Friday, November 30, 2012

உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே

பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர், ஒரு புத்தகக்கடை வைத்திருந்தார். அன்று அவருக்கு முக்கியமான பணி. விற்பனையைக் கவனிக்கும்படி தனது பணியாளரிடம் சொல்லி விட்டு, தனது அறையில் இருந்து வேலையைப் பார்க்கத் துவங்கினார். அப்போது ஒரு வாடிக்கையாளர் வந்தார். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். நீண்ட நேரத்துக்குப் பின் ஒரு புத்தகத்தை எடுத்தார்.
விற்பனையாளரிடம் அதன் விலை என்ன என்றார்.
""ஒரு டாலர்'' என்றார் விற்பனையாளர்.
""விலை அதிகமாக இருக்கிறதே'' என்றவர், இன்னொரு புத்தகத்தைத் தேடி எடுத்தார். அதன் விலையைக் கேட்டார்.
""இதுவும் ஒரு டாலர் தான்,'' என்ற விற்பனையாளரிடம்,""தம்பி! இதன் விலை தொடர்பாக, நான் உங்கள் முதலாளியிடம் பேச வேண்டும். அவரை வரச்சொல்லுங்கள்,'' என்றார்.
""ஐயா! அவர் முக்கியப் பணியில் இருக்கிறார். தங்களிடம் பேசும் அளவுக்கு நேரமில்லை. நீங்கள் இந்த விலையைக் கொடுத்து புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்,'' என்றார்.
விற்பனையாளரிடம் கடுமையாக வாதாடி, உரிமையாளர் இங்கே வந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்தார்.
வேறு வழியின்றி ஊழியர் பிராங்க்ளினிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்.
பிராங்க்ளின் வெளியே வந்தார்.
""ஐயா! இந்த புத்தகம் எனக்கு வேண்டும். ஒரு டாலர் என்பது அதிகமாக இருக்கிறது. குறைத்துச் சொல்லுங்கள்,'' என்றார். பிராங்க்ளின் மறுத்தார்.
சிறிதுநேரம் வாக்குவாதம் தொடர்ந்தது.
""கடைசியாக இதன் விலையைக் கூறுங்கள்,'' என்றார் வந்தவர்.
""ஒரு டாலர் 25 சென்ட்.'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியாகி விட்டது.
""நான் குறைக்கச் சொன்னால் நீங்கள் உயர்த்திச் சொல்கிறீர்களே! எதற்கு?'' என்றார்.
""புத்தகத்தின் விலை ஒரு டாலர் தான். நான் நேரத்தைப் பொன்னாக மதிப்பவன்.
என் பணியை இவ்வளவு நேரம் கெடுத்தீர்களே! அதற்கு 25சென்ட்,'' என்றார் பிராங்க்ளின்.
வந்தவரோ விடாக்கண்டன். குறைத்தே ஆக வேண்டுமென அவரிடம் வாதிட, ""இரண்டு டாலர்'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளர் கோபம் கொப்பளிக்க நின்ற போது, ""ஏன் மேலும் உயர்த்தினீர்கள்?'' என்றார்.
""நான் நேரத்தின் அருமையை உணர்ந்தவன். நீங்கள் உணரவில்லை. அதற்காகத்தான் இந்த விலை உயர்வு,'' என்றார்.
வந்தவர் இரண்டு டாலரைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.
உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே. பணக்காரனாவதற்கு ஒரே தகுதி காலத்தின் அருமையை உணர்வது தான். சரிதானே!

No comments:

Post a Comment