Monday, October 1, 2012

ஆர்வம், முயற்சி இருந்தால் எதையும் கறக்கலாம்

மன்னன் திருதராஷ்டிரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். எதிரே இருந்த துரோணாச்சாரியாரிடம் பூடகமாக பேசத் தொடங்கினான். "துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்'. "கேளுங்கள் மன்னா!' "சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்?' "ஆம் மன்னா! அதில் சந்தேகமேயில்லை'. "தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம்' "மன்னா!' திடுக்கிட்டார் துரோணர். தன் மீதே மன்னர் சந்தேகப்படுவார் என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. "துரோணரே! பாண்டவர்களையும் எனதருமை பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்'. பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனன் தன்னைப் பற்றி அரசனிடம் குறை கூறி இருக்கவேண்டும் என்று உணர்ந்தார் துரோணர். "மன்னிக்க வேண்டும் மன்னா! நான் எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம், முயற்சி, உத்வேகம், தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை என்பதையும் தாங்கள் உணரவேண்டும்' "மேலும், கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார். மறு நாள் காலை பாண்டவர்களும் கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்கு வந்து சேர்ந்தனர்; துரோணாச்சாரியாரை வணங்கினர். "சீடர்களே! இன்று நான் ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப் போகிறேன்! வாருங்கள் காட்டுக்குச் செல்லலாம்' என்றார் துரோணர். அனைவரும் துரோணருடன் சென்று ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். அனைவரும் அங்கு அமர்ந்ததும் ஆற்றுமணலில் ஓர் ஸ்லோகத்தை எழுதினார். சீடர்களே! இன்று உங்களுக்குக் கற்பிக்கப் போகும் வித்தையின் மூலமாக ஒரு காட்டையே எரித்து விட முடியும். நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பை பிரயோகிக்கிறேன் என்று கூர்ந்து கவனியுங்கள். "அடடா! அர்ஜுனா கமண்டலத்தை எடுத்து வர மறந்துவிட்டேன்; நீ விரைவாக ஆசிரமம் சென்று அதை எடுத்து வா!' என்றார். ஏதோ தான் மறந்து வைத்து விட்டதைப் போல காரணம் காட்டி அவனை லாவகமாக அப்புறப் படுத்தினார். குருநாதர் கற்பிக்கப்போகும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவிவிடுமோ? என்ற கவலையில் ஆசிரமத்தை நோக்கி அர்ஜுனன் விரைந்தான். கமண்டலத்துடன் விரைந்து வந்தவன் அவர்கள் ஆற்றைத் தாண்டி செல்வதைக் கண்டு உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம் சென்று இணைந்து கொண்டான். கமண்டலத்தைக் குருநாதரிடம் தந்தான். "குருவே! என்னை மன்னியுங்கள். சற்று தாமதமாகிவிட்டது'. அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக் கொண்ட துரோணர், "நல்லது, சீடர்களே. இன்று கற்பித்த வித்தையில் எவருக்காவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்' என்றார். துரோணர் சொன்னதைக் கேட்ட அர்ஜுனனுக்கு ஏமாற்றமாகிவிட்டது. பாடத்தைக் கற்பித்து முடித்துவிட்டார் என்பது புரிந்ததுடன் வருத்தம் ஏற்பட்டது. ""குருவே! நான் வருவதற்குள் பாடம் முடிந்துவிட்டதா?' "ஆமாம். முடிந்துவிட்டது. சரி! ஒவ்வொருவராக வந்து ஸ்லோகம் சொல்லி அம்பைப் பிரயோகித்து அந்தக் காட்டுப்பகுதியை எரியுங்கள் பார்க்கலாம்' என்றார் கௌரவர்கள் நூறு பேர்; பாண்டவர்கள் நால்வர் என்று ஒவ்வொருவராக வந்து ஸ்லோகத்தை உச்சரித்து அம்பு எய்தனர். எந்தப் பயனுமில்லை. ""என் உழைப்பு மொத்தமும் வீண்'' என்று கோபத்தில் கத்தினார் துரோணர். ""குருவே! தாங்கள் ஆணையிட்டால் அந்தக் காட்டை நான் எரித்து காட்டுகிறேன்'' என்று அர்ஜுனன் முன்வந்தான். உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும் கேலிச் சிரிப்பும் எழுந்தன. சரிதான். பாடம் நடத்தும் போது இவன் ஆளே இல்லை. பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டுவானாம். நல்ல வேடிக்கை! என்று கேலி பேசினர். ""வீணாக குருவின் கோபத்திற்கு ஆளாகப் போகிறான்'' என்றான் கௌரவர்களில் ஒருவன். துரோணர் அர்ஜுனனிடம் "எங்கே எரித்துக் காட்டு பார்க்கலாம்!' என்றார். வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன் கண்களை மூடி ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகித்தான். உடனே காடு திகு திகுவென எரிந்தது ; அனைவரும் அதிசயித்தனர். "அர்ஜுனா! மந்திர உபதேசம் செய்யும்போது நீ இல்லை. பிறகு எப்படி இதை சாதித்தாய்' என்றார் துரோணர். "குருவே! கமண்டலத்துடன் ஆற்றங்கரைக்கு வந்தபோது அங்கு மணலில் நீங்கள் எழுதிய ஸ்லோகத்தைப் பார்த்தேன். அதைப் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டேன்' என்றான். துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சீடனிடம், ஆர்வமிருந்தால் குருவின் போதனையைக் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அர்ஜுனனே சாட்சி என அனைவரின் முன்பு பாராட்டினார். கௌரவர்கள் தலைகுனிந்தனர்

No comments:

Post a Comment