Monday, June 16, 2014

ஹரி நாமத்தை இன்று முதல் ஜெபிக்கத் தொடங்கு! உன் வாழ்வும் ஒளி பெறும்''

வங்காளத்தில் வாழ்ந்த ஹரிதாஸ், இளமை முதலே, திருமால் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஹரிபக்தியில் சிறந்த சைதன்யரை விட, இருபது ஆண்டு வயதில் மூத்தவரான இவர், சைதன்யரையே தனது குருவாக ஏற்றுக் கொண்டார். காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை ஹரி நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பார்.
தூக்கத்தின் இடையில் எழுந்தாலும், தன்னை மறந்து "ஹரி ஹரி' என்றே சொல்லுவார். இவ்வாறு அவர் சொன்ன எண்ணிக்கை ஒருநாளைக்கு 3 லட்சத்தை எட்டியது.
ஹரிதாஸின் கண்களில் தீட்சண்யமும், முகத்தில் தேஜஸும் நிலைத்திருந்தது. அவருடைய முகப்பொலிவு கண்டு மக்கள் அதிசயித்தனர். இதையறிந்த செல்வந்தர் ஒருவருக்கு, அவர் மீது பொறாமை ஏற்பட்டது. ஹரிதாஸை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், ஒரு தாசியை அழைத்து, ஹரிதாஸ் வீட்டுக்கு செல்லும்படி அனுப்பினார்.
அவளும் மணப்பெண் போல அலங்கரித்து, வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டு இரவு நேரத்தில் ஹரிதாஸ் வீட்டிற்குச் சென்றாள்.
""கண்டவரைக் காந்தம் போல இழுக்கும் ஹரிதாஸரே!'' என்று சொல்லியபடி நுழைந்தாள்.
அப்போது ஹரிதாஸ், ஹரி ஹரி என சொல்லியபடி தன்னை மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை எழுப்ப, தன் காலில் இருந்த சலங்கை ஒலி சப்தமாக எழும் விதத்தில் அங்குமிங்கும் நடந்தாள். கை வளையல்களை குலுங்கச் செய்தாள். தலையில் சூடியிருந்த மலர்களும் காற்றில் வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், ஹரிதாஸ் கண் திறக்கவே இல்லை.
மறுநாள் பொழுதும் புலர்ந்தது. கண்விழித்த ஹரிதாஸ், ""தாங்கள் எப்போது இங்கு வந்தீர்கள்? நாமஜெபம் செய்து கொண்டிருந்ததால், வீட்டுக்கு வந்தவரை உபசரிக்கும் என் கடமையை மறந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்''என்றார்.
அவளுக்கு என்னவோ போல் ஆகி விட்டது. பதிலேதும் சொல்லாமல் செல்வந்தரின் வீட்டுக்கு ஓடி விட்டாள்.
அவரோ தாசியிடம், ""இப்போது வேண்டுமானால் ஹரிதாஸ் உன்னிடமிருந்து தப்பியிருக்கலாம். முயற்சியைக் கைவிடாதே! இன்று இரவு மீண்டும் அங்கு சென்று உன் வலைக்குள் சிக்க வை'' என்றார்.
முதல்நாளைப் போலவே, இரண்டாம் நாளும் தொடர்ந்தது. ஆனால், ஹரிதாஸ் தன் நிலையில் இருந்து மாறவே இல்லை. ஹரிநாமம் ஜெபிக்கும் பணியில் இருந்தார். இப்படியே நான்கு நாட்கள் ஓடி விட்டது.
ஐந்தாம் நாள் ஹரிதாஸின் முகத்தை அவள் உன்னிப்பாக கவனித்தாள். அந்த பிரகாசத்தின் முன் தாசியின் அழகும், வனப்பும் காணாமல் போனது. அவள் மன மயக்கம் அகன்றவளாய், அவரின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினாள்.
குளம் போல கலங்கிய கண்களில் கண்ணீர் பெருகியது.
""சுவாமி! இந்த பாவியை மன்னித்து விடுங்கள்! அடியேனும் வாழ்வில் கடைத்தேறும் வழி காட்டுங்கள்'' என்றாள்.
ஹரிதாஸ், ""அழாதே அம்மா! யாரும் உலகில் பாவி இல்லை! ஹரி நாமத்தை இன்று முதல் ஜெபிக்கத் தொடங்கு! உன் வாழ்வும் ஒளி பெறும்'' என்று ஒரு ஜெபமாலையை கொடுத்து ஆசியளித்தார்.
அன்று முதல் தாசி தன் தொழிலை கைவிட்டு, ஹரிபக்தையாக மாறினாள்.

No comments:

Post a Comment