Tuesday, June 17, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 14

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 14

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளையும் அவருடைய சரிதத்தையும் கேட்கக் கேட்க, ஆனந்தத்தின் எல்லையானது அதிகரித்துக்கொண்டே இருக்கும். நாம் வேலை செய்வதற்கும், தூங்குவதற்கும், பேசிக்கொள்வதற்கும் கால அவகாசங்கள் இருக்கின்றன. ஆனால், பகவத் விஷயங்களை அறிந்து கொள்வதற்குக் கால நேரம் என்பதே கிடையாது. ஏனெனில், காலத்துக்கும் வரையறைகளுக்கும் அப்பாற்பட்டவன் ஆண்டவன்!

ஸ்ரீகிருஷ்ண விளையாட்டுக்களை நேரங்காலம் பார்க்காமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவனுடைய குறும்புகளை நாள் முழுக்க, வாரம் முழுக்க, ஏன்... இந்த ஜென்மம் முழுக்கக் கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம். பகவானின் திவ்விய நாமங்களையும் அவனுடைய லீலா விநோதங்களையும் எவரொருவர் அறிந்து, உணர்ந்து, தெளிகிறாரோ... அவருக்கு அடுத்த பிறவியென்கிற ஒன்று இல்லை என்கிறது கீதை. ஆகவே, இருக்கின்ற இந்த ஜென்மத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அத்தனை விளையாட்டுக்களையும் அறிந்து உணர்ந்துகொள்வதே உத்தமம்!

நம் பரத கண்டத்தில் பாய்ந்தோடுகிற நதிகள் எல்லாமே புனித நதிகள்தான்; புண்ணிய நதிகள்தான்! ஆனால், எந்த நதிக்கும் இல்லாததொரு பெருமை, யமுனை நதிக்கு உண்டு. பாய்ந்தோடுகிற கங்கையையும், துங்கபத்ராவையும் பார்த்திருக்கிறீர்களா? அவை வெள்ளை வெளேரென்று, பளீரென ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், யமுனை நதி கன்னங்கரேலென்று, கறுப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருக்குமாம்!

ஏன் இப்படி?

இந்த நதியிலும் கரையிலும் இருந்தபடிதானே, அத்தனை லீலைகளையும் செய்து, அனைவரையும் குதூகலப்படுத்தினான் ஸ்ரீகண்ணபிரான்! அவனையே சதாசர்வகாலமும் பார்த்துப் பார்த்து, அவனுடைய கரிய நிறத்தையே உள்வாங்கிக் கொண்டு தானும் கறுப்பாகக் காட்சி தருகிறதாம் யமுனை நதி! ஸ்ரீகிருஷ்ண பகவானின் நிறத்தைக் கொண்டிருக்கிற நதி என்பதால், யமுனைக்குத் தனிச் சிறப்பு உண்டு.

அதுமட்டுமா? ஸ்ரீகண்ணன், இந்த யமுனை நதி நீரைக் கைகளால் அள்ளி அள்ளிப் பருகியிருக்கிறான். ஆனந்தமாகக் கைகளில் ஏந்தி, கோபியர் முகத்தில் தெளித்து விளையாடியிருக்கிறான். முக்கியமாக, வாய் கொப்பளித்திருக்கிறான். வேறு எந்த நதிக்கும் இல்லாத பெருமை இது என்று போற்றுகின்றனர், வைணவப் பெரியோர்!

இங்கே... யமுனையில் கோபியருடன் ராசக்கிரீடையில் இருந்தபோது, சட்டென்று சுதாரித்தான் ஸ்ரீகண்ணன். 'அடடா... இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால், ஆனந்தத்தில் மூச்சடைத்துப் போனாலும் போவார்கள், கோபியர்கள்! என யோசித்தவன், சட்டென்று மாயமானான். கோபியர் அனைவரும் சுற்றிலும் தேடினார்கள்; தண்ணீருக்குள் துழாவினார்கள்; இரண்டு கரைகளின் பக்கமும் பார்வையை ஓடவிட்டார்கள். கரைக்கு வந்து தேடினார்கள். காலடித் தடங்களைப் பார்த்துப் பரவசப் பட்டார்கள். ஆற்றங்கரை மணலில் இரண்டு ஜோடி திருவடிகளை, அதாவது நான்கு பாதங்களின் சுவடுகளைக் கண்டனர். 'ஓஹோ... இந்தக் கிருஷ்ணன் நம்மையெல்லாம் விட்டுவிட்டு, நம் கூட்டத்தில் இருந்து ஒருத்தியை மட்டும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறான்’ என உணர்ந்தனர். முகம் இறுகி, 'அவள் யாராக இருக்கும்’ என யோசித்து, அவள் மீது பொறாமைப்பட்டனர்.

அங்கே, ஸ்ரீகிருஷ்ணருடன் சென்று கொண்டிருந்தவளுக்கோ தலை - கால் புரியாத அளவுக்குப் பெருமிதம். 'ஆஹா... நாம் அல்லவோ பாக்கியசாலி! இவ்வளவு கோபியர்களில், என்னை மட்டும்தானே அழைத்துச் செல்கிறான்?! என் அழகில் அவன் மொத்தமாகத் தன்னை இழந்து விட்டான்’என்று யோசித்தாள். அப்படி யோசிக்கிறபோதே, கர்வம் லேசாகத் தலை தூக்கியது.

