Monday, September 8, 2014

ராமனிடம் லட்சுமணனுக்கு ஏற்பட்ட சந்தேகம்!


ராமனிடம் லட்சுமணனுக்கு ஏற்பட்ட சந்தேகம்!

வேடர் குலத்தில் பிறந்தவள் சபரி. மூதாட்டியான அவள் மதங்க மாமுனிவரின் ஆசிரமத்துக்கு அருகில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தாள்.

மதங்க மாமுனிவரிடம் உபதேசம் பெற்ற அந்த மாது இராமனிடம் மானசீக பக்தி கொண்டவள். இராமனைக் கண்ணால் காண வேண்டும்; அவன் திருவடியைத் தலையில் பூண வேண்டும்; அவனுக்கு விருந்தளித்துப் பேண வேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தாள்.

மதங்க மாமுனிவர் தவம் முடித்து மோட்சம் புகும்போது, தன்னுடன் வருமாறு சபரியையும் அழைத்தார்.

""இராம தரிசனத்தைவிட வீட்டுலகம் சிறந்ததா? என்றைக் காவது ஒருநாள் இராமன் இவ்வழியே வருவான். அவனை வணங்கி விருந்திடுதல் வேண்டும் என்பதே என் ஆசை. ஆதலால் மோட்சம் வேண்டாம்'' என்று மறுத்து விட்டாள் சபரி.

இராமன் இன்று வருவான் இன்று வருவான் என்று ஒவ்வொரு நாளும் பாதையைப் பெருக்கி, முள், கல் நீக்கித் தண்ணீர் தெளித்து மெத்தெனச் செய்து வைப்பாள்.

அன்றாடம் கிடைக்கும் கனிகளைக் கொணர்ந்து, அவை சுவையுள்ளனவா என்று அறிவதற்காக அதனைக் கடித்துப் பார்ப்பாள். சுவையுடையவற்றை சேமித்து வைப்பாள். சுவையில்லாதவற்றைத் தான் உண்பாள்.

அவள் இராமனை எதிர்பார்த்தது வீணாகவில்லை. ஒருநாள் இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிக் கொண்டு அவ்வழியே வந்தனர்.

அவர்களைக் கண்ட சபரி செய்வதறியாமல் பரவச நிலை அடைந்தாள். குடிசைக்குள் அவர்களை அமரச் செய்து உபசரித்தாள். பின்னர், தான் எச்சில் படுத்திச் சுவை கண்டு வைத்திருந்த பழங்களைக் கொண்டு வந்து அவர் கள் எதிரே வைத்தாள். அப்பழங்கள் நாட்பட்டன. ஆதலால் சில காய்ந் திருந்தன. சில அழுகியிருந்தன. சில சுவை மாறிப் புளிப்பேறியிருந்தன.

தின்பதற்கு இயலாத அப்பழங் களை இராமன் அன்புடன் ஏற்றுக் கொண்டான். ""தாயே! எனக்கு நல்ல பசி! பால் நினைந்து ஊட்டும் தாய்போல, காலம் கண்டு பெறற்கரிய சுவையுடைய கனிகளை அளித்தாய்!'' என்று முகமன் கூறி, அப்பழங்கள் முழுதையும் தான் ஒருவனே உண்டு விட்டான். அருகிலிருந்த இலக்கு வனுக்கு ஏதும் தரவில்லை.

உண்டு முடித்த பிறகு, அவள் விரும்பியபடியே மோட்சத்தைத் தந்தான். அந்தரத் தெய்வ விமானம் தோன்றி அவளை ஏற்றிச் சென்றது.

பின்னர் இராமன் தன் தம்பியுடன் பயணத்தைத் தொடர்ந்தான். அப் போது இலக்குவன் இராமனை நோக்கி, ""அண்ணா! எப்பொருளா யினும் உண்பதற்குக் கிடைப்பின், முதலில் எனக்குத் தந்துவிட்டே பின்னர் நீங்கள் உண்பீர்கள்! இன்று சபரி அன்னை தந்த பழங்கள் அனைத் தையும் எனக்குத் தராமல் தாங்களே உண்டுவிட்டீர்கள். உங்கள் செயல் வழக்கத்துக்கு மாறாக உள்ளதே?'' என்றான்.

