இல்லற வாழ்வு மேம்பட…
நியாயமற்ற முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும், கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.
* அவ்வப்போது உங்கள் துணைக்கு `இன்ப அதிர்ச்சி’ அளியுங்கள். கணவன் அல்லது மனைவியை `ஸ்பெஷலாக’ உணர வைக்கும் பரிசைக் கொடுத்து அசத்துங்கள். வெளி யிடங்களில் புகழ்ந்து பேசுங்கள்.
* உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆன்மிக உணர்வுக்கு உரிய மதிப்பளியுங்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட கடவுளை வணங்கும்படி, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும்படி துணையை வற்புறுத்தாதீர்கள்.
* ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டு புழுங்காமல் வெளிபடையாக பேசுங்கள். தம்பதிகள் பரஸ்பரம் அடுத்தவருக்காகவும், தங்களின் உறவுக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் அடிபடை, ஒற்றுமைதான் என்று புரிந்துகொள்ளுங்கள்.
* குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கு பணம் ஒரு முக்கியக் காரணமாகிறது. இருவரும் சம்பாதிக்கும்போது, குடும்பச் செலவுகளை இருவருமே சமமாக பகிர்ந்துகொள்வதுதான் முறை.
* பழைய சண்டைகள், பிரச்சினைகளைக் கிளற வேண்டாம். தற்போது நீங்கள் கையாள வேண்டியிருக்கும் நடப்பு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
* துணையின் குடும்பத்தினர், உறவினர்களை மதியுங்கள். நம்மூரில் இது மிகவும் முக்கியம். உங்கள் குடும்பத்தினர், உறவினர் வீட்டு விசேஷங்களில் முதல் ஆளாக நிற்பதில் தவறில்லை. ஆனால் மனைவி தரப்பு நிகழ்வுகளை புறக்கணிப்பது சரியல்ல.
* கணவன்- மனைவி இணைந்து, ஏதாவது வித்தியாசமான பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். ஒன்றாகச் சேர்ந்து நன்றாக நேரத்தைக் கழிப்பதற்கு ஏதாவது புதுமையான வழியைக் கண்டுபிடிங்கள். உங்கள் இருவருக்கும் பிடித்த உடற் பயிற்சி, விளையாட்டு என்று எதில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். இருவரும் சேர்ந்து ஒரு புதிய படிப்பில் ஈடுபடுவது கூட நல்லதுதான்.
* வேலைக்கு என்றும், சொந்த வாழ்க்கைக்கு என்றும் தனித்தனியே நேரத்தை ஒதுக்கி விடுங்கள். உங்களின் அலுவலக பணி, குடும்ப வாழ்க்கையை பாதிக்க அனுமதிக்காதீர்கள். பணியிடத்தின் கஷ்டம், டென்ஷனை வீட்டுக்குச் சுமந்து செல்லாதீர்கள்.
* வாழ்க்கையின் கஷ்டமான நிலையை உங்கள் துணை கடந்து வரும் போது தான் அவருக்கு உங்களின் உறுதுணை மிகவும் அவசியம். அப்போது அவருக்கு நீங்களே `சோதனை’யாக இருக்காதீர்கள். உரிய நம்பிக்கை, ஊக்கம் அளியுங்கள்.
No comments:
Post a Comment