Saturday, June 18, 2011

ஆன்மிக சந்தேகங்களும் பதில்களும்


● ஆன்மாவின் பணிகளை- பலன்களை உணரும் முன்னர், தனி மனிதனுக்கு நேரிடும் சோதனைகளைத் தவிர்க்க, வளரும் சந்ததிக் குத் தாங்கள் கூறும் வடிகால் என்ன?

ஆன்மாவிற்குத் தனியாக எவ்வித சோதனைகளும் இல்லை. மனம் என்னும் முக்கிய உணர்வே ஆன்மாவை செயல்பட வைக்கிறது. புலி வேஷம் போடுபவனின் நிலை எப்படியோ அப்படியே ஆன்மாவின் நிலை. உண்மையில் அவன் புலி அல்ல; புலிபோல் நடித்துக் கொண்டிருக்கிறான். தனி மனிதர்களுக்கு வரும் சோதனைகளைத் தவிர்ப்பதற்கு நான் தனியாக எதுவும் கூற வேண்டிய அவசியமில்லை. அரவிந்தரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் ரமண மகரிஷியும் விவேகானந்தரும் காந்தியடிகளும் எவ்வளவோ சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதிலிருந்து ஏதாவது ஒரு துளியைக் கடைப்பிடித்தால்கூட சோதனைகளை வென்றுவிடலாம். பொதுவாக, சமூகம் வேறு, நாம் வேறு என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, நாம்தான் சமூகம் என்பதை உணர வேண்டும். சமூகத்தில் இருந்து நம்மைப் பிரிக்கக் கூடிய ஜாதி வேற்றுமை, உயர்வு- தாழ்வு மனப்பான்மை போன்றவை கட்டாயம் மறைய வேண்டும். யானைக்கு மதம் பிடித்தால் காட்டில் உள்ள மரங்களை அழிக்கிறது. மனிதனை மதம் என்னும் கர்வம் பிடித்தால் நாட்டில் கலகத்தை உண்டு செய்கிறது. மதம் என்பது மனதுக்குள் இருக்க வேண்டும். சமூக ஒற்றுமைக்கு அது சிறந்த வழி. மேலும், சமூக ஒற்றுமைக்கு நம்மால் என்னென்ன சிறிய பணிகளைச் செய்ய முடியுமோ அவற்றைஎல்லாம் தொடர்ந்து செய்யலாம்.

ஆன்மிகமோ- மதமோ- மொழியோ இந்தியாவிலுள்ள எவரையும் பிரிக்காதவாறு ஒற்றுமை உணர்வு தோன்ற வேண்டும். நாடெங்கும் மரம் நடுவதும், இருக்கும் மரங்களை வெட்டாதிருப்பதும், நம்மைவிட வறியவர்களுக்கு உதவி செய்தலும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு என்பதை உணர வேண்டும். கண்ணுக்குத் தெரியும் முதல் கடவுள் வறுமை நிலையிலுள்ள சகோதர- சகோதரிதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் நம்மிடம் உதவி கேட்கும்போது, ஒருவேளை நாம் உதவ முடியாத நிலையில் இருந்தால், அதைக்கூட இதமாகச் சொல்ல வேண்டும்.

● விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுவது உண்மையா? என் மகளின் திருமணத்தடை விலக என்னென்ன பரிகாரங்கள் உண்டோ அனைத்தையும் செய்து பார்த்தாயிற்று. ஆனால் பயனில்லை. நல்ல முறையில் திருமணம் நடக்க ஏதேனும் வழியிருந் தால் கூறுங்கள்.

விதியை மதியால் வெல்லலாம் என்பது ஏற்கெனவே கடந்த காலத்தில் கண்டுவிட்ட புராண வரலாறு. பிரம்ம தேவன் மார்க்கண்டேயருக்கு பதினாறு வயது என்று விதியை நிர்ணயிக்க, ஈசனோ, அந்த விதியை மாற்றி என்றும் பதினாறு வயதுடன் வாழ மார்க்கண் டேயருக்கு வரமருளினார். சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களிலும் மார்க்கண்டேயர் கொண்டாடப்படுகிறார். காவிரிக் கரையில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் மார்க்கண் டேயரைக் காண முடியும்.