""நான் உனக்குத் தந்திருப்பின் எச்சில் கனி என்று முகம் சுளித்திருப் பாய்! அழுகல் கனி என்று அருவருத் திருப்பாய்.

நமக்குத் தர வேண்டும் என்று வெகு நாட்களாகச் சேர்த்து வைத்திருந்து, அந்தத் தாய் தந்ததை நாம் அவ மதித்தால் அந்த பக்தியுள்ளம் என்ன பாடுபடும்! அன்பில் உருவான அவள் உள்ளம் புண்படலாமா? அதனால் தான் அவ்வாறு செய்தேன்'' என்றான் இராமன்

 

சபரி அன்னை!


சபரி அன்னை!

 

சபரிமூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...
ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.

அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?
ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார்.

சபரி என்ற வேடகுலப் பெண்; வேட்டையாடிப் புலால் உண்ணும் தன் இனத்தவரை வெறுத்து மாதங்க வனம் எனும் வனத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தினாள். இவ்வனத்தில் ஆச்சிரமம் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் இயற்றிய மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து அருந் தொன்றாற்றினாள்.

மாதங்க முனிவர் தனது இறுதிகாலத்தில் சபரியை நோக்கிசபரி நீ இப்பிறப்பில்வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய். ஸ்ரீ இராமர் இந்த ஆச்சிரமத்திற்கு வருவார். அவர் உனக்கு அருள்புரிவார். நீ நற்கதி பெறுவாய்என்று கூறினார்.

முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, இலக்குமணர்கள் சபரி மலைக்கு வந்தனர். சபரிமலை காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளில் முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தெரிந்து இராம, இலக்குமணரிடம் சமர்ப்பித்து சபரி வணங்கினாள். இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! என்றான். நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருந்துவிடேன் என்று வேண்டினாள் சபரி. ராமன், சபரியைப் பார்த்து புன்னகைத்தவாறே.... இந்த அவதாரத்தில், நான் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அடுத்து, கிருஷ்ண அவதாரம் எடுப்பேன், அப்பறவியில் நீ என் தங்கை சுபத்திரையாகப் பிறப்பாய். அப்போது எந்தச் சமயத்தில் நீ நினைத்தாலும் உன்னிடம் வந்து நிற்பேன். என்றான். சபரி என்ற வேடுவ பெண், பக்தியினால் பரந்தாமனுக்கே தங்கையானாள்

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்


20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்
1. தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.
3. மாதப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்

முருகன் திருவுருவம் - ஒரு புரிதல்

முருக கடவுள், முழுமுதற்கடவுளான விநாயகரின் இளையர், சிவ பார்வதியரின் இரண்டாவது புதல்வர். அழகின் இலக்கணமாகிய இவர் கார்திகை நக்ஷத்ரத்தில் உதித்ததால் கார்திகேயன் என்றும், ஆறுமுகங்களைக் கொண்டதால் ஷண்முகன் என்றும் அன்போடு போற்றப்படுபவர். மற்ற தெய்வங்களைப் போலவே முருகனின் உருவமும், முழுமையான தத்துவத்தை உணர்த்துகிறது.






சாதாரண மாக்களாகிய நாம் அனைவருமே 'ஜாக்ரத்' எனும் விழிப்பு, 'ஸ்வப்ன' எனும் கனவு, 'ஸுஷுப்தி' எனும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலேயே உழல்கிறோம். இவை மூன்றையும் கடந்த உயரிய நான்காவது நிலையே 'துரிய' எனப்படும் 'தெய்வநிலை'. இந்த நிலையினை தம் வாழ்நாளிலேயே அனுபவிப்பர் இன்று யாருமில்லை. ஆதி சங்கரர் போன்ற மஹா புருஷர்கள் இத்தகைய தெய்வநிலையினை அனுபவித்தவர்கள். ஆனால் இதுவே ஹிந்து தர்மம் போதிக்கும், மனிதனின் உண்மையான, அடிமுடிவற்ற ஸ்வரூபம். இந்த துரிய நிலையினையே முருகனின் திருவுருவம் உணர்த்துகிறது.






முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார். பெரும்பாலான ஹிந்து மத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை. வாஸனைகளும், அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூல காரணம். இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணர முதல் தடை. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான். வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான். முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல், இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்.






