஆதிரை நன்னாளை ஒட்டியே எழுந்தது எனலாம்.

பொதுவாக நடராஜரின் தாண்டவத்தை ஏழாகப் பிரித்துக் கூறுவர். அஷ்ட வீரட்டானங் களில் அவர் புரிந்த தாண்டவங்கள் எட்டாகும். சில முக்கிய தலங்களில் நாம் அவர் புரிந்த தாண்டவ அம்பலங்களைக் காண்கிறோம். நெல்லையில் தாமிர அம்பலமும், மதுரையில் வெள்ளி அம்பலமும், குற்றாலத்தில் சித்திர அம்பலமும், திருவாலங்காட்டில் ரத்தின அம்பலமும், சிதம்பரத்தில் பொன்னம்பலமும் உள்ளன.

ஈசன், கொடிய அசுரர்களான கமலன், கமலாக்ஷன், வித்யுத்மாலி ஆகியவர்களைச் சம்ஹாரம் செய்து, தன் பயங்கரச் சிரிப்பினா லேயே அவர்களுடைய மூன்று பெருங்கோட்டை களை அழித்து, அவர் புரிந்த தாண்டவத்தை திரிபுரஸம்ஹாரத் தாண்டவம் என்பர். இந்த திரிபுரஸம்ஹாரத் தாண்டவத்தை நாம் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆச்சாள்புரம் என்ற தலத்தில், சிவலோகத்தியாகர் கோவிலில் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அந்தகாசுரனை வதம் செய்து ஈசன் புரிந்த தாண்டவத்தை திருக்கோவிலூர் வட்டம், கீழையூர் வீரட்டனார் கோவிலிலும் மற்றும் தஞ்சை மாவட்டம் கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவிலிலும் காணலாம். இவ்விரு கோவில் களிலும் வலது பாத தரிசனம். இடதுகால் பூமியில் ஊன்றப்பட்ட நிலை.

மனிதனுடைய இதயத்தில் இருக்கின்ற இறைவனே சிதம்பரம் பொன்னம்பலத்திலும் இருக்கின்றார் என்பதை உணர்த்தவே, மனித உடல் போல் அம்பலம் அமைக்கப்பட்டுள்ளது. மனிதஉடலில் இதயம் நடுவே இல்லாமல் இடதுபுறம் தள்ளியிருப்பதுபோல, மூலஸ்தானம் திருக்கோவிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளதைக் காணலாம்.

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திரு வுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின் றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

ஆருத்ரா தரிசன நாளில் அவனே அவனே என்று கூறாமல், சிவனே சிவனே என்று கூறி வாழ்த்தி வணங்கி எல்லா நலமும் பெறுவோமாக!

No comments:

Post a Comment