Sunday, October 20, 2013

எது நிர்வாணம் ? ஆடையற்று நிற்பதா ?

 
எது நிர்வாணம் ? ஆடையற்று நிற்பதா ?

இல்லை. ஆசைகளை அறுத்து பற்றுகளைத் துறந்து இருப்பதே நிர்வாணம்.

உடைகோ வணம்உண்டு உறங்கப் புறத்திண்ணை யுண்டுஉணவிங்கு...
அடைகாய் இலையுண்டு அருந்தத்தண் ணீர்உண்டு அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டுஇந்த மேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே !

ஆசை வயப்பட்டவர்களுக்கே, இந்த சாஸ்திர சம்பிரதாயங்களெல்லாம். திருஓடு கூட இல்லாத கோவணத்தாண்டியான முற்றுந் துறந்தவர்களுக்கு சந்திரனின் பிறையில் வடபக்கம் உயர்ந்தாலும் கவலையில்லை, தென்பக்கம் உயர்ந்தாலும் கவலையில்லை. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையாகிய மூவாசைகளையும் அவற்றின் கிளைகளாக பல்கிப் பெருகிக் கொண்டே போகும் இலட்சோபலட்சம் ஆசைகளையும் துறந்தால் ஒழிய நற்கதியை அடைய முடியாது. பற்று அறுந்தவனுக்கு ஒரு நிஷ்டையும் தேவையில்லை. அப்படி ஒருவர் இருப்பாரேயானால் பார்க்காதவர்கள் பார்த்துக் கொள்ளலாம் அவனே சிவ சொரூபம். அவனுக்கு நல்வினைகளும் இல்லை, தீவினைகளும் இல்லை. அவனே பரம், அவனே சத்தியம். அவன் பார்த்தால் வினைகள் பொசுங்கிப் போகும். அவனை ஸ்பரிசித்தால் மலத்தடைகள் நொறுங்கிப் போகும். ஞான வாசல் திறக்கும். மெய்யறிவு துலங்கும். நான்கு வேதங்களாலும் அறிய முடியாததை நீ அறிந்து கொள்வாய். அவனையே சற்குருவாய் ஏற்றுக் கொள்வாயாக.

ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல, பாலைவனத்தில் உள்ள மணலைப் போல எண்ணிக்கையில் அடங்காத ஆசைகளைக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு ஆசைகளையும் அடைவதென்பதோ அல்லது முழுமையாக்க முயற்சி செய்வதோ அக்ஞானம் எனப்படும். அதுவே அறியாமை. இந்த ஆசைகளே நம்மைக் குழப்பி விடுபவை. எந்த அளவுக்கு இந்த ஆசைகளை அடையத்த் தலைப்படுகிறோமோ அல்லது அனுபவிக்கிறோமோ அந்தளவுக்கு அவை அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உடலுக்குத்தான் வயதாகி விட்டதே தவிர மனதளவில் இன்னும் நான் இளைஞன்தான் என்றும் உடல் கிழப்பருவம் அடைந்தாலும் ஆசைகள் கிழவனாகவில்லை என்றும் சொல்ல்லிக் கொள்கிறோம். இந்த ஆசைகளை அனுபவித்து அனுபவித்து நம் பல், கண், காது போன்ற எல்லா உறுப்புகளும் பலவீனமாகிவிட்டாலும் மனம் அதை விடாமல் குரங்குப் பிடியாகப் பற்றிக் கொண்டே இருக்கிறது. எனவே நாம் ஆசை என்றால் என்ன என்று அறியாத நிலையை அடைந்தால் மட்டுமே மேன்மையடைய முடியும்.

இறைவனின் நினைவிலேயே திளைத்திருக்கும் யோகிக்கும் ஆசை இருக்கிறது. இந்த உலகியலில் உழன்று கொண்டிருக்கும் போகிக்கும் ஆசைகள் இருக்கிறது. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு இரவுக்கும் பகலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டுக்கு ஒப்பானதாகும். போகியின் ஆசைகள் கணக்கிலடங்காதவைகளாகும். மேலும் அவன் அந்த அனைத்து உலகியல் ஆசைகளிலும் உழன்று கொண்டு ஒரு பித்தனைப் போல அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பான். ஆனால் யோகியின் ஆசை அதுவல்ல, இறைநிலையில் திளைத்திருப்பது ஒன்றே அவன் ஆசையாக இருக்கும். காணும் எல்லாவற்றையும் இறைவனாகவே காணுவான். பற்றற்றவன் கண்களுக்கு எல்லாம் இறை சொரூபமே. ஆனால் இந்தப் பித்தனான போகியோ, யோகியைப் பார்த்து பித்தன் என்பான். அது சரி, சிவனையே பித்தன் என்றுதானே சொல்கிறோம் !

No comments:

Post a Comment