Saturday, June 11, 2011

ஏன் இன்று நம்மால் கடவுளைக் காண முடியவில்லை?

டர்ந்த கானகத்தில் அவன் தன்னுடைய மனம்போன போக்கில் நடந்து கொண்டு இருந்தான். எப்போது வனத்தினுள் நுழைந்தோம், எதைத் தேடிக் கொண்டு அலைகிறோம் என்கிற உணர்வே இல்லாமல் அலைந்து கொண்டிருந் தான். உயிர் வாழ்வதற்கு வேண்டிய கனிகளும், பறவைகளின் மாமிசங்களும் அவ்வப்போது அவன் பசியைப் போக்கிக் கொண்டிருந்தன. எத்தனை நாட்கள் நடந்திருப்பான்- எவ்வளவு தூரம் நடந்திருப்பான் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை.

திடீரென்று மெல்லிய ஒரு குரல் அவனுக்குக் கேட்டது. அந்தக் குரல் "ம்...ம்...ம்...' என்று கேட்டது. சற்று நேரம் அப்படியே அந்தக் குரலை கவனித்துக் கேட்டபோது, அந்தக் குரல் "ஓம்... ஓம்... ஓம்...' என்பதுபோல் அவனுக்குக் கேட்கவே, குரல் வந்த திசையை நோக்கி நடந்தான். என்னே அற்புதம்! ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. உடல் முழுவதும் ஒடுங்கி, எலும்பும் தோலுமாக சடாமுடியுடன் கண்களை மூடி, ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவர். அவர் எதிரே போய் நின்றான் அவன். அவர் கண்களைத் திறந்து பார்க்கவே இல்லை. அவரை எழுப்பலாம் என்றால் ஏதாவது சபித்து விடுவாரோ என பயமாக இருந்தது. அவர் முன்னே சாஷ்டாங்க மாக விழுந்து வணங்கிவிட்டு, அப்படியே அவர் எதிரில் அமர்ந்தான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் கண்களைத் திறந்தார். மறுபடியும் அவரை வணங்கி எழுந்து நின்றான் அவன்.

அவர் மெதுவான குரலில் அவனிடம் பேசினார்.

""யாரப்பா நீ?''

""சுவாமி... என் பெயர் முருகன். என் ஊர் பழையனூர்.''

""சரி... இந்த அடர்ந்த காட்டுக்குள் ஏன் வந்தாய்? சுள்ளி பொறுக்கவா? இல்லை- வழி தெரியாமல் வந்துவிட்டாயா?''

""அதெல்லாம் ஒன்று மில்லை சுவாமி.''

""பின் இங்கு ஏன் வந்தாய்?''

""கடவுளைத் தேடி வந்தேன் சுவாமி...'' என்றான் அவன் தயங்கிவாறே.

முனிவர் சிரித்தார். ""கடவுளைத் தேடியா?''

""ஆம் சுவாமி.''

""கடவுள் இங்கே இருப்ப தாக உனக்கு யார் சொன்னார்கள்?''

அவன் யோசித்தான்.

""பரவாயில்லை சொல் லப்பா...''
""அடர்ந்த காட்டுக்குள் மாற்றாந்தாய் கொடுமை தாங்காமல் வந்த துருவனுக்கு கடவுள் காட்சி தந்தார். சிவலிங்கத்தின் கண்ணில் இருந்து ரத்தம் வருவதை தடுத்து தன் கண்ணையே தரவந்த கண்ணப்ப நாயனாருக்கு பரமேஸ்வரன் காட்டில்தானே காட்சி தந்தார் சுவாமி?'' முனிவர் சிரித்தார்.

""நீ துருவனா? அல்லது கண்ணப்பனா?''

""முருகன் சுவாமி.''

அவன் பதிலைக் கேட்டபோது, அவன் சற்று புத்திசாலியாய் இருப்பான் என்று தெரிந்தது.

""சரி... நீ கடவுளை ஏன் தேடி வந்தாய்? சொல்...''

""சுவாமி, நான் எப்போதுமே ஏழையாய் இருக்கிறேன். சில சமயங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன். "கடவுளே... என்னை ஏன் இப்படிப் படைத்தாய்?' என்று அவரைப் பார்த்துக் கேட்கவே வந்தேன்.''


