Monday, July 28, 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 21 --25

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 21

இலங்கையை விட்டுக் கிளம்பும் முன் ராமர், சீதைக்கு லங்காபுரியை சுற்றிக்காட்டுகிறார்.

""சீதா! இந்த இடத்தில் தான் கும்பகர்ணன் அழிந்தான், இங்கு தான் ராவணனைக் கொன்றேன், இங்கே தான், இந்திரஜித்தைலட்சுமணன் முடித்தான்...'' என்றவர், ""சரி...இந்த லங்கையை ஒருமுறை உன் கண்களால் பார்,'' என்றார்.

""அதைத்தானே இத்தனை நாளும் செய்து கொண்டிருந்தேன். இவ்வளவு காலமும் இங்கே தானே இருந்தேன்,'' என்றாள் பிராட்டி.

""நீ இங்கே இருந்ததும் உண்மை, பார்த்ததும் உண்மை. ஆனால், அது கோபப்பார்வை. இப்போது குளிரப் பார். ஏனெனில், நம் பிள்ளை விபீஷணன், இனி இந்த தேசத்தை ஆளப்போகிறான். உன் கடாட்சம் இருந்தால் தான், அவனால் சிறப்பாக ராஜ்யத்தை நடத்த முடியும்,'' என்றார்.

உடனே பிராட்டி, தனது மனதிலுள்ள மங்கள எண்ணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, லங்கையை குளிரக் கடாட்சித்தாள் என்கிறது வால்மீகி ராமாயணம்.

சுக்ரீவன் விஷயத்தில், பிராட்டி கடாட்சித்தது போலவே தெரியவில்லையே என்று சந்தேகப் படுவோர் உண்டு. இந்த சந்தேகம் பிராட்டிக்கே வந்து விட்டதாம். அவள் அனுமானிடம், ""குரங்குகளுக்கும் மனுஷர்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது?'' என்று கேட்டாளாம். அதாவது, தனது அனுக்கிரகம் இல்லாமல், ராமபிரானின் அனுக்கிரகத்தை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்பது அவளது சந்தேகத்திற்கான காரணம்.

அனுமான் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

""தாயே! தங்கள் அனுக்கிரகம் இல்லாமல், நாங்கள் எப்படி பெருமானின் கடாட்சத்தை அடைய முடியும். தாங்கள், ராவணனால் ஆகாச மார்க்கமாக கடத்தப்பட்ட போது, உங்கள் ஆபரணங்களை மூடையாகக் கட்டி கீழே போட்டீர்கள் இல்லையா? நாங்கள் ரிஷ்யசிருங்க மலையில் இருந்த போது, எங்கள் கையில் தானே அவை கிடைத்தன. அந்த ஆபரணங்கள் வழியாக தங்கள் கடாட்சம் கிடைத்த பிறகு தானே, ராமபிரானின் அனுக்கிகரம் கிடைத்தது. தங்கள் சம்பந்தமின்றி, அவர் அனுக்கிரகம் எங்களுக்கு எப்படி கிடைக்க முடியும்?'' என்று பதிலளித்தார். சீதாபிராட்டி கடத்தப்பட்டதில் இன்னொரு ஆனந்தமான விஷயம்.

எல்லாரும் ராமனைச் சரணடைந்தார்கள். ஒரு ராட்சதனையும் சரணாகதம் ஆக்கத்தான் ராமனே லங்கை வந்தார். அதற்காகத் தான் சீதாபிராட்டியும் லங்கை சென்றதே!

பிள்ளை லோகாச்சாரியார் என்ன சாதிக்கிறார் (சொல்கிறார்) தெரியுமா? பிராட்டியின் சக்தி என்னவென்று தெரியாதவர்கள் தான், ராவண பலாத்காரத்தால் தான், சீதாபிராட்டி கடத்தப்பட்டாள் என நினைப்பார்கள். ஆனால், ராட்சதனையும் சரணாகதி அடையச்செய்ய, சீதாபிராட்டி உருவாக்கிக் கொண்ட சந்தர்ப்பமே அது,'' என்கிறார்.

பிராட்டியின் சக்தி அபரிமிதமானது. அவள் தான் ராவணனையும் கட்டி தூக்கிச்சென்றாளே தவிர, அவன் அவளைத் தூக்கிச் செல்லவில்லை. அவள் ஏன் சிறைப்பட்டாள்? தான் உள்ளே போனால் தான் மற்றவர்களுடைய சிறையை அறுத்து விட முடியும் என்பதால் தான்! அவள் சிறைப்பட்டால் தான், தேவஸ்திரீகளின் சிறையை வெட்டி விட முடியும்! அது மட்டுமா! சம்சாரிகள் இந்த ராவணனால் படும் துன்பத்தில் இருந்து தீர்த்து விட முடியும். அதற்காகத்தான் சீதை வலியப் போனாள். 

ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டான். அவனைத் தூக்கிவிட, ஓரளவு ஆழத்துக்கு வேண்டுமானால் கயிறைக் கட்டி தூக்க முயற்சிக்கலாம். ஆழம் அதிகமென்றால், உள்ளே குதித்து தான், கிணற்றுக்குள் கிடப்பவனை மீட்டு வர முடியும். சீதாதேவி அதைத் தான் செய்தாள். அவளைப் பற்றினால் தான் பிறகு அவனைப் பற்ற முடியும்.

பெருமானின் குணங்கள் பல. அதை எண்ணி முடிக்க முடியாது. அவரது கல்யாண குணங்கள் பற்றி, நான் ஒன்றரை மணி நேரம் பேசுகிறேன் என்றால், அவரது குணங்கள் அவ்வளவு தான் என்றில்லை. அவரது குணங்கள் பற்றி என் நாக்கிற்கு அந்தளவு தான் பேசும் சக்தி இருக்கிறது! நம்மாழ்வார் பெருமானைப் பற்றி 1202 பாடல்கள் பாடினார். அதற்காக அவர் பாடிய அளவுக்கு தான் அவரது குணங்கள் என்றில்லை! அவருக்கு அந்தளவு தான் சக்திஇருக்கிறது.

பெருமாளை "பராபரன்' என்பார்கள். "பர' என்றால் "மேன்மைக்கெல்லாம் எல்லை'. "அபர' என்றால் "எளிமைக்கெல்லாம் எல்லை'. அவரது குணங்களை மேன்மை, எளிமை என்று இரண்டு கோஷ்டிகளாகப் பிரிக்கலாம். ஆனால், இதில் "பரத்வம்' எனப்படும் மேன்மை குணம் தான் அவரிடம் அநேகமாக பிரகாசிக்கும். 

எளிமையை அவரது ஸ்வாதந்திரமும் (சுதந்திரம்) கோபமும் அநேகமாக மூடியிருக்கும். இதை "நெருப்பு கிளர்ந்தாற் போல்' என்பர். 

தணல் "தக தக' என எரியும். ஆனால், மேலே சாம்பல் மூடியிருக்கும். சாம்பலைத் தட்டினால் தான் தணலின் தகதகப்பு தெரியும். அதுபோல, பெருமாளிடம் நிறைய குணங்கள் உண்டு. பக்தனை ரட்சிக்க அபரிமிதமான குணங்கள் உண்டு. ஆனால், அது சாம்பல் மூடிய தணல் போல காணப்படும். 
தாய்மார்களிடம் கேட்டால் தெரியும். சின்னகோலைவைத்து சாம்பலைத் தட்டினால் தணலின் தகதகப்பைத் தெரிந்து கொள்ளலாம். (இப்போது இது மாதிரி தணல் விஷயங்கள், நம் ஸ்திரீகளுக்கு தெரியுமா தெரியாதா என்று கேட்டு விட வேண்டாம்).

பெரியவர்கள் தங்கள் நாளில் பார்த்ததை வைத்து தான் இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். பிராட்டி அந்த சாம்பலைத் தட்டுகிறாள். உடனே பெருமானின் கல்யாண குணங்கள் பொத்துக்கொண்டு வெளியே கிளம்புகின்றன. இதுவரையும் நீங்கள் பெருமானைச் சேவித்தீர்கள். பிராட்டியை சேவித்தபிறகு பெருமானிடம் போனால், இன்னும் அதிகமாக அவரது குணம் பிரகாசிக்கும். "மாமாயன் மாதவன் வைகுந்தன்' என்று பாடுகிறாள் ஆண்டாள். இதில் மாமாயனும் வைகுந்தனும் பெருமாள். நடுவில் இருக்கும் மாதவத்துவமே பிராட்டி. 

அதனால் தான், இதை நடுவில் போட்டு எழுதினாள் ஆண்டாள். பிராட்டியின் சம்பந்தம் இருந்தால் தான் அவனே மாமாயன், வைகுந்தனாக முடியும். 





ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 22

அயோத்தியில் வாழ்ந்த காலத்தில் ராமனிடம் சீதை பேசியதே இல்லை. இதழோரம் சிறுபுன்னகை மட்டுமே செய்வாள். தசரதரின் 360 மனைவியரும் அரண்மனையில் இருந்ததால், சீதைக்கு மாமியார்கள் பயம். அதனால், ராமனிடம் கூட பேச மாட்டாள். ஆனால், காட்டிற்குச் சென்றதும், ராமனிடம் கலகலப்பாகப் பேசி சிரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விளையாட்டே போட்டியாக மாறியது. யார் முதலில் கோதாவரி நதியில் நீந்தி கரையை தொடுகிறார்கள் என்பது தான் போட்டி. நடுவராக லட்சுமணன், நதிக்கரையில் இருந்த பாறையில் அமர்ந்து கொண்டார். ராமன் கணப்பொழுதில் கரையை தொட்டுவிட வந்து விட்டார். 

இருந்தாலும், தொடுவதற்குள் சீதையைத் திரும்பிப் பார்த்தார். சீதை ஆரம்பித்த இடத்திலேயே நீந்திக் கொண்டிருந்தாள். ராமன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மூச்சடக்கி தண்ணீருக்குள் தலையை மறைத்துக் கொண்டார். சீதையும் அக்கரையைத் தொட்டு விட்டு மீண்டும் கரைசேர்ந்தாள். 

லட்சுமணனிடம், ""பார்த்தாயா? உன் அண்ணனை! இது தான் வசிஷ்டரிடம் கற்ற லட்சணமா?'' என்று கேலி செய்தாள். ஆனால், ராமனுக்கோ மனைவியிடம் தோற்றுப் போனதில் அவ்வளவு சந்தோஷம். இந்த விஷயத்தை சீதையைப் பிரிந்த நேரத்தில் ராமன் எண்ணிப் பார்க்கிறான். அதாவது, பிராட்டி சம்பந்தம் இல்லாமல் அவன் இல்லை. ராமபட்டாபிஷேக நேரத்திலும், வசிஷ்டர் அதை சாதாரண ராஜ பட்டாபிஷேகமாகக் காணவில்லை. 

