Saturday, April 26, 2014

பிரசன உபநிஷதம்-ஒரு கண்ணோட்டம்

பிரசன உபநிஷதம்-ஒரு கண்ணோட்டம்
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழிந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்து கொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யு மேதி நான்ய; பந்தா வித்யதே யனாய-சுவேதாஸ்வர உபநிஷதம் 3.8), அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே கேளுங்கள்(ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா-சுவேதாஸ்வதர உபநிஷதம் 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்லாமல், பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவி அழைத்தனர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம். வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்.... அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம்(யாக விவரங்கள்), ஆரண்யகம்(உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி)
உபநிஷதங்கள்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதக, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றும் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைத்துள்ளன.
வேதம்-உபநிஷதம்
ரிக்- ஐதரேய, கவுசீதகி
யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண
சோம-கேன, சாந்தோக்ய
அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய
பிரச்ன உபநிஷதம்
அதர்வண வேதத்தைச் சேர்ந்த உபநிஷதம் இது. ப்ரச்ன என்றால் கேள்வி. இந்த உலகம் எப்படி உண்டாயிற்று, உயிரினங்கள் எவ்வாறு தோன்றின, மனிதன் என்பவன் யார், கடவுள் யார், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பன போன்ற சில அடிப்படைக் கேள்விகளை நெஞ்சில் சுமந்துகொண்டு பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் 6 பேர் அறிவைத் தேடி புறப்படுகின்றனர். பிப்பலாத முனிவரைப்பற்றி கேள்விப்பட்டு அவரிடம் செல்கின்றனர். 6 பேரும் அவரிடம் கேட்கின்ற 6 கேள்விகளுக்கப் பதிலாக அமைந்திருப்பதால் இது ப்ரச்ன உபநிஷதம் எனப்படுகிறது. இந்த 6 கேள்விகளும் இதில் 6 அத்தியாயமாக அமைந்துள்ளன; மொத்தம் 63 மந்திரங்கள் உள்ளன.
மாண்டூக்ய உபநிஷதத்தில் பேசப்படுகின்ற விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற மூன்று நிலைகளை ஆராய்வதால், பிரச்ன உபநிஷதத்தை மாண்டூக்ய உபநிஷதத்தின் துணை உபநிஷதமாகக் கருதுவதும் உண்டு.
மையக் கரு: மனிதன், உலகம், இறைவன் என்ற முப்பொருள் உண்மைகளை உபநிதஷதங்கள் ஆராய்கின்றன. ஒவ்வோர் உபநிதஷதமும் தனக்கென்று ஒரு கோணத்தில் இந்த அடிப்படை உண்மைகளை அணுகுகின்றன. அறிவைத் தேடுகின்ற, 6 பேருடைய தேடலின் வெளிப்பாடாக பிரச்ன உபநிஷதம் இந்த உண்மைகளை ஆராய்கிறது. 6 பேர் கேட்ட 6 கேள்விகளும் இதோ
1. உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின?
2. மனிதனில் என்னென்ன சக்திகள் செயல்படுகின்றன?
3. அந்தச் சக்தி எப்படி செயல்படுகிறது?
4. மனிதன் தூங்கும்போது தூங்காமல் அவனில் விழித்திருப்பது யார்?
5. ஓங்கார தியானம் என்றால் என்ன?
6. ஆன்மா எங்கே இருக்கிறது?
உயிரினங்கள், மனிதன், ஆன்மீக சாதனை, ஆன்ம அனுபூதி என்று அறிவுத்தேடல் படிப்படியாக ஆன்மீகத்தேடலில் நிறைவுறுவதைப் பிரச்ன உபநிஷதத்தில் காண்கிறோம். அடிப்படை ஆற்றலான பிராணனைப்பற்றி இங்கே சிறப்பாக ஆராயப்படுகிறது.
வித்யைகள்: அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்றடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்த படியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிதஷங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. தற்போது சுமார் 35 வித்யைகள் மட்டுமே இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.
பிரச்ன உபநிஷதத்தில் பரமபுருஷ வித்யை கூறப்பட்டுள்ளது. 5:2-7இல் அமைந்துள்ளது. ஓங்கார தியானம் பற்றியது இது.
மொழிபெயர்ப்பு: ஸ்ரீசங்கரர் , ஸ்ரீமத்வர் போன்றோர் இந்த உபநிஷதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீசங்கரரின் விளக்கவுரைக்கு ஸ்ரீஆனந்தகிரியும், ஸ்ரீமத்வரின் விளக்கவுரைக்கு ஸ்ரீராகவேந்திர தீர்த்தரும் மேலும் தெளிவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீராமானுஜர் உபநிஷதங்களுக்கு விளக்கவுரை எழுதவில்லை. அவரது கருத்தைத் தழுவி ஸ்ரீரங்கராமானுஜர் விளக்கவுரை எழுதியுள்ளார்.
இந்த மொழிபெயர்ப்பு, பிரச்ன உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.
1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.
ஒரு வார்த்தை: உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் (இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே ஈசாவாஸ்ய உபநிஷதம் 10,13) என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவதுபோல் உள்ளது இது.
நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பெருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.
சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல், அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
பிரச்ன உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.
ஓம் பத்ரம் கர்ணேபி ச்ருணுயாம தேவா
பத்ரம்பச்யேமாக்ஷபிர் யஜத்ரா
ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி
வ்யசேம தேவஹிதம் யதாயு
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா
ஸ்வஸ்தி ந பூஷா விச்வ வேதா
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
தேவா-ஓ தேவர்களே! கர்ணேபி-காதுகளால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; ச்ருணுயாம-கேட்க வேண்டும்; யஜத்ரா-பூஜிக்கத் தகுந்தவர்களே; அக்ஷபி-கண்களால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; பச்யேம-காண வேண்டும்; ஸ்திரரங்கை-உறுதியான அங்கங்களுடன் கூடிய; தனூபி-உடலுடன்; யதாயு-ஆயுள் முழுவதும்; துஷ்ட்டுவாம்ஸ-உங்களைத் துதிக்க வேண்டும்; தேவ ஹிதம்-தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம்; வ்யசேம-வாழ வேண்டும்; வ்ருத்த ச்ரவா-பழம்புகழ்பெற்ற; இந்த்ர-இந்திரன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; விச்வ-தேவா-எல்லாம் அறிகின்ற; பூஷா-சூரியன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-மங்கலம் செய்யட்டும்; அரிஷ்ட்டநேமி-தீமையை அழிக்கின்ற; தார்க்ஷ்ய-கருடன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; ப்ருஹஸ்பதி-பிருகஸ்பதி; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை; ததாது-தரட்டும்!
தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே! கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழ வேண்டும்! பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிருகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!
உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையில் தூண்டுகின்ற விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின் முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்ந்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவதற்குமான மந்திரம் இது.
தேவர்கள் யார்? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது என்ன?
சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது, நட்சத்திர மண்டலங்கள் வானவெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவாக்கப்படுத்தினர் நமது முன்னோர், இந்திரன், வருணன், வாயு என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவகங்களே.
மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை ஆற்றல்களை வளம்பெறச் செய்ய வேண்டும், அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை அன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம்.
இந்தப் பரந்த கருத்துடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.

No comments:

Post a Comment