Thursday, September 3, 2015

இராமாயணத்தில் சாபங்கள்

இராமாயணத்தில் சாபங்கள் !!!
சிலரிடம் நாம் அவர்கள் எண்ணத்திற்கு மாறாக நடக்கும்போது, அவர்கள் கோபம் அடைந்து நமக்குச் சாபம் இடுவர். அது இந்த வகைகளில் இருக்கும் :-நீ உருப்பட மாட்டே,நீ தொட்டது துலங்காது,இனி நீ தெருத் தெருவாப் பிச்சையெடுத்துத்தான் சாப்பிடப் போறே,நீ மட்டுமல்ல, உன் குடும்பமே விளங்காமப் போகும்.ஆனால், நம்பினால் நம்புங்கள்… இவை அனைத்தும் நமக்குள் இருக்கும் சாபங்கள்.இந்தச் சாபங்கள் இன்றுதான் என்றில்லை. காலம் காலமாகத் தமிழன் சாபத்திற்குப் பயந்துள்ளான்!அத்துடன் சாபம் அவனைப் பாடாய்ப்படுத்தியுள்ளதும் உண்மை!சரி, சாபம் என்றால் என்ன?ஒருவருக்கு மற்றவர் தெரிந்தோ, தெரியாமலோ பாதிப்பை ஏற்படுத்தும் போது, அதனைப் பொறுத்துக்கொள்ளஇயலாமல், மனம் வருந்தி பாதிப்பு ஏற்படுத்தியவனைக் கடும் கோபம் கொண்டு சபிப்பதுதான் சாபம்!இதில் ஓர் ஆச்சர்யம் என்னவென்றால், சாபம் கொடுத்தவர்தான் சாபம் அகலவும் வழிகூற இயலும்!ஒரு நண்பரை, ஒரு சந்தர்ப்பத்தில்நான் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தேன்.அப்போது என்னுடைய மற்றொரு நண்பர் என் காதில் கிசுகிசுத்தார்,அவனுக்குக் கரிநாக்கு. அவன் சாபமிட்டால் பலித்துவிடும் ஜாக்கிரதை. ஆக அவனிடம் விளையாட்டு வேண்டாம் என்றார். உடனே நான் சமாளித்து, பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தேன். ஆனால், ஒரு விஷயம் தெரியுமா? எல்லோரும் சாபம் கொடுத்தால் பலித்துவிடாது. அப்படியானால் யார் கொடுத்தால் பலிக்கும்?இறைவன், தவவலிமை மிக்கவர், துறவி, அப்பாவி மக்கள், உத்தமிகள் கொடுக்கும் சாபம் பலித்துவிடும் என்கிறது ஒரு பழைய தமிழ் நூல்.இவர்களுக்குச் சாபசரத்தி எனவும் பெயர் உண்டாம்.இதற்கு உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் வம்பப்பரத்தையர்முதலியோரைக் கோபத்தில், முதுநரியாகப் போகக் கடவுது எனச் சபிப்பார். அந்த நிமிடமே முதுநரியாக மாறி அந்த நபர்கள் ஊளையிட்டபடி ஓடிச் செல்வர்குபேரன், இந்திரன் சாபம் இடுபவர்கள்.அந்த இந்திரனையே கௌதம முனிவர் சபிப்பதாகக் கதை உண்டு.ராமாயணத்தில் ஏராளமான சாபக் காட்சிகளைக் காணலாம். ஆனால், மகாபாரதம் சூதும் வாதும் நிறைந்தது. அங்கு சாபம் கொடுப்பதோ, நீங்குவதானக் காட்சியோ அபூர்வம்!இந்த ராமாயணம் வர அடிப்படைக் காரணமே சாபம்தான்.ஒரு சமயம், தயரதன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். அங்கு ஓடும் நதியொன்றில் யானை தண்ணீர் உறிஞ்சிக் குடிப்பது போல் சப்தம் வரும். உடனே அதனைப் பார்க்காமலே இருந்த இடத்திலிருந்து தசரதன் அம்பு விட அது உரிய இடத்திற்குப் போய் நச்செனத் தைக்கும். ஆசையுடன் நிகழ்ந்ததைப்பார்க்கச் சென்ற தசரதனுக்கு அதிர்ச்சி! அங்கு ஓர் இளைஞன், நதியில் குடத்தால் தண்ணீர் மொண்ட நிலையில் அம்பு தைத்துத் துடித்துக் கொண்டிருந்தான்.உயிர் பிரியும் நிலையில் அவனைத் தூக்கியபடி, தண்ணீர் நிரம்பிய குடத்தையும் எடுத்துக் கொண்டு, அந்த இளைஞனின் பெற்றோரிடம் தசரதன் செல்கிறான்.அங்கு வயதானப் பெற்றோர்! தந்தையோ ரிஷி. அவர்முன் மகன் இறக்க, அதேசமயம் தண்ணீர் கொடுத்து, தன் தவறு அறியாமல் நடந்தது எனத் தசரதன் மன்னிப்புக் கேட்க, அவனுக்கு மன்னிப்பு அளிக்கும் அதேசமயம், மகனை இழந்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல், நீயும் பிற்காலத்தில் மகனைப் பிரிந்துத் துயரத்தில் மூழ்குவாய் என அந்த முது ரிஷி சபித்தாராம்.இந்த இடத்தில் தசரதனுக்குச் சாபம் மிகுந்த வருத்தத்தைத் தந்தாலும், மறுபுறம் லேசான மகிழ்ச்சியும் ஏற்பட்டதாம். காரணம், தசரதன் அதுநாள் வரை பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தான். ஆனால், இந்த ரிஷியின் கூற்றுப்படி, எனக்கு மகன் உண்டு. ஆக அவன் முதலில் வரட்டும் மீதியைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தான்!