"கல்யாண குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்' என்று சொன்னார். அதனால் தான், சீதையை ராமனின் அருகில் இருக்கச் செய்தார். ராமனுக்கும் அப்படித்தான்..அயோத்தி என்பது அவனுக்கு சிறிய வஸ்து. பக்கத்தில் சீதை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் குணத்தையே காட்டுகிறான்.
வாலி வதம் விஷயத்திலும் இதை நாம் கண்கூடாகக் காணலாம். ராமபாணம் பட்டு வாலி அடிபட்டு விழுந்ததும், ""ராமா...இம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ராம என்ற மந்திரமே உயர்ந்தது என்கிறார்கள். இத்தனை பெருமை பெற்ற நீ, என்னை மறைந்திருந்து கொன்றாய். இதன்மூலம், நீ என்னைக் கொன்றதாக நினைக்காதே. இக்ஷ்வாகு குலத்தின் பெருமையைக் கொன்றிருக்கிறாய். சக்கரவர்த்தி தசரதரின் பெருமையைக் கொன்றிருக்கிறாய்,'' என்று கடுமையாகச் சொன்னான்.
ராமன் அவனுக்கு பல சமாதானங்களைச் சொன்னார். ஆனால், வாலி அவற்றை ஏற்க மறுத்துவிட்டான்.
""நீ என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்கமாட்டேன். ஆனால், நீ இவ்வாறு செய்ததற்கான காரணம் எனக்குத் தெரியும். சீதையைப் பிரிந்த பிறகு, நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. ஆவியாய் வந்த சீதையை (உன் உயிர் போன்ற சீதையை) அமிழ்தம் போன்ற சீதையை, ஜனகன் பெற்ற அன்னமாகிய சீதையை நீ பிரிந்த பிறகு, நீ திகைத்துப் போய் இருக்கிறாய்! என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. அதனால் தான் இப்படி செய்தாயோ?'' என்று பதில் சொல்கிறான்.
உண்மையும் அதுதான். 

பிராட்டியைப் பிரிந்தது முதல், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ராமன் தப்பு செய்தார். அப்படி தப்பு தப்பாக செய்ததில் ஒரு தப்பு தான் மறைந்து நின்று வாலியைக் கொன்றது. 
சரி...வாலி சொல்லித்தான் நமக்கெல்லாம் இந்த உண்மை தெரிய வேண்டுமா! ராமனே இதை ஒத்துக்கொண்டிருக்கலாமே! சீதையைப் பிரிந்து குழம்பியிருக்கும் நேரத்தில் இந்தக்குழப்பம் நேர்ந்து விட்டதாகச் சொல்லியிருக்கலாமே என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது.

பத்தினி பிறந்த வீடு போயிருக்கிறாய் பர்த்தா என்ன செய்கிறான்? பால்காரன் யார் என்று கூட அவனுக்கு தெரியாது என்றாலும், அதை அவன் ஒத்துக்கொள்வானா? அதுபோலத்தான் இதுவும்! நாம் சின்ன விஷயத்தில் மயங்குகிறோம். பகவான் சரணாகதம் செய்யும் விஷயத்தில் மயங்கிப் போகிறான். இதிலிருந்தே புரியவில்லையா! பிராட்டி தான், அவனது மயக்கத்தைத் தீர்த்து வைக்கிறாள் என்று! ஆகவே, அவள் அருகாமையில் இருந்தால் தான், ராமன் எதையும் செய்வான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாமல்லபுரத்தில் திருவிடந்தை வராகப்பெருமான் கோயில் இருக்கிறது. இவர் மீது திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் (தன்னை இறைவனின் காதலியாக நினைத்தல்) பாசுரம் பாடுகிறார். இந்தப் பெருமான் மீது அவருக்கு காதல். என்னை ஏற்றுக்கொள் என்கிறார். இதை ஆழ்வாரின் தாயார் கேட்கிறாள்.

""மகனே! அந்தப் பெருமானுக்கு திருமணம் ஆகிவிட்டதென்ற விஷயம் உனக்குத் தெரியாதா? எற்கனவே, திருமணமான ஒருவன், உன்னை எப்படி ஏற்பான்? நீ வேண்டுமானால் திருவிடந்தை போய் பார். அவன் தாயாருடன் சேவை சாதிப்பான். இடதுமடியிலே தாயார் வீற்றிருப்பாள், நன்றாகப் போய்பார்த்து வா,'' என்றாள்.

திருமங்கையாழ்வாரும் திருவிடவிந்தை வந்தார். பெருமாளை சேவித்தார். அர்ச்சகரிடம் "தாயார் இங்கே இருக்கிறாளா?' என்றார்.

""ஆம்...பெருமாள் தாயாருடன் தான் சேவை சாதிக்கிறார். அவரது இடதுமடியிலே வீற்றிருப்பதை தாங்கள் சேவிக்கலாமே!'' என்று பதில் சொன்னார் அர்ச்சகர்.

அவசரமாக வீடு திரும்பினார் திருமங்கையாழ்வார்.

அம்மாவிடம் போனார். 

""நான் அந்தப் பெருமானை இப்போது முன்பை விடத் தீவிரமாக இரண்டு மடங்கு காதலிக்கிறேன்,'' என்றார். 

""என்னடா இது! இவன் அனர்த்தமாகப் பேசுகிறானே! தாயாருடன் பெருமாளைப் பார்த்து வா! அவன் ஏற்கனவே திருமணமானவன் என்று சொல்லி அனுப்பினால், தாயாருடன் சேவித்த பிறகும், இப்படி பேசுகிறானே!'' என்று தவித்த வேளையில், ""பிராட்டியின் கடாட்சம் இருந்தால் தானே அவனையே அடைய முடியும் என்ற அர்த்தத்தில் அவர் சொன்னது அந்த தாய்க்கு தெரியவந்தது. அலைகடலைக் கடைந்த போது வெளிவந்த சாதாரண அமுதத்தை பெருமான் தேவர்களுக்கு கொடுத்து விட்டார். ஆனால், நிஜமான அமுதமான பிராட்டியை ஏற்றார். அவள் அன்று அவர் மார்பில் ஏறி அமர்ந்தது தான்! இன்றுவரை அவரோடு இருக்கிறாள். எனவே பிராட்டியால் மட்டுமல்ல! நாம் எல்லாருமே பெருமானை ஆலிங்கனம் (தழுவுதல்) செய்து ஆனந்தமாக இருக்க முடியும். அதாவது, அவனை அடைய முடியும். அதற்கு அவனை சரணாகதி அடைய வேண்டும்







ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 23

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம். 

""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன்.

""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,'' என்கிறார்.

""ரங்கநாதரை கண்குளிர தரிசித்து விட்டபின், எப்படி உங்களால் "போயிட்டு வர்ரேன்' என்று சொல்லி விட்டு கிளம்ப முடிகிறது. ரங்கனை சேவித்தால் அங்கேயே இருந்து விட வேண்டும்,'' என்பதே ஆழ்வார்களின் முடிவு.

""என்னை அவமானப்படுத்தியவன் விபீஷணன். அவனுக்காகவா சயனத்திருக்கிறீர்?'' என்று கேட்கிறாள் பிராட்டி. பெருமாளும் வியப்புடன், ""உம்மை யார் அவமானப்படுத்தியது?'' என்றார்.

அவரைப் பார்த்து தாயார், "" வானுலகில் பிரம்மா, குபேரன், இந்திரன் போன்றவர்கள் எல்லாம் என் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், நான் யாரும் கூப்பிடாமலே இலங்கைக்குப் போனேன். ஆனால், விபீஷணனோ ராவணனிடம், ""ராம பாணம் இலங்கையில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரையும் அழித்துவிடும். சீதை இங்கு வந்ததிலிருந்து இங்கு ரத்த ஆறு ஓடுகிறது. நரி ஊளையிடுகிறது. கொள்ளிக்கட்டைகள் கீழே விழுகிறது. இவளுக்கும் மங்கலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னைப் பழித்தவன் அவன். அவனுக்காக தெற்கு நோக்கி சயனத்திருக்கிறீரே?'' என்றாள்.

இந்த உரையாடல் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. 

""விபீஷணன் நல்லதுக்காக ஒன்றைச் சொல்வானே தவிர, தீமைக்காக எதுவும் சொல்ல மாட்டான். அப்படி சொல்லி இருந்தாலும், அதுவும் நன்மை கருதித் தான்,'' என்றார் பெருமாள்.

பிராட்டிக்கு பெருமாளின் பதிலைக் கேட்டு ஒரே ஆனந்தம். பிராட்டியின் நோக்கமும், விபீஷணன் மீது குறை சொல்வது அல்ல.

வீடு கட்டும் பெரிய கொத்தனார் போல பிராட்டி இங்கு செயல்படுகிறாள். கட்டிடம் கட்டும்போது, கட்டுமானம் உறுதியாக இருக்கிறதா? என்று அவ்வப்போது அவர் சோதித்துப் பார்ப்பார். பக்தர்களுக்காக பெருமாளை அவள் சோதித்துப் பார்க்கிறாள். அவர்கள் பெருமாளிடம் நிலையாக சேர்ந்து விட்டார்களா என்று சோதிக்கிறாள். இதுவும் அவளுடைய புருஷகாரம் என்னும் கருணையே. 

பிராட்டி கருணையே உருவான கடலாக விளங்குகிறாள். நம் குற்றத்தை அவள் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. நம்மை பெருமாளோடு சேர்த்து வைப்பதே அவளுடைய லட்சியம். பிராட்டி என்னும் கருணைக் கடலில், நாம் இன்னும் பிராயாணம் செய்யவில்லை. ""இதோ கடல்! என்று கரையில் நின்று பார்த்து ஆனந்திக்கிறோம்! அவ்வளவு தான். அவளின் வைபவத்தைக் கண்டு பெருமாளே ஆனந்தப்படுகிறார். தயாசதகத்தில் வேதாந்ததேசிகன் பிராட்டியின் கருணையை வியந்து பாடியுள்ளார். 

""திருவேங்கடமுடையானுக்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம் என எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கின்றன. ஆனால், பிராட்டியின் தயை அவருடன் சேராவிட்டால், அத்தனையும் தோஷமாகி விடும். பிராட்டியின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கே ஏற்றம் உண்டானது. அதனால் தான் பிராட்டியை லட்சுமி, மாதா என்றெல்லாம் போற்றி வணங்குகிறோம்,'' என்கிறார் தேசிகன். 

அவளது கருணையைப் பெற ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ய வேண்டியதில்லை. தெருவில் செல்லும்போது, தாயார் சந்நிதியைப் பார்த்து, கீழே கிடக்கும் கைகளை உயர்த்தி, ""தாயே வணக்கம்'' என்று கைகூப்பினால் போதும். அவள் நம்மை தலையாலேயே சுமக்கத் தயாராகி விடுவாள்.

காஞ்சிபுரம் தேவபெருமாள் அபயஹஸ்தத்தோடு(மேல்நோக்கிய கரம்) காட்சி தருகிறார். ஆனால், அவரை வரதன் என்று அழைக்கிறோம். அவருக்கு ஏன் அப்படி பெயர் வந்தது? ஊருக்குள் பேரும் புகழும் மிக்க பிராமணர் ஒருவர் இருக்கிறார். அவர் ஆற்றில் நீராடுகிறார். அவர் மார்பில் அணிந்திருக்கும் யக்ஞோபவிதம்(பூணூல்) காணாமல் போனது. ஊரில் பார்ப்பவர்கள் அவரை பிராமணர் கிடையாது என்று மறுத்து விடுவார்களா என்ன? அதுபோலத்தான், தேவபெருமாள் அபய ஹஸ்தம் காட்டினாலும், பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குவதால், வரதப்பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். அப்படி வாரி வழங்கும் பெருமாளுக்கு, பாவாத்மாவான நம்மைக் கண்டால் சிலநேரத்தில் கோபம் வந்துவிடும். அதுவும் கூட நம் நன்மைக்காகத் தான். சம்சார சாகரத்தில், எவ்வளவு காலம் தான் இவர்கள் கிடக்கப் போகிறார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கப் போகிறார்கள்? தர்மத்தைக் கடைபிடித்து எப்போது மோட்சகதியை அடைவார்கள்? என்ற கோபம் தான். 