தாங்கள் முதலில் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் இறைவனிடம் வேண்டுவது எல்லாம் நம் சுயலாபத்தை முன்னிட்டுதான். என் வீட்டுத் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டும் என்று எண்ணுபவர்கள் பலர். ஆனால் என் தேசத்துக்கு மழை வேண்டும் என்று வேண்டுபவர்கள் சிலர். அந்த சிலரின் பொருட்டே இந்த உலகம் இயங்குகிறது. திருமணத்தடைக்கு முக்கிய காரணம் நம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் போலியான ஜோதிட நம்பிக்கைகளும்தான்.

நீங்கள் அநேக பரிகாரங்களைச் செய்ததாகக் கூறியுள்ளீர்கள். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் நாம் செய்யும் பல பரிகாரங்கள் பூரணத்துவம் அடையவில்லை என்பதே உண்மை. ஆலயங்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கிலேயே வழிய வழிய மீண்டும் எண்ணெயை ஊற்றுகிறோம். தீபம் ஏற்றுகிறேன் என்று கூறி கோவில் படிகளில் கண்டபடி விளக்கேற்றி வைப்பதும், கற்பூரங்களை ஆங்காங்கே தரையில் கொளுத்துவதும், கோவிலை 108 முறை சுற்றி வருகிறேன் என்று கோவில் சுவர் முழுக்க கரித்துண்டால் 108 கோடு தீற்றுவதும் பல இடங்களில் நடக்கிறது. அபிஷேகத்திற்குக் கொடுக்கும் பால்கூட பசும்பால்தானா என்று அறிய முடியவில்லை. (நீங்கள் செய்த பரிகாரத்தைப் பற்றி இவ்வாறு சொல்ல வில்லை. பொதுவில் நடைமுறையில் உள்ளதைக் கூறுகிறேன்.) எனவே விருக்ஷ பரிகாரமாக மரக்கன்று களை நடுங்கள். ஏற்றத் தாழ்வுகளை மறந்து வரன் தேடுங்கள். பெரும்பாலும் பெண் வீட்டார் தன் பெண்ணைவிட அதிகம் படித்த- பணம் சம்பாதிக்கக் கூடிய வரன்களையே தேடுகிறார்கள். அதைவிட நல்ல வரனா என்பதே முக்கியம்.

பிரார்த்தனைகளுக்கு அற்புத சக்தி உண்டு. மனம் ஒத்து உறுதியாகப் பிரார்த்தனை செய்யுங்கள். அத்துடன் ஜோதிடரோ ஆன்மிகப் பெரியாரோ கூறும் பரிகாரங்களையும் தங்கள் சக்திக்கேற்றபடி உறுதியாகச் செய்யுங்கள். உறுதியான நம்பிக்கையோடு- பிரார்த் தனையோடு செய்யும் பரிகாரங்கள்தான் பலன் தரும்.

ஒரு மலையடிவாரத்தில் கல்வெட்டு ஒன்று இருந்த தாகக் கூறுவார்கள். அதில், "மலைமேல் உள்ள சிவ லிங்கத்திற்கு, மலையின் அடிவாரத்திலுள்ள குளத் திலிருந்து 1008 குடம் நீர் எடுத்து அபிஷேகம் செய்தால் சிவன் அருள் கிடைக்கும்' என்று எழுதியிருந்தது. அதைப் படித்த பக்தன் ஒருவன், ஒரு மண்குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். 999 குடங்கள் அபிஷேகம் செய்தும் சிவ பெருமான் வருவதற்குரிய எவ்வித அறிகுறியும் இல்லை. மனம் வெறுத்த அந்த பக்தன், ஆயிரமாவது குடத்தை சிவலிங்கத்தின் மீது போட்டு உடைத்தான். அப்போது சிவபெருமான் தோன்றி, "நீ செய்த இந்த அபிஷேகம் கடைசி குடத்தை என்மீது போட்டு உடைத்த தால் வீணாகப் போயிற்று. அதே நேரத்தில் என்னை நிந்தை செய்த சாபத்திற்கும் ஆளானாய்' என்று கூறி மறைந்தார். ஆக, செய்யும் பரிகாரத்தின்மீது உறுதியான நம்பிக்கை இருப்பது அவசியம்.

● அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை போன்ற நாட்கள் கூறுகிற தத்துவம் என்ன? இந்த நாட்களில் மட்டும் அப்படி என்ன விசேஷம்?

ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத் திற்கும் அதிதேவதைகள், பிரதி அதிதேவதைகள் உண்டு. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை திதி நித்யா தேவதைகள் என்று தனி தேவதைகள் ஸ்ரீவித்யா ரகசியத்தில் உண்டு. இதுபற்றி லலிதோபாக்யானம், நவாவரண பூஜை முதலியன விரிவாகப் பேசுகின்றன. ஸ்ரீவித்யை உபாசகர்கள், ஒவ்வொரு திதிகளுக் குமுரிய பூஜா முறைகளை அவரவர் குரு சொன்னபடி செய்கின்றனர். இந்த உலகம் இயங்கி வருவது சூரியன், சந்திரன் என்னும் முக்கியமான இரண்டு கிரகங்களால்தான். சூரியனது வெப்பம் இல்லாவிட்டாலும் சந்திரனின் குளிர்ச்சி இல்லாவிட்டாலும் பூமியில் ஜீவராசிகள் வாழ்வது கடினம். பதினைந்து திதிகளும் சூரிய- சந்திரனை வைத்தே வருகின்றன. 27 நட்சத்திரங்களும் இந்த பூமியில் உள்ள அத்தனை ஜீவராசிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள கிருத்திகை மட்டுமல்ல; திருவோணம், திருவாதிரை ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், ஏகாதசி, சோமவார விரதங்களும் உண்டு. இந்த விரதங் களின் தத்துவம் என்னவென்றால்- குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் சேரும்போது தர்மசாஸ்திரத் தின்படி புண்ணிய தினங்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளன. சாதாரண மனிதர் வரும் பொழுது உபசரிப்பதிலும், அதே மனிதன் பெரிய பதவியை ஏற்றுக் கொண்டு வரும்போது உபசரிப்பதிலும் உள்ள வேறுபாடு நமக்கே தெரியும். அதேபோல்தான் திதியும் நட்சத்திரங் களும் ஒன்றோடு ஒன்று கூடும்போது சிறப் பான நிலைகளைப் பெறுகின்றன.

● முதல் முறையாக ஜோதிட கணித சாஸ்திர முறையைக் கண்டறிந்தவர் அகத்தி யரா? சில சிவன் கோவில்களில் அம்பாளின் கர்ப்பக்கிரக சிலை சிவபெருமானுக்கு வலப் புறமாகவும் இடப்புறமாகவும் காணப் படுகிறதே. இதன் விளக்கம் என்ன?

அகத்தியர் ஜோதிட சாஸ்திரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் என்று கூறுவதற்கு இல்லை. மேலும், அகத்தியர் கூறியதாக பிரதான நூல்கள் எதையும் குறிப்பிடும்படியாகச் சொல்ல முடியாது. தற்பொழுது சில ஜோதிட நூல்கள் தமிழ்ப் பாடல்களாக அகத்தியர் எழுதியதாகக் கூறினாலும், அகத்தியருக்கு முன்பாக பல மகரிஷிகள் கூறியுள்ளார்கள்.

சிவாலயங்களில் தெய்வங்களை அமைக்கும் பாணி சிவ ஆகமங்களில் கூறியுள்ளபடி அமைக்கப்பட்டிருக்கும். இதில் சில பேதங்கள் இருக்கலாம். அது அந்தந்த ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளதுதானே தவிர, அதைப் பற்றி விளக்கக் கருத்துகள் சொல்ல இயலாது. தமிழ்நாட்டில் வைணவக் கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவங்களில் வெள்ளை வஸ்திரம் அணிகிறார்கள். ஆந்திராவில் அதே வைணவக் கோவில்களில் மஞ்சள் வஸ்திரம் அணிகிறார்கள். கோஷ்டங்களில் தெய்வம் அமைக்கும் முறையில் ஆகமத்துக்கு ஆகமம் வித்தியாசப்படும். இதெல்லாம் அந்தக் கோவில் அமைந்துள்ள ஆகமத்தின்படியே இருக்கும். இதை அடுத்த கோவிலின் ஆகமத்துடன் ஒப்பிடுவது கூடாது.

No comments:

Post a Comment