Saturday, June 14, 2014

தாருகா வனத்து முனிவர்கள கர்வம்

தாருகா வனத்து முனிவர்களுக்கு கர்வம் தலைக்கேறி விட்டது. இல்லையெனில் கடவுளை மதியாத மமதை படைத்தவர்களாக மாறி இருக்கமாட்டார்கள். அந்த முனிவர்களுக்கு தங்கள் தவமே சிறந்ததென்றும், தங்கள் மனைவியாகிய பத்தினி பெண்களின் கற்பே உயர்ந்ததென்றும் கர்வம் கொண்டிருந்தனர்.

அதன் காரணமாக கடவுளை கருதாது வாழ்ந்து வந்தனர். அந்த முனிவர்களுக்கு நல்லறிவு புகட்டும் எண்ணத்துடன் சிவபெருமான், பிச்சாடனராக திருக்கோலம் கொண்டு, திருமாலை மோகினி வடிவம் எடுக்கச் செய்து முனிவர்கள் தவம் செய்யும் தாருகா வனம் புகுந்தார்.

பிச்சாடனர் முனிவர்களின் குடில்களுக்குச் சென்று அங்கிருந்த பெண்களிடம் யாசகம் கேட்டார். அவரது ஜொலிக்கும் திருஉடலின் அழகில் மயங்கிய பெண்கள் அவர் பின்னே செல்லத் தொடங்கினர். இதே வண்ணம் மோகினி வடிவம் கொண்ட திருமால், தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு சென்று முனிவர்களின் தவத்தையும், அவர்களின் உயர்வையும் கெடுத்தார்.

மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தன்னிலை மறந்தனர். வந்தவேளை முடிந்ததும் சிவபெருமானும், திருமாலும் தங்கள் இருப்பிடம் புகுந்தனர். இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள், தங்கள் மனைவிமார் அந்தணர் ஒருவரைப் பார்த்து மனம் மயங்கியதை எண்ணி கடும் கோபம் கொண்டனர்.

இவை அனைத்துக்கும் அந்த சிவனே காரணம் என்று தெரிந்து கொண்டனர். அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஈசனை தண்டிக்க முடிவு செய்தனர் தாருகா வன முனிவர்கள். அதன்படி விஷ விருட்சங்களை, யாகப் பொருட்களாக்கி, வேம்பு முதலியவற்றின் நெய்யினால் வேள்வி செய்தனர்.

அந்த வேள்வியில் இருந்து பல ஆயுதங்கள் எழுந்தன. அந்த ஆயுதங்களை, ஈசனை அழித்துவரும்படி ஏவினர். சிவச்சுடரான ஈசன் அந்த ஆயுதங்களை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை என மாற்றி தன்வசம் வைத்துக் கொண்டார். மாயைகளில் சிறந்தவன் இந்த சிவன் என்று எண்ணினர் முனிவர்கள்.

அவர்களின் கோபம் முன்னிலும் பல மடங்காகப் பெருகியது. தாங்கள் அனுப்பிய அனைத்து ஆயுதங்களையும், சிவபெருமான் தன் வசமாக்கிக் கொண்டதையடுத்து, யாக அக்கினியில் இருந்து எழுந்த சர்ப்பங்களை, மகேஸ்வரனின் மீது விடுத்தனர்.

அந்த நாகங்கள் உலகமே அதிரும்படி அச்சுறுத்தும் தன்மையுடன் அதிவேகமாக, காளி, காளாஸ்திரி, எமன், எமதூதன் என்னும் தனது நான்கு நச்சுப் பற்களில் விஷங் களைத் சொரிந்து கொண்டு நீலகண்டனை நோக்கி விரைந்து சென்றன.

நெருப்பை நெற்றிக் கண்ணில் அடக்கி வைத்திருக்கும் ஈசன், ஆதிகாலத்தில் கருடனுக்கு பயந்து தன்னிடம் சரண்புகுந்த சர்ப்பங்களைத் தாங்கியிருந்ததுடன், தற்போது தன்னை நோக்கி வந்த பாம்புகளையும் ஏற்றுக்கொண்டார்.

அந்த பாம்புகளை ‘உமது குலத்தாருடன் ஒன்று கூடி வாழுங்கள்’ என்று கூறி தன் கரத்தால் பற்றி திருக்கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞான் முதலிய ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.

பரமனின் அடிபுகுந்த பாம்புகள் அனைத்தும் தங்கள் நிலை உயர்ந்ததை எண்ணி மகிழ்வுடன் சிவபெருமானை வேண்டி துதித்து போற்றின. தங்களின் சக்தி அனைத்தும் வீணாகப்போனதை எண்ணி தாருகா வனத்து முனிவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். சிவபெருமானே மூல முதலானவன். அவனை மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

No comments:

Post a Comment