Friday, October 11, 2013

ஸ்ரீதேவி vs மூதேவி


ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி
விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ
நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன்
வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி
கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக,
எங்கேசற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், “ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!” என்று சொல்லஇரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்லநாரதர்தான்

ஜேஷ்டை என்றால் ஒரு பெண் தெய்வம். அமங்கலங்களின் தெய்வம் இது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் திரண்டு வந்த முதல் தேவதை இவள்தான். மங்கலங்களின் தெய்வமாகிய லட்சுமிதேவி அல்லது ஸ்ரீதேவி அதன்பின்னர்தான் அமுதுடன் வந்தாள். ஆகவே இவளுக்கு மூத்தவள் என்ற பொருளில் ஜேஷ்டை என்றபெயர் வந்தது. மூத்த தேவி என்ற பொருளில் இவளுக்கு மூதேவி என்றும் பெயர் உண்டு.

சாக்த மத நூலான போதாயனஸ¥த்ரத்தில் இந்த தேவியை எப்படி பூசைசெய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது, இந்த தேவியின் பல சிற்பங்கள் கிடைத்துள்ளன என்று சொல்லும் வெட்டம் மாணி தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருபாடலில் மூதேவியை வழிபடுவது வீண் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் ஜேஷ்டை வழிபாடு அனேகமாக காணப்படுவதில்லை, சைவ புராணங்களில் ஜேஷ்டை பார்வதியின் ஒன்பது தோற்றங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறாள் என்கிறார் வெட்டம் மாணி.

தமிழில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும்சேட்டைஎன்ற சொல்லின் வேர் எது என்று புரிந்தது. அபிதான சிந்தாமணியை பார்த்தேன். இவள் முதலில் ஆதிசக்தியில் அவளுடைய ஒரு தோற்றமாகப் பிறந்து பின்னர் திருப்பாற்கடலில் தோன்றியவள் என்கிறார் சிங்காரவேலு முதலியார். இவள் கன்னங்கரிய நிறமும், பாம்பு ஆயுதமும், கழுதை வாகனமும் கொண்டவள். இத்தகவலை சுப்ரபோதம் என்ற பழைய நூலில் இருந்து அவர் எடுத்திருக்கிறார்.

மூதேவி அரசு மற்றும் விளா மரத்து அடியில் இருப்பாள். மனிதர்களின் நிழல் வழியாக நடமாடுவாள். இரவு அவளுக்கான நேரம் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை, ஆடை கழுவிய தண்ணீர், விளக்குமாற்றின் புழுதி, மயிர்க்குப்பை, கழுதை, நாயின் புழுதி, வெந்த சாம்பல், ஆட்டுப்புழுதி போன்றவை இவள் இருக்கும் இடங்கள் என்று சிங்காரவேலு முதலியார் அண்ணாமலையார் சதகத்தை ஆதாரமாகக் காட்டிச் சொல்கிறார்.

இவளுக்கு மூத்தாள் என்றும் பெயருண்டு. அக்கா என்றும் இவளை பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. இவளுக்கு காகம் கொடியாக இருக்கிறது. இவள் தூக்கத்தையும் சோம்பலையும் வரவழைக்கும் தேவி. பதினான்கு வருடம் கண்துயிலா விரதம் எடுத்து ராமனுடன் காட்டுக்குச்செல்லும் லட்சுமணன் கங்கை கரையில் இருக்கையில் மூதேவி வந்து அவனை தழுவப்பார்க்கிறாள். நான் அயோத்தி திரும்பும்போது வா என்று சொல்லி அனுப்புகிறான் லட்சுமணன்.

மூதேவி வழிபாடு என்பது இலக்குமியின் (ஸ்ரீதேவி) சகோதரியான மூதேவி (மூத்ததேவி) வழிபாட்டைக் குறிக்கும். இவ்வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது. சீதேவியின் மூத்த அக்காள் மூதேவி என்பதால் மூத்த தேவி என்ற சொற்பதம் மருவி மூதேவி என்று சுருங்கி விட்டது. சமசுகிருதத்தில்ஜேஷ்டா தேவிஎன்று அழைக்கப்படுகிறார்

 

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமேமூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள்.

என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன. குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது.

No comments:

Post a Comment