Sunday, May 29, 2011

ஆன்மிக தகவல்கள்

* பிரம்மச்சாரி மூன்று இழை பூணூலும், கிரஹஸ்தன் ஆறு இழை பூணூலும், வயோதிகத்தில் ஒன்பது இழை பூணூலும் அணிவதன் காரணம் என்ன?
பிரம்மச்சாரியாக இருக்கும் போது அவன் தனி மனிதன். தனக்கென ஜபம் செய்ய கல்வியறிவு பெற ஒரு பூணூல் (மூன்று இழை) அணிவிப்பார்கள். திருமணமான பிறகு தனது மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜபம் வழிபாடு செய்வதற்காக இரண்டு பூணூல் (ஆறு இழை) அணிவிப்பார்கள். மூன்றாவது பூணூல் வயோதிகத்தில் அணிவிப்பது இல்லை. சிவதீட்சை அல்லது வைணவ முத்ராதானம் பெறுபவர்களுக்கு மாத்திரமே அணிவிப்பார்கள். ஒவ்வொரு நிலையை உணரவும் உணர்த்தவும் இது மாதிரி செய்யப்படுகிறது.

* சிரார்த்தம் அன்று சமையலில் சில காய்கறிகள் கண்டிப்பாக சமைக்க வேண்டும். வடை, அதிரசம், எள்ளுருண்டை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே! உண்மைதானா?
சிரார்த்தம் என்பதை "சிரத்தயா- தத்தம்- போஜனம்' என்று பிரிப்பர். சிரார்த்தம் என்று எழுதினாலும் "சிராத்தம்' என்றே உச்சரிக்க வேண்டும். சிரத்தையுடன் நிறைய பதார்த்தங்களை சமைத்து உணவு படைத்தலே சிரார்த்தம். இதற்கென பொதுவான நூலாக தர்ம சாஸ்திரமும், போதாயனர், ஆபஸ்தம்பர் போன்ற ரிஷிகளால் அவரவர்கள் குலதர்மங்களுக்கு ஏற்ற ப்ரயோக நூல்களும் வகுக்கப்பட்டுள்ளன. சிரார்த்ததன்று இன்ன வகையான பதார்த்தங்கள், காய்கறிகள், பட்சணங்கள் செய்ய வேண்டும் என்பது அந்த நூல்களில் கூறப்பட்டுள்ள விதியாகும். சலித்துக் கொள்ளாமல் நிறைய செய்து போஜனம் செய்வித்து முன்னோர் ஆசியைப் பெறுங்கள்.

* கணவரால் கைவிடப்பட்ட நிலையில் குலதெய்வ வழிபாட்டை புகுந்த வீட்டு மரபுப்படி செய்வதா? அல்லது ஆதரவு அளித்து வரும் பெற்றோர் வீட்டு முறைப்படி செய்வதா?
குலதெய்வ வழிபாடு என்பது குடும்ப பாராம்பரிய வழக்கம் என்ற அடிப்படையில் நமது குடும்பத்துக்கென ஒரு தெய்வ வழிபாட்டை நிர்ணயித்துக் கொள்வது என்பதாகும். ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆன பின் குலம் கோத்திரம் எல்லாமே கணவருடையது தான். அதற்காக பெற்றோர் வீட்டுக் குலதெய்வத்தை வழிபடக் கூடாது என்பதல்ல. தங்கள் நிலை சங்கடமாக உள்ளது. கணவர் வீட்டுக் குலதெய்வத்தையும் வழிபடுங்கள். கணவரே தேடி வருவார்.

** பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார்களே! ஏழு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பெடுக்க முடியுமா? அப்பிறவிகள் என்னென்ன என்பதைக் குறிப்பிடுங்கள்.
தேவர், மனிதர், விலங்கு, பறவை,ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள். இதை
""புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்'' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

* கர்ம வினைகளை இந்தப்பிறவியுடன் தீர்த்துக் கொள்ள வழி ஏதும் உண்டா?
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும் என்று தான் ஞானசம்பந்தர், பெரியாழ்வார் போன்றோர் கூறியுள்ளனர். எத்தனை பேர் இதனை முழுமையாக கடைபிடிக்கிறோம்? கர்ம வினைகள் என்பது என்னவென்றால் நாம் பல பிறவிகளில் செய்திருக்கும் பாவ புண்ணியங்களின் சேமிக்கப்பட்ட பலன்களாகும். அதாவது நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிப்பது போன்றது. நம் பணம் முழுமையாக செலவாகும் வரை நமது வங்கிக் கணக்கு முடியாது. அதுபோல நமது கர்ம வினைகளின் பலா பலன்களை, அதாவது இன்ப துன்பங்களை நாம் அனுபவித்துத் தீர்க்கும் வரை, வினை சேமிப்பு தீராது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு, தர்ம சிந்தனை, நற்செயல் இவைகளைச் செய்து வினை நீக்கம் பெறுவது தான் இப்பிறவியின் குறிக்கோள். மேலும் மேலும் தவறுகளைச் செய்து வினை சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு அல்ல.

No comments:

Post a Comment