Friday, January 23, 2015

உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.


உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல விரும்பினாலும் எனக்கு முன்னால் ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச் சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக வடிகட்டினபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?
1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது.
2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்..
3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
4.ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர் வாழ உடலுக்கும் மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.
5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் ரெண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.
இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்?
2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால் சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது . அதற்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு வந்தது என்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் பல நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில் அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது. தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம் மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர்க்கும் இது தேவையில்லை என்றும் சொல்லப்பட்டது.
அந்த காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும் காயத்ரி மந்த்ரத்தின் மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது .
அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே. காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே. உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில் எவ்வுயிர்க்கும் பொருந்தும். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர் பிரபஞ்சத்தில் சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற மனம் கவரும் சப்தம் கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம். வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம். அறிந்திருக்கலாம்.
தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி, மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம். இது மனித குலத்திற்கு கிடைத்த விலையில்லா பரிசு. சுத்தமான இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம் உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம் தருகிறது.
'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"
காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள். அது எவன் காதில் விழுகிறதோ அவனே புனிதமாகிறான். ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம் அல்லவா அது?.
காயத்ரி என்றால் என்ன? ''காய"" என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால் அது செய்யும் மூன்று வேலை: அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது, பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.
வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம் இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும் மற்றொன்று அதி உன்னதமானது. எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ் வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும் ஸ்கூல் வேன் .
நான் சொல்லவந்தது சொல்வது எல்லாமே ஒண்ணாம் க்ளாஸ் வாத்தியார் உபதேசம். காயத்ரி பற்றி தெரிய மகான்கள் எழுதியது பேசியது எல்லாம் படித்து கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். என்னிடம் அதை எதிர்பார்க்ககூடாது. ஏன் என்றால் நானே இன்னும் தேடுகிறேன். தேடத் தேட பூமிக்கடியிலே தோண்டினால் கிடைக்கும் தங்கம், வைரம் எல்லாம் போல நிறைய விஷயங்கள் புலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அள்ள அள்ள குறையவில்லை. அள்ளி மாளவில்லை.
காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும்ஓஜஸ் வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24 அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின் குரல் அது.
காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம் போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர் செய்வது வேதனையாக இருக்கிறது. அது மனத்தை தொடவில்லை.
மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு, ஒரு முறை இருக்கிறது. அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல் பலன். பழம் பழுக்கும், இனிய ருசி காரண்டீ . காயத்ரி மந்த்ரம் பற்றி இன்னும் கொஞ்சம் விஷயம் கைவசம் இருக்கிறது. டைம் கிடைத்தால் இன்னும் அப்புறம் சொல்கிறேனே.

1 comment:

  1. அற்புதமான பதிவு .சாலமன் பாப்பையா பாணியில் இப்படி சொன்னால் சொன்னாத்தானே நம்ம பயலுகளுக்கு விளங்குதுயா .

    ReplyDelete