Friday, January 31, 2014

கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்

ஒருஇளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது.
அவன் ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் தனது விருப்பத்தை சொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும் படிக்கச் செய்தார். இளைஞனும் புலமை பெற்றான்.
ஆனால், கடவுள் காட்சி கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அவன் அங்கிருந்து வெளியேறினான். "இவ்வளவு கற்றிருக்கிறோம். ஆனாலும் நமக்கு தரிசனம் கிடைக்கவில்லையே' என்று நினைத்தான்.
சிலகாலம் அமைதியாக இருந்தான்.
ஒருசமயம், ஒரு மகானிடம் தன் மனதில் இருந்த எண்ணத்தை கொட்டினான். தான், படித்த மேதாவியாக இருந்தும் கடவுள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்றும் ஆணவமாகப் பேசினான்.
அவனது கர்வத்தைக் கவனித்த மகான்,""தம்பி! ஒரு நிமிடம் நான் சொல்வதைக்கேள். நீயோ நிறைய கற்றதாகவும், பல அனுபவங்கள் பெற்றதாகவும் சொல்கிறாய். அவற்றையெல்லாம் நான் சோதிக்க வேண்டுமானால் அதற்குரிய அவகாசம் எனக்கு இல்லை. எனவே, உனக்கு என்னென்ன தெரியுமோ, அவற்றையெல்லாம் ஏட்டில் எழுதி வா! நான் ஓய்வாக இருக்கும் வேளையில் அவற்றை படித்து உனக்கு கடவுளைக் காணும் பாக்கியம் இருக்கிறதா என்பதை அறிந்து சொல்கிறேன்,'' என்றார்.
இளைஞன் வீட்டிற்கு திரும்பினான். தான் படித்ததையெல்லாம் எழுத ஆரம்பித்தான். இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது.
பின்பு அவற்றை ஒரு பையில் கட்டி, மகானை சந்திக்கச் சென்றான்.
மகான் அவனிடம், ""மகனே! இவ்வளவு ஏடுகளை படிக்கும் பொறுமை என்னிடம் இல்லை. இதில், தேவையற்றதை நீக்கி, சுருக்கமாக ஒரே ஒரு ஏட்டில் நீ படித்ததன் சாராம்சத்தை மட்டும் எழுதி வா!'' என்றார்.
இளைஞனும் சில மாதங்கள் முயற்சி செய்து, அவர் சொன்னதைச் செய்தான். அவரைச் சந்திக்கச் சென்றான்.
அப்போது மகான் அவனிடம், "அடடா! இப்போது எனக்கு முன்புபோல் பார்வை சரியாக இல்லையே! சரி, இந்த ஏடுகளில் இருப்பதை இன்னும் சுருக்கமாக ஒரு ஏட்டில் எழுதி வா. பதில் சொல்கிறேன்,''என்றார்.
இளைஞன் சளைக்கவில்லை. அதையும் எழுதிக்கொண்டு, இன்னும் சில மாதங்கள் கழித்து அவரிடம் வந்தான்.
அப்போதும் மகான் அதை படிக்கவில்லை. ""நீ கற்றவற்றை ஒரே ஏட்டில் எழுதி கொண்டு வந்தது மகிழ்ச்சிதான். ஆனாலும், இதையே இன்னும்
சுருக்கமாக ஒரு வரியில் எழுதிக் கொண்டு வா. உனக்கு பெரிய வேலையும் அல்ல,'' என்று சொல்லி அனுப்பிவைத்தார். இப்போது இளைஞனுக்கு என்ன எழுதுவெனத் தெரியவில்லை. எனவே, வெற்று ஏட்டுடன் வந்தான்.
மகான் புன்னகையுடன், ""மகனே! நீ கேட்ட கேள்விக்கான பதிலை இப்போது நீயே புரிந்துகொண்டிருப்பாய். நீ கற்றதாக சொன்னதெல்லாம், இந்த வெற்று ஏட்டைப் போன்றது தான். வெறும் கல்வி, கடவுளைக் காண உதவாது. அவரைக் காண வேண்டுமானால் முதலில் அவரிடம் மனப்பூர்வமான பக்தி செலுத்து. அதைவிடுத்து "நான் அவ்வளவு படித்தவன், இவ்வளவு தெரிந்தவன்,' என்று பேசுவதால் பயன் ஏதும் ஏற்படாது. இதனால் கர்வமே உண்டாகும்.
கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்,''என்றார்.

No comments:

Post a Comment