Sunday, October 20, 2013

ஹிந்துத்துவம் பழமைவாதமா?

ஹிந்துத்துவம் பழமைவாதமா?

ஹிந்துத்துவம் பழமைவாதமன்று. ஹிந்து பாரம்பரியமே “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என சூத்திரம் படைத்த மரபாகும். தம் முன்னோர் தோண்டியது என்பதாலேயே, உப்பு நீர் உள்ள கிணற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது தவறு என ஒரு சமஸ்கிருதப் பழமொழி சொல்கிறது. புதுமை என்பது மேற்கத்தியப் பண்பாட்டை அப்படியே காப்பி அடிப்பது அல்ல, மாறாக, நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதுதான்.
உதாரணமாக, தொழில்நுட்பங்களில் மேற்கத்திய தொழில்நுட்பம் அதிக மூலதனமும் அதிக எரிபொருளையும் வீணாக்கக் கூடியது. மாசு ஏற்படுத்தக் கூடியது. எனவே, அத்தகைய தொழில் நுட்பங்களை நம்சூழலில் பயன் படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, நம் சூழலுக்குத் தகுந்தவாறு தொழில்நுட்பத்தைத் தகவமைக்க வேண்டுமென ஹிந்துத்துவம் கூறும். ஹிந்துத்துவம் நம் மரபு சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இன்றைக்கு அறிவியல் முழுமைத் தன்மையுடன் பிரச்னைகளை அணுக வேண்டும் எனும் முடிவுக்கு வந்துள்ளது.
நியூட்டன் கால இயற்பியல் பார்வை இயந்திரத்தன்மை கொண்டது. கார்ட்டீசிய அணுகுமுறை அல்லது பகுப்பாய்வு முறை எனச் சொல்லப்படும் அறிவியலே 9ஆம் நூற்றாண்டில் கோலோச்சியது. எந்த விஷயத்தையும் பிரித்து, அதன் பகுதிகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ஒரு பொருள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது இந்த கோட்பாடு. உயிரினங்கள், சமுதாய அமைப்புகள், ஏன் இந்த பிரபஞ்சம் முழுதுமே இயந்திரத்தன்மை கொண்டதாக இந்த அணுகுமுறையில் காணப்பட்டன. ஆனால், புதிய இயற்பியல் என ஐன்ஸ்டைனாலும் க்வாண்டம் இயற்பியலாளர்களாலும் முன்வைக்கப்பட்ட அறிவியல் இதனை மாற்றியது.

அதன் தொடர்ச்சியாக, இந்த பிரபஞ்சம் என்பது இயந்திரங்கள் என்றும் அதன் இருப்பு பல நுண்ணியத் தொடர்புகளால் ஆனது, அது பிரித்துப் பார்க்கும் பகுத்தாய்வால் விளக்க முடியாதது என்றும் அறிவியலாளர்கள் அறிந்து கொள்ள ஆரம்பித்தனர். அணுவுக்குள்ளும் சரி, அண்ட சராசரங்களிலும் சரி, ஜடமாகக் கருதப்பட்ட அனைத்தும் மிகத்தீவிர இயக்கங்கள் கொண்டவை என்பதை அறிவியலாளர்கள் அறிந்தனர். இந்தப் புதிய பிரபஞ்ச தரிசனத்தை வெளிகாட்டும் மிகச்சிறந்த ஒரு குறியீடாக அவர்கள் எதைக் கண்டார்கள்?
சோழர்களின் செப்புத் திருவடிவமான நடராஜரையே அவர்கள் கண்டார்கள். கலை ஆன்மிகம் அறிவியல் ஆகியவற்றை இணைக்கும் ஒரு சிறந்த புள்ளியாக ஹிந்து பண்பாட்டின் ஆன்மிகச் சின்னமான நடராஜ தத்துவம் விளங்குகிறது.
இயற்பியலில் மட்டுமல்ல; உயிரியல், உளவியல், சுற்றுச் சூழலியல், நரம்பியல், பொருளாதாரம் எனப் பல துறைகளில் பாரதிய சிந்தனை மரபு இன்றைய அறிவியலின் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருந்து வருகிறது.

மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால், சுஷ்ருதர், சரகர், அகஸ்தியர் ஆகியோர் இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையை உருவாக்கியுள்ளனர். மனிதனுடைய நோய் என்பதை அதன் முழுமையான சூழலில் அணுக வேண்டும் என்பதையும், மருந்துகள் இயற்கையோடு இணைந்த மூலிகைகள் மற்றும் வாழ்க்கை முறை என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நமது பாரம்பரிய உணவு முறைகளேகூட நோய் தடுக்கும் தன்மை கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாழ்வியலும் ஹிந்துத்துவத்தின் ஒரு பகுதியே. இதனை இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.
எனவே, ஹிந்துத்துவம் என்பது பழமைவாதமல்ல என்பது மட்டுமல்ல. ஹிந்துத்துவ சிந்தனை அறிவியல் பார்வையை வளர்க்கும் என்பதுமே உண்மை. மேற்கத்திய தரிசனங்கள் மனிதனின் ஏதேனும் ஒரு பரிமாணத்தை மட்டுமே மிகைப்படுத்திப் பார்க்கும் தன்மை கொண்டவை.

உதாரணமாக சிக்மண்ட் ஃப்ராய்ட் அனைத்து மானுட எழுச்சிகளையும் காமத்தின் அடிப்படையிலேயே நோக்கினார்.
காரல் மார்க்ஸ், மானுட வரலாறையே உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அளவிட்டார்.
முதலாளித்துவமும் சரி, கம்யூனிசமும் சரி, பொருளா தாரத்தையே மைய சக்தியாகக் கண்டன. மைய அரசு சார்ந்த கட்டுப்பாடு அல்லது கட்டற்ற சந்தை இலாபம் என்பவையே முக்கிய இயக்க சக்திகளாகக் கருதப்பட்டன.
ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள், “மத்திய கிழக்கில் உதித்த மதங்கள்’ தெய்வீகக் கட்டளைகளே மானுடத்தின் அனைத்துத் துறைகளையும் ஆள வேண்டுமெனக் கருதினர்.
ஆனால், இந்திய ஹிந்துத்துவ சிந்தனை, மனிதனை அவ்வாறு கூறுபோட்டுப் பார்க்கவில்லை. திருவள்ளுவர் மனிதனின் இருத்தல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று பரிமாணங்களாலும் ஆனது என்பதைத் தெளிவாகக்கூறி, அதன் அடிப்படையிலான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கிறார். அனைத்து அறநூல்களும் இந்த மூன்று வாழ்க்கை உந்துதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

சமஸ்கிருதத்தில் இது தர்ம அர்த்த காம புருஷார்த்தங்கள் எனக் கூறப்படுகின்றன. ஹிந்துத்துவம் மட்டுமே மனிதனை முழுமையாகக் காணும் ஒரு பார்வையை அளிக்கிறது. பிற பார்வைகளை அவற்றுக்குரிய இடத்தில் நிலைநிறுத்துகிறது. இந்த புருஷார்த்தங்கள் மனிதனை எங்கே இட்டு செல்கின்றன? ஒரு கற்னையான சுவர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அல்ல. விடுதலையே மானுடத்தின் சுயநிலை, இயற்கை உரிமை என்பதையும் அவை அறுதியிட்டுச் சொல்கின்றன.
மோட்சம் அல்லது வீடுபேறு என்பது முக்தி அல்லது விடுதலையை குறிப்பதாகும். மானுட வரலாற்றில் விடுதலையை ஆதர்சமாக முன்வைத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் ஒரு பண்பாட்டை உருவாக்கியப் பெருமை ஹிந்துஸ்தானத்துக்கே உரியது. விடுதலையே உண்மைத் தேடலின் அடிப்படை ஆதாரம்.

அறிவியல் என்பதே உண்மையைத் தேடுவதாகும். வேதாந்த மதிப்பீடுகள் நம் தேசிய அறிவியல் எழுச்சிக்கு வித்தாக இருந்தன என்பதையும் நாம் அறிகிறோம். அது ஜகதீஷ் சந்திர போஸாகட்டும், ஆச்சார்ய பிரபுல்ல சந்திரராயாகட்டும், டாடாவாகட்டும், சத்யேந்திர நாத் போஸாகட்டும், ஜியார்ஜ் சுதர்ஸனாகட்டும் அவர்களுக்குள் அக்கினிப்பொறி ஏற்றியது அத்வைத ஒளியே. பெரும் தேசிய அறிவியல் எழுச்சியை ஹிந்தமறுமலர்ச்சியே உருவாக்கியது.
எனவே, அறிவியல்பூர்வமான வாழ்க்கைக்கு ஹிந்துத் துவமே வழிகோலும் சித்தாந்தமாகும்.

No comments:

Post a Comment