அப்போதும் தாயாரே நம் சார்பாக பெருமாளிடம் பேசத் தொடங்குகிறாள். ""எதை வேண்டுமானாலும் போனால் போகட்டும் என்று வாழ்வில் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், பேரை விட்டு விட்டால் அதைப் பெற முடியாது. உபநிஷதங்கள் உம்மை,"புருஷோத்தமன்' "நாராயணன்' என்று போற்றுகின்றன. வாரி வழங்கும் இயல்பை விடக் கூடாது. அவர்களைக் காத்தருள வேண்டும்,'' என்று வேண்டுகிறாள். 

பரீட்சையில் வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு இருவித இயல்பு உண்டு. வழிமுறை சரியாக இருந்தாலே மதிப்பெண் என்று ஒரு ரகம், முடிவு சரியாக இருந்தால் தான் மதிப்பெண் என்று ஒரு ரகம். இரக்கமுள்ள தாயாரின் வழிகாட்டுதலால், பெருமாள் நாம் எந்த ரகமாக இருந்தாலும், மதிப்பெண் வழங்க காத்திருக்கிறார். 
தொண்டரடிப் பொடியாழ்வார் தன் பாசுரத்தில், ""வெட்டி வெட்டிக் கொண்டு பெருமாளை விலகிக் கொண்டே சென்றேன். ஆனால், பெருமாளே என்மீது அன்பு கொண்டு விட்டுக் கொடுக்காமல் என்னை ஒட்டிக் கொண்டு வந்தார். இப்போதோ அவரின் வடிவழகைக் கண்டு மயங்கி நின்றேன். என்னை அவரோடு சேர்த்துக் கொண்டார்,'' என்று பாடுகிறார்.

எப்படியாவது நம்மை காத்து ரட்சிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். அந்த கைங்கர்யத்தைச் செய்து பெருமாளின் திருவடிகளில் நம்மைச் சேர்த்து வைப்பவள் பிராட்டியே





ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 24

திருமாலின் இடப்புறத்தில் வீற்றிருக்கும் பூமிபிராட்டியாரின் வைபவத்தை இனி கேளுங்கள். வைணவ சம்பிரதாயத்தில் பூமிபிராட்டியின் அவதாரமாகப் போற்றப்படுபவள் ஆண்டாள். அவளின் திருவடித்தாமரையின் பெருமையை சுவாமிதேசிகன் கோதாஸ்துதியில் போற்றிப் பாடுகிறார். பெரியாழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்தவள் இவள். அவள் ஏன் இப்படி ஒரு மானிடராக மண்ணில் அவதரிக்க வேண்டும்?

வைகுண்டத்திற்கு "நலம் அந்தமில்லதோர் நாடு' என்று பெயருண்டு. அங்கு பெறும் நன்மைக்கு முடிவே கிடையாது. அப்படிப்பட்ட வைகுண்டத்தை விட்டு பூலோகத்தில் பிராட்டி ஏன் அவதரிக்க வேண்டும்? உயிர்களான நம் மீது கொண்ட கருணையால் தான். விஷ்வக்சேனர், ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகள் எப்போதும் பெருமாளுக்கும், பிராட்டிக்கும் கைங்கர்யம் செய்தபடி இருப்பர். அந்த வளமான, ஆனந்த வாழ்வை விட்டு லீலாவிபூதியான பூலோகம் வந்தாள். மணவாள மாமுனிகள், நித்யவாழ்வான வைகுண்டத்தை இகழ்ந்து நமக்காக ஆண்டாள் பூமிக்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.

தாழ்வான ஒன்றை இகழ்வது தானே உலக வழக்கம். ஆனால், பிராட்டியார் ஏன் வளமான வைகுண்டத்தை இகழ்ந்தாள்? 

ஒரு பணக்கார பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள். அவளுக்கு தன் பிள்ளை மீது அன்பு அதிகம். குழந்தை உடல்நலமில்லாமல் சிரமப்பட்டது. அதை குணப்படுத்த வைத்தியரின் குடிசை வீட்டில் ஒருமாதம் தங்க வேண்டியிருந்தது. அதற்காக தாய், தன் வசதியான வாழ்வைத் துறந்து விட்டாள். தன் சவுகர்யத்தை விட பிள்ளையின் நலத்தை பெரிதாக மதிக்கும் தாய் போல, பிராட்டியும் உயிர்களின் உஜ்ஜீவனத்திற்காக (உய்வுக்காக) பூலோகம் வந்தாள். 

ஸ்ரீதேவி, நீளாதேவிக்கு இல்லாத ஏற்றம் பூமிதேவிக்கு. திருமால் எடுத்த தசாவதாரத்திற்கும், அவர் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களுக்கும் ஆதாரமாக இடம் கொடுத்தவளே பூமி பிராட்டி தான். இதுவும் அவளுக்குரிய தனிச்சிறப்பு. திருமகள் ராமனோடு சீதையாக வந்தபோதும், கண்ணனோடு ருக்மணியாக வந்தபோதும் அவளுக்கு இடம் கொடுத்தவளும் இந்த பூமிபிராட்டியே. இவள் மட்டுமே பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியாகும் பாக்கியம் பெற்றவள். மற்ற ஆழ்வார்கள் ஆண்கள் என்பதால், "நாயிகாபாவத்தில்' தன்னை பெண்ணாகவும், திருமாலை நாயகனாகவும் பக்தி செலுத்தி வந்தனர். ஆனால், ஆண்டாள் இயல்பிலேயே பெண் என்பதால், பெருமாளை இன்னும் விசேஷமாக அனுபவிக்கும் பாக்கியம் பெற்றாள். ஆழ்வார்கள் ஒரு அடி பாய்ந்தால், இவள் 16 அடி பாய்ந்தாள் என்றே சொல்லலாம். 

ஸ்ரீதேவியான திருமகள், பெருமாளை விட்டுப் பிரியாமல் அவனுடைய மார்பில் நித்யவாசம் செய்கிறாள். அதனால் அவளுக்கு "நித்ய அனபாயினீம்' என்றும் பெயருண்டு. முக்தி பெற்ற உயிர்களே நித்யசூரிகளாக பெருமாளை விட்டுப் பிரிவதில்லை. ஆனால், ஸ்ரீதேவிக்கு எப்போதும் பெருமாளின் திருமார்பில் எப்போதும் "தங்கி இருக்கணுமே' என்ற கவலை இருந்து கொண்டே இருக்குமாம். ஆனால்,பெருமாள், ஸ்ரீதேவி மட்டுமில்லாமல் அனைவரையும் சேர்த்து தாங்குபவளாக பூமிபிராட்டி விளங்குகிறாள். ஆதரவு படைத்தவளாக ஸ்ரீதேவி இருக்க, பூமிதேவியோ ஆதாரமாக இருக்கிறாள் என்பதும் அவளுக்குரிய சிறப்புகளில் ஒன்று.

ஹிரண்யாட்சன் என்ற அசுரன், பூமிபிராட்டியைக் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்தான். நீரில் நீண்டகாலம் எந்த பொருள் கிடந்தாலும், அதில் பாசி படர்ந்து விடும். பூமியிலும் பாசி படர்ந்து போனது. பாசி பிடித்தால் அழுகின துர்நாற்றம் உண்டாகி விடும். தனக்கே உரிய பொறுமை என்னும் பண்பினால் பிராட்டி இதை தாங்கிக் கொள்கிறாள். "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்' என்று இதைக் குறிப்பிடுவர். அப்போது பெருமாள் பூமியைக் காப்பாற்றும் நோக்கத்துடன், பன்றி முகத்துடன் வராக அவதாரமாக புறப்பட்டார். அப்போது, அவரின் மேனி முழுவதும் அழுக்கு நீர் சொட்டத் தொடங்கியது. துர்நாற்றம் வரத் தொடங்கியது. வாசனைப் பொருள் எதுவாக இருந்தாலும், அதற்குரிய சுகந்தத்தை அளிப்பவர் பெருமாள் தான். ஒளி வீசும் பொருள் எதுவானாலும், அது ஒளி கொடுப்பதும் அவரே. ஆனால், அவரே இப்படி துர்கந்தமாக அழுக்குமேனியாக ஏன் செல்ல வேண்டும்? அது தான் மனைவி மீது கொண்ட உண்மையான அன்பின் அடையாளம். மனைவி தன்னை அழகுபடுத்திக் கொள்ளும்போது, தானும் அலங்காரம் செய்து கொள்வதும், அவளுக்கு உடல்நலம் இல்லாத சமயத்தில் தானும் எளியவனாக இருப்பதும் நல்ல கணவனுக்குரிய இலக்கணம். இதை தான் நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். 

சத்தியம், நேர்மை, பணிவு இப்படியான நற்பண்புகளின் ஒட்டுமொத்தம் தான் ராமன். ஆனால், கண்ணனோ இந்த குணங்களுக்கு நேர்மாறானவன். கபடம், தந்திரம், பொய், திருட்டு இப்படி தோஷமான குணங்களெல்லாம் கொண்டவன். உலகத்திலும் இப்படி இருவிதமான மனிதர்கள் தான் இருக்கிறார்கள். குணத்தாலே ஜெயித்தவன் ராமன். தோஷத்தாலே ஜெயித்தவன் கண்ணன். அதைப் போல, ஸ்ரீதேவி ஒளியாலே ஏற்றம் படைத்தவள். ஆனால், பூமிபிராட்டியோ அழுக்காலே ஏற்றம் படைத்தவள். 

பெற்ற தாய் குழந்தையாக இருக்கும் போது, நம்மைப் பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள். பூமித்தாயோ நாம் வாழும் காலம் வரைக்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். தங்கம், வெள்ளி என விலையுயர்ந்த உலோகங்கள், அரிசி, பருப்பு என தேவையான உணவு வகைகள் எல்லாம் அவளின் கொடையே. 

பூமிபிராட்டிக்கு பிருது என்ற மன்னனின் பெயரால் "பிருத்வி' என்று பெயருண்டு. அவன் செங்கோல் ஆட்சி நடத்திய மன்னன். ஆனால், அவன் காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. என்ன செய்வதென ஒன்றும் புரியாமல், தன் வில்லை எடுத்துக் கொண்டு பூமியையே விரட்டத் தொடங்கினான். ஓரிடத்தில் பூமியைக் கொல்லத் தலைப்பட்டான். பூமியில்லாவிட்டால், உயிர்கள் அழிந்து போகும் என்ற உண்மையை அவனுக்கு உணர்த்தினாள் பிராட்டி. தான் ஒரு பசுவாக மாறி நின்றாள். 

அவளுடைய மடியில் அத்தனை செல்வங்களும் பால் போல பொங்கியது. பிருதுவும் ஒரு அதைப் பெற்று மகிழ்ந்தான். பிருதுவுக்கு வாழ்வு தந்ததால் "பிருத்வி' என போற்றப்பட்டாள். கருணை என்று வந்து விட்டால், பூமியும் பெரிய பிராட்டியான ஸ்ரீதேவிக்கு இணையானவள். பொறுமை என்றால் இவளுக்கு நிகர் இவள் மட்டும் தான். வராகபுராணத்தில் பூமிபிராட்டியின் வைபவம் விரிவாகப் பேசப்படுகிறது. சம்சாரக்கடலில் இருந்து நாம் தப்பவேண்டுமானால், பூமிதேவியோடு வீற்றிருக்கும் வராகப்பெருமானின் திருவடியைப் பிடித்துக் கொள்வது ஒன்றே வழி. 









ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 25

பெருமாளிடம் பூமிபிராட்டி, ""நம் குழந்தைகளாகிய பூலோகத்து உயிர்கள் வாழ்வில் உய்வடைய ஏதாவது வழிகாட்டுங்கள்,'' என்று வேண்டினாள். பெருமாளும் அவளுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

மனம், வாக்கு, காயம் என்று மூன்றாலும் கடவுளைச் சிந்திக்க வேண்டும். இதையே எண்ணம், சொல், செயல் என்றும் குறிப்பிடுவர். மனதால் கடவுளின் திருவடிகளைச் சரணாகதியாக பற்றிக் கொள்ள வேண்டும். வாக்கால் அவன் திருநாமத்தை பாட வேண்டும். கையால் பூக்களை அவன் திருவடியில் வைத்து வணங்க வேண்டும். இந்த மூன்றையும் செய்யும் உயிர்கள் சம்சாரக்கடலில் இருந்து கரையேறி மோட்சத்தை அடையலாம் என்று பூமிபிராட்டிக்கு வராகப்பெருமான் உபதேசம் செய்தார். இதனை "சூகரம் சொன்ன சுகர உபாயம்' என்பர்.

சூகரம் என்றால் "பன்றிமுகம் கொண்ட வராகப்பெருமான்'. "சுகரஉபாயம்' என்றால் "எளிமையான வழி'. 

இந்த மூன்றையும் செய்வதற்கு ஏற்றது இளமைக்காலம். "கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயன் வீற்றிருக்கும் அழகர்கோவிலுக்கு வாருங்கள்' என நம்மை அழைக்கிறார் நம்மாழ்வார். 
திருமாலிருஞ்சோலை மலையில் இளமையில் ஏறி சேவியுங்கள்.

தவறினால் முதுமையில் இரண்டு கால்களால் ஏற முடியாமல் அல்லல்படுவோம். அப்போது மூன்றாவது காலாக தடி (ஊன்றுகோல்) தேவைப்படும். முதுமையில் மரணப்படுக்கையில் ஞாபகம் தப்பிவிடும். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது. கடைசி நிமிஷம் வரை எம்பெருமானின் திருநாமத்தை சொல்ல முடியாது என்பதால், "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயண நாமம்' என்று பெரியாழ்வார் நமக்கு வழிகாட்டுகிறார்.

""மனம், வாக்கு, காயத்தால் தன்னிடம் சரணடைந்தவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் சொல்வது என் பொறுப்பு,'' என்று பூமிபிராட்டியிடம் வாக்கு கொடுத்தவர் பூவராகர். ஆனால், அதை செயல்படுத்துவர் திருமோகூரில் வீற்றிருக்கும் காளமேகப்பெருமாள் தான். வழித்துணையாக நமக்கு வந்து கைகொடுப்பவர் என்பதால் அவரை "ஆப்தன்' என்கிறார்கள். இதற்கு "நல்ல நண்பன்' என்று பொருள்.

வராகமூர்த்தி சொன்ன உபதேசத்தை நமக்கு எடுத்துச் சொல்ல பூமிபிராட்டி எண்ணம் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்யதேசத்தில் கோதை ஆண்டாளாக அவதரித்து நமக்காக வாழ்ந்து காட்டினாள். "திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே' என்று அவளின் ஏற்றத்தைப் போற்றுவர். பிரணவம் என்பது அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்று அக்ஷரங்களின் சேர்க்கை. இந்த மூன்றும் ஓரே கருவறையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே. அகாரமாக ரங்கமன்னாரும், உகாரமாக ஆண்டாளும், மகாரமாக கருடாழ்வாரும் ஏக சிம்மாசனத்தில் இங்கு வீற்றிருக்கின்றனர். சீதை, ருக்மணி, பாமா என தேவியர் பூமியில் அவதரித்தபோது, பிறந்த வீடும், புகுந்த வீடும் வேறுவேறாகவே இருந்தது. ஆனால், பூமிபிராட்டியான ஆண்டாளுக்கு பிறந்ததும், புகுந்ததும் பெரியாழ்வாரின் வீடு தான்.

கல்யாணம் முடிந்து, "வீட்டோடு மாப்பிள்ளை' என்ற சம்பிரதாயத்தை உலகில் முதன் முதலில் ஏற்படுத்தி வைத்தவர் பெருமாள் தான். பெரியாழ்வார் வாழ்ந்த இல்லமே இப்போது கோயிலாக விளங்குகிறது. இதற்கு "நாச்சியார் திருமாளிகை' என்று பெயர். பெரிய வீட்டில் இருப்பதைப் போன்ற ஜன்னல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பார்க்கலாம். 

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை ....என்று தொடங்கும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரத்தில், "தூயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க' என்று வராகமூர்த்தி சொன்ன உபாயத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். 

இப்படி யார் பக்தி செய்தாலும், செய்த பாவம் அத்தனையும் தீயில் தூசு போலாகி விடும். கிடந்து, இருந்து, நின்று, அளந்து, இடந்து, உண்டு, உமிழ்ந்து என எத்தனையோ விதங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார். பாம்பணையில் கிடப்பதும், அமர்ந்து இருப்பதும், தனித்து நிற்பதும், திரிவிக்ரமனாய் உலகை அளப்பதும், வராகராக வந்து பூமியை இடப்பதும்(தாங்குவது), பிரளய காலத்தில் பூமியை உண்பதும்(விழுங்குவதும்), மீண்டும் சிருஷ்டிக் காலத்தில் உமிழ்வதும்(பூமியை வெளிப்படுத்துவது) பூமிபிராட்டியை முன்னிட்டு தான். முதல் மனைவி இருக்க, இரண்டாவது திருமணம் செய்தால் மூத்த மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது வழக்கம். அதுபோல, ஸ்ரீதேவிக்கு மார்பில் மட்டும் சின்ன இடத்தைக் கொடுத்து விட்டு, பூமிதேவிக்கு தன்னையே கொடுத்து விட்டார். 

இதுவும் பெருமாள் பூமிபிராட்டிக்கு கொடுத்த ஏற்றம்தான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பொய்கையாழ்வாரின், முதல் திருவந்தாதி என்னும் பாசுரத்தில், பூமிதேவி திருமாலைப் பிரிந்ததால் அழுவதாகப் பாடியுள்ளார். இதற்கு ஸ்ரீரங்க நிர்வாகத்தில் ஈடுபட்ட ஆளவந்தார் காலத்திற்கு முந்தியவர்களும், ஆளவந்தாரும், பராசரபட்டரும் ஒவ்வொரு விதமான காரணத்தைச் சொல்வார்கள். காலத்தால் முந்திய நிர்வாகத்தினர், நிலையான பூமியை விட்டு, ஸ்ரீதேவி பாற்கடலுக்கு பெருமாளை அழைத்துச் சென்ற வருத்தத்தால் பூமிதேவி அழுவதாகக் குறிப்பிடுவர்.

ஆனால், ஆளவந்தாரோ, ""பூமி எப்போதும் ஆடாமல் அசையாமல் நிலையாக இருக்கிறது. ஆனால், கடலோ எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும். அதனால், ஸ்ரீதேவியோடு இருப்பதில் பெருமாளுக்கு சிரமமே,'' என அன்பின் காரணமாக பூமிதேவி அழுவதாக விளக்கம் அளித்தார்.

ஆனால், பராசரபட்டரோ வேறுவகையில் விளக்கம் அளித்தார். ஒரு காதலன் பொருள் தேடி விட்டு மழைக்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டான். ஆனால், வரவில்லை. மழை பெய்யத் தொடங்கியது. காதலி பிரிவுத்துயரம் தாங்காமல் அழுதாள். அவளுடைய தோழி, "இதுநிஜமான மழையில்லை. பாற்கடலில் திருமால் திருமகளோடு தங்கியிருப்பதால், பூமிதேவி அன்பால் விடும் கண்ணீர் துளிகளே' என்று சொன்னதாக விளக்கம் கொடுத்தார்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொன்னாலும், ரங்கநாதர் என்னும் குளத்தைச் சுற்றி வரும் அன்னம் போல, ஸ்ரீதேவி பெருமாளையே வலம் வந்து கொண்டிருக்கிறாள். அவளின் நிழல் போல பூமிதேவி எப்போதும் இருந்து கொண்டிருக்கிறாள். நிழலோடு யாரும் சண்டை போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், நிஜத்தை விட நிழல் வளர்ந்து கொண்டே போவதை பார்க்கலாம். அதனால், தேவியருக்குள் ஒருபோதும் சண்டை உண்டாவதில்லை.































மஹா விஷ்ணுவை தரிசித்த துருவன்

மஹா விஷ்ணுவை தரிசித்த துருவன்

பக்தியில் சிறந்த பக்தி எது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த சிறுவன் துருவனைப் பற்றி தெரிந்துகொள்வோம். இறைவன் மீது கொண்ட பக்தியினால் தன்னுடைய சொந்த காரணத்திற்காக பகவான் விஷ்ணுவை மானிடப் பிறவியில் தரிசிக்க முடியும் என்பதை உலகிற்கு புரிய வைத்தவன். வெற்றியின் இரகசியம் நம்பிக்கைதான் என்பதை உணர்ந்த துருவன், வானில் துருவ நட்சத்திரமாக தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டான். இக் கதையை விஷ்ணு புராணத்தில் இருந்து வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மனு சக்கரவர்த்தியின் பேரனும், உத்தானபாதனின் மகனுமான துருவன், அவனுடைய தந்தை போருக்கு சென்று வெற்றியோடு திரும்பி வருகிறார் என கேள்விப்பட்டு, அவருக்கு வாழ்த்து சொல்ல தாயை அழைக்கிறான். ஆனால் அவனது தாயான சூநிதியோ நான் மகாராணியாக இருந்தபோதும் உன் சிற்றன்னைக்குத்தான் முதல் உரிமையை உன்னுடைய தந்தை வழங்கி இருக்கிறார். ஆகவே நீயும் செல்லாதே என்கிறாள்.

அவனோ தந்தையைப் பார்ப்பது என் கடமை என சொல்லி செல்கின்றான். அவனுடைய தந்தையின் மடியில் அமர்ந்திருந்த துருவனைக் கண்ட அவனுடைய சிற்றன்னையோ, என் மகனுக்குத்தான் முதல் உரிமை உனக்கு முதலுரிமை வேண்டுமானால் நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும் எனக்கூறி, அவனை கீழே தள்ளி அவமானப்படுத்தி விடுகிறாள். நீ வணங்கும் மகா விஷ்ணுவிடம் அடுத்த முறையாவது என் வயிற்றில் பிறக்க வேண்டும் என கேள் என்கிறாள். சிற்றன்னையின் கொடும் செயலுக்கு விடையளிக்க யாரும் இல்லாததால், தன் தாயிடம் இதுபற்றி கேட்டான். அவன் தாயான சூநிதி, பகவான் விஷ்ணுவின் மகிமையை உணர்ந்தவள் என்பதால், துருவனிடம் “மகனே இந்த காரியங்களுக்கு பகவான் விஷ்ணு ஒருவரே பதிலளிக்க வல்லவர். நீ நினைத்தால் அவருடைய மடியிலேயே அமரலாம்” என்கிறாள்.

தன் தாயின் வார்த்தைகள் மனதில் பதியவே துருவன் பகவான் மகா விஷ்ணுவை நேரில் பார்க்கும் ஆவல் மேலோங்க, தன் தந்தை, தாய், அரச போகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, பகவானைத் தேடி புறப்பட்டான். அப்படி புறப்பட்ட துருவனின் பயணத்தில் அவன் அணிந்திருந்த அணிகலன்களைத் வழித்திருடர்கள் அபகரிக்க விளைகின்றனர். மகா விஷ்ணு தனக்கு காட்சியளிக்க வேண்டும் என நினைப்பதனால், துருவனை தன் மகனாகக் கருதிய லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து நேரில் அவனுக்கு காட்சி அளித்து, அவனைக் காப்பாற்றுகிறார்.