முனிவர் சிரித்தார்.

""உனக்குத் திருமணமாகிவிட்டதா?''

""ஆம் சுவாமி... மனைவி பெயர் வள்ளி. இரண்டு ஆண் குழந்தைகள் வேறு...''

""வேலை ஒன்றும் செய்யவில்லையா?''

""எப்படிச் செய்வது சுவாமி. மனதிலும் வீட்டிலும் கொஞ்சம்கூட சந்தோஷமில் லையே...''

""நீ ஒரு சோம்பேறி.''

அவன் திடுக்கிட்டான்.

""இரண்டு கைகளும் இரண்டு கால்களும் திட மான உடம்பும் இருந்தும், உழைக்க மனமில்லை
உனக்கு. பிறகு எப்படி வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்? கடவுள் எப்படி உனக்கு கருணை காட்டுவார்?''
அவன் மிரண்டான்.

""உன்னுடைய பிறப்பின் ரகசியத்தை அறிந்துகொள் ளாமல் சோம்பேறியாய் வாழ்ந்தால் கடவுள் எப்படி உனக்கு காட்சியளிப்பார்? செய்யும் தொழிலே தெய்வம் என்கிறபோது, ஏதும் செய்யாமலிருக்கும் உன்னிடம் கடவுள் எப்படி வருவார்? என்முன் நில்லாதே போ...''

அவன் பயந்து விட்டான்.

""நான் தவறு செய்துவிட்டேன். இந்தக் காட்டுக்குள் வழி தெரியாமல் எப்படி எப்படியோ சுற்றி உங்களிடம் வந்து விட்டேன்.

என்னுடைய ஊருக்கு எப்படி திரும்பிப் போவது என்று தெரியவில்லை. நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும். இனி உங்கள் சொற்படியே நடந்து கொள்கி றேன். மன்னித்துவிடுங்கள் சுவாமி!'' என்று சொன்னபிறகு அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.

முனிவருக்கு அவனைப் பார்க்க இப்போது பரிதாபமாக இருந்தது.

""நீ முதலில் உன்னை உணர்; பிறகு கடவுளை உணர். இப்படி அருகே வா'' என்றார்.

அவரருகே சென்றான். அவர் கருப்பு நிறக் கயிறு ஒன்றை மந்திரித்து அவன் கையில் கட்டினார்.

""கண்களை மூடிக் கொண்டு இறைவனை நினைத்து உன் ஊரான பழையனூரை மூன்று முறை சொல்...'' என்றார்.

முருகனும் அப்படியே செய்தான். என்ன ஆச்சரியம்! ஒரு நொடியில் அவன் பழையனூர் எல்லையை அடைந்தான். அவனுக்கு வியப்பு தாளவில்லை. பல நாட்கள் காட்டில் கடவுளைத் தேடி வழி தவறி தனித்து நின்ற என்னைக் காப்பாற்றிய அவர் முனிவரா- கடவுளா- மந்திரவாதியா என்று எண்ணிக் கொண்டே தன் வீட்டு வாயிலை அடைந் தான். வீட்டை அடைந்த வனுக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. எப்போதும் குப்பையும் கூளமுமாக அசுத்தமாக இருக்கும் தன் வீட்டு வாசல் பெருக்கி, பெரிய அரிசி மாவு கோல மிட்டு, மிகச் சிறிய ஜீவராசியான சிற்றெறும்பு கள் அதை உண்பதைக் கண்டான். அவற்றை மிதிக்காமல் வீட்டினுள் சென்றான்.

