அறநூல்கள் மனிதரை அறம் செய்யுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால், மனிதர் எல்லோரும் அறம் செய்வதில்லை. அறம் செய்யாதவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் அறம் செய்வதில்லை என்று கேட்டால், நான் ஈட்டும் பணம் எனக்கே போதவில்லை. இதில் நான் எங்கே அறம் செய்வது? தனக்கு மிஞ்சித் தானே தர்மம்? என்பார்கள். எனக்கு மிஞ்சும் போது பார்க்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலரோ, அறம் என்ற பெயரால் பணம் தருவதால், உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள்தான் அதிகமாகிறார்கள். சோம்பேறிகள் அதிகமாவது நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் தான் நான் யாருக்கும் பணம் கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். இவற்றைக் கூர்ந்து பார்த்தால், பணம் கொடுப்பது தான் அறம் என்று பலரும் கருதுகிறார்கள் என்பது புலப்படும். பணம் கொடுப்பதும் அறம் தான். ஆனால் பணம் கொடுப்பது மட்டுமே அறம் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு பிச்சைக்காரன் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டான். இளகிய மனம் படைத்த பெரியவர் அவனுக்குப் பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரனிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரனின் முகத்திலே ஓர் ஒளி. ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பி என்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றான் அவன். பணமோ காசோ கொடுப்பது மட்டுமல்ல; இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார். இன்னுரை பேசுவது போலவே இன்னாதன செய்யாதிருப்பதும் அறமே. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்பதைப் புறநானூற்றுப் புலவரும் கூறியிருக்கிறார்.
இந்த வகையில் அறம் எனப்படுவது ...
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது;
கண்ட இடங்களில் எச்சில் துப்பாதிருப்பது;
கண்ட இடங்களில் குப்பை கொட்டாதிருப்பது;
மரங்களை வெட்டாதிருப்பது;
அநியாயத்தைக் கண்டும் காணாதது போல் செல்லாமல், அதைத் தட்டிக் கேட்பது;
லஞ்சம் தராமலிப்பதும், வாங்காமலிருப்பதும்.
எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை. மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம்.
No comments:
Post a Comment