முருகனின் வாகனம் மயில். மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் மற்றவரின் மதி மயங்கச்செய்யவல்லது. தன்னுடைய தோகை விரித்து ஆடி, அவ்வழகின் மூலம் ஒருவனை மோகம் கொள்ளச்செய்யவல்லது. மனிதன் தன்னுடைய உடல் அழகு, புத்திசாலித்தனம், மற்றும் அலைபாயும் மனது ஆகியவற்றின் மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது. அவன் தன்னைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும், புரியும் விடயங்களையே சிந்தித்து தன்னை ஒரு மனித எல்கைக்குள் அடைத்துக் கொள்கிறான். மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம். நீல நிறம் 'எல்லையற்ற' தன்மையை உருவகப் படுத்துகிறது. எப்படி மயில் தோகை விரித்து ஆடுகையில், நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி, உண்மையான நீல நிறம் புலப்படுவதில்லையோ, அதே போல் மனிதன் புற அழகினில் மயங்கி, எல்லையற்றதாகிய, தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணர முடிவதில்லை. தன்னுடைய உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போல தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம்.






முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். நாகம் கொல்லப்படுவதில்லை ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் உணர்ந்துவது ஒருவனுடைய 'அகந்தை'. நாகத்தின் விஷம் நாகத்தினை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம். அதே போல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை. ஆனால் அதையே வெளிக்காட்டினால், அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும். ஆகவே விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.




முருகனின் மற்றொரு உருவம், ஷண்முகன் எனப்படும் ஆறுமுகம். இறைவன் பஞ்ச பூதங்கள் (அல்லது ஐந்து புரிதல் உறுப்புகள் (five sense organs)) மற்றும் ஒரு மனதின் வாயிலாக காட்சியளிக்கிறான். உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்தவிதமான் உருவகப்படுத்துதலும் கிடையாது. மனமானது ஐந்து புரிதல் உறுப்புக்கள் மூலம் தன்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகிறது. அதனை அடக்கியாள்பவனே தன்னில் இறைவனை உணர்வான்.




இத்தகைய மேலான முருகனின் திருவுருவம் உணர்த்தும் தத்துவதினை உணர்ந்து அவன் பாதம் பணிந்து நாம் உண்மையினை உணர்வோமாக!

விநாயகர் -திருவுருவம் - ஒரு புரிதல்

விக்னேஸ்வரர் - விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் நமது ஹிந்து தேசத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவர். நம் புராணங்களில் விநாயகர் யானை தலையும், மனித உடலும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு தந்தம் பாதி உடைந்ததாயும், பெரிய வயிற்றை உடையவராயும், ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காலடியில் பலவகையான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். ஒரு சுண்டெலி(மூஞ்சூறு) உணவின் இடையில் அவரை வேண்டி அமர்ந்திருக்கும். அவரது உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது.




ஆன்மிக கல்வியின் முதல் படி 'ச்ரவணம்' எனப்பெறும் வேதாந்த உண்மைகளைக் கேட்டல். இரண்டாவது படி, 'மனனம்' எனப்பெறும் கேட்ட வேதாந்த உண்மைகளின் சுய புரிதல்/தெளிதல். விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் பெரிய தலை அவரது ச்ரவணம் மற்றும் மனனம் குணங்களைக் குறிக்கின்றன.




அவரது முகத்திலிருந்து வெளிப்படும் துதிக்கை அறிவையும், அறிவால் வெளிப்படும் பகுத்தறியும் (திராவிட பகுத்தறிவு அல்ல) திறனையும் குறிக்கும். மனிதனின் அறிவு நமது வேதாந்தங்களின்படி இரு வகைப்படும் - பொது (புற) அறிவு மற்றும் உள் (அக) அறிவு. உலகப் பொருட்களின் எதிர்மறை வித்தியாசத்தை உணர்த்துவது பொது பகுத்தறிவு - எ.கா., இரவு-பகல், கருப்பு-வெள்ளை, சந்தோஷம்-வருத்தம் முதலியவற்றைப் பற்றிய அறிவு. உள் பகுத்தறிவு என்பது நிலையான உண்மை-மாயை, முடிவுள்ளது-முடிவற்றது, புறஉலகம் (terrestrial) (கண்ணுக்குத் தெரிவது) -ஆன்மிகஉலகம் (Transcendental - கண்ணுக்கு தெரியாதது) போன்ற உயரிய சிந்தனைகளப் பற்றிய அறிவாகும். விநாயகரின் துதிக்கை இந்த தத்துவத்தைக் குறிக்கும். யானைகளின் துதிக்கை மற்ற எல்லா உறுப்புகளைவிட சிறப்பானது. துதிக்கையினால் தரையில் இருக்கும் ஒரு குண்டுசியையும் எடுக்கமுடியும், மற்றும் பெரிய மரத்தையும் வேரோடு எடுக்க முடியும். இதைப்போன்ற எதிர் மறை செயல்கள் புரியக்கூடிய ஒரு கருவி இருப்பதரிது. விநாயகர் பெரிய மரம் போன்ற புற உலக அறிவையும், கண்ணுக்குப் புலப்படாத சிறிய ஊசி போன்ற அக அறிவையும் ஒருங்கே உணர்ந்தரிந்தவர் என்பதையே அவரது துதிக்கை குறிக்கிறது.




