Wednesday, January 28, 2015

ஆலயமும் அர்ச்சகர்களும்...

ஆலயமும் அர்ச்சகர்களும்...
ஆலயத்தைப் பற்றிய இவ்விஷயத்தில் அர்ச்சகரைப் பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்.
இறைவனுக்கும், பக்தனுக்கும் நடுவில் தரகரைப் போல அர்ச்சகர் எதற்கு என்று ஒரு சில அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் ஆலயத்தில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் தரகர் என்பவர் ஒரு பொருளை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் செயல்படுபவரே. அப்படியானால் ஆலயத்தில் விற்கப்படும் பொருள் என்ன? விற்பவர் யார்? என்பதெல்லாம் தெரியவில்லை.
மற்றொரு சாரார் அர்ச்சகர்கள் தாங்கள் உலக நன்மையின் பொருட்டு பூஜை செய்கிறோம் என்று கூறுகிறார்கள் அவர்கள். எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும் எங்களுக்காக அர்ச்சகர்கள் பூஜை செய்ய வேண்டாம். நாங்கள் செய்து கொள்கிறோம் என்கிறார்கள். இவர்கள் உலகம் என்பது இவர்கள் மட்டுமே என்று நினைப்பார்கள் போலும்.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற காரணத்தினாலோ என்னவோ? ஆனால் ஆலய வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஆகமங்கள் அர்ச்சகரைப் பற்றியும், ஆலய வழிபாட்டின் நோக்கத்தை பற்றியும் தெளிவாக விளங்குகின்றன.
ஆலய வழிபட்டின் நோக்கம்.
सर्वेशाम् रक्ष्णार्थाय ग्रामाधिशु विसेशध:
स्थापिधम् विढिना लिन्गम् सुरैर्वा मुनिबिर्नरै:
स्वयमुध्बूथ लिन्ग्न्ज प्रथिमान्जैस्वराथ्मकम्
थथ्परार्थम् समाक्याथम् सर्वेशाम् आथ्मन: फलम्.
சர்வேஷாம் ரக்ஷணார்த்தாய, க்ராமாதிஷு விசேஷத:.
ஸ்தாபிதம் விதிநா லிங்கம், சுரைர்வா முநிபிர்நரை:.
ஸ்வயமுத்பூத லிங்கஞ்ச ப்ரதிமாஞ்சேஸ்வராத்மகம்..
பொருள்.
{உலகிலுள்ள} அனைவரின் நல்வாழ்வின் பொருட்டு கிராமம் {நகரம், பட்டணம்} போன்ற இடங்களில் விஷேசமான முறையில் தேவர்களாலோ, முனிவர்களாலோ, அல்லது மனிதர்களாலோ முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தினையோ. தான் தோன்றியாகிய ஸ்வயம்பு லிங்கத்தினையோ, இறை தன்மை பொருந்திய சிலைகளையோ {பூஜை செய்வது} என்பது பரார்த்தம் எனப்படும். {அந்த பரார்த்த பூஜையின்} பலன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாகும்.
அர்ச்சகர் யார்? அவரது பணி என்ன?
சிவாலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஆதிசைவர்கள், சிவப்ராஹ்மணர், சிவேதியர், சிவ விப்ரர், சிவாசார்யர் போன்ற பல பெயர்கள் உண்டு. அவர்கள் பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜை செய்தவர்கள் பொருட்டு சிவபெருமானால் நேரடியாக தீக்ஷிக்கப் பெற்ற கௌசிகர் முதலான ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள் என்றும் பூஜையானது அவர்களாலேயே செய்யப்பட வேண்டும் என்பதும் ஆகமங்களும் பெரிய புராணமும் கூறும் செய்தி.
“பரார்த்த யஜனம் கார்யம், சிவ விப்ரைஸ்து நித்யச:”_சிவாகமம்.
परार्थम् यजनम् कार्यम्, सिव विप्रैस्थु निथ्यस:
பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜையானது ஆதிசைவரான சிவவிப்ரராலேயே தினமும் செய்யப்பட வேண்டும்.
எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே,
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}