வீட்டின் கூடமும் சுத்தமாக இருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த சுவாமி படங்களுக்கு சுகந்தமான மலர்கள் சூட்டப்பட்டு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இரண்டு குழந்தை களும் படித்துக் கொண்டிருந்தார்கள். தன் தந்தையை நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியில், ""அம்மா அம்மா... அப்பா வந்துட் டாரம்மா!'' என்று ஓடிவந்து முருகனைக் கட்டிக் கொண்டு அன்பைச் சொரிந்தார்கள்.
அடுப்படியில் வேலையாக இருந்த வள்ளியும் ஓடோடி வந்தாள். வள்ளியா அது? எப்போதும் தூங்குமூஞ்சியாய் விளங்கிக் கொண்டிருந்த அவள் நன்றாகக் குளித்துவிட்டு, மஞ்சள் பூசிய முகத்தில் பொட்டும், தலையில் பூவும் வைத்துக் கொண்டு மங்களகரமாகக் காட்சியளித்தாள். முருகனால் எதையுமே நம்பமுடியவில்லை. தன்னுடைய வீடுதானா- தன்னுடைய குழந்தை கள்தானா- சிடுசிடுத்த முகமுடைய வள்ளி லட்சுமிகரமாகத் திகழ்வதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் விழித் தான் முருகன்.
வள்ளியோ, ""எங்கே போய்விட்டீர்கள்? நாட் கணக்கில் உங்களைத் தேடி பதறிப் போய்விட்டேன்.
அப்போது வீட்டுக்கு ஒரு சாமியார் வந்தார். நல் உபதேசங்கள் செய்தார்.

அதன்படி நடந்துகொண் டால் வீடு லட்சுமிகரமாக இருக்கும் என்றார். நானும் என்னுடைய நிலைமையை ஊர் ஜமீன்தாரிடம் சொன்னேன். அவர் என் நிலை கண்டு பரிதாபப்பட்டு, அவர் பண்ணையிலும் வீட்டிலும் வேலை செய்யு மாறு சொல்லி பணம் கொடுத்தார். கடவுளே என் கண்களைத் திறந்த மாதிரி இருந்தது. ஆனால் உங்க ளைக் காணாமல் தவித்து விட்டேன். நீங்களும் சோம்பே றித்தனத்தை கைவிட்டு, நமக்கு இருக்கிற நிலத்தை உழுது சம்பாதித்தால் இன்னும் நன்றாக வாழலாம் இல்லையா? கடவுள் நம் பக்கம்தான் துணை இருப்பார். கவலைப்படாதீர்கள். நம் கஷ்டங்கள் நீங்கி விடும்...''

அவள் பேசப் பேச முருகனுக்கு சந்தோஷ மாக இருந்தது. வள்ளியா இப்படி மாறிவிட்டாள் என்று ஆசையுடன் அவள் கரங்களை இறுகப் பற்றினான். அவளின் வலது கரத்தில் கருப்பு நிறக் கயிறு ஒன்று பளபளப்பதைக் கண்டு அவனுக்கு ஏதோ பொறி தட்டியது. ""நாளையிலிருந்து தரிசாகக் கிடக்கும் நம் நிலத்தை நானே உழுது பயிரிடுகிறேன் வள்ளி'' என்றான்.

இது நிஜமல்ல; கதை. மனிதர்கள் கடவுளை வணங்கிப் பிரார்த்திப்பதும், பிரார்த்தனை மூலமாக எந்த ஒரு பலனையும் கருதாது பயன் அடைவதும் இயற்கைதான். ஆனால் முருகனைப் போல் கடவுளைப் பார்த்து என்னை ஏன் இந்த வறுமை நிலைக்கு ஆளாக்கினாய் என்று கேட்க முடியாது. கடவுள் இருக்கிறார் என்பதை நம்ப வேண்டும். கடவுளை நேரில் காண நாம் மெய்ஞ்ஞானி இல்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த- மிகப் பெரிய கோடீஸ்வரனாக இருந்த திருவெண்காடர் எனும் காவிரிப்பூம் பட்டினத்து செட்டியாரான பட்டினத் தார், ஒரே ஒரு வரியின் மூலம் இறைவனை நேரில் கண்டார். அவரது மகன் கடவுளாக வந்து, "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே...' என்று ஓலையில் எழுதியதைக் கண்ட திருவெண்காடர் அனைத்தையும் துறந்து கோவணங் கட்டி துறவியானார். அன்னை, மனைவி, வீடு, ஏராளமான சொத்துகளை விட்டு, அவர் கோவணத்தோடு தெருவில் போனதைப் பார்த்து, "பட்டினத்துச் செட்டி பரதேசி ஆனாண்டி...' என்று ஒரு பெண் பாடிக்கொண்டே போனாள்.

