Monday, June 16, 2014

அம்மா தந்த அனுமதி

விவேகானந்தருக்கு துறவு நாட்டம் எழுந்தது. ஆனால், அவரது தாய் புவனேஸ்வரி அனுமதி தர வேண்டுமே! இதற்காக, வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் அம்மாவிடம் சொல்லி வந்தார். அவரோ புன்னகைத்தபடி, ""நரேன்! (விவேகானந்தரின் இளமைப் பெயர்) சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வா!'' என்று சொல்லி விடுவார்.
விவேகானந்தரும் கத்தியை எடுத்து வந்து கொடுக்க,""இப்போ! என்னப்பா அவசரம்! கொஞ்ச காலம் பொறுமையாய் இரு!'' என்று பதிலளிப்பார்.
அம்மாவின் பதிலை ஏற்றுக் கொண்டாலும், அவர் ஏன் தாமதிக்கிறார் என்பதற்கான காரணம் மட்டும், விவேகானந்தருக்கு விளங்கவில்லை. ஒருநாள் அம்மாவின் அனுமதியும் கிடைத்தது.
""அம்மா! இத்தனை நாளும் மறுத்த நீங்கள், இன்று அனுமதி தர காரணம் என்ன?'' என்று கேட்டார் விவேகானந்தர்.
""நரேன்! இத்தனை நாளும், நீ கத்தியை கொண்டு வரும் போதெல்லாம் கைப்பிடியை உன் பக்கமும், கூர்மையான பகுதியை என் பக்கமுமாய் நீட்டியபடி தருவாய். அது சுயநலத்தின் வெளிப்பாடு. ஆனால், இன்று கைப்பிடி என் பக்கமும், கூரிய பகுதி உன் பக்கமுமாக இருந்தது. மற்றவரின் நன்மையில் அக்கறை காட்டும் தியாக மனப்பான்மை தான், துறவுக்கான அஸ்திவாரம்'' என்றார்.
துறவு பொதுநலத்திற்குரியது. அதில் சுயநலம் துளியும் இருக்கக்கூடாது என்பதை உணர்த்திய அம்மாவின் திருவடிகளை விவேகானந்தர் வணங்கினார்.

No comments:

Post a Comment