தெரிந்துனரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்,
விரும்பியவர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம் புகழும் பெற்றியதோ._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}
மேற்கூறிய கருத்துக்களின் மூலம் அர்ச்சகர் தரகர் அல்ல என்பதும் அவர் சிவபெருமானின் ஆணையால் தான் உலக நன்மைக்கான பரார்த்த பூஜைகளைச் செய்கிறார் என்பதும் தெளிவாக விளங்குகிறது.
இனி ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.
“ அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி"
अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ्
आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि.
அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது.
இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே காரணம் என்கிறது.
மற்றொரு வாக்யம்
“அர்சகஸ்ய தபோயோகாத், தேவ சாந்நித்ய ம்ருச்சதி:”
अर्शस्य थपोयोगाथ्, धेव सान्निढ्य म्रुछथि.
மூர்த்திகளை {விக்கிரஹங்களை} எண்ணை தேய்த்து, நீராட்டி, வஸ்த்திரம் சாற்றி தன் குழந்தைகயைப் போல கவனிக்கும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பல்வேறு நேரங்களில் எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
“ஆவாஹனாதி காலேது ஆசார்யோ குரு ரூப த்ருத்
அபிஷேகாத்யலங்காரே ஆசார்யோ மாத்ரு ரூபவாநு,
நைவேத்ய தூப தீபாதௌ அர்ஸ்நே மந்த்ர ரூபவாநு
ஸ்தோத்ர ப்ரதக்ஷிணே காலே ஆசார்யோ பக்த ரூபவாநு. _சிவாகமம்.
आवाहनाथि कालेधु आशार्यो गुरु रूप ध्रुक्
अभिशेकाध्यलन्गारे थ्वाशार्यो माथ्रु रूपवानु
नैवेध्य प्रधक्षिणे कालेथ्वाशार्यो भक्थ रूपवानु.
ஆவாஹனம் முதலான காலத்தில் ஆச்சார்யன் குரு ரூபமாகவும், அபிஷேக, அலங்கார காலத்தில் தாயைப் போலவும், நைவேத்யம் முதலான சமயத்தில் மந்த்ர ரூபமாகவும், ஸ்தோத்ரம், மற்றும் ப்ரதக்ஷிண காலத்தில் பக்தனைப்போலவும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பாவித்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாக்யமோ இன்னும் ஒரு படி மேலாக 7 வித லிங்கங்களில் அர்ச்சகனும் ஒன்று என்று கூறுகிறது.
“ கோபுரே சிகரே த்வாரே, ப்ராகாரே பலி பீடகே.
அர்ச்சகே மூல லிங்கேச சப்த லிங்கஸ்ய தர்ஸநம்.”
गोबुरे सिखरे ध्वारे प्राकारे बलिपूटके
अर्श्के मूल लिन्गेश सप्थ लिन्गस्य धर्स्नम्.
அதையே "அர்ச்சகஸ்து ஹரஸ்ஸாக்ஷாத்" அதாவது அர்ச்சகர் சிவபெருமானே என்று ஒரு பழமொழி தெளிவு படுத்துகிறது.
இவ்வளவு பெருமை கொண்ட அர்ச்சகர்கள் இன்று கூலிக்கு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் பிழை அல்ல. காலத்தின் கோலமே என்பதையும் அதன் காரணத்தையும் கீழ்க்காணும் திருக்குறள் உணர்த்துகிறது.
“ ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்,
காவலன் காவான் எனின்"_திருக்குறள்.
இதையே பாரதியும் சொன்னான்
“ பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்த்திரங்கள்" என்று. அது உண்மையே என்பதை நம்மால் நிதர்சநமாக காணமுடிகிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஆண்டவனே துணை என்பதை உணர்ந்து அர்ச்சகர்கள் தன் கடமையை செவ்வனே செய்யட்டும்.

No comments:

Post a Comment