Sunday, May 29, 2011

புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா

காமாட்சிக்கு தன் வீட்டில் நடக்கும் விஷயங்களை விட பிறர் வீட்டு விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் தான் ஆசை அதிகம். பக்கத்து வீட்டு பெண்களை அழைத்து, ""அடியே! பக்கத்து வீட்டு பங்கஜத்தைப் பார்த்தாயா! அவள் தன் புருஷனை மதிப்பதே இல்லை. நேற்று கூட அவரை எதிர்த்துப் பேச, அந்த மனிதர் கூனிக்குறுகிப் போனார். நான் வேறு அதைப் பார்த்து தொலைத்து விட்டேன்! அந்த மனிதர் என் முகத்தைப் பார்க்கவே வெட்கப்பட்டு, ஆபீசுக்கே பின்வாசல் வழியாக ஓடுகிறார்,'' என்று சொல்லி சிரித்தாள். மற்றவர்களும் அவளோடு இணைந்து சிரித்தனர்.
ஒருநாள், காமாட்சியின் மகள் அம்புஜம் ஜன்னலோரமாக நின்றாள். அப்போது, ஒரு இளைஞன் விசிலடித்தபடியே அந்தப் பக்கமாக சைக்கிளில் வந்தான். அவன் அம்புஜத்தைப் பார்த்து ஏதோ சொன்னான். இதை பங்கஜம் பார்த்து விட்டாள். தன்னைப் பற்றி பிற பெண்களிடம் போட்டுக்கொடுத்த காமாட்சியைப் பழிவாங்க சந்தர்ப்பமாயிற்று. அம்புஜத்துக்கும், அந்த இளைஞனுக்கும் காதல் என்று கதை கட்டி விட்டாள். ஊரில் அது வேகமாகப் பரவி விட்டது.
அன்று பார்த்து அவளைப் பெண் பார்க்க வெளியூர் ஆட்கள் வருவதாக இருந்தது. அவர்கள் ஊர் எல்லைக்குள் நுழையும் போதே, ஊரார் சிலர் தாங்கள் கேள்விப்பட்டதைச் சொல்ல அவர்கள் அப்படியே திரும்பி விட்டனர்.  அம்புஜத்தின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. உண்மையில், அவளுக்கும் அந்த இளைஞனுக்கும் காதல் இல்லை. காமாட்சியின் வீட்டு மாடியில் இருக்கும் பெண்ணுக்கும் அவனுக்கும் தான் காதல். அவன் மாடியில் நிற்பவளைப் பார்த்து ஏதோ சொல்ல, பங்கஜம் இதைத் தவறாகச்  சித்தரித்து விட்டாள். காமாட்சிக்கு அப்போது தான் <உரைத்தது. பக்கத்து வீட்டு கணவன், மனைவி சண்டையை ஊராரிடம் பெரிதுபடுத்தப் போய், தன் மகள் வாழ்வு பாழானதே என வருந்தினாள். பிறரைப் பற்றி புறணி பேசுவதை இனியேனும் குறைத்துக்  கொள்வீர்களா!

No comments:

Post a Comment