Thursday, November 29, 2012

பற்று வைப்பதால் உயிர்கள் அழிகின்றன---அபிநவவித்யா தீர்த்த சுவாமி

மானைப் பிடிக்க இசையை வைத்து வலை விரிப்பார்கள். ஆண் யானையைப் பிடிக்க அழகான பெண் யானையை அதன் முன் நிறுத்தி வைப்பார்கள். விட்டில் பூச்சியை நாம் பிடிக்கவே வேண்டாம். தீபம் ஏற்றிவிட்டால் தானாகவே அதில் வந்து விழுந்து விடும். புழுவுக்கு ஆசைப்பட்டு மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. பூக்களின் மணத்தை நாடிச்செல்லும் தேனீக்கு, அது சேகரித்த தேனே எமனாகிறது. ஆம்..அதிலேயே சிக்கி உயிர் விடுகிறது. இப்படி செவி, உடல் (ஸ்பரிசம்), கண், நாக்கு, மூக்கு ஆகிய ஐந்து புலன்களின் மீதும் பற்று வைப்பதால் உயிர்கள் அழிகின்றன.
* மற்ற உயிர்களெல்லாம் ஏதோ ஒரு புலனைத் தான் (உறுப்பு) பயன்படுத்துகின்றன. ஆனால், மனிதன் ஐம்புலன்கள் மீதும் பற்று வைத்து, அவை சொல்வது போலவே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். ஆனால், இந்த புலன்கள் சொல்வதை கடைசி வரை அவனால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இவையெல்லாம் ஒருநாள் கெட்டுப்போனால், அவனால் செயல்படவே முடியாது. எனவே, மனிதன் விரும்பி அடைய வேண்டியது இறைவனின் திருவடித் தாமரைகளைத் தான்.
* "புலன்கள் தரும் இன்பத்தை விட்டு விட மனமே இல்லை' என்கிறான் மனிதன். சம்பாதிக்கும் ஒருவனுக்கு பத்துலட்சம், பத்துகோடி, நூறு கோடி என விரிவடைந்து கொண்டே போனாலும் திருப்தி ஏற்படுவதில்லை. அதே நேரம் அவனிடம்,""இவ்வளவு கோடிகள் சம்பாதித்து விட்டாயே...நூறு ரூபாய் தர்மம் செய்,'' என்றால், ""இல்லை...இதெல்லாம் ஒரு பணமா! இன்னும் வரட்டும், அப்போது நூறென்ன..ஆயிரம் ஆயிரமாய் தருகிறேன்,'' என்று தான் சொல்லுவான். அந்த இலக்கை அவன் எட்டிய பிறகு, அவனிடம் சென்றால், ""இது ஒன்றும் பெரிசில்லையே! இன்னும் வரட்டும், பார்க்கலாம்,' 'என்று தான் சொல்வான். தர்மம் செய்ய அவன் முன் வருவதே இல்லை. ஆகவே, மனிதனால் ஆசைகளில் இருந்து விடுபடவே முடியாது என்றால் அதில் மிகையில்லை.
* மனிதனுக்கு இளமை இருக்கும் போது அவன் தியானம் உள்ளிட்ட ஆன்மிகப்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஏனென்றால், வயதான பின் அவனால் எந்த ஒரு யக்ஞத்தையோ, ஹோமத்தையோ செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் கூட செய்ய முடியாமல் போய்விடும். இளமையிலேயே ஆசைகளை மனச்சிறைக்குள் பூட்டினால் தான் இது சாத்தியம்.
* ஆசையானது அதை அனுபவிப்பதனால் அடங்குவதில்லை. அதற்கு மாறாக மென்மேலும் அது நெய்யினால் வளர்க்கப்பட்ட தீயைப் போல பெருகவே செய்யும்.
* சம்பாதிக்க விரும்பும் ஒருவன் மென்மேலும் சம்பாதிக்கவே விரும்புவான். எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் மேலும் வாழவே விரும்புவான். ஆசைகளை அனுபவித்த பின்னும் மேலும் அவற்றையே நாடிச்செல்லவே விரும்புவான். ஆகையால், இவையெல்லாம் ஓய்ந்தபின் பக்தியில் ஈடுபடுவது என்பது நடக்காத காரியம்.
* மனிதசரீரம் நல்லநிலையில் இருக்கும் வேளையிலேயே அதை நன்கு பயன்படுத்தி நற்செயலைச் சாதிக்க எண்ண வேண்டும். இப்படி ஓர் எண்ணம் வந்துவிட்டால், மனித மனம் வேறு எந்த விஷயத்தையும் நாடி அலையாது.

No comments:

Post a Comment