Thursday, July 31, 2014

ஆனந்தம் பொங்கும் ஆடிவெள்ளி,,!

ஆனந்தம் பொங்கும் ஆடிவெள்ளி,,!
ஆடிவெள்ளிக் கிழமையிலே அன்னை வந்தாள் தேரினிலே
அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள் ஊரினிலே
கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா
வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!
அழகுமயில் ஆடுதல்போல் அம்மன் தேர் ஓடுதம்மா!
பழ்குதமிழாய் ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!
அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது
என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது
கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்
பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
ஆடி மாதப் பிறப்பு- தட்சிணாயண புண்ணிய காலம், ஆடிப் பண்டிகை என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. மார்கழியைப் போல ஆடி மாதமும் தெய்வீக மாதமாகும்.
சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட்டு, இறைவழிபாட்டில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் மாதம்.
தட்சிணாயண சமயத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் தெற்குப் பக்கத்தில் சஞ்சரிக்கும்போது, வட பாகத்தில் வெயில் கடுமையாக இருக்காது. காற்று, மழை, பனி என்று பருவநிலை காணப்படும்.
ஆடி மாதம் அம்மனின் அருள் பூரணமாக வெளிப்படும். அம்மன் மாதம்
அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்குப் பொங்கல் இடுதல், 
கூழ் காய்ச்சி ஊற்றுதல் என நிவேதனம் செய்து அவற்றை 
ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து அவர்கள் பசி நீக்கும் மாதம் !
ஆடி மாதத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிப் பாத்திகளுக்கு நடுவே பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தருக்கு அரங்கனையே ஆளப்போகும் ஆண்டாள் கிடைத்தாள்.
ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். , பாம்புருவில் நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி, சிவபெருமான் அருகில் சென்றான்.
அசுரன் என்பதை உணர்ந்த இறைவன், உறவாடி அவனைக் வென்ற. நிகழ்வின் நினைவாகவே ஆடி எனப் பெயர் பெற்றது.
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. , இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள்.
பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு அஷ்டமங்கலப்பொருள்களை அளித்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.
ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் 
நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம்
ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து 
விசேஷ பூஜை செய்வார்கள்.
பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும்.
ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு 
எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும்.
திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்
சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்
கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்
மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி
காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி
திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி
ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா
சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி
உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி
புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா
பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா
என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!
இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்
தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்
தாயன்பே தெய்வமென தரணிக்குக் காட்டிடுவாய்
தங்கமே நின்பெருமை எளியேனால் சொல்லப்போமோ!
..

No comments:

Post a Comment