லட்சுமி தேவி துருவனிடம்: உன்னுடைய சிறு வயதில் நீ விரதங்கள் மேற்கொண்டு பகவானை தரிசிக்க இயலாது என அவனுக்கு அறிவுரை கூறுகின்றாள். ஆனால் அவனுடைய உயரிய குறிக்கோள் மகா விஷ்ணு மட்டும்தான் என புரிந்துகொண்ட லட்சுமி தேவி வைராக்கியத்திற்கு இது சமயமல்ல என சொல்லியும், அவனோ: தாயே என்னை மன்னியுங்கள். நான் என் விஷ்ணுவைத் தரிசிக்க என்ன இன்னல் வந்தாலும், அதற்கு தடையாக உள்ள அனைத்து காரியங்களையும் மேற்கொண்டு அவரை தரிசிப்பேன் என கூறுகின்றான். அரண்மனையில் துருவனுடைய தாய் சூநிதி மகனைக் காணாமல் கணவன் உத்தானபாதனிடம் சென்று மன்றாடுகிறாள். ராஜாவாகிய நீங்கள் என்னுடைய மகனை கண்டுபிடித்து தாருங்கள் என தன்னுடைய கணவனிடம் முறையிடுகிறாள். ராஜாவாகிய உத்தானபாதன் ஒரு படையை அனுப்பித் தேடச் சொல்வதாக சொல்கின்றார். அங்கே அவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த துருவனின் தாத்தா மனு சக்கரவர்த்திக்கு கோபம் வருகிறது. உத்தானபாதனிடம், உன் மகன் காணாமல் போனால் நீதான் சென்று தேட வேண்டும். உன் கண்கள் ஆசையின் காரணமாக குருடாகி விட்டது. உலக இச்சையின் மறு உருவங்கள் உன் மனதை ஆட்கொண்டதால், நீ உன் மகனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்புகிறார்.

தகப்பனார் உத்தானபாதன் தன்னைத் தேடி காட்டிற்கு வருவதைக் கண்டான் துருவன். தகப்பனின் அன்பால் தன் பயணம் தடைபடும் என உணர்ந்தவன், தந்தையைக் காணாமல் ஒளிந்துகொண்டு பகவானை மட்டும் மனதில் இருத்தியவனாய் முன்னேறிச் சென்றான். வழியில் தென்பட்டவர்கள் தன்னைத் திரும்பிச்செல் எனக் கூறிய வார்த்தைகளை கேட்காமல், பகவான் ஒன்றே குறிக்கோளாக எண்ணி திடமான மன உறுதியுடன், தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் சென்றான். வழியில் நாரதர் அவனின் ஆன்ம தாகம் தீர்க்க வழி சொல்வதாகக் கூறி, அவனை ‘திரும்பிச்சென்று விடு’ என்றபோதும், தன் மனதிலுள்ள திடமான குறிக்கோளை எடுத்துரைத்து, விஷ்ணுவைக் காண வழி சொல்லுமாறு மன்றாடி கேட்கிறான்.

துருவனின் உறுதியான மனதைத் தெரிந்துகொண்டார் நாரதர். “பகவான் விஷ்ணுவைக் காண வேண்டுமானால் அநேக இன்னல்களை சந்திக்க வேண்டும். நீயோ சிறுவன் உன்னால் முடியுமா?” என வினவினார். துருவன் சிறுவனாக இருந்தபோதும் தன் தந்தையும், சிற்றன்னையும் அவனிடம் நடந்துகொண்ட விதம், அவன் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டபடியால், நாரதர் கேட்ட கேள்விக்கு “என்ன இன்னல்கள் வந்தபோதும், நான் பகவான் விஷ்ணுவைத் தரிசிப்பதற்காக எதையும் தாங்கிக்கொள்வேன்” என உறுதியாகக் கூறினான். இறைவனைக் காண நம் கண்முன் உள்ள நம் தேவைகளே தடையாக இருப்பதை உணர்ந்த நாரதர், “முதலில் உன் உணவை விட்டுவிடு” என்றார். துருவனின் மனம் விஷ்ணுவைக் காண கொண்டுள்ள ஆவலில் நாரதர் கூறியபடியே செய்கின்றான். பின்னர் “தண்ணீர் குடிப்பதையும் விட்டுவிடு” என கூறினார். அதற்கும் சிறிதும் அஞ்சாமல்,

தன்னிடம் உள்ள தண்ணீரைத் தரையில் ஊற்றிவிட்டு பகவானின் நாமத்தை உச்சரித்து கடும் தவம் புரிகிறான். உணவையும், தண்ணீரையும் மறந்து பகவான் விஷ்ணுவையே தியானிக்கையில், அந்த பரம்பொருள் துருவனின் இருதயத்திற்குள் வந்ததை உணர்ந்து சந்தோஷம் மேலோங்க நாரதரிடம், “எனக்குள் இறைவன் இருப்பதை உணர்கிறேன்! ஆனால் அவர் என் முன்பு ஏன் பிரத்தியட்சமாக காட்சி கொடுக்கவில்லை?” என வருத்தம் நிறைந்த குரலில் தன் ஆதங்கத்தை எடுத்து உரைக்கிறான். துருவனின் ஜீவாத்மாவில் அந்த பரமாத்மா உறைவிடம் கொண்டபின், துருவனுக்குள் முழு சிருஷ்டியும் அடங்கி விட்டது. இதை உணர்ந்த நாரதர், “உன் மூச்சை ஓம் என்ற சத்துவத்துடன் உள் இழுத்து அப்படியே நிறுத்திவிடு” என்றுரைத்தார். தன் உடலை வென்ற பாலகன் தற்போது நாரதரின் சொற்படி தன் உயிரையும் துறக்க விரதம் பூண்டு, நாரதர் கூறிய வண்ணம் மூச்சை நிறுத்திக் கொண்டான். அந்த கணத்தில் சிருஷ்டி முழுவதும் இயங்காமல் ஸ்தம்பித்து விட்டது. இப்போது துருவனின் ஆசையை நிறைவேற்ற தேவர்கள் அனைவரும் ஏகமனதாக பகவான் விஷ்ணுவிடம் விண்ணப்பித்தனர். பகவானும் துருவனின் உயிரைக் காப்பாற்ற மற்றும் அண்ட சராசரத்தையும் காப்பாற்ற காட்சி கொடுக்கிறார்! அவனுக்கு அறிவுரையும் கூறுகிறார். நீ என்னைக் கண்டதும் உன்னுடைய கடமை முடிவுறவில்லை. இந்த பிறவியில் நீ பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உன்னுடைய கடமையைச் செய். எந்த பிள்ளையும் பெற்றோரின் மடியில் இருந்து இறங்கக்கூடாது. மேலும் என்னைப் பார்க்க இப்படி பசியாக இருந்து தவம் இருக்கக் கூடாது. நீ இந்த கடமைகளை சிறப்பாக நிறைவேற்றிய பின்னர் உன்னை இத்தரணியில் அனைவரும் மறக்காமல் இருப்பதற்காக நீ வானுலகில் துருவ நட்சத்திரமாக ஒளி வீசிக் கொண்டிருப்பாய் என இறை ஆசி வழங்குகின்றார். இந்த பூவுலகத்தில் நீ ஒரே இறைவனின் கொள்கையைப் பின்பற்றி எனக்கு சேவை செய்வாய். இவ்வாறு தர்மம், கர்மம், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி தெளிவாக அவனுக்கு விளக்கிக் கூறுகின்றார்.

லட்சுமி தேவியும் அவனுக்கு காட்சி தருகின்றார். அப்பொழுது துருவன்: தாயே தாங்கள் முன்பே பகவான் விஷ்ணுவைத் தரிசிக்கும்படி செய்திருக்கலாம். ஏன் காலதாமதம் செய்தீர்கள்? என கேட்டான்.நான் உதவி செய்திருந்தால் இன்று நீ அடைந்த முழுமையை அடைந்திருக்க முடியாது. நீ விஷ்ணுவுக்கு சிறந்த பக்தனாகி விட்டாய். அவரை அடைவதற்கு யாராவது உதவி செய்தால் மகத்துவம் அவர்களைச் சார்ந்திருக்கும். நீ சிரத்தையுடன் மேற்கொண்ட தவத்தின் வலிமையால் அவரை அடைவதற்கான வழியைத் தெரிந்துகொண்டாய் எனக்கூறி துருவனுக்கு லட்சுமி தேவி ஆசி வழங்குகிறார். இறுதியாக நாரதரும் அவனுக்கு காட்சி அளிக்கிறார். துருவன் அவரை தன் மானசீக குருவாக ஏற்று தவம் புரிந்து வெற்றி பெற்றதற்கு, வழி சொன்னதற்கு நன்றி உரைக்கின்றான். நாரதரும், விஷ்ணுவும், லட்சுமி தேவியும் துருவனை காட்டில் இருந்து அவனுடைய தந்தையின் அரண்மனை வரைக்கும் கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர்.

அரண்மனையில், துருவனின் தந்தையோ அவனின் சிற்றன்னையை வெறுத்து, அவனுக்காக மகா விஷ்ணுவிடம் தன் தவறை நினைத்து, வருந்தி வேண்டிக்கொண்டிருக்கிறார். துருவன் முதலாவதாக தன் சிற்றன்னையைக் கண்டு, அவள் செய்த உபகாரத்திற்கு நன்றி செலுத்த செல்கின்றான். அவனது சிற்றன்னையோ அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவனோ, உங்களால்தான் மகா விஷ்ணுவைச் சந்திக்க நேர்ந்தது என கூறி மகிழ்ச்சி அடைகிறான். தந்தையிடம் சிற்றன்னையினால்தான் நான் மகா விஷ்ணுவின் மடியில் அமர்ந்தேன் என வாதாடி மன்னிக்கும்படி வேண்டுகின்றான். பகவான் விஷ்ணு இந்த பூமியில் அவனுக்கு விதித்த கடமைகளை நிறைவேற்றி சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கின்றான்.

இக்கதை மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையிலும் மகா விஷ்ணுவானவர் நமக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கின்றார். அதை நாம் புரிந்துகொண்டு செயல்பட்டால் அவரிடம் வந்து சேரலாம். இதைச் சிறு வயதிலேயே உணர்ந்து கொண்ட சிறுவனாகிய துருவன் எத்தனை இன்னல் வந்தாலும், தன்னுடைய தவத்தினால் அவருடைய நாமத்தை அனுதினமும் சொல்லி, அவருக்கு நன்றி செலுத்தி, அவன் ஸ்ரீமந் நாராயணர் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாட்டை நமக்கு உணர வைத்தான். சிறு வயதில் பெற்றோர்களுக்குரிய கடமையைச் செய்ய வேண்டும்! குருவிடம் பக்தி கொண்டு இறைவனை அடைய வேண்டும். இறைவன் படைத்த அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டோம் அல்லவா!

இரவினில் துருவ நட்சத்திரம் ஒளி வீசி திசையை நமக்கு காண்பிப்பது போல, இவ்வுலகிலுள்ள மக்கள் கடவுளை அடைவதற்கு நாமும் துருவனைப்போல பிறருக்கு வழிகாட்டும் ஜோதியாக பிரகாசிப்போம்.

