Sunday, June 26, 2011

நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறுநாட்கள் அபிஷேகம்

ஆடல் அரசராகிய நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறுநாட்கள் அபிஷேகம் செய்யப்படும். அவை சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகியவை. இன்று ஆனி உத்திர நன்னளாகும். இந்நாளில் நடராஜருக்கு சிறப்பு
அபிஷேகம் நடத்தப்படும். இதையொட்டி நடராஜர் குறித்த சிறப்பு தகவல்களைத் தந்துள்ளோம்.

சிதம்பர சபைகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐந்து சபைகள் உள்ளன. அவை சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜசபை, நடராஜர் திருநடனம் ஆடும் சித்சபை ஆகியவை. சித்சபைக்கு முன் உள்ள மண்டபத்தில் தான், நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். பேரம்பலம் என்பது பஞ்சமூர்த்திகள் வீற்றிருக்கும் மண்டபமாகும். இறைவன் ஊர்த்துவத்தாண்டவத்தில் காட்சிதரும் மண்டபம் நிருத்த சபை. இக்கோயிலில் உள்ள
ஆயிரங்கால் மண்டபமே ராஜ சபையாகும். ஆனி, மார்கழி மாத உற்ஸவங்களில் இங்குதான் நடராஜர் அனுக்கிரக தரிசனம் தந்தருள்வார்.

தானாகவே ஏறிய கொடி
சிதம்பரம் நடராஜருக்கு பணிசெய்து வந்தவர்களில் உமாபதி சிவாச்சாரியாரும் ஒருவர். அந்தணரான இவர், ஒரு சமயம் யாரோ ஒருவர் கொடுத்த கூழினைக் குடித்தார். இதனால் இவரை ஆச்சாரமற்றவர் என்று குற்றம்சாட்டி, தில்லைவாழ் அந்தணர்கள் ஊரைவிட்டு விலக்கி வைத்தனர். எனவே அவர், சிதம்பரம் அருகிலுள்ள கொற்றவன்குடி என்னுமிடத்திற்கு சென்றுவிட்டார். மறுநாள் அந்தணர்கள் நடராஜர் கோயிலுக்குச் சென்றனர். அங்கிருந்த நடராஜர் சிலையைக் காணவில்லை. அவர்கள் திகைத்து நின்ற போது, ""உமாபதி சிவத்தின் பெட்டகத்தில் (பெட்டி) இருக்கிறோம்'' என்று அசரீரி கேட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நடராஜருக்கு திருவிழா நெருங்கியது. சிலை இல்லாவிட்டாலும், கொடி ஏற்ற சிவாச்சாரியார்கள் முயற்சித்தனர். கொடி ஏற மறுத்தது. விஷயமறிந்த உமாபதி சிவம், கொற்றவன்குடியில் இருந்தபடியே "கொடிக்கவி' என்னும் பாடலைப் பாடினார். யாரும் ஏற்றாமல் தானாகவே கொடிமரத்தில் ஏறியது. உமாபதி சிவத்தின் பெருமையை உணர்ந்த சிவாச்சாரியர்கள் அவரை கொற்றவன்குடியில் இருந்து திரும்பவும் சிதம்பரத்துக்கு வரவழைத்தனர்.

அழுத பிள்ளை சிரிச்சுது! பாற்கடல் பாலைக் குடிச்சுது!!
புலிக்காலைக் கொண்ட மாத்யந்தின முனிவர், வசிஷ்டரின் சகோதரியை மணந்து கொண்டு சிதம்பரத்தில் சிவபூஜை செய்து வந்தார். இவர்களுக்கு உபமன்யு என்ற மகன் இருந்தான். தன் தங்கையும், அவள் பிள்ளையும் தில்லைவனத்தில் வசதியின்றி வாழ்கிறார்களே என்று வருந்தினார் வசிஷ்டர். மாத்யந்தினரின் அனுமதியோடு தாயையும்,பிள்ளையையும் தம்முடைய ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார். வசிஷ்டரின் ஆஸ்மரத்தில் காமதேனுவின் பாலைக் குடித்து <உபமன்யு மகிழ்ச்சியாக வளர்ந்தான். மாத்யந்தின முனிவருக்கு மகனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால், மனைவி, குழந்தையை மீண்டும் தில்லைவனத்துக்கே வரவழைத்துக் கொண்டார். ஊர் திரும்பிய உபமன்யு, பால் கிடைக்காமல் அழுதான். ""எனக்கு தெரிந்ததெல்லாம் மூலநாதனான நீ மட்டும் தான், குழந்தைக்கு பால் கொடுக்க ஏற்பாடு செய்,'' என்று முறையிட்டார் முனிவர்.உபமன்யுவுக்காக ஈசன் பாற்கடலையே வரவழைத்தார். உபமன்யுவும் சுவைமிக்க பாலை அருந்தி மகிழ்ந்தான். பிற்காலத்தில் இவர், நான்குவேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்தார் உ<பமன்யு. இவரிடம் கிருஷ்ணர் சிவதீட்சைபெற்றார் என்பர்.

No comments:

Post a Comment