Wednesday, June 22, 2011

“கபால தீட்சை


மச்ச முனிவர் தனதுமச்சமுனி திருமந்திரம்800” நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தீட்சை முறையினை இன்று பார்ப்போம். இந்த தீட்சை முறைக்குகபால தீட்சைஎன்று பெயர். இதனை தன் நூலில் பின்வருமாறு மச்சமுனி குறிப்பிடுகிறார்.



"சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடு

நின்ரிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும்

சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடு

கன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே"

 - மச்சமுனி -



"மங்கென்று மார்பி லமர்ந்திடு சிங்கென்று

வங்கென்று உந்தியில் வணங்கி யிருந்திடு

சிங்கென்று மூலந் திறந்து வலுத்திடும்

பொங்கும் கபாலம் பொருந்திய தீட்சையே"

 - மச்சமுனி -

சாதகரின் உச்சியில் "றீம்" என்ற மந்திரத்தினையும்,புருவ மத்தியில் "ஓம்" என்ற மந்திரத்தினையும்,கண்டத்தில் அதாவது தொண்டையில் "அங்" என்ற மந்திரத்தினையும், மார்பில் "மங்" என்ற மந்திரத்தையும்,நாபியில் "சிங் வங்" என்ற மந்திரத்தையும் உணர்ந்து தியானிக்க மூலம் திறக்கும் என்கிறர். இதுவே கபால தீட்சை ஆகும்.

 இந்த கபாலதீட்சையினால் விளைவது என்ன?, அதனை பின்வருமாறு விளக்குகிறார்.

"பொருந்திய தீட்சையைப் புனிதம தாக
வருந்து யெந்நாளும் வணங்கி யிருந்திடு
திருந்திய தேகஞ் சிவகயி லாசமாம்
இருந்திடு மந்த ஏகாந்த மாகவே"

 - மச்சமுனி -

 "ஆகமா யந்த அருள்சிவ சக்தியை
பாகமாய் நீயும் பணிந்து வணங்கியே
ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை
தாகமாய்ச் சொல்லி சாத்து வீபூதியே"

- மச்சமுனி -
மேலே சொன்ன கபாலதீட்சையை மனதால் உணர்ந்து தினமும் தியானித்து வந்தால் தியானிப்பவர் உடலானது கைலாசம் போல் ஏகாந்தமாய் நிற்குமாம். இவ்வாறு எகாந்தமாய் இருக்கும் உடலுடன் சிவ சக்தியை பணிந்து வணங்க வேண்டுமாம்.

 மேலும் தினமும் இந்த கபால தீட்சையை மனதால் உணர்ந்து தியானித்து வரும் வேளையில், தியானம் முடிவடைந்ததும் தீட்சையின் பலன் உடலில் தங்க வேண்டும் என்று ஒருமனதாய் வேண்டி வீபூதியை சாத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

No comments:

Post a Comment