Wednesday, April 9, 2014

மனச்சுத்தம் மிக முக்கியம். இறைவன் மனதையே பார்க்கிறார்!

ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன. தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார். ஒருநாள் அவளை அழைத்து, கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். இறைவழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டு விடு! வேறு ஏதேனும் தொழில் செய், என்று அறிவுரை சொன்னார். அவள் அதைக்கேட்டு நடுங்கினாள். சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையல...ுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே! நான் என்ன செய்வேன், இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன், என்றாள். பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள். ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தித்தாள். ஆனால், பாழும் சமுதாயம் அவளை விடவில்லை.
உன் பரம்பரையே இந்தத் தொழில் செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே! இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா? என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள். வேறுவழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள். இறைவனிடம் தன் நிலையைச் சொல்லிச் சொல்லி அழுதாள். அவளது மனமாற்றத்தை அறியாதசந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்க வில்லையே என கோபம் அடைந்தார். ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக் குவியல் தினமும் உயர்ந்து கொண்டே வந்தது. ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி, நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே! என்று கடிந்து கொண்டார். அந்தக் குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக்கொள், என்று கதறியழுது பிரார்த்தித்தாள். அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான். அன்றிரவே அவளது உயிர் போனது.
சந்நியாசியும் அதே நாளில் இறந்தார். தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள். நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது. சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர். அந்த ஆத்மாக்கள் விஷ்ணுலோகம் சென்றன. அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர். சந்நியாசி கதறினார். பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா? என்றார். துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள். மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள். அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச்செயலை மட்டுமே சிந்தித்தீர். அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே, உமக்கு நரகம், என்றனர். மனச்சுத்தம் மிக முக்கியம். இறைவன் மனதையே பார்க்கிறார்!

No comments:

Post a Comment