Saturday, September 5, 2015

பிராமணர்களும் சாஸ்திர நம்பிக்கைகளும்

பிராமணர்களும் சாஸ்திர நம்பிக்கைகளும்
உழைப்பும் ஒழுக்கமும் ஒருமித்த வாழ்க்கையை இவ்வுலகத்தில் பிறந்தவர்கள் வாழ்வதற்கு உருவானதுதான் நாம் பின்பற்றிவரும் நெறிமுறைகளும் நடைமுறைகளும். செய்யும் தொழில் எதுவாயினும் பொய்யும் புரட்டும் இல்லாமல் அவை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்ததுதான் அவரவர்கள் தங்களுக்கென ஏற்படுத்திக்கொண்ட பழக்க வழக்கங்கள் ஆகும். மிகுந்த ஈடுபாட்டுடன் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்பும் பிராமணர்கள் தங்களுக்கென இவ்விதம் அமைத்துக் கொண்ட நல்வாழ்க்கை நடைமுறைகளே சாஸ்திரம் எனப்படும்.
“உறுதியாகச் சொல்லப்பட்டது” என்ற மேலோட்டமான பொருள்தரும் சாஸ்திரங்கள் பொதுவான சட்ட நூல்கள் போன்றவை. மிகப் பெரிய அளவில் 40 சம்ஸ்காரங்கள் என்ற அட்டவணையின் கீழ் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நடைமுறைகள் எவை, எவை என்பதைப் பற்றியும் அதில் என்ன என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. பல தருணங்களில் நாம் உட்பட பலர் அதைப் பற்றி சொல்லியிருப்பது இங்குக் குறிப்பிடத்தகுந்தது.
“சாஸ்திரச்ச சுகாயச்ச” சாஸ்திரங்கள் சுகம் அளிப்பவை என்ற பிராமண வாக்கின்படி சாஸ்திரங்கள் நமது மேன்மையான வாழ்விற்கு வழிகாட்டுபவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் சாஸ்திரங்களின் அடிப்படையில் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் சில நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவற்றால் நாம் அடையும் - குறிப்பாக இக்காலத்தில் - சங்கடங்கள் பற்றிய நம் சிந்தனையே இக்கட்டுரையின் சாராம்சமாகும்.
மாணிக்கம், மரகதம், வைடூரியம் ஆனாலும் காலம் செல்லச் செல்ல அவற்றைச் சுற்றி அவசியமற்றக் குப்பை கூளங்கள் சேர்வது தவிர்க்க முடியாதது. பெட்டியில் வைத்து பூட்டிவைத்தாலும் தொட்டுத்தொட்டு அதைத் தினமும் துடைத்துவைத்தாலும் கயிற்றால் கட்டி, கனமான துணியினால் சுற்றி வைத்தாலும் அவற்றுள் தூசும் தும்பும் எட்டி பார்ப்பது நிச்சயம்தான். எத்தனை உயரிய கருத்துகளின் அடிப்படையில் சாஸ்திர நம்பிக்கைகள் அத்தனையும் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பித்தளைப் பாத்திரத்தில் பிடிக்கும் பச்சைப் பாசிபோல நம்மிடையே புகுந்து நம் சிந்தனையைக் கொச்சைப்படுத்தும் சில குறிப்புகளை இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.
எல்லாமே மோசம் எதுவுமே பகுத்தறிவு இல்லை என்று சொல்லும் எல்லோரும்போல எதையும் நாம் இழிவுபடுத்தவில்லை. கல்லாத ஒருவன் கவிதையைக் கேட்டு “கொல்லாதே என்னைக் கொடும் வார்த்தைகளால்” என்று நில்லாமல் அங்கிருந்து நீங்கிவிடும் நிலைபோன்றது அல்ல நாம் சொல்லும் விமர்சனங்கள் என்பதை முதலில் வாசகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விட்டுவிட இயலாமல் விடாப்பிடியாக நாம் கடைப்பிடிக்கும் சில சாஸ்திரங்கள் பட்டுப்போய்ப் பாழ் மரமாய் நிற்கும் ஒன்றைக், கட்டிப்பிடித்து இதன் பசுமையைப் பார் என்று சுட்டிக்காட்டும் கதையாக, சில நம்பிக்கைகள் நம்மிடையே விளங்குவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “உனக்குப் பிடிக்காவிடில் ஓரம்போ எனக்குச் சரி என்று இது படுகின்றது அவ்வளவுதான்” என்று பிணக்குக் காட்டும் நம் சமூக பெரியவர்களும் தாய்மார்களும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு கருத்து நிச்சயம் உள்ளது. காலம், தேசம், சூழ்நிலை மற்றும் தேவைகளுக்கேற்ப எல்லாமே இவ்வுலகில் மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறது.