பிற்காலத்தில் விசுவாமித்திரரின் சாபத்துக்குப் பயந்துதான் தன்னுடைய ராம & லட்சுமணனைக் காட்டிற்கே அனுப்புகிறான் தசரதன்!* இதேபோல் கைகேயி கேட்ட வரத்தை நிறைவேற்ற ராமன் காட்டிற்கு வனவாசம் புறப்பட்டபோது, தன்னைச் சபித்த ரிஷியின் சாபம் பலித்துவிட்டதே…எனத் தசரதன் கூடுதலாக வருந்தினானாம்.* விசுவாமித்திரர்நடத்திய யாகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த ராமனையும், லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு அம்முனிவர் மிதிலை நோக்கிச் செல்கிறார். வழியில் ஒரு பெண் சிலையாக இருக்கிறாள். அதனை உன் காலால் மிதி என்கிறார் விசுவாமித்திரர். பெண்ணைக் காலால் தொட மாட்டேன் எனக் காலை உயர்த்துகிறான் ராமன்! அவன் கால் தூசிபட்டு, அகலிகை எழுகிறாள்! அப்போது அங்கு கௌதமர் வருகிறார். ராமர் மூலம் சாப விமோசனம் பெற்ற அகலிகை முனிவருடன் செல்கிறார். இந்திரன் அகலிகை மீது ஆசைப்பட, அகலிகையும் பதிலுக்கு ஆசைப்பட, பின்னர் இது தெரிய வந்ததும், அகலிகையைக் கல்லாகப் போகக் கடவது எனச் சபிக்கிறார் கௌதமர்.இந்திரனும் உடல் முழுவதும் கண்கொண்டவனாகச் சபிக்கப்படுகிறான்.பிறகு அவன் இறைவனை வணங்கிச் சாபவிமோசனம் பெறுகிறான்! அகலிகை ராமனால் எழுகிறாள்!ஒரு சமயம் வாலிக்கும் துந்துபி என்பவனுக்கும் கடும் சண்டை நிகழ்கிறது. இறுதியில் துந்துபியைக் கொன்று, தலையைச் சுற்றித் தூக்கி எறிகிறான் வாலி. அது மதங்க முனிவர் ஆசிரமத்தில் போய் விழுகிறது. இதனால் வெகுண்ட மதங்க முனிவர், இந்த மலைக்கு நீ வந்தால் உன் தலை சுக்குநூறாகும் எனச் சபிக்கிறார் வாலியை!இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான் சுக்ரீவன். அவனுக்கும் வாலிக்கும் சண்டை வந்து பிரியும்போது, வாலி நெருங்க இயலாத மதங்க முனிவர் இருந்த மலைக்கு வந்து தங்குகிறான்.இராவணன், புஞ்சிகன் தலை என்ற தெய்வாம்சம் பொருந்திய பெண்ணை, அவள் பிரம்மனை வணங்கச் சென்று கொண்டிருக்கும்போது, கையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்துகிறான்! இதனை அறிந்த பிரம்மன், இராவணனைச் சபிக்கிறான். இனி… உன்னை விரும்பாத ஒரு பெண்ணை நீ தொடுவாயானால், உன் தலை வெடித்துச் சிதறும் எனக் கூறுகிறான். இதனால்தான் சீதையைத் தொடாமல் ராவணன், மண்ணோடு பிளந்துத் தூக்கியதும் பின்னாளில் அசோக வனத்தில் சீதையுடன் தன் ஆசைக்கு இணங்கும்படி வேண்டுவதும், மிரட்டுவதும் தொடர்கிறது.ராமன் காட்டில் கவுந்தன் என்ற அரக்கனைக் கொல்கிறான். அவனோ உடனே சுய உருவம் பெற்று, ராமனை வணங்கி, விண்ணுலகம் செல்கிறான்.இதேபோல் மற்றொரு சமயம் விராதன் என்பவன் சீதையை, கானகத்தில் கவர்ந்து செல்கிறான். அவனுடன் ராம & லட்சுமணர் போரிட்டு, சாய்த்து அவன் கை,கால்களை வெட்டும்போது, அவன் சாபம் நீங்கிச் சுயரூபம் பெற்று விண்ணுலகம் செல்வான்!அனுமன் இலங்கைக்குச் சென்றபோது, அங்கு காவல்புரியும் ஒரு தேவதை அவனைத் தடுப்பாள். வெகுண்ட அனுமன் அவளைத் துவம்சம் செய்ய, அவள் சுயம்பிரபை என்ற சுயஉருவம் அடைந்து விண்ணுலகம் செல்வாள். இதற்கு ஒரு கதை உண்டு.ஒருசமயம், மயன் விரும்பிய அரம்பை என்ற பெண்ணை அடைய, சுயம்பிரபை உதவுவாள். இது அறிந்து இந்திரன் அவளை, நீ இலங்கையில் ராட்சசியாகக் காவல்செய்துவா, அனுமன் வந்து உன் சாபம் தீர்ப்பான் எனக் கூறி அனுப்பிவிடுவான்! மந்திரவாதிகள் விடும் சாபம் இவற்றில் வராது. அவை அட்டூழியமானவை. உருப்பட மாட்டே என்ற சொல்லே சிலருடைய வாழ்க்கையை மாற்றி, போராடி வெற்றி பெற வைத்துள்ளது. இது இன்றைய வரலாறு! ஆக… சாபம், நம் நாட்டு மக்களுடன் காலம் காலமாய்த் தொடர்புடையது. மற்றவர்களுடன் பேசும்போது, பண்பைக் கடைப்பிடித்து, சாபத்திலிருந்துவிடுபடுவதுடன்… நல்வாழ்க்கைக்கும் வழிசெய்து கொள்வோம்!.

No comments:

Post a Comment