Monday, July 21, 2014

இறைவன் அறியாதது எதுவுமில்லை


இறைவன் அறியாதது எதுவுமில்லை


அந்தப் புகழ்பெற்ற கோவிலை, சுத்தம் செய்யும் பணியில் இருந்தார் அந்த நபர். சிறந்த பக்திமானான அவர் தன் பணியை செவ்வனே செய்து வந்தார். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே! அவனுக்கு சோர்வாக இருக்காதா?
என்று எண்ணிய பணியாள் இறைவனிடம், ‘எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே! உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்.

நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?
என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார். அதற்கு பதிலளித்த இறைவன், ‘எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்க வேண்டும். உதட்டில் எப்போதும் புன்முறுவல் இருக்க வேண்டும்.

யார் என்ன சொன்னாலும், கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது
என்றார். பணியாளும் ஒப்புக்கொண்டார். மறுநாள், இறைவனைப் போலவே அலங்கரித்துக்கொண்டு, கோவில் கர்ப்ப கிரகத்தில் பணியாள் நின்றார். இறைவனின் அருளால், அவர் அனைவர் கண்ணுக்கும் சிலையாகவே தோன்றினார். இறைவனோ, பணியாளரைப்போல் கோவிலை சுத்தம் செய்தார்.

கோவிலுக்கு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறக்க இறைவனிடம் பிரார்த்தித்தான். ஒரு பெரிய தொகையை உண்டியலில் போட்டான். வீடு திரும்பும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டு சென்றான். கர்ப்பக்கிரகத்தில் இருந்த பணியாளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நிபந்தனை அப்படிப்பட்டதல்லவா? அடுத்ததாக ஒரு ஏழை கோவிலுக்கு வந்தான். அவனிடம் ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. ‘என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என் குடும்பம் துன்பத்தில் தவிக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது ஒரு வழி சொல்
என்று கண்களை மூடி மனமுருக வேண்டினான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, செல்வந்தன் தவறவிட்ட பணப்பை தென்பட்டது. அதில் பணமும், சில தங்கக் காசுகளும், சில வைரங்களும் இருந்தன. இறைவனே தனக்கு அருளியதாக நினைத்து ஏழை மகிழ்வுடன் அதை எடுத்துச் சென்றான். இப்போதும் பணியாள் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து ஆசி பெற வந்திருந்தான். இறைவனிடம் பிரார்த்தித்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

கப்பல் வியாபாரிதான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினான். காவலர்களும் அந்த வியாபாரியை கைது செய்தனர். ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவது நியாயமா? என்று நினைத்த பணியாள். இப்போது வாய் திறந்து கப்பல் வியாபாரி பணத்தை எடுக்கவில்லை என்று சாட்சி சொன்னார்.

இறைவனே சொல்லி விட்டதாக கருதி அனைவரும் தங்கள் பணியை செய்ய திரும்பிச் சென்றனர். இரவில் கோவில் நடை சாத்தப்பட்டது. இறைவன் வந்தார். மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளனிடம் ‘இன்றைய பொழுது எப்படி இருந்தது
என்று கேட்டார். ‘மிகவும் கடினமாக இருந்தது.

உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்
என்று தான் கூறிய சாட்சியைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் இறைவன் அதிருப்தியடைந்தான். பணியாளனுக்கு சங்கடமாக போய்விட்டது. ‘இறைவன் பாராட்டுவார் என்று பார்த்தால், இப்படி கோபித்துக் கொள்கிறாரே என்று துணுக்குற்றான்.

‘நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை. என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ மீறிவிட்டாய். உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்?
இறைவன் தொடர்ந்து பேசலானான்.

‘செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் இருந்ததில் ஒரு துளிதான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக்கிவிட்டு, பதிலுக்கு எண்ணற்றவைகளை எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழையோ, அவனிடம் எஞ்சியிருந்த ஒரே ஒரு ரூபாயையும், முழு நம்பிக்கையோடு எனக்கு அளித்தான்.

அதனால் அவனுக்கு அந்த பணம் கிடைக்கச் செய்தேன். நான் கொடுத்ததாக எண்ணிப் போற்றுவான். அதன் மூலம் செல்வந்தனின் பாவப் பலன் ஓரளவாவது குறையும். இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும்.

அதிலிருந்து அவனை காக்கவே, தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால் நீ என்மீது நம்பிக்கை இன்றி, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்தி விட்டாய்
என்றார்.

இறைவனின் செயலுக்கு காரண காரியங்கள் உண்டு. அதை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. இறைவன் ஒருவருக்கு கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். அதற்கு இறைவன் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றே தீர்வு

No comments:

Post a Comment