நம் நலனுக்கு நம்மால் ஏற்படுத்திக்கொண்ட நம்பிக்கைகள் நம் நலன்களின் திசை மாறும்பொழுது மாற்றங்களை அடைவது இயற்கை. பிராமணர்களும் தினசரி வாழ்க்கை நடைமுறைகளும் உடை, உணவு, உத்யோகஸ் தலம் ஆகிய ஒவ்வொரு அம்சங்களும் மாறிவிட்ட தற்காலத்தில் சில நம்பிக்கைகளின் அடிப்படைக் காரணங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் மாற்றம் கொள்வது அல்லது மறைந்து போவது இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கருத்துகளின் அடிப்படையில் மட்டும் நாம் தினசரி வாழ்க்கையில் காணும் சில சாஸ்திர நம்பிக்கைகள் பற்றிச் சற்று ஆராய எண்ணுகிறோம்.
நம்பிக்கை எண் 1.
வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒற்றைப் பிராமணன் எதிரில் வரக் கூடாது.
எதன் அடிப்படையில் ஏற்பட்டது. இதன் சாஸ்திர பிராமணம் எந்த நூலில் உள்ளது என்பதை நாம் எண்ணி எண்ணிப் பார்த்தாலும் விடை தெரியா வினாவாகவே நமக்கு விளங்குகிறது. வேதம் ஓதி நாள் முழுவதும் அதன் தொடர்புடைய விஷயங்களைப் படித்த பழைய காலத்தில்கூட இந்த நம்பிக்கையின் அடிப்படையை நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. மனைவி மக்கள் சகிதம் மகிழ்ச்சியுடன் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் அந்த விசேஷ காலத்தில் எனக்கு ஏதாவது தானம் செய் என்று திருவோட்டை ஏந்திக்கொண்டு எதிரில் வந்தானா ஏதாவது ஒரு ஒற்றைப் பிராமணன் சுப வஸ்துக்கள் எல்லாம் இரண்டு இரண்டாகவே காணப்படுவதால் சுபத்தின் அடையாளமாகப் பிராமணர்களும் இரண்டாகவே காணப்பட வேண்டும் என்பது தாத்பரியமா வேறு ஏதாவது ஓன்றுதான் இணைக்கப்பட்டு விசுவரூபம் எடுத்த வெற்று நம்பிக்கையா?
எதுவாயினும் அடிப்படை இக்காலத்திற்கு இந்த நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதில் எந்தப் பொருளும் இருப்பதாகக் கருதவில்லை. நல்ல எண்ணத்துடன் நம் வீட்டின் வாசலில் வந்து நம்மை வாழ்த்தும் ஒற்றைப் பிராமணர்களைக் கண்டு மகிழ்ச்சி அடையாமல் கடுகடுப்பான முகத்துடன் மீண்டும் உள்ளே சென்று தண்ணீர் குடித்து, மனத்தவிப்பை விழுங்கி, இன்னும் சற்று நேரத்திற்குப் பிறகே வெளியே கிளம்பும் எண்ணற்ற பிராமணர்களை நாம் அறிவோம். போகும் வேளையில் உள்ளே புகுந்துவிட்டு ஆகாத தீய சக்தியால் இந்த மனிதரை நினைக்கும் இந்த வழக்கத்தை இனிமேலும் நாம் பின்பற்றத் தேவையில்லை என்பதே நமது நிலையாகும்.
நம்பிக்கை எண் 2.
சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது
இந்த நம்பிக்கையின் மூலநம்பிக்கை ஒன்று உள்ளது. சனிப் பிணம் தனியாகப் போகாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையிலும் அடுத்தகட்ட நம்பிக்கையாகச் சனிக்கிழமையில் மருத்துவமனையில் சேர்வதைச் சிலர் நிறுத்திவைக்கிறார்கள். உச்சக்கட்ட வியாதியில் மருத்துவமனையின் உள்ளே சென்று மிச்சமிருக்கும் கொஞ்சநஞ்ச உயிரும் போய்விடுவது எதிர்பார்க்கக்கூடிய ஒரு இக்கட்டே ஆகும். போவது ஒரு உயிர் என்பதோடு அல்லாமல் அதனுடன் சாவது வேறு யாராவது இருந்து சனிக்கிழமை சரித்திரத்தை அரங்கேற்றிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில்தான் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கிறோம் எனக் கருத வேண்டியிருக்கிறது. சாதாரண காய்ச்சல், சளி, ஜலதோஷம் பொறுத்துக்கொள்ளக்கூடிய புறமுதுகு வலி, சிறு காயம் போன்ற சில்லரை உபாதைகளுக்குத் தீர்வு காணும்பொழுது நீங்கள் வேண்டிய நேரத்தையும் நீக்க வேண்டிய நாள், நட்சத்திரத்தையும் பார்த்துச் செயல்படுங்கள்.
