Thursday, April 10, 2014

நேர்மையான வழியில் பொருளை சேர்த்து தூய உள்ளத்துடன் செய்யப்படும் சிறிய தானம் அஸ்வமேத யாகத்தை விடச் சிறந்ததாகும்

வியாசர் தருமரை நோக்கி, “தருமா...!! நீ துயர் கொள்ளாதே. நீ எல்லா ராஜதருமங்களையும் ஆபத்தருமங்களையும் மோட்சதருமங்களையும் பீஷ்மரிடம் கேட்டிருக்கிறாய். அப்படியிருந்தும் நீ ஏன் மதி மயக்கம் கொண்டாய். நீ பாவம் செய்தவனாக நினைத்தால் அந்த பாவத்தை போக்கும் வழியை கூறுகிறேன் கேள். நீ தசர குமாரனான ராமனை போல அஸ்வமேத யாகம் செய். உனது பாவங்கள் தொலையும்” என்றார். வியாசரின் ஆலோசனைப்படி கோலாகலமாக தொடங்கப்பட்ட அஸ்வமேத யாகத்தில் பலநாட்டு மன்னர்கள் மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டுகளும் வந்து குவிந்த வண்ணமாய் இருந்தது. மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர். பல்லாயிர கணக்கான மக்கள் பல பொருள்களை அரச காணிக்கையாக கொண்டு வந்தனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாரப்பட்டது. நாடே திருவிழா கோலம் பூண்டது.
புலவர்கள், அறிஞர்கள், தர்க்க வாதம் புரிந்து அவையோரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர். தேவ ரிஷிகள், மாமுனிவர்கள், தேவர்கள், வேத நாயகர்கள், தவசீலர்கள் என பலரும் இந்த யாகத்தில் கலந்து சிறப்பித்தனர். யாகம் சிறப்பாகவும், புனிதமாகவும் நிறைவேறியது. தருமர் மகிழ்ந்தார். யாகத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் பொன்னும், பொருளும் வழங்கப்பட்டது. அனைவரும் பாண்டவர்களி வாழ்த்தினர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முழு ஆசியும் கிடைத்தது. யாகம் முடிந்ததும், பொன்னிறமாக இருந்த ஒரு கீரி அங்கு வந்து தருமர் செய்த அந்த யாகத்தைவிட ஒரு பிடி மாவின் தானம் மேன்மையுடையது என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அங்கிருந்த சான்றோர்கள் கீரியின் அருகில் வந்து, “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? சாத்திரப்படி செய்யப்பட்ட இந்த யாகத்தை ஏன் குறை கூறுகிறாய்? உனக்கு எவ்வளவு கர்வம் இருந்தால் வேதங்களை உடைய ரிஷிகளால் போற்றப்படும் இந்த யாகத்தை பழித்து பேசுவாய்?” என்றனர். கீரி பதில் உரைக்க ஆரம்பித்தது. நான் கர்வத்தால் பேச வில்லை. உங்களுடைய யாகம் ஒரு பிடி மாவுக்கு ஈடாகாது. கவர்ச்சியான அஸ்வமேத யாகத்தைவிட அந்தணன் ஒருவன் அளித்த ஒரு பிடி மாவு எப்படி சிறந்ததாகும் என்பதை விளக்குகிறேன் கேளுங்கள் என்றது.
முன்னொருகாலத்தில் குருக்ஷேத்திரத்தில் அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் வயல்களில் விழுந்து சிந்தி கிடக்கும் தானியங்களை பொறுக்கி வந்து மாவாக்கி உயிர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மனைவியும், மகனும், மருமகளும் உண்டு. இந்த நால்வருடைய ஜீவனும் அந்தணர் கொண்டு வரும் தானியங்களையே சார்ந்திருந்தது. நாள்தோறும் தானியங்களை பொறுக்கி வருவதும், மாவாக்குவதும் வழிபாடு முடிந்த பின் நால்வரும் சமமாக அந்த மாவை பகிர்ந்து கொள்வதும் நடைமுறை வாழ்க்கையாய் இருந்தது. தெய்வ வழிபாடு, வந்த விருந்தினரை உபசரித்தல் ஆகியவற்றில் அவரது குடும்பம் நிகரற்று விளங்கியது. கோடைக்காலத்தில் தானியங்கள் கிடைப்பது அரிது. ஆதலால் அக்குடும்பம் சில நாட்களில் அரைவயிறு உண்டும், சில சமயங்களில் முழு பட்டினியாகவும் கூட காலம் தள்ளிற்று. அத்தகைய வரிய நிலையில் இருந்த போது ஒருநாள் மாவை நால்வரும் பகிர்ந்து கொண்டு உணவு கொள்ள உட்கார்ந்த நேரத்தில் விருந்தாளி ஒருவர் வந்தார். விருந்தினரை உபசரிப்பதை தலையாய கடமையாய் கொண்டிருந்த அந்தணர் தமக்குரிய பங்கை அந்த அதிதிக்கு அளித்தார். வந்த விருந்தாளி அதனை ஆர்வத்துடன் உண்டார். பசி அடங்கவில்லை. இதனைக் கவனித்து கொண்டிருந்த அந்தணரின் மனைவி தன் பங்கை அதிதிக்கு அளித்தார். அதனை உண்டும் அவர் பசி அடங்கவில்லை. அவர் மகனும், தன் பங்கை கொடுத்தார். மருமகளும் தன்பங்கை கொடுக்க, அதனை உண்ட அதிதி பசி அடங்கிற்று.