கோபியர் கூட்டம், அந்தக் காலடிச் சுவடுகளைப் பார்த்துக்கொண்டே பின்தொடர்ந்தது. சட்டென்று ஓரிடத்தில் இருந்து, ஒரு ஜோடி பாதச் சுவடுகள் மட்டுமே கண்ணில் தென்பட்டது. 'இன்னொரு ஜோடி பாதச் சுவட்டினைக் காணோமே’ என்று வியந்தனர் கோபியர்கள். 'ஒரு ஜோடி பாதச் சுவட்டையும் காணோம்; தெரிகிற பாதச் சுவடுகளும், மிகவும் அழுத்தமாகத் தென்படுகிறதே! என்று குழம்பினார்கள்.

அங்கே, ஸ்ரீகண்ணனுடன் சென்று கொண்டிருந்தவள், 'கிருஷ்ணா, இதற்கு மேல் என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. என்னைத் தூக்கிக் கொள்கிறாயா? என்று கெஞ்சினாள். 'அவ்வளவுதானே... இதென்ன பிரமாதம்! என்று அவளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்தான் ஸ்ரீகிருஷ்ணன். அப்படித் தூக்கிக் கொண்டதால், பாரம் அழுத்த, திருப்பாதச் சுவடுகளும் அழுத்தமாகவே மணலில் பதிந்தன.

இவற்றையெல்லாம் யூகிக்காமலா இருப்பார்கள் கோபியர்கள்? 'பாருங்களடி... அவளுக்குக் கிடைத்த பாக்கியத்தை! அந்தக் கண்ணன், அவளைத் தூக்கிக்கொண்டு செல்கிறான்போல... என்று தங்களுக்குள் ஏக்கமும் பொருமலுமாக பேசிக் கொண்டனர்.

ஸ்ரீகண்ணனின் தோளில் ஒய்யாரமாக அமர்ந்தபடி வந்தவள், மீண்டும் ஒரு கோரிக்கையை வைத்தாள். 'கண்ணா, உன்னுடன் வரும்போது அலங்கோலமாக வந்தால், நன்றாக இருக்குமா? என் அலங்காரமெல்லாம் கலைந்துவிட்டது. எனவே, அதோ... அந்த மரத்தில் இருந்து பூக்களைக் கொஞ்சம் பறித்துத் தாயேன்’என்றாள். உடனே அவளை இறக்கிவிட்டு, பூக்களைப் பறிப்பதற்காக மரத்தில் ஏறினான் ஸ்ரீகண்ணன். அவளின் சந்தோஷமும் பெருமிதமும் கூடிக்கொண்டே போனது. 'அத்தனை பேரில், என்னைத்தான் தனியே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். நடக்க முடியவில்லையே என்று கலங்கியதும், பதறிப்போய் தோளில் என்னைச் சுமந்து வந்திருக்கிறான். அலங்கரிக்க பூக்கள் வேண்டும் எனக் கேட்டதுதான் தாமதம், இதோ... தடதடவென மரத்தில் ஏறிவிட்டான். இவ்வளவும் எனக்காகவே! என் மீது உனக்கு அவ்வளவு ஆசையா கிருஷ்ணா?! என்று பூரித்தாள்; அந்தப் பூரிப்பு அதிகரிக்க, கர்வமும் அதிகரித்தது.

'இறைவன் நம்மை நோக்கி அடியெடுத்து வைக்கிறான் என்றால், அதற்காக நாம் கர்வப்படக் கூடாது. அப்படிக் கர்வப்பட்டால், அவன் வந்த வழியே சென்றுவிடுவான். கர்வம் இருக்கிற இடத்தில், கடவுள் ஒருபோதும் இருக்கமாட்டான்’ என்பதை அந்தப் பெண் ஏனோ அறிந்திருக்கவில்லை.

சிறிது நேரத்திலேயே கை நிறையப் பூக்களுடன் வந்தவன், அவளிடம் நீட்டினான். அவள் சட்டென்று முகம் திருப்பிக் கொண்டாள்.

அட... எதற்காகக் கோபம் கொள்கிறாள் இவள்? அது கோபம் இல்லை; வாஞ்சை. 'பூக்களைக் கையில் கொடுப்பதைவிட, தலையில் சூட்டிவிடேன்’ என்கிற ஆசை அவளுக்கு! 'சரி, திரும்பு. தலையில் சூட்டிவிடுகிறேன்’என்றான் ஸ்ரீகிருஷ்ணன். அவள் வெட்கப்பட்டாள்; முகம் சிவந்தாள்; கண்களை மூடியபடி, திரும்பினாள். சில விநாடிகளுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தாள். அங்கே, கண்ணனையும் காணோம்; தலையில் பூச்சூடவும் இல்லை.

அதுதான் மாயக்கண்ணனின் லீலை!

No comments:

Post a Comment