அதனால் ஒன்றுமில்லை. ஆனால் அவசர சிகிச்சை அலட்சியப்படுத்த முடியாத வியாதி இன்று வரும்பொழுது எண்ணாதீர்கள் எதையும் என்பதே நம் அறிவுரை. ‘நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை’ என்ற திருமூலரின் வார்த்தைகளை மனதில்கொண்டு ஒரு கணமும் தாமதியாமல் மருத்துவமனைக்கு நம் உடன்பிறப்புகள் செல்ல வேண்டும். இப்படிச் செய்வது எந்த சாஸ்திர நம்பிக்கைக்கும் எதிரானதல்ல. நாள் நட்சத்திரம் பார்த்து நடத்துவதற்கு அறுவை சிகிச்சையும் கிரகப்பிரவேசமும் வகை சார்ந்தது அல்ல.
நம்பிக்கை 3:
வெள்ளிக்கிழமைகளில் வெண்ணெய் காய்ச்சக் கூடாது
புதிதாகத் திருமணம் ஆன தற்காலத் தம்பதிகளுக்குச் சற்றுப் புதிதாகத் தோன்றும் இந்த வழக்கம் சாஸ்திரபூர்வமாகப் பல குடும்பங்களில் சாஸ்வதப்படு¢த்தப்பட்ட விஷயம். வெண்ணெய் மட்டுமின்றி எண்ணெய் வாங்குவதும் குழம்புப் பொடி, ரசப் பொடி, மிளகாய்ப் பொடி வீட்டிலோ வெளியிலோ அரைப்பதும் முற்றிலுமாகச் செய்யக் கூடாத செயல்களாக நம் சகோதரிகள் கருதுவது எதற்காக என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவேளை இந்தச் செயல்கள் எல்லாம் பூஜை, புனஸ்காரம், சிறப்பு வழிபாடு எல்லாம் அதிகம் செய்யப்படுகின்ற வெள்ளிக்கிழமை சூழ் நிலைக்கு வினோதமாக இந்த அரைத்தல், இடித்தல் போன்ற செயல்கள் நினைக்கப்பட்டிருக்கலாம். வெண்ணெய் காய்ச்சி, நெய் உருக்கி விசேஷமாகச் செய்யும் சில ஹோமங்கள் அமங்கல, அபர காரியங்கள் தொடர்புடையவையாக இருப்பதால் இச்செயல் வெள்ளி அன்று தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது இச்செயல்கள் எல்லாம் செய்வதற்கு அன்று கால அவகாசமும் பணியாளர்கள் உதவியும் இல்லாமல் இருந்திருக்கலாம். எந்தக் காரணத்தின் அடிப்படையில் இந்தப் பழக்கம் நம்மிடையே வந்து ஒட்டிக்கொண்டிருந்தாலும் இப்போது இது விட்டுவிட வேண்டிய பழக்கம் என்றுதான் நாம் எண்ணுகிறோம். நீண்ட நாள் செய்யவில்லை என்ற காரணத்திற்காக மட்டும் இனிமேலும் இதை வெள்ளிக் கிழமைகளில் இதைச் செய்யாமல் இருக்க வேண்டாம் என்பதே நம் அபிப்ராயம். இம்மாதிரி சிறிய செயல்களுக்கு நாம் பார்ப்பது அவசிய மற்றது என்பதே நாம் சொல்ல வந்த கருத்தாகும்.
நம்பிக்கை 4:
செவ்வாய்க்கிழமைகளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
பிராமணர்களின் அனைத்துப் பிரிவினர்களிடத்துமேகூட முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த நம்பிக்கையின் அடிப்படையாகக் கருதுவது ஒரு விஷயம் மட்டுமே. செவ்வாயோ வெறும்வாயோ என்று தென்னிந்திய பிராமணர்களால் திரும்பிப் பார்க்காத இந்நாள்தான் மங்கல்வார் என்று மனதார வட இந்திய பிராமணர்களால் வரவேற்கப்படுகிறது.
