Thursday, May 26, 2011

சிவனருள் தரும் புன்னை மரம்

ஆதிகாலம் முதலே மனிதர்கள் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, ஆகியவற்றை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். நாளடைவில் இயற்கையோடு இணைந்த மரங்களையும் தெய்வமாக வழிபடத் தொடங்கினர்.

தொன்று தொட்டுவரும் இந்த வழக்கம் தற்போது ஸ்தல விருட்சங்கள் வடிவில் தொடர்கிறது. இந்து ஆலயங்களில் ஸ்தல விருட்சம் என்று ஒன்று இருப்பதன் நோக்கமே மரங்களை வழிபட வேண்டும் என்பதனால்தான். வேம்பு, அரசு, போன்ற மரங்களின் வரிசையில் புன்னைமரத்திற்கு மிகச்சிறந்த இடம் உண்டு.

புன்னை மரம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்றன. குறிஞ்சிப்பாட்டில் ‘ கடியிரும் புன்னை ’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனாரின் அகப்பொருள் நூல் ‘ நெய்தல் தினைக்கு மரம் புன்னையும், ஞாலழும் கண்டலும் ’ என்று குறிப்பிடுகிறது.

ஐங்குறுநூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, ஆகியவற்றிலும் சிறப்பித்து பாடப்பெற்றுள்ளது. சங்க இலக்கியத்தில் தலைவனோடு உரையாடும் தலைவி, அருகில் புன்னைமரம் இருப்பது கண்டு நாணப்பட்டாள். தலைவன் அவளை ஏன் நாணம் கொண்டாய் என்று கேட்க, அம்மரமோ எனக்குச் சகோதரி முறை வேண்டும் என்கிறாள். குடும்பத்தில் ஒருவராக மரத்தை பாவிக்கும் வழக்கம் அன்றைக்கு இருந்துள்ளது.

ஸ்தல விருட்சம்

புன்னை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன. கும்பகோணம் அருகில் திருப்புறம்பயம், திருப்புள்ளபூதங்குடி, திருவாரூருக்கு அருகில் உள்ள திருப்புகலூர், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சங்கரன்கோவில், சென்னை திருமயிலை உள்ளிட்ட ஸ்தலங்களின் விருட்சமாக புன்னை மரம் உள்ளது.

“ மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். ”

இந்தப்பாடல் திருமயிலை கபாலீஸ்வரரை நினைத்து திருஞான சம்பந்தர் பாடிய பாடலாகும்.

கபாலீஸ்வரம்

திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு. புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது.

சிவநேசரின் ஆசை

திருமயிலை தலத்தில் சிவநேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.

அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

உயிர்பிழைத்த பூம்பாவாய்

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள்.

சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.

No comments:

Post a Comment