மனித பூரணத்துவம் உயர்ந்த தத்துவ அறிவைப் பெறுவதனாலேயே சாத்தியம். பூரணத்துவம் பெற்ற மனிதன் உலக எதிர்மறைகளால் பாதிக்கப்படுவதில்லை. சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, குளிர்ச்சி-வெப்பம், மதிப்பு-அவமரியாதை போன்ற புற உலக எதிர்மறைகள் அவனை பாதிப்பதில்லை. சாதாரண மனிதன் உலகத்தின் இத்தகைய எதிர்மறைகளுக்கிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான். இந்த விஷயத்தையே விநாயகரின் இரு தந்தங்களும் உருவகப் படுத்துகின்றன. அவற்றில் ஒன்று உடைந்திருப்பது உலக எதிர்மறைகளை உடைத்தெரியத் தயங்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்கே. புற உலகில் தந்தங்கள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் உண்மையான அறிவு ஏற்பட இந்த உலக பொருட்களைப் பற்றிய பற்றுதலை (அதுவும் நாமே) உடைத்தெறிய வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்கே ஒரு தந்தத்தை தானே உடைத்து கையில் வைத்திருப்பதாக விநாயகர் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்.




விநாயகருடைய பெரிய பானை வயிறு குறிப்பது யாதெனில் பூரணத்துவம் பெற்ற மனிதன் எத்தகைய விஷயத்தையும், அனுபவத்தையும் உட்கொண்டு சீரணித்த பின்னும், நிலையான சிந்தனையுடன் இருக்க முடியும் என்பதையே. எத்தகைய சோதனைகளையும், பிறப்பு-இறப்பு அனுபவங்களையும் ஒருவனால் ஒரே மாதிரி சீரணிக்கமுடியவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உருவகப்படுத்துவது விநாயகரின் பானை வயிறு.




குபேரன் ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். விநாயகப் பெருமான், விருந்திற்குப் படைக்கப் பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களையும் உண்டு விட்டு பசியடங்காமல் தவித்தார். சிவபெருமான் தோன்றி ஒரு கையளவு வருத்த அரிசியை வழங்கினார் - அதனை உண்டவுடன் விநாயகரின் பசியாறியது. இந்தக் கதை விளக்கும் தத்துவம் - மனிதன் குபேர சம்பத்துகளால் ஒருபோதும் திருப்தி அடைய இயலாது. பொருட்களின் பின்னால் உள்ள ஆசை ஒரு போதும் திருப்தியையோ, அமைதியையோ தரவியலாது. உண்மையான தத்துவத்தினை அறிய ஒரே வழி 'வாஸனை' எனப்படு தன் ஆசைகளை ஒருவன் கொன்று தின்பதே. அரிசி வருக்கப்படும் போது தன்னுடைய 'உயிர்த்' தன்மையை இழக்கிறது. அதனால் மறுபடியும் முளைவிட இயலாது. ஆசைகளைக் கொல்வதே வருத்த அரிசியின் உட்கொண்டதன் மூலம் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. விநாயகரது இடக்கையிலிருக்கும் வருத்த அரிசி உணர்த்தும் தத்துவம் இதுவே.




விநாயகர் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை பூமியில் பதித்தும் அமர்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார். இது ஒரு மனிதன் பூமியிலிருக்கும் போது மற்றெந்த மனிதனைப் போல் வாழ்வதையும், அவனுடைய மனம் மட்டுமே உள் திரும்பி ஆத்மாவில் லயித்திருப்பதையும் காண்பிக்கிறது.




