Saturday, November 7, 2015

சடங்குகளில் ஏதும் அர்த்தம் உள்ளதா?

நம் கலாச்சாரத்தில் சடங்குகள் என்ற பெயரில் பல அர்த்தமற்ற நடைமுறைகள் இருப்பதைக் காணமுடிகிறது. இவற்றையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்ற ஆவல் நம் சிந்தனையில் பிறப்பது சகஜமே. ஆனால், அதற்கு சரியான தீர்வு எது? சத்குரு தன் வாழ்க்கையில் சடங்குகள் குறித்து தான் பெற்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். சத்குரு: அமானுஷ்ய சடங்குகள் சிறு வயதிலிருந்தே, சடங்குகள் என் வாழ்க்கையின் ஓர் அம்சமாக இருந்ததில்லை. ஆனால், என்னைச் சுற்றி நடந்த சடங்குகளை நெருக்கமாகக் கவனித்து வந்திருக்கிறேன். நம்புவதற்கு அரிதான அமானுஷ்ய சடங்குகளில் சில மட்டும் என்னைக் கவர்ந்து இருக்கின்றன. சடங்குகள், சில நெறிமுறைகளை வாழ்க்கையில் புகுத்துகின்றன. ஓரளவு விழிப்பு உணர்வை எட்டும்வரை சில நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது அத்தியாவசியமாகிறது. அரிசியால் செய்த ஒரு பொம்மை 3 அடிகள் எடுத்து வைத்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். இதுபோன்ற தந்திரங்கள் தொடர்பான சடங்குகள் தவிர, மத ரீதியான சடங்குகளோ, சமூகச் சடங்குகளோ என்னைக் கொஞ்சமும் ஈர்த்தது இல்லை. எந்தச் சடங்கிலும் அதன் அர்த்தம் தெரியாமல் கலந்து கொண்டது இல்லை. மந்தை ஆடுபோல் மற்றவர் செய்வதைச் செய்யும் எந்தச் செயலிலும் எனக்கு உடன்பாடு இல்லை. மூடத்தனம்தான் இருப்பதிலேயே மிக மோசமான குற்றம், விழிப்புணர்வுடன் வாழும்போது எதுவும் சடங்காக உருக்கொள்வது இல்லை. இளம் வயதில் அர்த்தம் விளக்க முடியாத சடங்குகளை எதிர்த்திருக்கிறேன். பெரும்பான்மையானவர்கள் ஒரே வழியில் செல்லும்போது அதைத் தினந்தோறும் மறித்துக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை என்று, மாற்ற முடியாதவற்றை அவற்றின் போக்கிலேயே விடும் மனமாற்றம் பிற்பாடு நிகழ்ந்தது. சடங்குகள், சில நெறிமுறைகளை வாழ்க்கையில் புகுத்துகின்றன. ஓரளவு விழிப்பு உணர்வை எட்டும்வரை சில நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது அத்தியாவசியமாகிறது. ஆனால், நான் சடங்குகளைப் பரிந்துரைப்பது இல்லை. என் வாழ்க்கை விழிப்புணர்வுடன் இயங்குவதால், சடங்கு முறைகள் என் வாழ்வின் அங்கமாக மாறியது இல்லை. சடங்குகள் ஏன் துவக்கப்பட்டன? அவற்றின் பின்னணியில் புதைந்திருக்கும் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்த பிறகு, விழிப்புணர்வுடன் அவற்றை அணுகினேன். சடங்குகள் விஞ்ஞானப்பூர்வமானவையா? பெரும்பான்மையான சடங்குகள், விஞ்ஞான பூர்வமான நோக்கத்துடன் துவக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையால், அடிப்படை கலைந்து அர்த்தமற்ற சக்கை மட்டும் தங்கிவிட்டது. பிரார்த்தனைகள் கூட அவற்றின் அடிப்படையை இழந்து சடங்காகச் செய்யப்படுவதை எல்லா மதங்களின் ஆலயங்களிலும் நீங்கள் காணலாம். ‘தந்த்ரா’ என்னும் தந்திர முறையில் வெளியில் இருக்கும் பல பொருட்களைக் கொண்டு ஒருவித சக்தி நிலையை உருவாக்குவதற்குச் சடங்குகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. அக்பர் ஒருமுறை வேட்டைக்காகக் காட்டுக்குப் போயிருந்தபோது, ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களைப் பிரிந்து வெகுநேரம் தனியே வந்துவிட்டார். மாலை நேரம் வந்தது. ஐந்து வேளையும் தொழுகை செய்யும் வழக்கம் இருந்ததால், அக்பர் பூமியில் மண்டியிட்டுத் தொழுகையில் ஈடுபட்டார். மரம் வெட்டச் சென்று, வீடு