Thursday, October 24, 2013

காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும்

காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர். அந்தக் காலத்தில் பால்ய விவாகம் இருந்தது. இதை ஏன் அனுமதித்தார்கள் என்றால், குழந்தைகள் ஒழுக்கக்குறைவான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதால் தான்.
""காலத்தே கல்யாணம் செய்யாததால் தான் வழுக்கி விழுந்தவள், தடுக்கி விழுந்தவள்... என்ற சொற்களெல்லாம் நம் காதில் விழும் நிலை இருக்கிறது'' என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.
திருமணத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வயது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18. பட்டப்படிப்பு முடிக்கும் பெண்ணுக்கு கூட 20 வயது நிறைவடைந்து விடுகிறது. மேற்கல்வி கற்றால் 24 வரை எட்டி விடுகிறார்கள். எப்படியிருப்பினும், திருமணம் முடிப்பவர்கள் ஏறத்தாழ சமவயது உடையவர்களாக இருப்பது நல்லது. இதிகாச காலத்தில் கூட ஆறு வயதுக்கு மேல் வித்தியாசம் காட்டப்படவில்லை. ராமனுக்கு திருமணம் நடந்த போது அவரது வயது 12. சீதாவின் வயது 6 என்கிறது வால்மீகி ராமாயணம். ஆணுக்கு 26 வயதுக்குள்ளும், பெண்ணுக்கு 24 வயதுக்குள்ளும் திருமணம் முடித்து விடுவது நல்லது. உதாரணமாக, ஒருவருக்கு 30 வயதில் திருமணம் நடக்கிறது என்றால், அவரது 31 வயதில் குழந்தை பிறக்கலாம். அந்தக் குழந்தைக்கு 24 வயது ஆகும்போதே, அவர் 55வயதை எட்டி விடுவார். அந்தக் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பதற்குள் போதும் போதும் என எண்ணம் வந்துவிடும். தாமதமாக குழந்தை பிறந்தால் கேட்கவே வேண்டாம்.
நாம் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். நடக்க வேண்டிய நேரத்தில் அது அது நடந்தால் தான், வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகும்.

No comments:

Post a Comment