விருந்தாளியாக, அதிதியாக வந்தது தருமதேவதையே. அங்கு வந்து அந்தணனின் தான தன்மையை சோதித்து, அந்தணனை நோக்கி, "நீர் நியாயமான வழியில் சேர்த்த பொருளை மனம் உவந்து உம் சக்திக்கு ஏற்றவாறு மனப்பூர்வமாக அளித்தது குறித்து மகிழ்ச்சி. உமது தானத்தை சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும் புகழ்ந்து பேசுகின்றனர். விண்ணிலிருந்து அவர்கள் மலர்மாரி பொழிவதை காணுங்கள். பிரமலோகத்தில் உள்ளவர்களும், தேவலோகத்தில் உள்ளவர்களும் உம்மை தரிசிக்க விரும்புகிறார்கள். ஆகவே நீ சுவர்க்கத்திற்கு செல்வாயாக. தூய மனத்துடன் நீ அளித்த இந்த எளிய தானத்தால் இந்த நற்கதி உமக்கு வாய்த்தது. ஆராவாரத்துடன் மிகுந்த பொருளை வாரிவாரி கொடுப்பது தானம் இல்லை. அது வீண் பெருமைதான். அதனால் ஒரு பயனும் இல்லை. ஆயிரம் கொடுக்க வேண்டிய இடத்தில் அன்போடு நூறு கொடுத்தால் போதுமானது. நூறு கொடுக்க வேண்டிய இடத்தில் பத்து கொடுத்தால் போதும். பத்து கொடுக்க இடத்தில் ஒன்று கொடுத்தால் போதும். ஒன்றும் கொடுக்க முடியாவிடின், தூய மனத்துடன் கொடுக்கும் தூய நீரே போதும்.
ரத்தி தேவன் என்னும் அரசன் ஒன்றும் இல்லாத சூழலில் தூய மனத்துடன் தூய நீர் மட்டுமே அளித்தான். அதனாலேயே அவன் சுவர்க்கம் அடைந்தான். தருமமானது நியாயமான வழியில் சிறிய அளவில் சம்பாதிக்க பட்டாலும் அது பிறருக்குத் தூய மனத்துடன் அளிக்கப்படுவதாகும். நியாயமில்லாத வழிகளில் பெருஞ்செல்வத்தை திரட்டி செய்யப்படுவது தருமம் அன்று. அதனால் மகிழ்ச்சியும் அல்ல. பயனும் அல்ல. திருகன் என்னும் மன்னன் ஓராயிரம் பசுக்களை தானமக செய்தான். அந்த ஆயிரம் பசுக்களில் ஒரு பசு வேறொருவனுக்கு சொந்தமானது. ஆயிரத்தில் ஒன்றுதான் அப்படி. நீர் ஒரு பிடி மாவினால் சுவர்க்கத்தை அடையும் புண்ணியம் செய்ததால், உங்கள் அனைவரையும் அழைத்து செல்ல அங்கிருந்த அற்புத விமானம் வந்திருக்கிறது. அதில் நீங்கள் நால்வரும் ஏறிச்செல்லுங்கள். நான் தான் தருமம். என்னை நங்கு பாருங்கள் என்று கூறி தரும தேவதை தன் உணமையான உருவத்தை காண்பித்து மறைந்தது. அந்த நால்வரும் சுவர்க்கம் சென்றனர்.
அப்படி தருமதேவதையும் நால்வரும் மறைந்த பிறகு நான் வளையிலிருந்து வந்தேன். அங்கு சிந்தியிருந்த மாவில் படுத்து புரண்டேன். என் மனம் தவமகிமையுடன் கூடிய மாவின் மீது சென்றதால் என் உடலில் பாதிப் பொன்னிறமாயிற்று. மற்றொரு பக்கம் எப்போது அப்படி பொன்னிறம் ஆகும் என கருதி யாகசாலைகளில் சுற்றி திரிந்தேன். தருமரின் அஸ்வமேத யாகத்தின் சிறப்பை எண்ணி இங்கு வந்து படுத்து புரண்டேன். எனது உடலின் மறு பாதி பொன்னிறமாக மாறவில்லை. ஆதலால் “இந்த யாகம் ஒரு பிடி மாவுக்கு இணையில்லை” என்று கூறினேன். “முன்பு ஒரு பிடி மாவு என் பாதி உடலை பொன்னிறம் ஆக்கியது. இந்த யாகத்தால் அப்படி செய்ய இயலவில்லை. அதனால் இஃது அதற்கு ஈடாகாது என்பது என் கருத்து” என்று கூறி அந்த கீரி (தர்மதேவதை) மறைந்தது. இதனால் நேர்மையான வழியில் பொருளை சேர்த்து தூய உள்ளத்துடன் செய்யப்படும் சிறிய தானம், ஆயிரம் ஆயிரமாக வழங்கி காண்போரை பிரம்மிக்க வைக்கும் அஸ்வமேத யாகத்தை விடச் சிறந்ததாகும் என்ற உண்மை புலப்படுகிறது

No comments:

Post a Comment