அவர் பெயரைச் சொல்லவே பயப்படுகின்ற ஊர் மக்கள் இருக்கிறபோது, யாரோ ஒரு பெண் தன்னை ஜாதிப் பெயர் சொன்னதோடு மட்டுமின்றி, அவன் இவன் என்று ஒருமையில் விளிப்பதைக் கண்டு திரும்பிப் பார்த்தபோது, சாட்சாத் உமா மகேஸ்வரியான பார்வதி தேவியே அப்படிப் பாடிவிட்டு மறைந்து போனதைக் கண்டு பட்டினத்தார் திகைத்தார். கடவுளைக் கண்ணாரக் கண்டு, தன் ஆண்டிக் கோலத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மெய்சிலிர்த்தார்.

தன் வீட்டின் மாடியில் முகம் பார்க்கும் கண்ணாடியில், தன் முகம் காணாது தினமும் உச்சி காலப் பூஜை நடக்கும் சிதம்பரம் நடராஜப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தார் வள்ளல் பெருமான்.

எந்த வேலையும் செய்யாமல், வருமானம் தேடாமல், குடும்பத்தைக் காப்பாற்ற வழி யில்லாமல், எப்போதும் "ராம... ராம...' என கதறும் தன் தம்பி தியாகராஜன் வணங்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் உருவச் சிலையை அவருக்குத் தெரியாமல் காவிரியாற்றில் எறிந்துவிட்டார் அவர் அண்ணன் சபேசன். ஸ்ரீ ராமனின் சிலையைக் காணவில்லையே என்று கதறித் துடித்த தியாகராஜ சுவாமிகளின் கனவில் ஸ்ரீ ராமன் வந்து, தான் காவிரியில் இருப்பதாகக் கூற, மறுநாள் காவிரி நீரில் மேற்புறம் வந்து ஸ்ரீ ராமர் சிலை கிடைத்த மகிழ்ச்சியில், "கனு கொண்டினி... ஸ்ரீ ராமு நேடு...' என்று பாடி மகிழ்ந்தார் சத்குருஸ்ரீ தியாகராஜர்.

வள்ளலாரும் தியாகராஜ சுவாமிகளும், நம்முடைய கொள்ளுப் பாட்டன்களுக்கு முந்தைய காலங்களில்- அதாவது சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்து கடவுளைக் கண்ணாரக் கண்டு தரிசனம் பெற்றவர்கள்.

ஆனால் ஏன் இன்று நம்மால் அப்படி கடவுளைக் காண முடியவில்லை? ஏனென்றால் பக்தி என்பதும் ஞானம் என்பதும் தவம் என்ப தும் வியாபாரப் பொருளாகி விட்டன. "சர்வ ஜனோ சுகினோ பவந்து', "எல்லாரும் இன்புற்றி ருக்க நினைப்பதேயல்லாமல் வேறொன்ற றியேன் பராபரமே', "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்கிற உயரிய கோட்பாடுகள் சாமியார்கள் என்று சொல்லிக் கொள்கின்ற மனிதர்களிடமே இல்லாதபோது, குடும்ப சாகரத்தில் உழலும் சாதாரண மனிதனுக்கா கடவுள் காட்சியளிப் பார்? ஆனால் நல்ல சிந்தனைகள், சீரிய உள்ளம், உண்மையான கடவுள் பக்தி, நாதன் நம் உள்ளத் திலேயே இருக்கிறான் என்கிற எண்ணம், பிறருக்கு கஷ்ட காலத்தில் உதவும் மனப்பான்மை, அன்னதானம் போன்ற நல்ல அனுஷ்டானங் களைச் செய்தால் இல்லமும் இல்லறமும் செழிக்கும். அப்படிச் செழித்தால் கடவுளின் கருணா கடாட்சம் நம் வீட்டிலேயே இருக்கிறது என்பதை நல்ல குடும்பஸ்தரும் உணரலாம்!

No comments:

Post a Comment