நமது கருத்துப்படி ஜாதகக் கட்டங்களில் செவ்வாய்க் கிரகம் நன்மை தராத தோஷம் உள்ள தீமை செய்கிற ஒரு கிரகம் ஆகும். இந்த ஜோதிட நம்பிக்கையின் பிரதிபலிப்பாக அந்தக் கிரகத்தின் தினமாக அறியப்படும் செவ்வாய், கல்யாணம் போன்ற சுப காரியங்கள் மட்டுமின்றிக் கடைக்குப் போய்ப் புதிய துணிகள் வாங்குவது வரை அனைத்துச் செயல்களும் நன்மை தராது என்ற நம்பிக்கையே இவ்விஷயத்தின் அடிப்படையாகும். சலூனுக்குப் போய் முடிவெட்டிக் கொள்ளக்கூடாது என்ற நிலையில் சுப காரியங்கள் விலக்கப்படுவது வியப்பில்லை. வேறு எந்த அறிவியல் முகாந்திரமும் இல்லாத இவ்விஷயத்தில் இனிமேலாவது சற்று விட்டுக்கொடுத்துப் பிற சூழ்நிலைகளை அனுசரித்து நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
நாம் இதுவரை எடுத்துக்காட்டிய சில விமர்சனங்கள் எதிர்மறைக் கருத்துகளாக எவர் மனத்திலும் இடம்பெறக் கூடாது. பிராமணத் தனித்தன்மையைப் பாதுகாக்கப் பாடுபடும் இதழில் அவற்றின் சில அம்சங்களைப் பாழ்படுத்தும் நோக்கில் கருத்துகள் இடம்பெறக் கூடாது என்று அடம்பிடிப்பவர்களுக்குத் திடமாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். செவிமடுத்துச் சிந்தையில் ஏற்றுக் கொள்ளத்தக்க இக்கருத்து, சற்று கவனிக்கப்பட வேண்டும்.
பிராமணத் தனித்தன்மை என்பது உடை, உணவு, பின்பற்றும் நடைமுறைகள், கைக் கொள்ளும் நம்பிக்கைகள் இவை எல்லாம் உள்ளடக்கிய ஒரு தனி உருவகம் என்பதை நாம் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த உருவகத்தின் உள்ளடக்கிய உடை, உணவு, மொழி செய்யும் வேலை ஆகிய அனைத்து அம்சங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டதும் அதை மனதார ஏற்றுக்கொண்டதும் சரியாகும்பொழுது கால தேச எல்லைக்கு உட்பட்டு நம்மைக் கடந்து போக வேண்டிய சில நம்பிக்கைகளை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பதில் என்ன பயன்? சுடிதார் அணிந்து எதிரே வந்தால் கடுமையான வார்த்தைகளால் சினந்து மடி போய்விட்டது என்று துடித்த மாமாக்களும் மாமிகளும் ‘என் பெண்ணுக்குப் புடவையே கட்டத் தெரியாது. எப்போதும் சுடிதார்தான். ஆனால் ஆச்சாரத்தில் ஒரு இம்மிகூட விட்டுக்கொடுக்காத அருமையான குணம்’ என்று மார்தட்டி அவள் பேர் சொல்லும் நாம் மேற்சொன்ன சில நம்பிக்கைகளை மட்டும் விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது பெருமைதரும் செயல்தானா?
நாம் விட்டுவிடலாம் என்று இதுவரை விமர்சித்த நம்பிக்கைகள் எல்லாம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் 40 சமஸ்காரங்களில் அடங்கியவை அல்ல என்பதை அறுதியிட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். பும்சவனம், பிரசவம், நாமகரணம், உபநயனம், விவாகம் மற்றும் அபர காரியங்கள் ஆகிய எந்தவொரு விஷயத்தின் தொடர்பாக நம்மிடையே இருந்துவரும் நம்பிக்கைகள் பற்றியும் நாம் எந்த எதிர்மறைக் கருத்தையும் கூறவில்லை. சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நம்பிக்கையோடு நிறைவேற்றுவது என் கடமை என்ற பிராமண தர்மக் கோட்பாட்டின் கீழ் நாம் கட்டுப்பட்டுதான் கருத்துகளை வெளிப்படுத்துகிறோம். அவற்றில் ஏற்பட வேண்டிய மாறுதல்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் நாம் எதையும் குறிப்பிட விரும்பவில்லை.
சமஸ்கார நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகியவற்றைத் தாண்டிய சாதாரண வாழ்க்கைமுறையில் இடைக் காலத்தில் வந்து ஏதோ சில அவசியங்களினால் நம்மோடு இணைத்துக்கொண்ட, இப்போது சிறிதும் தேவையில்லாத அதே சமயத்தில் இன்னல்களையும் சங்கடங்களை மட்டும் நாம் விமர்சித்துள்ளோம். திறந்த மனதுடன் தெளிவான சிந்தனையில் ஆட்பட்டு இவற்றைப் படித்து தங்கள் கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்ளுமாறு வாசகா¢களைக் கேட்டுக்கொள்கிறோம்.
சொல்ல மறந்த விஷயங்கள் ஆயினும் கல்லாத சில நூல்களில் காணப்படும் கருத்துகளாயினும் இது பற்றிய எல்லா நேர்மறை எதிர்மறைக் கருத்துகளையும் எழுதி அனுப்பி நம்மைக் கற்பிக்க எல்லோரையும் கனிவோடு அழைக்கிறோம்.

No comments:

Post a Comment