Wednesday, October 23, 2013

பொறுமையுடையவன் எந்தச் செயலிலும் வெற்றியடைவது உறுதி.

ஆன்மிகத்திற்கு தேவை பொறுமை. ஒருவன் தன்னை ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொண்டு, கோபத்திலேயே ஆழ்ந்து கிடந்தால் அவன் ஆன்மிகத்திற்கு தகுதியற்றவன் ஆகிவிடுகிறான். இதனால் தான், திருநீறு தயாரிப்பு விஷயத்தில் பொறுமையைக் கற்றுத்தந்தது ஆன்மிகம்.
அக்காலத்தில், திருநீறு தயாரிப்பது எப்படி தெரியுமா? வியாதியில்லாத கன்றுடன் கூடிய பசு, சாணம் போடும் வரை காத்திருக்க வேண்டும். சாணம் போடும் சமயத்தில், கையில் வைத்திருக்கும் தாமரை இலையில் அதைப் பிடிக்க வேண்டும். அந்த சாணத்தை உருண்டையாக்கி, சிவ மந்திரங்கள் சொல்லி அக்னியில் இட்டு எரிக்க வேண்டும். அல்லது காடுகளில் கிடைக்கும் காலில் மிதிபடாத பசுஞ்சாணத்தை மந்திரம் சொல்லி அக்னியில் எரித்து தயாரிக்க வேண்டும்.
இதெல்லாம் ரிஷிகளால் செய்யப்பட்டது. வீடுகளில் திருநீறு தயாரிக்க, மாட்டுத்தொழுவத்தில் கிடைக்கும் பசுஞ்சாணத்தை எரித்து, தீட்சை பெற்ற ஒருவரிடம் கொடுத்து மந்திரம் சொல்லி மீண்டும் எரித்து வாங்க வேண்டும். மந்திரம் ஏதும் சொல்லாமல், சாணத்தை எரித்தும் திருநீறு தயாரிக்கலாம். இதற்கெல்லாம் பொறுமை தேவை. திருநீறு பூசுவதை விட, திருநீறு தயாரித்துப் பாருங்கள். பொறுமை தானாகவே ஒட்டிக்கொள்ளும். பொறுமையுடையவன் எந்தச் செயலிலும் வெற்றியடைவது உறுதி.

No comments:

Post a Comment