திரும்பாத கணவனைத் தேடிக்கொண்டு, அந்த நேரத்தில் அங்கே வந்தாள் காட்டில் வாழ்ந்து வந்த ஒரு பெண். தொழுகையில் இருந்த அக்பரைக் கவனிக்காமல் வந்ததால், அவர் மீது இடறினாள். ஆனால், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் அவள் சுதாரித்துச் சென்றுவிட்டாள். மாமன்னனாகிய தன் மீது மோதியதும் அல்லாமல், மன்னிப்புகூட கேட்காமல் செல்லும் அவளைக் கண்டு அக்பர் மிகவும் கோபம் கொண்டார். ஆனால், தொழுகையை முறிக்க விரும்பாமல் தொடர்ந்தார். அந்தப் பெண்மணி கணவனுடன் திரும்பி வந்தபோது, அக்பர் தன் தொழுகையை முடித்திருந்தார். அவர்களைக் கோபமாக நிறுத்தினார். “இந்த நாட்டின் மன்னன் நான் என்று தெரியுமா? தொழுகையில் இருந்த என்னை இடறிவிட்டு, மன்னிப்புகூடக் கேட்காமல் போகிறாயே, என்ன திமிர்?” அந்தப் பெண் அயராமல் சொன்னாள், “என் கணவனைத் தேடி சென்றபோது மன்னனையே நான் கவனிக்கவில்லை. ஆனால், கடவுளை எண்ணித் தொழுகையில் இருந்த உங்களால், சாதாரண மரவெட்டியின் மனைவியை எப்படிக் கவனிக்க முடிந்தது?” விழிப்புணர்வு இன்றி, எதையும் சடங்காகச் செய்கையில் அதன் நோக்கம் இப்படித்தான் பழுதுபட்டுப் போகிறது. பிழைப்பிற்காக அல்ல சடங்குகள் தங்கள் பிழைப்புக்காக சடங்குகளை மற்றவர் மீது திணிப்பவர்களிடம் ஒன்று சொல்வேன். முன்பு வேறு வழி இல்லாதபோது உங்கள் வாழ்க்கையை நடத்த நீங்கள் இதைத் தொழிலாக்கிக் கொண்டு இருக்கலாம். ஆனால், இன்றைக்குப் பிழைப்பு நடத்த எத்தனையோ வழிமுறைகள் வந்துவிட்டன. காலம் மாறிப் போனதில் அர்த்தம் இழந்துவிட்ட சடங்குகளை இன்றைக்கும் பிழைப்புக்காக நடத்துவது தேவையற்றது. ‘தந்த்ரா’ என்னும் தந்திர முறையில் வெளியில் இருக்கும் பல பொருட்களைக் கொண்டு ஒருவித சக்தி நிலையை உருவாக்குவதற்குச் சடங்குகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. யோகா மற்றும் தியானம் புறத்தைச் சார்ந்தது இல்லை. அங்கே சக்தி நிலையை உருவாக்குவதற்கு உங்களுடைய உட்புறமே முழுமையாக உதவி செய்கிறது. உங்கள் உடலும், உயிருமே சக்தியைத் தயாரிக்கும் தொழிற்கூடமாகின்றன. தந்திர முறைகளில் இருக்கும் வெளிப்படையான கவர்ச்சி யோகாவில் இல்லாமல் போகலாம். ஆனால், தந்திர முறைகளைப் போல் அல்லாமல், யோகா முற்றிலும் நம்பகமானது. அதற்காக இறந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சடங்குகள் எல்லாவற்றையும், வாழ்விலிருந்து ஒழித்துவிட வேண்டும் என்று நினைப்பதும் தவறு. ஒரு சடங்கு எதற்கு துவக்கப்பட்டது. அந்த நிலை இன்றைக்கும் சமூகத்தில் தொடர்கிறதா என்று கவனிக்க வேண்டும். மேலும், அதை அர்த்தம் உள்ளதாக மாற்ற எப்படி உயிரூட்டுவது என்று பார்க்க வேண்டும். அதனால்தான், மக்களுக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றும் சில சடங்குகளின் விஞ்ஞானபூர்வமான அடிப்படையை மீண்டும் அவற்றில் புகுத்த முனைந்திருக்கிறேன். மக்களின் உணர்ச்சிகள் சுலபமாகக் கிளறப்படும் ஆபத்து இருப்பதால், சடங்குகள் தொடர்பான மாற்றங்களைக் கையாள்பவர்கள் வெகு கவனமாக இருக்க வேண்டும். சடங்குகளை நான் இழிவுபடுத்திப் பேசவில்லை. ஆனால், உங்கள் கவனம் ஆன்மீக முன்னேற்றத்தில் இருந்தால், சடங்குகளுக்கு அவசியம் இல்லை என்கிறேன். ஆன்மீகப் பாதையில் செல்வதாக இருந்தால், எதையும் அண்ணாந்து பார்க்க வேண்டாம். எதையும் குனிந்து பார்க்க வேண்டாம். அக்கம் பக்கத்தில் கூட பார்க்க வேண்டாம். உள்நோக்கிப் பார்த்தால் போதும்!

 

No comments:

Post a Comment