விநாயகரின் காலடியில் பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவு வகைகள் உலக இன்பங்களையும், செல்வத்தினையும் குறிக்கிறது. மேற்கூரிய வகைககளில் வாழும் ஒருவனின் காலடியில் உலக செல்வங்களனைத்தும் குவிந்து கொடுக்கும் என்னும் தத்துவத்தினை உணர்த்துவது இது. அவனுக்கு இச்செல்வங்கள் ஒரு பொருட்டேயில்லையெனினும், அவை அனைத்தும் அவன் காலடியில் அடிமையாகக் கிடக்கும்.




உணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி) ஆசைகளை உருவகப்படுத்துகிறது. எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும் - பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும், அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது. இத்தகையவனுடைய செயல் பாடுகள், அவனுடைய தெளிந்த சிந்தனையின் பால் நடக்குமே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படமாட்டா.




ஒரு புராணக் கதையின் படி சந்திரன் ஒருமுறை பெருத்த உருவமுடைய விநாயகர், சிறிய மூஞ்சூறுவின் மீது பயணம் செய்ததைப் பார்த்து சிரித்தது. இந்த குற்றத்தினால் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பது தவறு என்பது ஹிந்து மக்களின் ஒரு நம்பிக்கை. விநாயகர், மூஞ்சுறுவின் மேல் சவாரி செய்வதன் உள் அர்த்தம் யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன்னுடைய உடல், உலக அறிவு, மற்றும் மனதின் மூலம் அறியமுடியா பேருண்மையை உணர்த்த முயற்சிப்பதுவே. உடல், மனம் மற்றும் உலக அறிவு என்பவை முடிவுள்ளவை. இவற்றின் மூலம் 'ஆன்மா' வின் பேருண்மையை விளக்க இயலாது. சந்திரன் மனதின் கடவுள். சாதாரண மனம் கொண்ட மனிதனால் பேருண்மையினை உணர முடிவதில்லை. அந்த அறியாமையினாலேயே அவன் பூரணத்துவம் பெற்றவர்கள், மற்றும் அவர்களது செய்கைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்கிறான். இத்தகைய மகான்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் சந்திரனைப் போலவே நிலையற்ற தன்மை பெற்று வருந்துவார்கள் என்பதனையே விநாயகரின் மூஷிக வாகனப் பயணம் உணர்த்துகிறது.




விநாயகருக்கு நான்கு கரங்கள் உண்டு. இவை மனிதனின் உள் சக்திகளான 'மனஸ்' (மனது), 'புத்தி' (அறிவு), 'அஹங்காரம்' (அகந்தை) மற்றும் 'சித்' (பேரறிவு, மெஞ்ஞான சிந்தனை) என்பனவற்றைக் குறிக்கும். ஒரு கையில் கோடரியும், ஒரு கையில் கயிற்றையும், ஒரு கையில் வருத்த அரிசி உருண்டையையும் (மோதகம்) , நான்காவது கையினில் தாமரைப் பூவையும் கொண்டிருக்கிறார். கோடரி உலகப் பற்றினையும், ஆசைகளையும் அவற்றினால் விளையும் கோப, தாபங்களையும் வெட்டி விட வேண்டும் என்பதனை குறிக்கிறது. கயிறானது உலக பந்தங்களில் இருந்து ஒருவனை விடுவித்து நிலையான உண்மையான தன்னை உணர்தல் எனும் உணர்விற்கு கட்டிப் போடுவதை (பிணைப்பதை) உணர்த்துகிறது. மோதகம் தேடுதலுடைய ஒருவன் அடையப் போகும் நிலையான இன்பத்தைக் குறிக்கிறது. தாமரை பூ மனித பரிணாமவளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளினைக் குறிக்கும்.




ஒவ்வொரு முறை விநாயகப் பெருமானை வணங்கும் போதும், அவரது உருவ அமைப்பு விளக்கும் இத்தகைய உயர்ந்த தத்துவங்களை மனதினிருத்திப் ப்ரார்த்திப்பது நம் அனைவருக்கும் கைவரப்பெற முழுமுதற் கடவுளான விநாயகனைப் வேண்டுகிறேன்.