ராமருக்கே குரு ஆசிர்வாதம்

ராமருக்கே குரு ஆசிர்வாதம்
தசரதர் வம்சத்து முன்னோரில் திலீபன் என்ற மன்னர் இருந்தார். இவருக்கும் நெடுநாட்களாகப் பிள்ளை பாக்கியம் இல்லை. இதனைக் குறித்து வருந்திய அவர், ஆஸ்தான ஜோதிடரிடம் கேட்க, குரு பூஜையில் ஏதோ குறை இருக்கிறது; குரு திருப்தி அடைந்தால் பிள்ளை பிறக்கும் என்றார். இதனையடுத்து குலகுருவான வசிஷ்டரிடம் சென்றார்கள். அப்போது தியானத்தில் இருந்த அவரிடம் இப்பிரச்சினையைத் தெரிவிக்க, சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்திய வசிஷ்டர் கண்களில் காமதேனு பட்டது. இந்த காமதேனுவை மேய்ச்சலுக்குச் செல்லும்போது கவனமாகப் பார்த்துக்கொள் என்றார்.
மிகுந்த கவனத்துடன் திலீப மகாராஜா காமதேனுவைப் பார்த்துக்கொண்டார். காமதேனு எங்கு சென்றாலும் கூடவே செல்வார். மகாராஜா என்றாலும், கல்லிலும், முள்ளிலும் மழையிலும் வெயிலிலும் கடமை தவறாமல் காமதேனு பின்னால் அலைந்தார்.
இந்த நேரத்தில் காமதேனு அவரைச் சோதனை செய்ய எண்ணியது. ஒரு சிறிய குன்றின் மீது மேய்ந்துகொண்டே ஏறிவிட்டது. ஒரு குகையின் அருகே வந்தபோது, காமதேனுவை அடித்துச் சாப்பிட சிங்கம் ஒன்று பாய்ந்தது. சடேரென்று நீண்ட வாளுடன் குறுக்கே தாவிய திலீப மகாராஜா அச்சிங்கத்தைக் கொல்ல முயன்றார்.
பராசக்தியின் அருள் பெற்ற அச்சிங்கம் பேசியது. “மகாராஜா சற்றே விலகி நில்லும். என் பசியாற காமதேனுவைப் புசித்துக்கொள்கிறேன்.”
“என்னைச் சாப்பிட்டுக்கொள்” என்றார் மகாராஜா.
சிங்கமோ, “திலீபா, நீயோ பிள்ளை வரத்திற்கு காத்திருக்கிறாய். உனக்கோ ராஜபரிபாலனம் என்ற கடமை வேறு இருக்கிறது. நீ இப்போது உன்னைத் துறக்கலாமா? இப்பசுவை என்னிடம் விடு. இதோ இருக்கிறதே இந்த மரம் மிக அபூர்வமான பூக்களைத் தரக் கூடியது. இதனை பராசக்தி பிரியமாக வளர்த்து வருகிறாள். இதனைக் காவல் காக்கும் பணியை என்னிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளாள். மேலும் இக்குகை அருகே வரும் விலங்குகளை அடித்துச் சாப்பிட அனுமதி அளித்துள்ளாள். அதனால் எனக்கு உணவாகவே இப்பசு இங்கே வந்துள்ளது என நம்புகிறேன். எனவே வழி விடு” என்றது.
“ நானே உனக்கு உணவாக வேண்டும் என்பதுதான் அவன் சித்தம் போலும். என்னையே உண்க” என்றார் மகாராஜா. அடித்து உண்ணப் பாய்ந்தது சிங்கம். அந்த கணமே ரிஷபாரூடராக சிவன் பார்வதியுடன் தோன்றி அருளினார். அந்தச் சிங்கமும் அழகிய கந்தர்வனாக மாறியது.
அருளைப் பெற்ற மகாராஜா, காமதேனுவுடன் ஆசிரமம் திரும்பினார். இதனை உணர்ந்த வசிஷ்டரும், மகாராஜாவை ஆசிர்வதித்து நாட்டிற்கே திரும்ப அனுப்புகிறார். பின்னர் ராஜாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இவரது வம்சத்தில் வந்தவரே தசரதர். குருவைப் போற்றும் குலத்தில் பிறந்ததால் சத்சங்கம் கிடைக்கும் என்று எண்ணியே தசரதருக்குப் பிள்ளையாக வந்து உதித்தாராம் ஸ்ரீராமர்

கடவுளுக்கு குணமிருக்குமா

முக்குணங்கள் பற்றி சொல்லும்போதிலிருந்தே பலரும் என்னைக் கடவுளுக்கு குணமிருக்குமா என்றெல்லாம் என்னை வசை பாடினார்கள்!! இன்னமும் பாடிக் கொண்டே இருக்கின்றனர்!!! இன்னொன்று இந்தப் பதிவுத் தொடரில் நான் எங்குமே குறிப்பிடாத நிர்க்குணம் என்கிற பெயரையும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்!! அவ்வாறு சொல்வது ஏன் என்பது அவர்களுக்கே தெரியும்!!!! மும்மூர்த்திகள் நிர்க்குணக் கடவுளர் அல்ல!!! அப்படி ஏதேனும் இருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம்!! மும்மூர்த்திகளும் உலகியலில் தத்தம் கடமைகளை செய்கின்றனர்!! அவ்வளவே!!! குணங்கள் எல்லாமே கடவுளின் படைப்புதான்!! அப்படியிருக்க அவருக்கே அந்தக் குணங்கள் எப்படி இருக்கும் ?? இதில் முக்கிய விஷயம் சிவபெருமானை தமோகுணப் பிரதிநிதியாக சொல்லக் கூடாது என்கிற வாதமே!!! இதன் பொருள் சிவபெருமான் தமோகுணம் உள்ளவர் என்பதல்ல!! அவர் தமோகுணத்தின் மூலமாக மனிதரை ஆட்கொண்டு பிரபஞ்சத்தை இயக்கிச் செல்கிறார் என்பதே!! இதைப் புரிந்து கொள்ளவோ ஏற்கவோ மாட்டேன் என்பவருக்கு நான் இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை!! இருப்பினும் கடவுளர் வர்ணனை எந்தக் குணங்களாக இருந்தாலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது!! முக்குணங்கள் என்பது தனியாக எந்த மனிதரிடத்தும் இருப்பதில்லை!!! எல்லாக் குணங்களும் சேர்ந்துதான் இருக்கும்!! சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அது வெளிப்படும்!! உதாரணமாக சாது மிரண்டால் என்று சொல்வது சத்வ குணமே மிகுதியாக இருக்கும் ஒருவன் ஒரு கட்டத்தில் ரஜோ குணத்தை வெளிப்படுத்துவதே!! அதே போல சத்வ குணப் பிரதிநிதியாக சொல்லப்படும் விஷ்ணுவும் கூட நரசிம்ம அவதாரம் எடுக்கும் போது ரஜோகுணம் கொண்டவராக மாறிப் போனார் என்பது நாம் உணரும் உண்மை!! இவ்வாறு குண மாறுபாடுகள் இல்லாமல் மனிதரால் மட்டுமின்றி கடவுளராலும் உலகை இயக்க இயலாது!!!
நரசிம்ம அவதாரம் போல இன்னொரு கதையை இங்கு விளக்க விரும்புகிறேன்!! பஸ்மாசுரன் சிறந்த சிவபக்தன்!! உலகுக்கு தானே கடவுளாக வேண்டுமென்கிற வெறியுள்ள அரக்கன்!! அவன் பல்லாயிரம் ஆண்டுகள் சிவபெருமானை நோக்கித் தவம் செய்த நிலையில் அவனுக்கு பரமேஸ்வரன் காட்சி தந்து வரம் கேட்க சொன்னார்!! அவனோ சாகாவரம் கேட்டான் !! அது இயலாத கதை என்று அப்பன் சொல்லவும் தான் யாரைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறேனோ அவர்கள் இறந்து போக வேண்டும் என்று சொல்ல நினைப்பால் சாகடிக்க இயலாது என்றார் ஈஸ்வரன்!! பின் அவன் பல வகையிலும் கேட்டுப் பார்த்து அப்புறம் ஒரு வழியாக தான் யார் தலை மேல் கைவைக்கிறேனோ அவர்கள் சாக வேண்டும் என்று வரம் கேட்க ஈஸ்வரனும் வழங்கினார் !!
அவனோ அதைப் பெற்றுக் கொண்டு இதை உங்களிடமே பரீட்சை செய்து பார்க்கிறேன் என்று சிவபெருமானின் தலையில் கைவைக்க வந்தான்!! (வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பது என்கிற பழமொழி இக்கதையின் அடிப்படையில் வந்ததே!!) சரி சிவபெருமானுக்குத் தெரியாதா தாம் அழியாத கடவுள் என்று??? ஆனால் அந்த ஒரு சிறு கணத்தில் அவரும் மாயைக்கு ஆளானார்!! அவனிடம் இருந்து விலகிப் போனார்!! அவனோ விடாமல் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான்!! இப்படி ஈரேழு பதினாலு உலகங்களும் சுற்றிய பின்னர் சிவபெருமான் வைகுந்தம் அடைந்தார்!! அங்கு நடப்பதை ஏற்கெனவே அறிந்த நாராயணன் மோகினி அவதாரம் எடுத்து நின்றார்!!
மோகினியைக் கண்ட அசுரன் வந்த வேலையை மறந்தஅவளிடம் மயங்கி அவளுடன் ஆடத் துவங்கினான்!! பல வகைகளிலும் அபிநயம் பிடித்த மோகினி ஒரு நேரம் வேகவேகமாக அபிநயம் செய்கையில் அசுரனும் அதே வேகத்துடன் அபிநயம் பிடித்தான்!! அப்போது மோகினி தன தலையில் தன கையை வைக்க அசுரன் மாயையால் தான் பெற்ற வரத்தை மறந்து தன் தலையிலேயே கையை வைக்க எரிந்து போனான்!!
இந்தக் கதையை வைணவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வது உண்டு!! ஆனால் அது அப்படியல்ல!! கடவுளருக்கும் சிற்சில நேரங்களில் மாயாவசம் உண்டாகும் என்பதை சொல்லி நிற்கும் கதை இது அவ்வளவே!!!

