Saturday, March 3, 2012

இன்பமான வாழ்க்கையின் மூலதனம்


வாழ்க்கை என்பது மனப்பக்குவம் அடைவதுதான். வாழ்க்கையை நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு சிறைச்சாலை அல்ல. வாழ்க்கை ஒரு வெகுமதி. யார் தகுதியுடையவர்களோ அவர்களுக்கும், யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இது கடவுளால் ஆசிர்வதித்துக் கொடுக்கப்படுகின்றது. உழைப்பவர்கள் அனைவருக்கும் அதை அனுபவிக்கும் உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் கூறுகின்றார், உங்கள் வேலையை ஒருபோதும் அடுத்தவர்களின் தேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அதற்காக அலட்சியப்படுத்தாதீர்கள். இந்த வரி நமக்கு ஒருவேளை சுயநலம் போல் தோன்றலாம். இதுதான் உங்களை தவறான பாதையிலிருந்து நேர்மையான பாதைக்கும், நேர்மையான பாதையிலிருந்து உள்ளார்ந்த ஆத்ம திருப்திக்கும் உயர்த்தும் என்று கூறுகின்றார். இது அதிகச் சுமையுடன் உயரமான மலை உச்சிக்கு ஏறும் செயலுக்கு ஒப்பானது. இதை நீங்கள்தான் செய்ய வேண்டும். வேறு யாரும் நம்மைத் தோளிலே சுமந்து செல்ல மாட்டார்கள். நீங்கள்தான் உங்கள் உழைப்பால் வாழ்க்கையின் உச்சத்தை அடையமுடியும்.
வாழ்க்கை என்பதின் முதல் எழுத்து வா. உலகிற்கு வா! வந்து என்ன செய்வது? அதன் முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் நம்மைப் பார்த்து வாழ் என்று கூறுகிறது. வாழ்ந்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டால், அதன் முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்து, வாகை கிடைக்கும் என்று சொல்கிறது. வாகை - வெற்றி, எப்படிக் கிடைக்கும்? வாக்கு அதாவது சொற்சுத்தம் உடையவராக இருந்தால் வாகை கிடைக்கும். வாக்கு மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா? இறுதி எழுத்து கை உழைப்பை வலியுறுத்துகிறது. இப்படி வாழ்வில் வாகை சூட <உழைப்பு அவசியம். மின்மினிப் பூச்சிகூட பறந்தால்தான் ஒளிர்கிறது. உழைப்பும் ஊக்கமும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம், தொட்டதெல்லாம் சீராய் அமையும், மகிழ்ச்சியில் பூக்கும் இதயம். மனிதனின் வாழ்வில் பல நிலைகள் உள்ளன. அவன் குழந்தையாக உள்ளபோது, நான், எனது என்கிறான். அவன் பெரியவனாகிப் பிள்ளைகள் பெறும்போது நாம், நமது என்பான். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து முதுமையில் அவர்கள் தனிமையாய் இருக்கும் போது, அவர்கள், அவர்களுடையது என்கிறான். அவர்கள், அவர்களுடையது என்று மற்றவர்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கின்ற முதிர்ச்சியை இளமையிலேயே ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்வில் முடியாதது என்று ஒன்றுமில்லை. இந்த மாற்றத்தைக் கொண்டு வர ஒவ்வொருவரும் முயல வேண்டும். இந்த முயற்சி வெற்றி அடைய நம்முள் நம்பிக்கை பிறக்க வேண்டும். இதற்கு முதலில் இறை நம்பிக்கை வேண்டும்.
பூமியை விடப் பெரியது சூரியன். ஆனால் அது பூமியை விட்டு வெகு தூரத்தில் இருப்பதால் சிறிய தட்டுப் போலத் தெரிகிறது. அப்படித்தான் இறைவனை விட்டு நாம் தொலைவில் உள்ளபோது, அவரது அருளை முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. இறைவனின் அருகில் உள்ளபோது நமக்கு அவரின் அருமை நன்கு புரியும். பழமானது தன் தசையைக் கத்திக்குத் தந்து மனிதனுக்குச் சுவையைத் தருகிறது; நிலம் தன்னை அகழ்பவரைப் பொறுத்துக் கொண்டு அவருக்கே நீரைத் தருகிறது. அப்படி மனிதனும் சோதனைகளைச் சாதனைகளாக்க வேண்டும். முடியுமா? முடியும் என்பதே வாழ்க்கையின் மூலதனம், முடியாது என்பது மூடத்தனம். ஏழைத் தொழிலாளியின் மகன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க அதிபர் ஆனது போல, முடியும் என்ற நம்பிக்கையால் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று நீ ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுத்தால் நாளையும் நீ தரமாட்டாயா என எதிர்பார்க்கும் மனோபாவம் வளரக் கூடும். அதைவிட அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவன் தன் வாழ்க்கையை அதன் மூலம் நடத்தக் கூடும். இந்த மாற்றம் காலப்போக்கில் ஏற்படுமேயானால் எதுவும் முடியும் என நமக்குப் புரியும். இப்படிப்பட்ட ஏமாற்றம் இன்பத்தைத் தரும். லட்டு கொடுத்தால் இன்பம் வருமா? பட்டு கொடுத்தால் இன்பம் வருமா? நகை நட்டு கொடுத்தால் இன்பம் வருமா? துட்டு கொடுத்தால் இன்பம் வருமா? இல்லை; விட்டுக்கொடுத்தால்தான் இன்பம் வரும். உண்மைகளையும், யதார்த்தங்களையும், புரிந்து கொண்டு வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள மனம் பக்குவப்பட வேண்டும். மனம் பக்குவப்பட நமக்கு வாழ்க்கையில் விழிப்பு உணர்வு அவசியமாகின்றது. தெளிவோடு இறைநம்பிக்கை சேரும் போது தன்னம்பிக்கை பிறக்கும். மாற்றங்களைக் கொண்டு வர இயலும். மாற்ற முடியாதது என ஒன்றுமில்லை என்று வாழ்ந்து காட்டுவோம்.

No comments:

Post a Comment