Saturday, June 25, 2011

உடலுக்கு தானே வயது உள்ளத்துக்கு ஏது!

கடவுளின் படைப்பில் அற்பமானது என்று அலட்சியப்படுத்த ஒன்றுமே இல்லை. சூரியனிடமும், நெருப்பு பொறியிலும் ஒரே மாதிரியான வெப்பம் உள்ளது. ஒரு சிறு நெருப்பு துளியும் எரிக்கும் தன்மையுடையது. அதுபோல் மனிதனுடைய ஒரு சிறு செயலில் தோன்றும் குற்றம் கூட, அவனை குற்றமுள்ளவன் எனப்படம் பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு சிறு செயலும் உள்ளத்தைப் பிரதிபலிப்பதால் உயர்ந்த எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும்.
* அடுப்பு எரிவதற்கு நல்ல விறகே வேண்டும். அது எந்தக் காட்டிலிருந்து வந்தது, எவரால் பயிர் செய்யப்பட்டது போன்ற கேள்விகள் தேவையில்லாதது. ஊர், பேர், உற்றார், உறவினர் என்ற கருத்துக் கணிப்பெல்லாம் மனித விஷயத்தில் பயன்படாதவை. மனிதன் கடவுளுக்கு ஏற்றவனானால் போதும்.
* அறியாமையால் அகல்யை ஒழுக்கம் தவறியதால் சபிக்கப்பட்டு நீண்டநாள் கல்லாக இருந்தாள். ராமனின் பாதம் பட்டதால் மீண்டும் பெண் உருவமானாள். அறியாமையால் நாம் தெய்வத்தின் அருமை, பெருமையை அறியாமல் இருக்கிறோம். அதை இழந்தது எப்போது என்று நம்மால் வரையறுக்க முடியாது. தெய்வ சிந்தனையை மேற்கொண்டால், மீண்டும் தெய்வத்தின் அருளை நாம் பெறுவோம்.
* கடவுள் மிகப்பெரியவர் என்பது யாருக்கும் புரிவதில்லை. அவர் நமக்கு மிக அருகில் இருந்தாலும் அவரை உணர்வதில்லை. அவரைக் காண முடியாது என்ற வாதம், சூரிய வெளிச்சத்தில் இருந்து சூரியனையே நோக்கி ஓடுவது போலாகும்.
* படகு ஒன்றில் சில குறுகிய புத்திக்காரர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது காலிப்படகு ஒன்று மிதந்து வந்து மோதியது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரம் அப்படகில் ஓர் ஆள் இருந்து, மோதியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். நமது மனம் என்ற படகில் ஆணவ அகங்காரம் என்ற ஆட்கள் இல்லாவிட்டால் நம்முடன் எவரும் சண்டைக்கு வரமுடியாது.
* அன்பு அறிவாக உருமாற வேண்டும். கடவுளிடம் அன்பு வைப்பதும், அவரை அறிவதும் ஒன்றாகும். இறைவனை நேசிக்கவும், அறியவும் எனக்குத் திறன் அளிக்க பிரார்த்திக்க வேண்டும்.
* சூரியனைவிட பல மடங்கு சிறியது பூமி. சூரியன் பூமி உட்பட பல கிரகங்களுக்கும் வெளிச்சம் அளிக்கிறது. ஆனால், மூடுபனி அந்த வெளிச்சத்தை வரவிடாது தடுக்கிறது. அற்ப ஆணவத்துக்கு இறைக்காட்சியை மறைக்கும் திறமையிருக்கிறது. சூரிய வெப்பத்தால் மூடுபனியை அகற்றுவது போன்று இறையருளால் ஆணவத்தை அகற்ற வேண்டும்.
* உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது, நமக்கு வேண்டப்பட்டவர் அழிந்து விடுகிறார்கள், நண்பர்கள் விலகிச் செல்கிறார்கள், செல்வம் அழிகின்றது, ஆனால், உண்மை ஒன்று மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவனும் ஒன்றோயாகும்.
* உடல் பிறக்கிறது, வளர்கிறது, நோய் வருகிறது, உடல் வயது ஆக, ஆக தேய்ந்து முடிவில் மறைகிறது. ஆனால், உள்ளத்தை எப்போதும் குமரக்கடவுள் போல (இளமையுடன்)வைத்திருக்க முடியும். உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைப்பது தான் முருகன் வழிபாடாகும். தளர்வும், சோர்வும், ஊக்கமும், உழைப்பும் இளமையைப் பாதுகாக்கிறது.
* உலகில் உயர்வைத் தேடி அலைகிறவர்களுக்கு உயர்வு கிடைப்பதில்லை. உயர்வுக்குத் தகுதியுடையவனைத் தேடிச் சென்று உயர்வு அவனை உயர்வடையச் செய்கிறது. நன்கு காய்ச்சிய பாலில், ஆடை தானே மேலே எழுகிறது. அதேபோல் உயர்வும் நல்லவர்களைத் தேடிச் சென்றடைகிறது என்பது உலக உண்மையாகும்.

No comments:

Post a Comment