பகவானின் திவ்விய நாமத்தை உச்சரித்தால், அளப்பரிய பலன்களைப் பெறலாம்

கிருஷ்ணன் நாமம் ......
இந்த உலகிலேயே மிகப்பெரிய
பொய்யைச் சொல்லி,
உலகத்து மக்களை நம்ப வைத்தவன் யார்
தெரியுமா?
வேறு யார்? சாட்ஷாத்
கண்ணபிரான்தான்.
அடேங்கப்பா... இல்லாததை இருப்பதாகவும்,
இருப்பதை இல்லாததாகவும், உண்மையைப்
பொய்யாகவும்,
பொய்யை மெய்யாகவும்
எடுத்துரைப்பதில் வல்லவனாயிற்றே அவன்!
சகாதேவன் ஜாதக
சாஸ்திரத்தை அறிந்தவன் என்பதால்,
துரியோதனன் அவனிடம் வந்து, 'யுத்தத்தில்
நாங்கள் வெற்றி பெற வேண்டும்.
அதற்கு நீதான் தேதி குறித்துக்
கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான்.
அமாவாசை நாளைக் குறித்துக்
கொடுத்து,
'வெற்றி உங்களுக்கே!' என்றான்
சகாதேவன்.
இதையெல்லாம் பார்த்துக்
கொண்டிருந்த கிருஷ்ண
பரமாத்மாவுக்கு வந்ததே கடும் கோபம்..!
''துரியோதனன், நம்மிடம் போர்
செய்வதற்காகத்தான் தேதி குறிக்கச்
சொல்கிறான்.
நம்மை வெல்வதற்காகத்தான் நல்ல
நாள் பார்த்து தரச் சொல்லிக்
கேட்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது, எப்படித்
தேதி குறித்துக் கொடுக்கலாம் நீ?
சரி... அந்தத் தேதி பொய்யான
நாள்தானே?! தப்பான
நேரத்தைத்தானே குறித்துக்
கொடுத்தாய்?''
என்று கண்ணபிரான் கேட்டான்.
சகாதேவன் மெல்லியதாகச் சிரித்தபடி...
''ஜோதிட சாஸ்திரத்தைப் பொய்யாக
எடுத்துரைப்பது பாவம்! அப்படிச்
சொல்வது ஜோதிடத்தையே
அவமதிப்பதாகிவிடும். ஒருநாளும்
அப்படியொரு தவற்றை நான்
செய்யமாட்டேன். எனவே, நான் குறித்துக்
கொடுத்த தேதியில்,
அமாவாசை திதியில் யுத்தம்
செய்தால்... துரியோதனன் நிச்சயம்
வெல்வான். நானும் என் சகோதரர்களும்
தோற்கலாம். ஆனால், ஜோதிடத்தை நம் லாப -
நட்டங்களுக்காகப் பயன்படுத்திக்
கொள்ளக்கூடாது. ஜோதிட
சாஸ்திரத்தில் இருந்து வழுவாமல்
இருப்பது இந்த சகா தேவனின் வேலை.
கள்ளத்தனம் செய்து, தகிடுதத்தம்
பண்ணி, ஜெயிக்கச்
செய்வது உன்னுடைய வேலை! அதை நீ
பார்த்துக் கொள்!''
என்று பளிச்சென்று முகத்துக்கு நேராகச்
சொன்னான் சகாதேவன்.
'அதெல்லாம் எனக்குத் தெரியும்’
என்று சிரித்துக்கொண்டே வந்த
கண்ணபிரான், 14-ஆம் நாளான
சதுர்த்தசியன்று, ஆற்றங்கரைக்குச்
சென்று தர்ப்பணம் செய்வதில்
மும்முரமாக ஈடுபட்டான். அதைக் கண்ட
அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
'இதென்ன குழப்பம்!
நாளைக்குத்தானே அமாவாசை! கிருஷ்ண
பரமாத்மா இன்றைக்குத் தர்ப்பணம்
செய்கிறாரே...' என்று பிரகஸ்பதியிடம்
கேட்டார்கள். அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும்
குழம்பிப்போன நிலையில் ஒன்று கூடினார்கள்.
புலம்பித் தீர்த்தார்கள். 'என்ன இது...
ஒன்றுமே புரியவில்லையே..?' எனத்
தவித்து மருகினார்கள்.
இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணரிடமே சென்று,
''அமாவாசையன்றல்லவா தர்ப்பணம்
செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள்.
உடனே, ஸ்ரீகிருஷ்ணர், 'முதலில்
அமாவாசை என்றால் என்ன? அதைச்
சொல்லுங்கள்?' என்று கேட்டார்
சிரித்தபடி. ''இதென்ன கேள்வி... சூரிய
பகவானாகிய அவரும் சந்திரனாகிய
நானும் சந்தித்துக் கொள்வதுதான்
அமாவாசை திதி'' என்றார் சந்திர
பகவான்.
''அதானே அமாவாசை? இதோ... சூரியன் -
சந்திரன், நீங்கள் இரண்டு பேரும்
இப்போது ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?
எனவே, இந்தத் திதி அமாவாசை திதிதானே?
அதனால்தான் தர்ப்பணம்
செய்கிறேன்'' என்று குறும்புப் பார்வையுடன்
சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர்.
அதுமட்டுமா? ''என்
அனுஷ்டானத்துக்கு இடையூறு
செய்யாதீர்கள். நான்
அமாவாசை தர்ப்பணம்
செய்யவேண்டும்''
என்று சொல்லிவிட்டு,
விறுவிறுவென தர்ப்பணம்
செய்வதில் ஈடுபட்டார் கிருஷ்ண
பரமாத்மா.
அடேங்கப்பா... ஒரு பொய்யை அழகிய
நாடகத்தின் மூலம்
எப்படி உண்மையாக்கிவிட்டார்! பஞ்ச
பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும்
என்பதற்காக, எப்படி எல்லாம்
தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார்!
இவை அனைத்துக்கும் ஒரே காரணம்...
பாஞ்சாலிதான்! துகில் உறியும்
தருணத்தில், கதறியபடி... 'கோவிந்தா’
என்று ஒரேயரு திருநாமத்தைச்
சொல்லி அழைத்தாள் அல்லவா!
அந்த ஒற்றைத் திருநாமம்
சொன்னதற்காக, கண்ணன்
பட்டபாடு கொஞ்சமா, நஞ்சமா?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஒற்றைத் திருநாமத்தைச்
சொன்னதற்காக, கண்ணன்
எப்படியெல்லாம் அன்பு செலுத்தி,
வெற்றிக்கு வித்திட்டான்.
அப்படியெனில், சகஸ்ர நாமங்களையும்
நாம் பாராயணம் செய்தால்,
நமக்குக் கண்ண
பரமாத்மா என்னென்ன
நன்மைகளையெல்லாம் செய்வான்?
நன்றாக யோசியுங்கள். பகவானின் திவ்விய
நாமத்தை உச்சரித்தால், அளப்பரிய
பலன்களைப் பெறலாம்.
மறந்துவிடாதீர்கள்!

கடவுளை காண்பவர்கள் பற்றி சில கதைகள்......

கடவுளை காண்பவர்கள் பற்றி சில கதைகள்......
கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர்.
யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார்.
நான்கு சுவையான கதைகள்..
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை;
கதை 1:-- ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
கதை 2: புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.
கதை 3:- ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.
கதை 4: நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.
இந்த நாலு எடுத்துக் காட்டுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.

அம்பாள் எதிர்பார்க்கும் அன்பு

அம்பாள் எதிர்பார்க்கும் அன்பு
ஒரு கிராமத்து மக்கள் அம்மன் வழிபாட்டுவிஷயத்தில் இரு கோஷ்டியாகப் பிரிந்தனர். ஒரு சாரார் அம்பாளை உக்கிரதேவதையாக வடித்து, பலி முதலானவை கொடுத்தனர். மற்றொரு சாரார் சாந்த ஸ்வரூபியாக வடித்து, சைவ உணவுகளை படைத்தனர். ஒருமுறை, பெரியவர்ஒருவர் அங்கு வந்தார். தங்கள் வழிபாட்டு முறையில் எது உயர்ந்தது என இருபிரிவாரும் கேட்டனர்.பக்தர்களே! பக்தியில் ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்றெல்லாம் ஏதுமில்லை. மனிதர்களின் மனநிலைக்கு ஏற்பவே, அம்பாளுக்கு படைக்கும் பொருளும் மாறுகிறது. சிலருக்கு இறைச்சி பிடிக்கும். அவர்கள் அம்மனுக்கு பலியிடுகிறார்கள். சிலருக்கு சைவப்பொருட்கள் ஒத்து வரும். அவர்கள் சைவத்தைப் படைக்கிறார்கள். சைவம் படைப்பதால் மட்டும் உயர்ந்தவர், அசைவம் படைப்பவரெல்லாம் தாழ்ந்தவர் என்றில்லை. ஒரு உயிரைப் பலியிடுவது பாவம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அம்பாளுக்கு அந்தப் பொருள் எந்தளவுக்கு மனமொன்றி பக்தியுடன் படைக்கப்படுகிறது என்பதே முக்கியம். சைவமே படைத்தாலும் கூட, நீ தந்த பொருள் உனக்கே சொந்தம் என்ற எண்ணமில்லாமல் படைத்தால், அதுவும் அசைவ உணவே ஆகும். அம்பாள் நாம் என்னதருகிறோம் என எதிர்பார்ப்பதில்லை. நம் மனதிலுள்ள ஆணவம், கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றை அவள் முன்பலியிட வேண்டும். அதையே அவள் விரும்புகிறாள், என்றார்.இதன்பின் இருதரப்பாரும் சைவ, அசைவ சர்ச்சையை விட்டனர். பெரியவர் சொன்னபடி, தங்கள் எண்ணங்களை நல்லதாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்

அச்சுதா... அச்சுதா
ஒரு மன்னன் தினமும்பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்கு உரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான்.மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார்.அவரிடம், சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை.என் உயிர் பிரிய மறுக்கிறதே, என அழுதான்.முனிவர் அவனைத் தேற்றி, மன்னா! நீ அன்னதானம் செய்தாயா? என்றார்.ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான்.இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய், என்றார் முனிவர்.அவர் சொன்னது பிடிக்காவிட்டாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்.சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே, என்றான் மன்னன்.மன்னா! வரும் வழியில் தான் கவனித்தேன். உன்ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக்கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து, என்றார். ஆனால் மன்னன் மறுத்து விட்டான்.எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது என சொல்லிவிட்டான்.இதையடுத்து பரந்தாமனே மன்னன் முன் தோன்றி, அவனது மனஉறுதியைப் பாராட்டினார். வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார். கடவுளின் நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது பார்த்தீர்களா! குழந்தைகளுக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வையுங்கள். அவர்களை அந்தப் பெயரால் அழைப்பதால், இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்.

திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக?

சோ" எழுதிய எங்கே பிராமணன்? தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சுவையான கேள்வி-பதில் உரையாடல்:

கேள்வி : திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக? போகிறவர்கள் என்றைக்கோ போய்ச் சேர்ந்தாகி விட்டது. அவர்களுக்கு வருடா வருடம் இந்த மாதிரி ஒரு சடங்கு தேவையா? இங்கே கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் போன்றவை அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அவர்கள் இருக்கிற இடம்தான் உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் சொல்கிற மந்திரத்தின் மூலமாக, அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நன்மை விளையப் போகிறது? இந்தச் சடங்கு எதற்காக? பகுத்தறிவுக்கு இது சற்றும் ஒவ்வாதது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
சோ : நீங்கள் பகுத்தறிவு என்று பேசுவதால் முதலில் அந்த விஷயத்தைப் பார்ப்போம். இப்போது ஒரு தலைவரின் சமாதி என்று ஒன்றை நிறுவி, அங்கே போய் வருடா வருடம் மலர் வளையம் வைக்கிறார்கள். ஏன்? அந்தத் தலைவரும் என்றைக்கோ போய்ச் சேர்ந்து விட்டவர்தானே? இங்கே இவர்கள் வைக்கிற மலர் வளையம், அங்கே அவருக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அல்லது அந்த மலரின் வாசனை அவருக்குப் போய் விடுமா? அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. அதை மட்டும் ஏன் செய்கிறார்கள்? அதுவும் அவர் என்று இறந்தாரோ, அந்தத் தேதியில் போய்ச் செய்வானேன்? மற்ற தினங்களில் செய்தால், அந்த மலர் வளையம் அவருக்கு ஏற்புடையதாகாதா? அவர் இறந்த தினத்தன்று இந்த மரியாதையை ஒரு அரசியல்வாதி செய்யவில்லை என்றால், உடனே அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வருகின்றன. ‘இறந்த தலைவர் மீது இவருக்கு மரியாதை இல்லை’ என்ற பேச்சு வருகிறது. சரி, இப்படி மலர் வளையம் வைப்பதால் ஒருவேளை ஓட்டு வருமோ, என்னவோ தெரியாது.
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அது அவர்களுடைய பிரேதத்திற்காகச் செய்யப்படுகிற காரியம் அல்ல. அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று – ஆதித்ய ரூபம்; இரண்டாவது – ருத்ர ரூபம்; மூன்றாவது – வஸு ரூபம். அந்த ரூபத்தில் அவர்களுக்கு நாம் செய்கிற மரியாதை இங்கே செய்யப்படுகிற சிராத்தம். சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம். இதில் முக்கியமானதே சிரத்தைதான். இந்த சிராத்தத்தைத்தான் திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறோம். 
இது ஒரு பண்டிகை அல்ல. இதை மிகவும் விமரிசையாகச் செய்யக் கூடாது. ‘ச்ராத்தம் ந விஸ்தாரயேத் தீமான்…’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அறிவுடையோன் சிராத்தத்தை விமரிசையாகச் செய்ய மாட்டான். ஏனென்றால், இது ஒரு பொதுக்காரியம் அல்ல. சிராத்தத்தைச் செய்கிறவன் தனது முன்னோர்களுக்காகச் செய்கிற காரியம் இது. அதில் பெரிய விருந்து, படாடோபம் எல்லாம் கூடாது.
இறந்த முன்னோர்கள் எங்கே இருக்கிறார்கள்? நம்மால் பார்க்க முடியாதுதான். ஆனால், இன்று விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? வானுலகில் சில இடங்களில் ஜீவ ராசிகள் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். நிச்சயமாக அங்கு ஜீவராசிகள் கிடையாது என்று அவர்கள் சொல்லவில்லை. அந்த ஜீவராசிகளின் சக்தி என்ன, அவர்களுடைய அறிவு என்ன – என்பதெல்லாம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகள் இப்படியே தொடர்ந்து, ஒரு கட்டத்தில், ‘மேலுலகில் ஜீவராசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் நல்ல அறிவு இருக்கிறது.
அவர்கள் நம்மை விட மிகவும் நுட்பமான அறிவு கொண்டவர்கள், திறன் கொண்டவர்கள்’ என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறினால், நாம் என்ன சொல்வோம்? ‘ஏதோ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், நமக்கு என்ன தெரியும்? நமக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்றா சொல்வோம்? அப்படிச் சொல்ல மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்லி விட்டால் சரி என்று ஏற்று விடுவோம். அவர்கள் சொல்வதே அதற்கு நிரூபணம் ஆகி விடும். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து வேறு விஞ்ஞானிகள், இவர்களிடமிருந்து மாறுபட்டால், அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம். அதாவது அங்கே நம்முடைய சுய அறிவு என்பதற்கு வேலையே கிடையாது. என்ன சொல்லப்படுகிறதோ, அதை கண்மூடித்தனமாக ஏற்று விடுவோம். ஏனென்றால், அப்போதுதான் நமக்கு எல்லாம் புரிந்து விட்ட மாதிரி காண்பித்துக் கொள்ள முடியும். ஆனால், இப்பொழுது நம்பிக்கை ரீதியாக சிராத்தம் என்று சொன்னால், ‘யாருக்கு? எங்கே இருக்கிறான்?’ என்றெல்லாம் கேட்கிறோம்.
பித்ருக்கள் – அதாவது – மறைந்த முன்னோர்கள் ஆதித்யர்கள், ருத்ரர்கள், வஸுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்று சொன்னோம். எட்டு வஸுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள் இன்னும் சிலர் பித்ரு தேவர்கள் என்று கூறப்படுகிறார்கள். இவர்களுடைய ஆதரவில்தான் நமது முன்னோர்கள், தங்களுடைய கர்மம் முடிகிற வரை, பித்ரு லோகத்தில் தங்குகிறார்கள். கர்மம் முடிந்த பின்பு, அவர்களுடைய அடுத்த பிறவி வரும். அதுவரை பித்ரு லோகத்தில் இருக்கிற அவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறோம்.ஒரு புண்ணிய தீர்த்தத்தில் சென்று சிராத்தம் செய்தால், அது தீர்த்த சிராத்தம். கங்கையில் செய்தால், அது கயா சிராத்தம். இப்படி பல சிராத்தங்கள் கூறப்பட்டுள்ளன.
பித்ரு தேவர்களையும், பித்ருக்களையும் வணங்கி நாம் செய்கிற சிராத்தம், ஹிந்து மதச் சடங்குகளில் மிகவும் புனிதமானவற்றில் ஒன்று.

சிங்கமாய் இரு

சிங்கமாய் இரு
ஞானியைச் சந்தித்த பக்தன் ஒருவனிடம் சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே! என சுருக்கமாக அறிவுரை கூறினார். அதன் உள்ளர்த்தம் விளங்காத பக்தன், ஞானியையே விளக்கம் தர வேண்டினான்.
ஒரு சிங்கத்தின்மீது அம்பு எய்யப்படுமானால் அது அம்பை பொருட்படுத்தாமல், எய்தவனை நோக்கியே பாயும். ஒரு நாயின் மீது எதையாவது வீசி எறிந்தால், அது எறியப்பட்ட பொருளை நோக்கியே ஓடும். எறிந்தவனைப் பற்றிக் கவலைப்படாது.
அதுபோல் வாழ்வில் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரும்போது சிங்கத்தைப்போல் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், அதை அளித்த இறைவனைப் பற்றி நினைக்க வேண்டும். பிரச்னைகளைத் தீர்க்கும் வழியையும், வலிமையையும் எனக்குத் தர வேண்டும் என அவரிடம் பிரார்த்திக்க வேண்டும். அதை விடுத்து நாயைப் போல் பிரச்னைகள் பின்னே ஓடக்கூடாது! என ஞானி கூற, தெளிவு பெற்றான் பக்தன்.

சித்திரநேமி

சித்திரநேமி
ஒரு சமயம் பார்வதியும் பரமசிவனும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். ஆட்டத்தின் முடிவில் இருவரும் தாங்களே ஜெயித்ததாக வாதம் செய்தனர். சித்திரநேமி என்ற கணதேவனை நீதிபதியாக வைத்து யார் வெற்றி பெற்றார் என கேட்டனர். பரமசிவன்தான் வென்றார் என அவன் கூறினான். கோபம் கொண்ட பார்வதிதேவி, ஏ சித்திரநேமி! நீ பொய் உரைத்ததால் குஷ்டரோகி ஆவாய், என சாபமிட்டாள். இதைக்கேட்ட ஈசன், தேவி! சித்திரநேமி எப்போதும் பொய் உரைக்கமாட்டான். அவன் உண்மையின் காதலன். அவசரப்பட்டு அவனுக்கு சாபம் கொடுத்துவிட்டாயே, என வருத்தத்துடன் சொன்னார். சித்திரநேமி மீது மனம் இரங்கிய தேவி, எப்போது அழகிய நீர் தடாகத்தில் புண்ணியமும் புனிதமும் நிறைந்த ஒரு விரதத்தை தேவமாதர்கள் அனுஷ்டிப்பார்களோ, அந்த நாளில் உன் மீதான சாபம் விலகும், என்று கூற, சித்திரநேமி அதிர்ச்சியோடு மயங்கி விழுந்து விட்டான். அவன் விழித்துப் பார்த்தபோது தேவியின் சாபத்தின்படியே குஷ்டரோகியாய் இருந்தான். அனைவரும் அவனை துரத்தினர்.
பல இடங்களில் சுற்றித்திரிந்த சித்திரநேமி, ஒரு காட்டுப்பகுதியில் அழகான தண்ணீர் தடாகத்தைக் கண்டான். அங்கேயே அவன் வாசம் செய்ய ஆரம்பித்தான். ஒருநாள் சில தேவமாதர்கள் அந்த தடாகத்திற்கு வந்து ஸ்நானம் செய்தனர். பின்பு அனைவரும் அமர்ந்து பூஜை நடத்தினர். தேவமாதர்கள் பூஜை செய்வதைக்கண்ட சித்திரநேமி அவர்கள் அருகில் வந்து, தாய்மார்களே! நீங்கள் எதற்காக பூஜை செய்கிறீர்கள்? இந்த பூஜையில் நானும் கலந்துகொள்ளலாமா? நானும் பூஜை செய்யலாமா? பார்வதி தேவியின் கோபத்திற்கு ஆளாகி கொடிய குஷ்டரோகம் பிடித்து அலைகிறேன். எனது இந்த கொடிய நோய் தீர ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள், என்று பணிவுடன் கேட்டான். அந்த பெண்கள், இன்று வரலட்சுமி விரதம். மிகவும் திவ்வியமானது. கேட்கும் வரங்களைத் தரக்கூடிய அற்புதமான விரதம். எனவேதான் லட்சுமிதேவியை நினைத்து இவ்விரதத்தை நாங்கள் இவ்விடத்தில் துவங்கியுள்ளோம்.
சிராவண(ஆவணி) மாதம் சுக்லபட்சம் (வளர்பிறை) வெள்ளிக்கிழமையன்று இதைத் தொடங்க வேண்டும், என கூறினர். தேவமாதர்கள் செய்த வரலட்சுமி பூஜையை சித்திரநேமி பார்த்துக்கொண்டே இருந்தான். ஹோமப்புகையையும், நெய் தீபத்தின் வாசனையையும் நுகர்ந்ததாலும், பூஜையை கண்குளிர கண்டதாலும் அவனது நோய் அகன்றது. தேகம் பொன்னிறமாக மாறி, அழகானது. அந்த நிமிடமே அவனும் விரதத்தை துவக்கிவிட்டான். சாபம் நீங்கிவிட்டதால் சித்திரநேமி மீண்டும் தேவர் உலகம் சென்றான். இவ்விரதம் பற்றி தேவர்களுக்கு எடுத்துக்கூறினான். கைலாசம் சென்று பார்வதி பரமேஸ்வரரை வணங்கினான். வரலட்சுமியின் பேரருளால் தங்கள் திருவடி காணும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன் என மனம் நெகிழ்ந்து கூறினான். ஆவணி வளர்பிறையில் துவங்கும் இந்த விரதத்தை எல்லா வளர்பிறை வெள்ளிக்கிழமைகளிலும் சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதம் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் தனம், தான்யம், ஆரோக்கியம், சந்தான பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

ஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்.

** தூக்கம்
* ஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்.இராவணன் மகனான இந்திரஜித்து எவனொருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனே இந்திரஜித்தை கொல்வான்,என்ற வரம் பெற்றவன். இலக்குவன் தன் அண்ணனுக்கும்,அண்ணிக்கும் 14 ஆண்டுகள் காவலிருக்கும் பொருட்டு தன் மனைவியான ஊர்மிளையிடம் தன் உறக்கத்தை கொடுத்துவிட்டு போனதாக கதை உண்டு(14 ஆண்டுகள் ஊர்மிளை தூங்கிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது).அதன் காரணமாக 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து பின் அது தந்த பலத்தின் காரணமாக(இலக்குவனை கொல்ல இந்திரஜித்து நிகும்பலையில் யாகம் செய்தும்) இந்திரஜித்தை, இலக்குவன் கொன்றார்.
* திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் எவன் ஒருவன் தினம் ஒரு மணிநேரம் மட்டும் உறங்குகின்றானோ அவன் ஆயிரம் வருடம் உயிர் வாழ்வான் என்கிறார்.
* தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.
** இதையே அகத்தியர்
* உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
மறலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே. 
-அகத்தியர்-
* உண்ணும்போதும் உயிர் எழுத்தான மூச்சுக் காற்றை அதிகமாக ஓடவிடாமல் பிடித்து இழுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.உறங்குகின்ற போதும் இப்படியே இருக்க வேண்டும்.பெண்ணிடம் சம்போகத்தில் ஈடுபடும்போதும் இதே போல் மூச்சைப் பேணி மேல் தூக்கி அவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* உயிர் அழியாமல் இருக்க தின்னக் கூடிய காயகற்பமாகிய காய் இலை மருந்து இதுவேயாகும். தினந்தோறும் இது போல் உங்களால் செலுத்த முடியுமானால் இந்த மண் உள்ள வரையில் உயிர் வாழலாம்.மறலி என்றால் எமன்,அந்த எமன் கையில் அகப்பட்டு உயிரை விட மாட்டீர்கள் என்று அகத்தியர்